Wednesday, October 19, 2011

கேட்டுக்கொண்டேயிருக்கும் யாசகக் குரலும் ரத்தப் பெருக்கோடு அலையும் அவளின் துயரமும்... தேய்பிறை இரவுகளின் கதைகளை முன் வைத்து...

ம. மணிமாறன்

வாழ்க்கை ‘அ’வில் துவங்கி ‘ஃ’ல் முடியாத போது வாழ்க்கையைச் சொல்கிற கதைகளின் மீதான வாசிப்பு மட்டும் எப்படி ஒரே நேர்கோட்டில் நிகழ சாத்தியம். கதைகள்-நாவல்கள்-கதைகள் என்று அமைந்திருக்கும் கீரனூர் ஜாகிர்ராஜா வின் படைப்புலகிற்குள் என்னைப் போலவே பலரும் நாவல்கள் - சிறுகதைகள் என்றே பயணித்திருப்பார்கள். மீன்காரத் தெருவின் வழியாகத்தான் வாசகர்களில் பலர் ஜாகிரின் கதைப் பரப்பிற்குள் பிரவேசித்திருப்பார்கள். நானும் கூட அப்படித்தான்.

மீன்காரத் தெருவிற்கு முந்தைய ஜாகிர்ராஜாவின் சிறுகதைகள், அதற்குப் பிறகான கதைகள் என யாவற்றையும் தொகுத்து பாரதி புத்தகாலயம் ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’ - என வெளியிட்டிருக் கிறது. தமிழில் இன்று வரையிலும் எட்கர் ஆலன்போவையும், ஓஹென்றியையும், மாப்பசானையும் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேறு எந்த இலக்கிய வகைமையை விடவும் தமிழ்ச் சிறுகதை வளர்ந்து ஒரு செவ்வியல் தன்மையை அடைந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது.

கதை அது தோன்றிய நாளில் இருந்து விதி விலக்குகளையும், மீறல்களையும் நிகழ்த்திடும் கலைஞர்களைக் கண்டடைந்தே வளர்ந்து கொண்டு இருக்கிறது. மௌனி, ந.பிச்சமூர்த்தி, கோணங்கி, சுரேஷ்குமார இந்திரஜித், ரமேஷ்-பிரேம் என அந்தப் பட்டியல் நீண்டு செல்லும் தன்மையிலானது. அந்த வரிசையில் ஜாகிருக்கும் இடமுண்டு என்பதை அவரின் தேய்பிறை இரவுகளின் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன
.
பித்தனும், கு.ப.ரா.வும் ஜாகிருக்குள் குழைந்து வெளிப்படுவதை அவரின் கதைகளுக்குள் கரைகிற எவராலும் அறிய முடியும். தொகுப்பிற்குள் உறைந்திருக்கும் 39 கதைகளும் மூன்று வேறு வேறான புள்ளிகளில் துவங்கி விதவிதமாக விரிவு கொள்கிறது. தமிழ் சினிமாவிற்குள் இயங்கிடத் தவித்தலைகிற யுவன்களின் பெருநகரத்துக் குறிப்புகள் ஒரு புள்ளி. ஜாகிரின் படைப்புலகின் தனித்த அடையாளமாக இன்று நிலைபெற்றுள்ள மத அடிப்படைவாதத்தின் மீது எழுப்பப்படும் கேள்விகள் மற்றொரு புள்ளி. இவ்விரண்டையும் தாண்டி இத்தொகுப்பிற்குள் என்னை ஈர்ப்பதாக இருந்தது; வாழ்க்கை முன் வைக்கும் சவால்களை அதன் போக்கிலேயே எதிர்கொள்ளும் கதைகள். இம் மூன்றாவது கதைகளுக்குள் ததும்பி நிற்கும் தஞ்சை நிலப்பரப்பும், கீரனூரும் வாழ்க்கையின் சகல முடிச்சுக்களையும் அவிழ்த்துப் பார்க்கிறது.

வாசிப்பின் அரசியல் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய காலமிது. எல்லாவற்றையும் கச்சிதமாக சொல்லி முடித்திடும் கதைகளால் வாசகன் ஈர்க்கப்படுவதில்லை. வாசகன் தனக்கான இடத்தை கதைகளில் கண்டடைகிற போதுதான் அவனுடைய வாசிப்பு செயல்பாடு ஆழ்ந்த அர்த்தம் பெறுகிறது

இப்படியான வாசக இடைவெளிகளால் நிறைந்திருக் கிறது ஜாகிரின் கதைகள். ஒவ்வொரு கதையும் முடிந்த பிறகு வேறு ஒரு கதையாக வாசகனுக்குள் துவங்கி வளர்கிறது. ஒரு கதையை வாசித்து முடித்தவுடன் எவரும் அடுத்த கதைக்குள் நுழைந்திட முடியாது. வாசித்த கதைகள் முன் வைத்திடும் சவால்களை எதிர்கொண்டு தனக்குள் பதில் சொல்லிப் பார்த்தபிறகே அடுத்த கட்டத்திற்குள் நுழைவது சாத்தியம்.

வெகுஜன சினிமாவின் மீது ஏற்றப்பட்டிருக்கும் வசீகரத்தில் தன்னைத் தொலைத்து கொத்துக் கொத்தான கதைகளைச் சுமந்தபடி பெருநகரை முற்றுகையிட்டு அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களைப் பற்றியதே ‘பெருநகரக் குறிப்புகள்’. சினிமாக் கனவில் அன்பு, நட்பு என ஒன்றையும் மிச்சமில்லாது அழித்திடும் கொடுங்கனவின் துயரத்தை மிக நுட்பமாக பதிவு செய்த படைப்பிது. கேட்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் அற்றவர்களிடம் கதைகளின் சொற்கள் ஏற்படுத்திடும் பீதி இந்த நிமிடம் வரை என்னை வதைத்துக் கொண்டுதான் இருக்கிறது. கதை கேட்க யாரும் வாய்க்காத போது தனியே கதை சொல்லியபடிதான் அலைவார்கள். பெருநகரெங்கும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் தன்னந்தனியே கதை சொல்லிக் கொண்டலைவதான கோட்டுச் சித்திரம்தான் பெருநகரக் குறிப்புகளாக வடிவம் பெற்றிருக்கிறது.

கனவுகளைச் சுமந்தலையும் படைப்பாளியை வீடு எப்படி எதிர்கொள்ளும். அதிலும் இஸ்லாமானவன் சினிமா எடுக்கப் போகிறேன் என ஊரைவிட்டுக் கிளம்பினால் அவனை சுற்றத்தார் எந்த இடத்தில் வைத்து மதிப்பிடுவார்கள் என்பதை சொல்லிப்பார்த்த கதை ‘மழை’. மழைக்குள் கொட்டித் தீர்க்கும் அப்பாவின் கொடூரமான வார்த்தைகளை எப்படி எதிர் கொண்டானோ அந்தக் கலைஞன். வாசிக்கும் எவரையும் புரட்டிப் போடும் சி.ஏ.சர்புதீனின் கடிதம் நமக்குள் முகமறியாத அவரின் மகனுக்காக வருத்தம் மிகச் செய்கிறது.

முதற்புள்ளியின் இரண்டு கதைகளை மட்டுமே பேசிப் பார்த்திருக்கிறேன். இன்னும் இத்தொகுப்பிற்குள் ‘நிழலின் சாயலுக்குள்’ படைப்பாளிக்குத் தன்னையே தந்தவள், சினிமாக் கனவில் எதையும் இழக்கத் தயாராகிற ‘பரகத் நிஷா’ ஓடிக் கொண்டேயிருக்கிற ஓராயிரம் இளைஞர்களின் ஒற்றைத் துளியான ‘சீனு, ஜீ ’ என கதைப் பக்கங்களில் சினிமாக் கனவைத் தொலைக்க முடியாமல் பலரும் அலைவுறுகிறார்கள்.

பேஸ்ட் இல்லாமல் குத்திட்டு நிற்கும் பிரஸ், கலைந்து கிடக்கும் வசீகரமான அறைகள், உடலைப் புரட்டி எடுக்கும் பசி என வதைக்கும் மனநிலையிலும் அவர்களுக்குள் படைப்பு மனம் வற்றாமல் தான் இருக்கிறது. எனவே கொல்லும் பசியும் கூட பின்னணி இசையுடன் பசியின் வாதையைச் சொல்லும் குறும்படமாக அவனுக்குள் ரூபம் கொள்கிறது. பிரம்மாண்டமான மாபெரும் சினிமாவிற்குள் தன் இடத்தை அடைவதற்காக நண்பர்களை காவு கொள்ளத் துடிக்கும் குரூரமனநிலையும் தான் வாய்க்கிறது என்பதையும் ஜாகிர் மிக அழுத்தமாகப் பல கதைகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

‘வெம்மை’- இந்த தொகுப்பின் கனத்தை உறுதி செய்திடும் கதை. ‘இந்தியாவில் அதுவும்
தஞ்சாவூரிலிந்து கொண்டு பிழைப்புக்காக வெளிநாடு செல்வதைத் தவிரவும் வேறென்ன பெரிதாகச் சாதித்திட முடியும்’. இந்த வரிகளை எளிதாக எவராலும் வாசித்துக் கடக்க முடியாது. தஞ்சை நெல்விளையும் சொர்க்கபூமி என்று நமக்குள் உருவாகியிருக்கும் பிரம்மையின் மீது தாக்குதலை நிகழ்த்துகிற வரிகள் இவை. தஞ்சை இஸ்லாமியர்கள் பிழைப்புக்காக வெளிநாடு செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்கள் என்பதை ஏற்க மனம் தடுமாறத்தான் செய்கிறது.

வளைகுடா நாடுகளுக்குச் சென்று உழைப்பை விற்றுப் பிழைப்பதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை இஸ்லாமிய இளைஞர்களுக்கு என்பதை ஜாகிரின் பலகதைகள் வெம்மையைப் போலவே மிக அழுத்த மாகப் பதிவு செய்திருக்கின்றன. நாட்குறிப்பிற்குள் தகித்துக் கிடக்கிறது வெம்மை. நாட்குறிப்புகளையும் கூட கலைத்துப் போட்டிருக்கிறார் ஜாகிர். கத்தியைப் போல மிகக் கூரான வார்த்தைகளால் கதையாடியிருக் கிறார் ஜாகிர். ‘வன்மம் முளைக்காத வரை பரிசுத்தம். அது தளைக்கத் தொடங்கினால் அவஸ்தை’. ‘வியாதிக்காரன் கையோடு வைத்திருக்கிற மருந்துப் பொதியைப் போல புத்தகங்கள்’ என வெம்மையில் துவங்கி வழி நெடுக 39 கதைகளுக்குள்ளும் வாழ்க்கையின் சிக்கல்களை விசாரித்துப் பார்க்கும் வரிகள் நிறைந்திருக்கிறது.

உருவ வழிபாட்டை ஏற்பதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு உண்டு. ‘உருவம்’ எனும் கதைக்குள் இவற்றின் மீதான விசாரணையை நிகழ்த்திப் பார்க்கிறார். மௌலவி உருவ வழிபாடு கூடாது என்பதைக் கடுமையாக பின்பற்றச் சொல்கிறவர். பிரியமானவர்களின் புகைப்படங்களுக்குக் கூட வீட்டில் இடமில்லை. ஆனாலும் மௌலவிக்கு ப்பிரியமான அவரின் மனைவியின் புகைப்படத்தை எப்படியும் வைத்திருப்பார் என்பதைத் தேடியலைவதும், கண்டடைவதுமாக கடக்கிறது கதை. விதிகளை மீறி நிற்கும் யதார்த்தங்களை சொல்லிப் பார்க்கிறது கதை.

‘சைத்தான் மீது எறிந்த கல்’- கதை புனித ஹஜ் பயணத்தின் மிக முக்கியமான சைத்தானின் மீது கல்லெறியும் சம்பவத்திற்குள் உறைந்திருக்கும் மனதையும், அவற்றின் மீதான கேள்விகளையும் எழுப்புகிறது.

“பாவம் போலிருந்தது வட்ட வடிவிலான அந்தத் தொட்டி. சைத்தானை விரட்டிய இடத்தில் சைத்தானாக உருவம் கொடுக்கப்பட்ட தொட்டி. ஆண்டுதோறும் லட்சோப லட்சம் ஹாஜிகளிடம் செருப்படியும், கல்லடியும் வாங்கி நிற்கிறது அந்தத் தொட்டி. ‘இதுவல்ல சைத்தான் - இது ஒரு ஏற்பாடு அவ்வளவுதான்’ என நாயகம் திருமேனியே வந்து சொன்னாலும் இந்த ஆவேசம் அடங்குமா? சடங்குக் காக செய்யப்பட்ட சைத்தானை அடிப்பதில்தான் எத்தனை விதமான ஆக்ரோஷம். அலைமோதல். விவாதத்தின் மையப்புள்ளி இதுதான். சடங்குகளையும், நம்பிக்கைகளையும் காலத்தோடு பொருத்திப் பார்க்காமல் பின்பற்றுகிற போதுதான் அடிப்படை வாதம் மனதிற்குள் துளிர் விடுகிறது.

இதையே வேறு ஒரு கோணத்தில் சொல்லிப் பார்க்கிறது ‘பக்ரீத் ஆடுகள்’ கதை. தமிழ்நாட்டில் மேல்தட்டு இஸ்லாமியர் பலருக்கும் தாங்கள் ஏதோ அரேபிய பாலைவனத்தில் இருந்து ஒட்டகத்தின் மீதேறி தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்கிற நினைப்பிருக்கிறது. தமிழ் இஸ்லாத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தவ்ஹீதுகளுக்குள் துளிர் விடும் அரபு மனம் தர்ஹாக்களையும், சந்தனக்கூடு திருவிழாக்களையும் ஹராம் என்கிறது. எனவே தான் காலம் காலமாக தமிழ்நாட்டில் பக்ரீத் அன்று கொடுக்கப்படும் குர்பானியில் ஆடுகளும், மாடுகளும் அகற்றப்பட்டு ஓட்டகங்கள் இடம் பிடிக்கின்றன. ஒட்டகத்தைக் குர்பானி தருவது மிகப் பெரிய கௌரவம் என்பதாக தமிழ் இஸ்லாமியர்கள் பேசத் துவங்கியிருப்பது அவர்களுக்குள் துளிர் விடத்துவங்கியிருக்கும் அரபு மனத்தின் வெளிப்பாடு தான்.

இன்னும் கதைத் தொகுப்பிற்குள் ‘காபிர்’ ‘ரெட்டைமஸ்தானருகில்’, ‘அற்ற நாளின் விஷேசம்’, ‘ராஜமீன்’ ஆகிய கதைகள் குறித்தும் அவை முன் வைக்கும் கேள்விகள் குறித்தும் பேசிப்பார்க்க வேண்டும். அதிலும் ஜவுளிக்கடையில் சேலை உடுத்திக் காட்டும் மாமுவும் அவரின் மீசையற்ற முகமும் எவரையும் நிலைகுலையச் செய்கிறது. வாழ்வு குறித்த அச்சம் மேலிடும் போது மனிதர்கள் கைக்கொள்ளும் தந்திரங்களற்றிருக்கும் உத்திகளையும் ஜாகிரின் கதைமாந்தர்கள் தொகுப்பெங்கும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் தலைவனுக்கு பள்ளிவாசலின் ஹவுஸிற்குள் வாழும் ராஜமீனைக் களவாடுவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

கதைக் கலைஞர்களுக்குள் நிகழும் அறம் குறித்த தர்க்கங்களும், மதிப்பீடுகளும் சமூகத்தின் மதிப்பீடுகளுக்கு நேர் எதிராகத்தான் அமையும். அனீபா எப்படியும் ராஜமீனைக் களவு கொண்டு செல்ல வேண்டும் மோதினார் எதிர்ப்படக்கூடாது என்றுதானே கலைஞன் நினைப்பான். அடையாளம் கதைக்குள் வருகிற மாரிக்கு ரம்ஜான் கஞ்சி கிடைக்காமல் போன துக்கம் இந்த நிமிடம் வரை என்னை வாட்டத்தான் செய்கிறது. வாழ்க்கையை எதிர் கொள்ள இந்துச் சாமிப் படங்களுக்கு பூப்போடுவதால் ஒன்றும் பிழையில்லை. அதற்காகவெல்லாம் காபிர் என ஒதுக்கினால் வட்டிக்குப் பணம் தருபவர்கள், பிறர் மனைவியின் மீது காமம் கொண்டலைபவர்களை யெல்லாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது
கா... பிர்கள் என்றா? என வாசக மனதில் விதவிதமான கேள்வியலைகளை எழுப்பிடும் தன்மையில் அமைந்தவையே ஜாகிரின் ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’.

தேய்பிறை இரவுகளின் கதைகள் மூன்று புள்ளிகள் கொண்டமைக்கப்பட்ட வாழ்வின் கோலம் என்ற போதும் இவற்றிற்குள் அடங்காத வர்ணத் தீற்றலயும் வாசகன் கண்டடைவான். அதிலும் தஞ்சாவூரில் வீடுகள் தோறும் முற்றத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் குறித்த விசித்திரத் தன்மையில் அமைந்த ‘காட்டு வண்டுகளின் வீடு’, ஆதிக் காதலை அழித்திட முடியாது யாவரும் தான் துன்புறுகிறோம் என்பதைச் சொல்லிப் பார்த்த ‘செம்பருத்தி பூத்த வீடு’. அன்பின் வலியெதுவென உரைத்திட்ட ‘நீஸா என்றொரு சிநேகிதி’ போன்ற கதைகளும் தனித்தன்மையில் அமைந்த கதைகள். ‘எரவானம்’ ‘எடுப்பு’, ‘சக்கிலி மந்தை’ போன்ற கதைகளுக்குள் தலித் உளச் சிக்கல், தலித் இஸ்லாத்தின் கூறுகள் தென்படுகின்றன.

39 கதைகளையும் பற்றிய ஒற்றைவரிக் குறிப்புகள் வாசக நேர்மையாகாது. விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்டுள்ள மனித வாழ்வின் துயரங்களை இப்படிக் கடந்து செல்வது நியாயமில்லை. இருந்த போதும் வாசகன் கண்டுணரத் தந்த குறிப்புகளே இவை. இதுவரை ஜாகிர் எழுதியிருக்கும் புனைவுப் பரப்பில் வேறு எங்கும் தென்படாத தனித் தன்மையிலமைந்த கதைகள் என ‘குடமுருட்டி ஆற்றின் கரையில்’ ‘சுவடுகள்’, ‘ஆதிமை’, ‘லவ்கீஹா’ ஆகியவற்றை எனக்கு மதிப்பிடத் தோன்றுகிறது.

குடமுருட்டி ஆற்றின் கரையில் வாழும் புவ்வா, ஜக்கரியா, ஹைரூன் ஆகியோர் இதுவரையிலான தமிழ் இஸ்லாமியப் பிரதிகள் எங்கும் தென்படாதவர்கள். ஒரு தேர்ந்த இலக்கியப் பிரதியின் தன்மையில் அமைந்த கதை. வெறும் மேரேஜ் அஸெம்ப்ளர் இல்லை புவ்வா என்பதை கதையை வாசித்துக் கடக்கும் போதுதான் உணர முடியும். சுவடுகளுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கும் யாசகக் குரலும், ரத்தப்பெருக்கோடு அலைந்து கொண்டிருக்கும் அவளின் துயரமும் வாசித்துக் கடக்க முடியாதவை. ஆதிமைக்குள் பெருகும் அன்பும். லவ்கீஹாவால் துன்புறும் கலைஞர்களின் துயரமும் தனித் தன்மையிலானது.

ஒட்டுமொத்தமாக ‘தேய்பிறை இரவுகளின் கதைகளை வாசித்து முடித்த பிறகும் கூட சுவடுகளின் அக்காவின் குரலும், அவளின் துயரமும் வாசகனை வாதையுறச் செய்துகொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் இச்சமூகம் குறித்த பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திடப் போகும் கதைகள் இவை.