Thursday, April 5, 2012

இருதயச் சுவர்களில் எழுதிச் சென்ற கலைஞன்



கீரனூர் ஜாகிர்ராஜா

புத்தகச் சந்தைகள் இம்மண்ணில் காலூன்றி வலுப்பெற்ற பிறகு புதிய புத்தகங்களின் வரவு கணிசமாகப் பெருகியுள்ளது. கலை இலக்கியம் மட்டும்தான் என்றில்லை; விதம்விதமான தலைப்புகளுடன் வகை பல மாதிரியான நூல்கள் அச்சாகிக் குவிந்த வண்ணமுள்ளன. வாங்குகிற எல்லோருமே வாசிக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இயலவில்லையாயினும், புத்தகங்கள் நாலா திசைகளிலும் சிதறிப் பரவலாகியுள்ளதை மட்டும் அனுமானிக்க முடிகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் பதிப்புத்துறை வியத்தகு வளர்ச்சி கண்டுள்ளதும், வாழும் ஆளுமைகளின் ஆக்கங்கள் மட்டுமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் விட்டுச் சென்ற பதிவுகளெல்லாம் அச்சாகி நினைவுகளை நெஞ்சகத்தில் மீட்டிப் பார்க்கும்படியான நெகிழ்வான சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளதும் முக்கியமானது. அவ்வகையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர் வெ. ஆறுச்சாமியின் முயற்சியில் அவ்வியக்க வெளியீடாக ‘சுவரெழுத்துப் புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா - சிந்தனைப் பொறிகள்’ நூல் வடிவம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் நீண்ட அரசியல் வரலாற்றில் சுவரெழுத்தை ஒரு பிரச்சார உத்தியாகப் பயன்படுத்திக் கொண்டதில் பெரும்பங்கு பொதுவுடமை இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்குமானது. மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினரின் பத்திரிகை வாசிப்புகளைத் தாண்டிய வெகுமக்கள் கவன ஈர்ப்பு சுவரெழுத்துகளுக்கு உண்டு.

சுவரெழுத்தைக் கலையாக மாற்றுவது ஒருவகையில் நம் குழந்தைகள் தான். குழந்தைகளுள்ள ஒவ்வொரு வீட்டுச் சுவர்களும் கண்டிப்பாக பென்சில் கிறுக்கல் களைக் கண்டிருக்க வேண்டும். இவையே குழந்தைமையின் ஆதி மனப்பதிவுகள்.

எங்கள் வீட்டுப் புழக்கடைச் சுவரில் விறகுக்கரி கொண்டு நானெழுதிய வாசகங்களும் வரைந்து கிறுக்கிய சித்திரங்களும்தான் என் எழுத்து வாழ்க்கைக் கான தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும்.
கோடையின் வெறிச்சோடிய தெருச்சுவரொன்றில் ‘பச்சை ரத்தம் குடிக்கும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா’ என்கிற குருவிநீலம் கரைத்தெழுதப்பட்ட வாசகங்கள் தீடீரெனப் பதிந்திருக்க அதை திகைத்துப் படித்த கணத்தை இன்னும் மறக்க முடியவில்லை.


இன்றைக்கு சுவரெழுத்து வழக்கொழிந்து வருகிறது. பெரிய ஜவுளி நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே சுவர்களை ஆக்ரமித்திருக்கின்றன. நவீன ஃப்ளெக்ஸ் கலாச்சாரம் வந்து எல்லாத்தெரு முனைகளிலும் பவிசு காட்டி நிற்கிறது. நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல் நேரத்திலும் கூட சின்னங்கள் வரையப்படாத சுவர்களே அதிகம்.

1980 களின் மத்தியில் கோவையில் சுற்றித்திரிந்த காலக்கட்டத்தில் வெங்கிட்டாபுரம் நண்பர்கள் ரவி, கந்தசாமி ஆகியோருடன் ஒரு நிகழ்வில் சுவரெழுத்து சுப்பையாவை சந்தித்துள்ளேன். அந்த நேரத்தில் சுப்பையாவின் திறன்களைத் தாண்டி அவருடைய ஆக எளிமையான தோற்றத்தின் மீதுதான் என் கவனம் குவிந்திருந்தது. பல வருஷங்களுக்குப் பின் சுப்பையாவின் எண்ணங்கள் நூலாகி அதற்கொரு அபிப்பிராயத்தைப் புத்தகம் பேசுது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வேனென கனவிலும் நினைத்ததில்லை.

சாலை அமைக்கப் பயன்படும் தார் எடுத்துக் காய்ச்சி சூடு ஆறிய பின் அதில் மண்ணெண்ணெய் ஊற்றி கையை விட்டுக் கலக்கி சுருட்டி வைத்த மெல்லிய துணியால் தொட்டுத் தொட்டு சுவரில் எழுதும் முறை சுப்பையாவுடையது. தமிழகமெங்கும் இப்படித்தான் பெரியாரின் கருத்துகளை சுப்பையா பதிவு செய்திருக்கிறார். ஆரம்பக் கல்வியைக் கூட முறையாகப் பெற்றிராத இவர் பெரியாரிசத்தை தரவாகக் கற்று ஊர் ஊராய் சுற்றிச் செய்திருக்கும் பணிகளை நினைக்க மலைப்பாய் இருக்கிறது. இதற்கென இவர் நன்கொடை ஏதும் பெற்றதில்லை. பழகிய தோழர்களிடம் அவர் கேட்டுப் பெற்றது பழைய டைரிகளை மட்டுமே.

சுப்பையாவின் சிந்தனைப் பொறிகளை வாசிக்கையில் சூடான மிளகாய் பஜ்ஜியை காரத்துவையலில் தோய்த்துச் சாப்பிட்ட மாதிரி உறைப்பாயிருக்கிறது. குப்பைத் தொட்டியைக் காட்டி‘இதில் எழுதுங்கள் அண்ணே’ என்றால் சுப்பையா உடனே “புராணத்தை இதிலே போடு” என்றெழுதுவாராம். பெரியார் வித்து.

நூலில் சுமார் 600 பக்கங்கள் கட்டெறும்பு ஊர்ந்து செல்வது போன்ற அவருடைய கையெழுத்தில் அத்தனையும் பகுத்தறிவுத் தெறிப்புகள். இந்துப் புராணங்களை ‘ஒரு கை’ பார்க்கும் சுப்பையா, கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் விட்டு வைக்க வில்லை.

‘‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன்.......’’ என்ற மு. கருணாநிதியின் புகழ்பெற்ற பராசக்தி படவசனத்தை மெச்சிப் பேசாத திராவிட இயக்கத்தினர் இருக்க முடியாது. ஆனால் கறாரான கொள்கைப் பிடிப்புள்ள சுப்பையா “கோயில் கூடாது என்பதற்காக அல்ல என்றால் கடவுள் இருப்பதாக நம்புகிறாயா? இது பெரிய அயோக்கியத்தனம்” என்று விமர்சனம் செய்வாராம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் தி.மு.கவினரின் நழுவல்களை சுப்பையா போன்ற பிடிப்புள்ள நாத்திகர்களால் ஜீரணிக்க முடியாதுதான்.

சுப்பையாவுடன் பழகிய பலரும் இந்நூலில் அவருடனான தங்களின் அனுபவங்களை விளம்புகின்றனர். அவை பல தகவல்களை நமக்குத் தருகின்றன.

ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர், தோழர் ஈ.வெ.ராமசாமி, பெரியார் ஈ.வெ.ராமசாமி, தந்தை பெரியார், அய்யா போன்ற பல விதமான விளிப்புகளில் பெரியாருக்கே விருப்பமானது ‘தோழர் ஈ.வெ. ராமசாமி’ என்பதுதான். “தோழர் என்றே விளியுங்கள்” இது பெரியார் எழுதிய குடி அரசு தலையங்கம்.

சொற்பொழிவாற்ற வரும்போது பெரியார் தனக்குச் சேரும் பெருங்கூட்டத்தைப் பார்த்து வியந்து போய் “நேற்று சுப்பையா வந்தாரா” என்று கேட்பாராம். பெரியார் பேசவுள்ள ஊர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகச் சென்று தம்பட்டமடித்தவர் சுப்பையா.

இப்படிப்பட்ட செயல்வீரர் தன் அந்திம காலத்தில் மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் அனாதைப் பிணமாகக் கிடந்தார் என்பதும், திராவிடர் கழகத் தலைமை இவர் போன்ற பெரியார் பெருந்தொண்டரின் புகைப்படத்தைக்கூட வைத்திருக்கவில்லை என்கிற தகவலும் நம்மைக் கலங்கடிக்கிறது.

எனது வடக்கேமுறி அலிமா நாவலில் அதன் நாயகி கழிவறைகளில் எழுதிச் செல்வதும் அதே நாவலில் வரும் கரிக்கோடன் என்னும் சுவரெழுத்துக் கலைஞன் குறித்த புனைவும் சுப்பையாவுடன் தொடர்புடையதாக இருப்பது குறித்து இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஈடுபாடுமிக்க சுவரெழுத்துப் பிரச்சாரகர்கள், இயக்க மேடைகளில் உரத்த குரலெடுத்து நிகழ்வைத் தொடங்கி வைக்கும் பாடகர்கள், கூச்சமில்லாமல் தெருப்புழுதியில் புரண்டு நடிக்கும் கலைஞர்கள் இவ்வாறான அடித்தள உறுப்பினர்களால் மட்டுமே ஒரு இயக்கத்தின் அஸ்திவாரம் உறுதியாகக் கட்டப்படுகிறது.

இன்றைக்கு சுப்பையாவிற்கு தருவதற்கென பழைய டைரிகள் நம்மிடம் நிறைய இருக்கின்றன. சுப்பையாதான் இல்லை. அவருடைய வடிவில் இனிவரப்போகும் சுவரெழுத்துக் கலைஞர்களுக்காக அந்தப் பழைய டைரிகளை நாம் பொத்திப் பாதுகாத்து வைப்போம்.

3 comments:

  1. உண்மை ஜாகிர். அடித்தள உறுப்பினர்களின் வரலாறு பற்றி கவலைப்படாத இயக்கம் எதிர்காலத்தில் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஊர் ஊருக்கு சுப்பையாவைப் போன்ற கலைஞர்களை, செயல்வீரர்களைப் பதிவு செய்யவேண்டும்.

    ReplyDelete
  2. சுப்பையாக்களை நினைத்துப்பார்க்கவும்,நினைவு படுத்தவும் இங்கு யாருக்கும் நேரமில்லை.
    நினைவுபடுத்தவும் தயாராக இல்லை.இன்நிலையில் அவரை தூக்கி பிடித்திருக்கும் உங்களது எழுத்துக்கு ஒரு ராயல் சல்யூட்/

    ReplyDelete
  3. வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடலாமே?உங்களுக்கு சம்மதம் இருக்குமாயின்/

    ReplyDelete