நாங்கள் தஞ்சை ப்ரகாஷிடம் இலக்கியம் பயின்ற காலத்தில் கவிதையில் நான் என்கிற சொல் களையப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு நாள் அவர் நீண்ட சொற்பொழிவாற்றினார். எங்களுக்குப் பெரிய வியப்பைக் கொடுத்த உரையாக அப்போது அது இருந்தது. மிகெய்ல் நைமியின் மிர்தாதின் புத்தகம் முதல் அத்தியாயத்தில் முடிந்தவரை நான் என்ற சொல்லைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற விதி நெடுங்காலமாக அந்த மடாலயத்தில் நிலவி வந்ததுÕÕ என்னும் வரிகள் இடம் பெற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டேன். அது ஒரு மடாலயம். மடாலயத்தின் மூத்தவரான சமாதம் தன்னுடைய சாதனைகளைப் பற்றி மிகவும் பெருமையடித்துக் கொள்கிறார். அப்போது, விலக்கப்பட்ட Ôநான்Õ என்கிற வார்த்தையைப் பலமுறை பிரயோகிக்கிறார். பிறகு, அதன் மீது விவாதம் நடைபெறுகிறது. யார் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியாத நிலை. ஆதித் தந்தை நோவா நான் என்கிற வார்த்தையின் மேல் முதன் முதலாகத் தடை விதித்தார். இல்லை இல்லை முதல் மடாலயத் தோழர் சேமா தான் இதற்கு காரணம் என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள். சமாதம் இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க மிர்தாத்தால் முடியும் என்று ஏளனமாகக் கூறுகிறார். மடாலயத்தால் விதிக்கப்பட்ட ஏழாண்டு மௌனத்தைத் துறந்து மிர்தாத் பேசத் தொடங்குகிறார். ÔÔதுறவிகளே, Ôநான்Õ என்பதே படைப்பாற்றல் மிக்க சொல். எல்லாப் பொருள்களின் மூலாதாரமும் மையமும் நான் என்பதே என்று நீண்டு செல்கிறது மிர்தாதின் உரை. ஒரு கட்டத்தில் கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாளி. நான் என்பதே அவன் படைப்பு. அப்படியிருக்க அவன் ஏன் கடவுளைப் போல சமநிலையில் இல்லை என்றும் கேட்கிறார். இப்படியான புதிர்ச் சங்கிலிகளாக இந்நூலின் அத்தியாயங்கள் நீள்கின்றன. தத்துவங்களில் திளைக்கும் போது மனம் ஒரு அலாதியான நிலையை அடைகிறது. அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
‘‘If this rascal Would not have Written this book I would have written this’’ (இந்த அயோக்கியப் பயல் இதை எழுதியிருக்காவிட்டால் நான் எழுதியிருப்பேன்) என்கிறார் சென்ற நூற்றாண்டின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ஓஷோ ரஜனீஷ். Ôமிர்தாதின் புத்தகம்Õ அப்படி என்னதான் விசேஷங்கள் கொண்டது? படித்துப் பாருங்கள்....
* * *
சமீபமாகத் திரைப்படங்கள் குறித்து நிறையப் புத்தகங்கள் வந்து குவிகின்றன. எழுத்தாளர்களால் திரைப்படம் குறித்த தொடர்கள் சிறு பத்திரிகைகளில் நிறைய எழுதப்படுகின்றன. காட்சிப் பிழை, படப் பெட்டி என மாற்று சினிமா குறித்த இதழ்களும் புதிது புதிதாய் வரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். இந்த வரிசையில், உலகத்திரைப்படங்களில் கனமான பாத்திரங்களை ஏந்தியிருக்கும் சிறுவர் சிறுமியரின் வாழ்வு, அக் கதாபாத்திரங்களின் அரசியல், அழகியல் மன ஓட்டங்கள் குறித்து கே.பாலமுருகன் எழுதிய தொடர் தீர்ந்து போகாத வெண்கட்டிகள் என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.
தாய்லாந்து, இந்தோனேசியா, ஹாங்காங், சீனா, பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா என உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட சிறுவர்களுக்கான படங்களைக் குறித்து அவர் எழுதியிருக்கிறார். அவற்றுள் பலவும் முக்கியமான திரைப் படங்கள். இந்தப் பட்டியலில் ஒரு தமிழ்ப் படமும், இந்திப் படமும்கூட இடம் பெற்றுள்ளது விசேஷமானது.
வீட்டை விட்டு விடுதிக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரு மாணவனின் ஏக்கங்களைப் பிரதிபலிக்கும் DORM என்ற தாய்லாந்து சினிமாவிலிருந்து இந்தக் கட்டுரை தொடக்கம் பெறுகிறது. இதுதான் நான் வீட்டை விட்டுப்போகும் முதல்நாள். இன்று தான் என் எல்லா சுதந்திரமும் பறிபோகும் முதல் நாளும் கூட என்று அந்தச் சிறுவனின் குரல் துயருடன் ஒலிப்பது நம் பள்ளி விடுதிகளில் அடைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் குரலை எதிரொலிக்கிற மாதிரியே இருக்கிறது.
Hikikanam என்றொரு தாய்லாந்துப் படத்தைக் குறித்து பாலமுருகன் எழுதுகிறார். ஜப்பானிய சிறுவர்களை ஒரு கால கட்டத்தில் தொற்றியிருந்த வினோதப் பழக்கம் குறித்து இத்திரைப்படம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பிவீளீவீளீணீஸீணீனீ என்று ஜப்பானிய அரசால் அழைக்கப்பட்ட இந்த சுயவதைக்காரர்கள் ஆண்டுக் கணக்கில் வீட்டுத் தனிமையிலிருந்தபடி பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் பிற மனிதர்களைச் சந்திக்காமல் தங்கள் காலத்தைக் கழிப்பார்களாம். ஒன்பது வருடத்திற்கு மேலாகக் கூட ஒரு சிறுவன் தனி அறைக்குள் அடைந்து கிடப்பான் என்கிற தகவல் நம்மை அதிர்வுக்குள்ளாக்குகிறது. இந்தத் திரைப்படம் குறித்து மேலதிகமாக எழுதிச் செல்லும் பாலமுருகன் இக்கட்டுரையின் முத்தாய்ப்பாக சில வரிகளைப் பதிவு செய்கிறார்.
Ôகுழந்தைகளின் அறைக்குள்ளிருந்து தனிமையின் சுவாசம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் வன்மையான மனநிலை சுவரில் கொடூரமாகக் கிறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் தெரிகிறது.Õ
இந்த வரிகளும் நம்மை அச்சுறுத்தவே செய்கின்றன. குழந்தைகளின் உளவியல் நுட்பமானது. நாம் குழந்தைகள் என நினைத்து அவர்களை அணுகுவதை அவர்கள் விரும்புவதே இல்லை. அவர்களுக்குத் தேவை அவர்களை அதிகாரத்தாலும், அளவான அன்பாலும் கட்டுப்படுத்தும் பெற்றோர்களல்ல. சமமாகப் பாவிக்கின்ற நண்பர்களே. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும் வரை நாம் குழந்தைகளின் உளவியலைக் கண்டுபிடிப்பது அரிது.
பாலமுருகன் ஒவ்வொரு படத்தின் கதைக்கும் தொடர்புள்ள தன்னுடைய வாழ்க்கை நிகழ்வொன்றையும் சேர்த்து நமக்கு வாசிக்கத் தருகிறார். அது நம்மை வேறு தளத்துக்கு நகர்த்திச் செல்கிறது. இந்தப் புத்தகம் இந்திய சினிமாக்கள் அடைய வேண்டிய மாற்றங்களை வலியுறுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது.
குழந்தைகளுக்கான மிகச்சிறந்த திரைப்படங்கள் இன்றைக்கு ஈராக், ஈரான், சீனா, இந்தோனேசியா நாடுகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா இந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது.
* * *
எழுத்தில் மிகுந்த ஆச்சாரத்தையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கிற நல்லவர்களுக்கு நான் என் புத்தகங்களை வாசிக்கத் தருவதில்லை என்றொரு கொள்கையை வைத்திருக்கிறேன். ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கிற ஒழுக்கம் என் புத்தகங்களில் கிடையாது. மீறி அவர்களாகத் தேடி வாசித்துவிட்டு என்னைக் குறித்த பிம்பங்களைக் கலைத்துக் கொள்வதில் எனக்கொன்றும் அபிப்ராயம் இல்லை. இந்த Ôஒழுக்க எழுத்தைÕ நான் வெறுக்கிறேன். வாழ்க்கை இவர்கள் நினைக்கிற மாதிரி ஒழுக்கச் சட்டகத்துக்குள் அடங்கி இல்லை. ஒழுக்கவாதிகள் மட்டுமே எழுத வேண்டுமானால் இந்த உலகில் ஒரு நல்ல எழுத்தாளன்கூட இருக்க முடியாது. அதற்காக வலிந்தெழுதும் ஆபாசத்தை நான் ஒப்புக் கொள்ளவும் மாட்டேன். எழுத்து சுதந்திரமானது. அதற்குத் தடைகள் எதுவும் இருக்கக்கூடாது. இவ்வகையில் பெருமாள் முருகன் எழுதியுள்ள கெட்டவார்த்தை பேசுவோம் நூலை நாம் வரவேற்க வேண்டியுள்ளது. பெருமாள் முருகன் இதை வலிந்து செய்யவில்லை. கட்டமைக்கப்பட்டுள்ள பொய்மைகளைத் தகர்க்க வேண்டுமெனும் நோக்கத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். கெட்ட வார்த்தைகளை வலிந்து பயன்படுத்திப் பிரபலம் பெறுவதோ, பாலியல் சார்ந்து எழுதி நிலைநிறுத்திக் கொள்வதோ எனக்கு அவசியமற்றவை என்று அவர் முன்னுரையில் பேசுகிறார். இது ஒரு ஆய்வு. சகமனிதர்களின் இயல்பான உரையாடல்களை, அவை வெளிப்படும் தருணங்களை, அதன் கொச்சை அழகை, கவித்துவத்தை, தமிழ் இலக்கியங்களிலிருந்தும், நாட்டார் கதையாடல்கள், வாய்மொழி வழக்காறுகள், கூத்துகள் எனப் பல்வேறு வடிவங்களிலிருந்தும் வாசித்துப் பார்த்து வெளிப்படுத்தியுள்ள ஆய்வு.
* * *
யோ.கர்ணன் சமீபமாகத் தனது கதைகளின் மூலமாக அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இளம் ஈழ எழுத்தாளர். ஏற்கெனவே இவருடைய தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சேகுவேரா இருந்த வீடு இரண்டாவது தொகுப்பு. பொதுவாக ஈழ எழுத்தாளர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் ஈழத் தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரம் ஜாதி வர்க்க ரீதியான பிரிவுகள், மோதல்கள் இவற்றைத் தம்படைப்புகளில் பிரதிபலிப்பவர்கள். இவர்கள் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இளைய தலைமுறையினர். விடுதலைப் போராட்டம் தீவிரத்தை அடைந்த யுத்தகளத்திலிருந்து நேரடி சாட்சியாகத் தம் படைப்புகளை முன் வைப்பவர்கள். யோ.கர்ணன் இரண்டாம் வகையைச் சார்ந்தவர். பெரும்போக்காகவுள்ள யுத்த சாட்சியத்திலிருந்தும் அவர் துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால் ஒரு முழுமையான யுத்த சாட்சியம் என்று வரும்போது அதன் தவிர்க்கப்படவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார்ÕÕ என்று நிலாந்தன் இவரைக் குறித்து அபிப்ராயப்படுகிறார்.
தொகுப்பிலுள்ள முதல் கதையான திரும்பி வந்தவனை வாசித்து முடித்ததும் யாரோ நம் முகத்திலறைகிற உணர்வேற்படுகிறது. யதார்த்தம் எப்போதுமே கசப்பாகவும் ஜீரணிக்க முடியாததாகவுமே இருக்கும் என்பதுபோல. எல்லாக் கதைகளுக்கும் ஈழப்போராட்டமும், இயக்கச் செயல்பாடுகளும்தான் களம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென இங்குள்ள தமிழ்மக்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் ஓரிடத்திலிருந்து கொண்டு விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத் தன்மையுடனும், நவீன கதைகளுக்கேயுரிய கூறுகளுடனும் கதை சொல்லும் கர்ணன் 13 கதைகளிலும் தன்னையும், தன் போராட்டத்தையும், தங்களது பெண்களையும், ஆண்களையும், தலைவர்களையும் சுய விமர்சனம் செய்து கொள்கிறார். எந்த இடத்திலும் தோற்றுப் போனோம் என்கிற கழிவிரக்கம் கொப்பளிக்கவில்லை. இதனாலேயே இவருடைய கதைகள் தனித்துவம் பெறுகின்றன.
* * *
தமிழ் நவீன இலக்கியவாதிகளால் அடிக்கடி நினைவு கூறப்படும் அயல் எழுத்தாளர்களில் தஸ்தயேவ்ஸ்கி முக்கியமானவர். அடுத்த கணத்தில் நிறைவேற இருந்த மரண தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்ட அதிர்ஷ்டசாலியாக அவர் இருந்தாலும், வாழ்வின் எல்லைவரை துயரங்களை எதிர்கொண்டு போராடிய கலைஞனாகவும் இருந்தார். எழுத்தாளர்கள் வலிய நிறுவிக்கொள்ளும் ஒழுக்க விதிகளைப் புறந்தள்ளி சூதாடியாக, வலிப்பு நோயாளியாக, தீராத கடனாளியாக வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த அவருடைய படைப்புலகிலிருந்து, குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள், இடியட், வெண்ணிற இரவுகள் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்புகள் வெளிவந்தன.
தஸ்தயேவ்ஸ்கியின் ஒரு புதிய நாவலைப் பிரதி எடுக்கும் நிமித்தமாகச்சென்ற இளம்பெண் அன்னா, தஸ்தயேவ்ஸ்கியின் அன்புக்கும், காதலுக்கும் பாத்திரமாகி அவருடைய இறுதிக்காலம் வரை வாழ்க்கைத் துணையாக இருக்கிற வாய்ப்பைப் பெறுகிறார். அன்னா தஸ்தயேவ்ஸ்கி எழுதிய நினைவுக்குறிப்புகள் என்னும் இந்நூல் தஸ்தயேவ்ஸ்கி ஒரு நாவலைச் சொல்லி அதை அன்னா பிரதி எடுத்துத் தருவது வரைக்குமான குறுகிய கால சம்பவங்களைக் கூறுவதாக இருப்பினும் தஸ்தயேவ்ஸ்கி என்கிற மகா கலைஞனது வாழ்க்கை நிகழ்வுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகவும் இது நமக்குப் புலனாகிறது.
மாபெரும் எழுத்து மேதைக்கும், இளம் பெண்ணுக்குமான அப்பழுக்கற்ற உறவைச் சித்தரிக்கின்ற குறுநாவலைப் போலவும் இதை வாசித்தெடுக்கலாம். யூமா.வாசுகியின் நேர்த்தியான மொழிபெயர்ப்பு இவ்வனுபவத்தை நமக்கு வழங்குகிறது.
“வலிப்பின் நேரத்தில் நான் சொர்க்கத்திலிருந்தேன். இந்த உலகத்தின் மற்ற அனைத்து இன்பங்களையும் தருகிறேனென்று சொன்னாலும் இந்த சொர்க்கத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறும் தஸ்தயேவ்ஸ்கியைத் தாக்கியது பரவச வலிப்பு நோய் என்று மருத்துவர் பி.இக்பால் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். தஸ்ததயேவ்ஸ்கி படைத்த வலிப்பு நோயுள்ள கதாபாத்திரங்களையும் அவர் அதில் பட்டியலிடுகிறார்.
“ஒரு கணம் மேலெழுந்து வந்த அதிருப்தி அத்துடன் இல்லாமற் போனது” என்று அன்னா குறிப்பிடுகிற ஒரு வரி நினைவுக்குறிப்புகளின் ஒன்பதாவது அத்தியாயத்தின் கடைசி பாராவில் வருகிறது. இந்த வரியை நான் நீண்ட நேரம் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். அந்த அதிருப்தி மட்டும் மேலெழுந்து தீவிரம் பெற்றிருந்தால் ஒருவேளை தஸ்தயேவ்ஸ்கியும் அன்னாவும் வாழ்க்கையில் இணைந்திருக்க வாய்ப்பில்லாமலேயே போயிருக்கும்.
தஸ்தயேவ்ஸ்கியின் காதல் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையை வாசிக்கையில் பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போனேன். “சில நேரம் தஸ்தயேவ்ஸ்கி அன்னாவின் உடைகளைக்கூடப் பணயம் வைத்துச் சூதாடுவார். ஆனால் சூதாட்டம் அவருக்கு எழுதுவதற்கான உட்தூண்டலாக இருப்பதால், அவள் ஒருபோதும் அதை எதிர்த்ததில்லை. தஸ்தயேவ்ஸ்கி அனைத்தைவிடவும் மேலாக அன்னாவை நேசித்திருந்தார். சில நேரங்களில் நாட்கணக்காகப் பட்டினி கிடக்க வேண்டி வரும்போது, அல்லது இருப்பிலிருந்த, அன்னாவின் கடைசி உடையையும் சூதாடித் தோற்கும்போது, ஒரு களங்கமற்ற சின்னஞ்சிறுவனைப்போல அவர் அவள் காலடியில் குமுறி அழுவார்”.
எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் மனைவிகளும் ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டிய புத்தகமாக இந்த நினைவுக்குறிப்புகளை நான் உணர்கிறேன்.