Wednesday, September 12, 2012

முடிந்ததை போல முடியாத ஒரு சூட்சமத்தை புதைத்த புனைவு



        (கீரனூர் ஜாகிர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா நாவலை முன்வைத்து...)

    யமுனாநதிக்கரையில் காண்டவ வனத்தில் வாழ்ந்த நாகர்களை யாராளும் வெல்லமுடியாது. அவர்கள் அந்த காட்டை சூரையாட யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அது அவர்கள் வாழ்விடம் மட்டுமல்ல தாய்மடியும் கூட. அவர்கள் இருக்கும் வரை அந்த இடத்தில் எந்த விதமான புதிய நகரத்தையும் நிர்மாணிக்க முடியாது என்று அறிந்த பாண்டவர்கள் அவர்களை கூண்டோடு அழிக்க முடிவு செய்தனர். அவர்கள் யாவரும் வெளிவராத நாளில் அந்த வனத்தைச் சுற்றி நெருப்பிட்டனர். கானகம் பற்றி பெருநெருப்பு சூழ்ந்து வெப்பம் கூடியதும் மழைபெய்யத் துவங்கியது. மழை நீர் நெருப்பை அனைக்காமல் இருக்க யமுனாநதிக்கரை ஓரங்களிலிருந்து அர்சுனனும், கிருஷ்னனும் அம்புகளால் மழையை திசை திருப்பினர். பற்றி எரிந்த பெரு நெருப்பில் கானகம் வெந்து தனிந்தது. அதில் தப்பி அபயம் கேட்ட ஒரே உயிர் மயன் என்ற மனிதன் மட்டுமே. கடுமையான தீக்கயங்களுடன் அர்சுனன் அமைத்த தீவிழாப்பாதையின் வழியே தப்பினான். தப்பியவனுக்கு  இது இயல்பாய் எழுந்த தீ அல்ல. கானகத்தை அழிக்க மூட்டப்பட்டது. அதுவும் திட்டமிட்டு பாண்டவர்களால் மூட்டப்பட்டதென புரிந்தது. 
    தன் இனவாசிகளுக்கும் தன் வாழிடமான வனத்திற்கும் ஏற்பட்ட அழிவிற்கு பழி தீர்த்துக்கொள்ள, பாண்டவ வம்சத்தை அழிக்க தன்னால் தீ மூட்ட முடியும் என மயன் நம்பினான். வடிவ சாஸ்த்திரத்தையும் சிற்ப மரபையும் கற்றிருந்த மயன் என்ற மாய தச்சன் பாண்டவர்கள் அனுமதியுடன் அவர்களுக்கு பரிசளிக்க நுட்பத்துடன் சூட்சுமங்களை இழைத்து மணிமண்டப மாளிகையை உருவாக்கினான். எரிந்து தனிந்த காண்டவ வனத்தில்தான் அந்த மாளிகை உருபெற்றது. உண்மை போல தெரியும் பொய்களும் பொயாய் தோன்றும் உண்மைகளும். முடிவது போல் தெரியும் பாதை முடியாத சுழலாய் தொடர்வதும் என இயற்கையையும் புனைவையும் கொண்டு அவன் கட்டிய அந்த மாளிகையில்தான் துரியோதனன் விழுந்தான். பொய்தோற்றத்தில் அவன் தவறி விழுந்ததை பார்த்து பாஞ்சாலி சிரித்தாள். அதன் பிறகுதான் அவர்களுக்குள் ஆயிரமாயிரமாய் அழிவுகள் ஆரம்பமானது. 
        மயனின் காண்டவ வனங்களாக இன்றைக்கு பெண்கள் காட்சி தருகின்றனர். தொலைகாட்சிகளில், பத்திரிக்கைகளில், சமூக பழக்கவழக்கங்களில் பெண்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் சூறையாடப்படுகின்றனர். நடந்ததை உணர்ந்து அவர்கள் தப்பிக்கும் வழிகள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற அம்புகளால் அழிக்கப்படுகிறது. குடும்பம் என்பது அர்சுனன் அமைத்த தீவிழாப்பாதை போல் பாதுகாப்பு அளித்தாலும் அங்கும் அவளின் நிலை இரண்டாம் பட்சம்தான். ஆழிசூழ் உலகில் மனித சமூகம் இப்படி பல காண்டவ வனங்களை அழித்துக்கொண்டே இருக்கிறது. தனது இச்சையின் தீரா பசிக்கு முதல் பலியாக பெண்களை கேட்கும் ஆண்கள் சமூகத்திற்கு எதிராக புனைவின் வழியே எழுந்து நிற்பவள்தான் அலிமா. வடக்கேமுறி அலிமா?
    இதிகாச புனைவைப்போல நிகழ்கால நடப்பை புனைவாய் உருகொண்டு வடக்கேமுறி அலிமா என்ற இந்த நாவல் எழுந்து நிற்கிறது. கீரனூர் ஜாகிர்ராஜா அலிமா என்ற பாத்திரத்தின் மூலம் ஆண்கள் அழித்து துடைத்து எரிந்த பல காண்டவ வனங்களின் மாய தச்சனாக அலிமாவை எழுந்து நிற்க வைக்கிறார். பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சி.ஐ.டி ஆபீஸர், வாழ்ந்து கெட்டவள், காதலானால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எயிட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்தரீகம் செய்பவள், சினிமா வாய்ப்புத் தேடி சோரம் போனவள் என இந்த நாவலில் அலிமாவை அறிமுகம் செய்கிறார். பாவம் நாவலாசிரியருக்கு அவளைப்பற்றி முழுமையாய் தெரியவில்லை. அவள் மயனின் மாளிகையைப் போல புரிந்துக்கொள்ள முடியாதவள். படைப்பாளியின் படைப்பை மீறி அவள் எழுந்து நிற்கிறாள். அவள் சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், நாவல் ஆசிரியர், ஒரு கடைநிலை ஊழியனின் துன்பம் புரிந்தவள், மனிதர்களின் ஆழம் புரிந்தவள், திமிரி எழுபவள், தண்ணீரைப் போல விழும் இடங்களில் ஒன்றுபவள், மின்னலைப் போல அதிர்ச்சியளிப்பவள், ஒரு பெண்ணில் உள்ள ஆண் தண்மையை உணர்ந்தவள்
இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.    
    இந்த நாவலில் காலவரிசையில் தொடர் பயணம் இருக்காது. புட்டைப் பிசைகையில் அலிமாவின் கைகள் காலத்தைப் புரட்டிப் போடுவது போல நாவல் கலைந்து பயணிக்கும். ஒரு நாடோடியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் தொகுப்பு இந்த நாவல். அவள் கால்கள் நடக்கும் திசைகளில் எதிர்படும் கழிப்பறைகளில் அவளது வாழ்க்கையை பதிந்துச்செல்கிறாள். 3800 கழிப்பறைகளில் அவள் எழுதியதை "என்டெ யாத்ரா" என்ற சுயசரிதை கோழிக்கோடன் என்ற பதிபாளரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுயசரிதையின் பலபகுதிகளும் அதில் இல்லாத அவளது வாழ்வும் ஊடாடி இந்த நாவல் பயணிக்கிறது. பெண்கள் படும் துயரங்களை அதன் பல பரிமாணங்களை இப்படி ஒரே பாத்திரத்தை வைத்து இதுவரை யாரும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. அப்படி சொல்ல அலிமா என்ற பாத்திரம் மிகவும் காத்திரமாய் படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாவலை படித்து முடிக்கின்றவரை அவள் குறித்த ஒரு பிம்பத்திற்கு வரமுடியாது. படித்து முடித்த பின்னரும்தான். அதனால்தான் அவள் காண்டவ வனத்தின் மாளிகையாய் காட்சியளிக்கிறாள்.
    "உன்னை மனநலக் காப்பக உரிமையாளரின் புத்திரி என்று அறிந்துகொள்ள அரைமணி நேரம் போதுமானதாயிருந்தது. அந்த காப்பகத்தில்  அடைப்பட்டிருந்த ஸ்திரீகளில் உனக்கு மட்டுமளிக்கப்பட்ட ஒரு சில மௌனம் அரும்பிய சௌகரியங்களுக்குள் நெளிந்து கொண்டிருந்தது அந்த விலாசம்" என அவள் கடிதம் எழுதுகிறால் எனில் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்பட அவள் எவ்வுளவு நுட்பமானவள் என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா என்ன? இயலாமையின் பிம்பமாய் காட்சியளிக்கும் பெண்கள் மீதான வன்முறைகள் தினமும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. பல பெண்கள் இவைகளை எதிர்த்துத் தங்கள் வாழ்வின் ரூபத்தில் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பெண்களின் எதிர்வினைகள் கலவரமாக, அடங்கதா தன்மையென, மோசமான செயலாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சித்தரிப்புகள் பெரும்பாலும் ஆண்களின் கண்ணோட்டத்தில் தீர்மாணிக்கப்படுவதாகும். இந்த நாவல் அலிமாவின் உருவில் சமூக பொதுவெளியை நோக்கி நிறைய கேள்விகளை எழுப்புகிறது.
    "அவள் புறப்பட்டிருந்தாள். அவள் உமிழ்ந்து செல்லும் புகை அந்தரத்தில் சுவடுகளைப் போல பதிந்து மறைந்தது". இப்படி வாசகனை வசீகரிக்கும் உவமைகள் நிறைந்து கிடக்கும் இந்த நாவல் படிக்கின்ற வாசகர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். சைடு, அப்பர், லோயர், முன், பின் நவீனத்துவவாதிகளை நைய்யப்புடைக்கும் எழுத்துப்பாங்கு இது. நையாண்டியாய் பல விஷயங்களை கேள்விக்குள்ளாக்குகிறார் ஜாகிர்ராஜா. விருதுகளின் அரசியலை முட்டைச் சிம்னி விருது, கட்டஞ்சாயா விருது, ஏத்தன் பழம் விருது என அலிமாவின் மூலம் பகடி செய்கிறார். நாவலின் இடையில் நாவல் எழுத்தாலுனுக்கும் படிக்கும் வாசகனுக்கும் இடையில் ஒரு விவாதம் நடக்கிறது. மொத்த கதையையும் அலிமாவின் பெரியப்பா வனத்தில் குட்டி ஹபீபல்லா அவளின் பிறப்புக்கு முன்பே எழுதியது போல ஒரு திருப்பமும் உள்ளது.
    "அக்கம்மா இதைகுறித்து நீ பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். இந்த லோகத்தில் நிர்கதியான விளிம்புநிலைப் பெண்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ அங்கெல்லாம் ஆண்கள் சுதந்திரமாக நடத்துகின்ற காரியங்கள் தானே இவை?" என அலிமா தனது மனநலக் காப்பக நட்புக்கு எழுதும் கடித்தத்தில் வினா எழுப்புகிறாள். இந்த நாவல் முழுவதும் இந்த கேள்வியின் எதிர்ப்புகுரலாய் அலிமா அலைந்து திரிகிறாள். அவள் கபுறுகளின் மீது அதாவது இஸ்லாமிய கல்லரைகள் மீது பால்ய வயதில் நடத்திய விசாரனையின் தொடர்ச்சி இது. 
    144 ஆம் பக்கத்தில் நாவல் முற்று பெருகிறது. அல்லது முற்றுபெறாமல் தொடர்கிறது. எப்படி என உங்களால்தான் தீர்மாணிக்கமுடியும். வடக்கேமுறி அலிமாவை சந்திக்காமல் அது சாத்தியமல்ல! படித்து தீர்மாணியுங்களேன்.


நன்றி: மானுட விடுதலை...

Saturday, August 4, 2012

மிர்தாதின் புத்தகம் முதல் அன்னா தஸ்தயேவ்ஸ்கி வரை


நாங்கள் தஞ்சை ப்ரகாஷிடம் இலக்கியம் பயின்ற காலத்தில் கவிதையில் நான் என்கிற சொல் களையப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு நாள் அவர் நீண்ட சொற்பொழிவாற்றினார். எங்களுக்குப் பெரிய வியப்பைக் கொடுத்த உரையாக அப்போது  அது இருந்தது. மிகெய்ல் நைமியின் மிர்தாதின் புத்தகம் முதல் அத்தியாயத்தில் முடிந்தவரை நான் என்ற சொல்லைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற விதி நெடுங்காலமாக அந்த மடாலயத்தில் நிலவி வந்ததுÕÕ என்னும் வரிகள் இடம் பெற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டேன்.  அது ஒரு மடாலயம். மடாலயத்தின் மூத்தவரான சமாதம் தன்னுடைய சாதனைகளைப் பற்றி மிகவும் பெருமையடித்துக் கொள்கிறார். அப்போது, விலக்கப்பட்ட Ôநான்Õ என்கிற வார்த்தையைப் பலமுறை பிரயோகிக்கிறார். பிறகு, அதன் மீது விவாதம் நடைபெறுகிறது. யார் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியாத நிலை. ஆதித் தந்தை நோவா நான்  என்கிற வார்த்தையின் மேல் முதன் முதலாகத் தடை விதித்தார். இல்லை இல்லை முதல் மடாலயத் தோழர் சேமா தான் இதற்கு காரணம் என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள். சமாதம் இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க மிர்தாத்தால் முடியும் என்று ஏளனமாகக் கூறுகிறார். மடாலயத்தால் விதிக்கப்பட்ட ஏழாண்டு மௌனத்தைத் துறந்து மிர்தாத் பேசத் தொடங்குகிறார். ÔÔதுறவிகளே, Ôநான்Õ என்பதே படைப்பாற்றல் மிக்க சொல். எல்லாப் பொருள்களின் மூலாதாரமும் மையமும் நான் என்பதே என்று நீண்டு செல்கிறது மிர்தாதின் உரை. ஒரு கட்டத்தில் கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாளி. நான் என்பதே அவன் படைப்பு. அப்படியிருக்க அவன் ஏன் கடவுளைப் போல சமநிலையில் இல்லை என்றும் கேட்கிறார். இப்படியான புதிர்ச் சங்கிலிகளாக இந்நூலின் அத்தியாயங்கள் நீள்கின்றன. தத்துவங்களில் திளைக்கும் போது மனம் ஒரு அலாதியான நிலையை அடைகிறது. அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
‘‘If this rascal Would not have Written this book I would have written this’’ (இந்த அயோக்கியப் பயல் இதை எழுதியிருக்காவிட்டால் நான் எழுதியிருப்பேன்) என்கிறார் சென்ற நூற்றாண்டின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ஓஷோ ரஜனீஷ். Ôமிர்தாதின் புத்தகம்Õ அப்படி என்னதான் விசேஷங்கள் கொண்டது? படித்துப் பாருங்கள்....
* * *
சமீபமாகத் திரைப்படங்கள் குறித்து நிறையப் புத்தகங்கள் வந்து குவிகின்றன. எழுத்தாளர்களால் திரைப்படம் குறித்த தொடர்கள் சிறு பத்திரிகைகளில் நிறைய எழுதப்படுகின்றன. காட்சிப் பிழை, படப் பெட்டி என  மாற்று சினிமா குறித்த இதழ்களும் புதிது புதிதாய் வரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். இந்த வரிசையில், உலகத்திரைப்படங்களில் கனமான பாத்திரங்களை ஏந்தியிருக்கும் சிறுவர் சிறுமியரின் வாழ்வு, அக் கதாபாத்திரங்களின் அரசியல், அழகியல் மன ஓட்டங்கள் குறித்து கே.பாலமுருகன் எழுதிய தொடர் தீர்ந்து போகாத வெண்கட்டிகள் என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.
தாய்லாந்து, இந்தோனேசியா, ஹாங்காங், சீனா, பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா என உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட சிறுவர்களுக்கான படங்களைக் குறித்து அவர் எழுதியிருக்கிறார். அவற்றுள் பலவும் முக்கியமான திரைப் படங்கள். இந்தப் பட்டியலில் ஒரு தமிழ்ப் படமும், இந்திப் படமும்கூட இடம் பெற்றுள்ளது விசேஷமானது.
வீட்டை விட்டு விடுதிக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரு மாணவனின் ஏக்கங்களைப் பிரதிபலிக்கும்  DORM  என்ற தாய்லாந்து சினிமாவிலிருந்து இந்தக் கட்டுரை தொடக்கம் பெறுகிறது. இதுதான் நான் வீட்டை விட்டுப்போகும் முதல்நாள். இன்று தான் என் எல்லா சுதந்திரமும் பறிபோகும் முதல் நாளும் கூட என்று அந்தச் சிறுவனின் குரல் துயருடன் ஒலிப்பது நம் பள்ளி விடுதிகளில் அடைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் குரலை எதிரொலிக்கிற மாதிரியே இருக்கிறது.
Hikikanam  என்றொரு தாய்லாந்துப் படத்தைக் குறித்து பாலமுருகன் எழுதுகிறார். ஜப்பானிய சிறுவர்களை ஒரு கால கட்டத்தில் தொற்றியிருந்த வினோதப் பழக்கம் குறித்து இத்திரைப்படம்  நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பிவீளீவீளீணீஸீணீனீ என்று ஜப்பானிய அரசால் அழைக்கப்பட்ட இந்த சுயவதைக்காரர்கள் ஆண்டுக் கணக்கில் வீட்டுத் தனிமையிலிருந்தபடி பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் பிற மனிதர்களைச் சந்திக்காமல் தங்கள் காலத்தைக் கழிப்பார்களாம். ஒன்பது வருடத்திற்கு மேலாகக் கூட ஒரு சிறுவன் தனி அறைக்குள் அடைந்து கிடப்பான் என்கிற தகவல் நம்மை அதிர்வுக்குள்ளாக்குகிறது. இந்தத் திரைப்படம் குறித்து மேலதிகமாக எழுதிச் செல்லும் பாலமுருகன் இக்கட்டுரையின் முத்தாய்ப்பாக சில வரிகளைப் பதிவு செய்கிறார்.
Ôகுழந்தைகளின் அறைக்குள்ளிருந்து தனிமையின் சுவாசம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் வன்மையான மனநிலை சுவரில் கொடூரமாகக் கிறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் தெரிகிறது.Õ
இந்த வரிகளும் நம்மை அச்சுறுத்தவே செய்கின்றன. குழந்தைகளின் உளவியல் நுட்பமானது. நாம் குழந்தைகள் என நினைத்து அவர்களை அணுகுவதை அவர்கள் விரும்புவதே இல்லை. அவர்களுக்குத் தேவை அவர்களை அதிகாரத்தாலும், அளவான அன்பாலும் கட்டுப்படுத்தும் பெற்றோர்களல்ல. சமமாகப் பாவிக்கின்ற நண்பர்களே. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும் வரை நாம் குழந்தைகளின் உளவியலைக் கண்டுபிடிப்பது அரிது.
பாலமுருகன் ஒவ்வொரு படத்தின் கதைக்கும் தொடர்புள்ள தன்னுடைய வாழ்க்கை நிகழ்வொன்றையும் சேர்த்து நமக்கு வாசிக்கத் தருகிறார். அது நம்மை வேறு தளத்துக்கு நகர்த்திச் செல்கிறது. இந்தப் புத்தகம் இந்திய சினிமாக்கள் அடைய வேண்டிய மாற்றங்களை வலியுறுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது.
குழந்தைகளுக்கான மிகச்சிறந்த திரைப்படங்கள் இன்றைக்கு ஈராக், ஈரான், சீனா, இந்தோனேசியா நாடுகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா இந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது.
* * *
எழுத்தில் மிகுந்த ஆச்சாரத்தையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கிற நல்லவர்களுக்கு நான் என் புத்தகங்களை வாசிக்கத் தருவதில்லை என்றொரு கொள்கையை வைத்திருக்கிறேன். ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கிற ஒழுக்கம் என் புத்தகங்களில் கிடையாது. மீறி அவர்களாகத் தேடி வாசித்துவிட்டு என்னைக் குறித்த பிம்பங்களைக் கலைத்துக் கொள்வதில் எனக்கொன்றும் அபிப்ராயம் இல்லை. இந்த Ôஒழுக்க எழுத்தைÕ நான் வெறுக்கிறேன். வாழ்க்கை இவர்கள் நினைக்கிற மாதிரி ஒழுக்கச் சட்டகத்துக்குள்  அடங்கி இல்லை. ஒழுக்கவாதிகள் மட்டுமே எழுத வேண்டுமானால் இந்த உலகில் ஒரு நல்ல எழுத்தாளன்கூட இருக்க முடியாது. அதற்காக வலிந்தெழுதும் ஆபாசத்தை நான் ஒப்புக் கொள்ளவும் மாட்டேன். எழுத்து சுதந்திரமானது. அதற்குத் தடைகள் எதுவும் இருக்கக்கூடாது. இவ்வகையில் பெருமாள் முருகன் எழுதியுள்ள  கெட்டவார்த்தை பேசுவோம் நூலை நாம் வரவேற்க வேண்டியுள்ளது. பெருமாள் முருகன் இதை வலிந்து செய்யவில்லை. கட்டமைக்கப்பட்டுள்ள பொய்மைகளைத் தகர்க்க வேண்டுமெனும் நோக்கத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். கெட்ட வார்த்தைகளை வலிந்து பயன்படுத்திப் பிரபலம் பெறுவதோ, பாலியல் சார்ந்து எழுதி நிலைநிறுத்திக் கொள்வதோ எனக்கு அவசியமற்றவை என்று அவர் முன்னுரையில் பேசுகிறார். இது ஒரு ஆய்வு. சகமனிதர்களின் இயல்பான உரையாடல்களை, அவை வெளிப்படும் தருணங்களை, அதன் கொச்சை அழகை,  கவித்துவத்தை, தமிழ் இலக்கியங்களிலிருந்தும், நாட்டார் கதையாடல்கள், வாய்மொழி வழக்காறுகள், கூத்துகள் எனப் பல்வேறு வடிவங்களிலிருந்தும் வாசித்துப் பார்த்து  வெளிப்படுத்தியுள்ள ஆய்வு.
* * *
யோ.கர்ணன் சமீபமாகத் தனது கதைகளின் மூலமாக அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இளம் ஈழ எழுத்தாளர். ஏற்கெனவே இவருடைய தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சேகுவேரா இருந்த வீடு இரண்டாவது தொகுப்பு. பொதுவாக ஈழ எழுத்தாளர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் ஈழத் தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரம் ஜாதி வர்க்க ரீதியான பிரிவுகள், மோதல்கள் இவற்றைத் தம்படைப்புகளில் பிரதிபலிப்பவர்கள். இவர்கள் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இளைய தலைமுறையினர். விடுதலைப் போராட்டம் தீவிரத்தை அடைந்த யுத்தகளத்திலிருந்து நேரடி சாட்சியாகத் தம் படைப்புகளை முன் வைப்பவர்கள். யோ.கர்ணன் இரண்டாம் வகையைச் சார்ந்தவர். பெரும்போக்காகவுள்ள யுத்த சாட்சியத்திலிருந்தும் அவர் துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால் ஒரு முழுமையான யுத்த சாட்சியம் என்று வரும்போது அதன் தவிர்க்கப்படவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார்ÕÕ என்று நிலாந்தன் இவரைக் குறித்து அபிப்ராயப்படுகிறார்.
தொகுப்பிலுள்ள முதல் கதையான திரும்பி வந்தவனை வாசித்து முடித்ததும் யாரோ நம் முகத்திலறைகிற உணர்வேற்படுகிறது. யதார்த்தம் எப்போதுமே கசப்பாகவும் ஜீரணிக்க முடியாததாகவுமே இருக்கும் என்பதுபோல. எல்லாக் கதைகளுக்கும் ஈழப்போராட்டமும், இயக்கச் செயல்பாடுகளும்தான் களம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென இங்குள்ள தமிழ்மக்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் ஓரிடத்திலிருந்து கொண்டு விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத் தன்மையுடனும், நவீன கதைகளுக்கேயுரிய கூறுகளுடனும் கதை சொல்லும் கர்ணன் 13 கதைகளிலும் தன்னையும், தன் போராட்டத்தையும், தங்களது பெண்களையும், ஆண்களையும், தலைவர்களையும் சுய விமர்சனம் செய்து கொள்கிறார். எந்த இடத்திலும் தோற்றுப் போனோம் என்கிற கழிவிரக்கம் கொப்பளிக்கவில்லை. இதனாலேயே இவருடைய கதைகள் தனித்துவம் பெறுகின்றன.
* * *
தமிழ் நவீன இலக்கியவாதிகளால் அடிக்கடி நினைவு கூறப்படும் அயல் எழுத்தாளர்களில் தஸ்தயேவ்ஸ்கி முக்கியமானவர். அடுத்த கணத்தில் நிறைவேற இருந்த மரண தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்ட அதிர்ஷ்டசாலியாக அவர் இருந்தாலும், வாழ்வின் எல்லைவரை துயரங்களை எதிர்கொண்டு போராடிய கலைஞனாகவும் இருந்தார். எழுத்தாளர்கள் வலிய நிறுவிக்கொள்ளும் ஒழுக்க விதிகளைப் புறந்தள்ளி சூதாடியாக, வலிப்பு நோயாளியாக, தீராத கடனாளியாக வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த அவருடைய படைப்புலகிலிருந்து, குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள், இடியட், வெண்ணிற இரவுகள் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்புகள் வெளிவந்தன.
தஸ்தயேவ்ஸ்கியின் ஒரு புதிய நாவலைப் பிரதி எடுக்கும் நிமித்தமாகச்சென்ற இளம்பெண் அன்னா, தஸ்தயேவ்ஸ்கியின் அன்புக்கும், காதலுக்கும் பாத்திரமாகி அவருடைய இறுதிக்காலம் வரை வாழ்க்கைத் துணையாக இருக்கிற வாய்ப்பைப் பெறுகிறார். அன்னா தஸ்தயேவ்ஸ்கி எழுதிய நினைவுக்குறிப்புகள் என்னும் இந்நூல் தஸ்தயேவ்ஸ்கி ஒரு நாவலைச் சொல்லி அதை அன்னா பிரதி எடுத்துத் தருவது வரைக்குமான குறுகிய கால சம்பவங்களைக் கூறுவதாக இருப்பினும் தஸ்தயேவ்ஸ்கி என்கிற மகா கலைஞனது வாழ்க்கை நிகழ்வுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகவும் இது நமக்குப் புலனாகிறது.
மாபெரும் எழுத்து மேதைக்கும், இளம் பெண்ணுக்குமான அப்பழுக்கற்ற உறவைச் சித்தரிக்கின்ற குறுநாவலைப் போலவும் இதை வாசித்தெடுக்கலாம். யூமா.வாசுகியின் நேர்த்தியான மொழிபெயர்ப்பு இவ்வனுபவத்தை நமக்கு வழங்குகிறது.
“வலிப்பின் நேரத்தில் நான் சொர்க்கத்திலிருந்தேன். இந்த உலகத்தின் மற்ற அனைத்து இன்பங்களையும் தருகிறேனென்று சொன்னாலும் இந்த சொர்க்கத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறும் தஸ்தயேவ்ஸ்கியைத் தாக்கியது பரவச வலிப்பு நோய் என்று மருத்துவர் பி.இக்பால் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். தஸ்ததயேவ்ஸ்கி படைத்த வலிப்பு நோயுள்ள கதாபாத்திரங்களையும் அவர் அதில் பட்டியலிடுகிறார்.
“ஒரு கணம் மேலெழுந்து வந்த அதிருப்தி அத்துடன் இல்லாமற் போனது” என்று அன்னா குறிப்பிடுகிற ஒரு வரி நினைவுக்குறிப்புகளின் ஒன்பதாவது அத்தியாயத்தின் கடைசி பாராவில் வருகிறது. இந்த வரியை நான் நீண்ட நேரம்  அசைபோட்டுக் கொண்டிருந்தேன். அந்த அதிருப்தி மட்டும்  மேலெழுந்து தீவிரம் பெற்றிருந்தால் ஒருவேளை தஸ்தயேவ்ஸ்கியும் அன்னாவும் வாழ்க்கையில் இணைந்திருக்க வாய்ப்பில்லாமலேயே போயிருக்கும்.
தஸ்தயேவ்ஸ்கியின் காதல் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையை வாசிக்கையில் பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போனேன். “சில நேரம் தஸ்தயேவ்ஸ்கி அன்னாவின் உடைகளைக்கூடப் பணயம் வைத்துச் சூதாடுவார். ஆனால் சூதாட்டம் அவருக்கு எழுதுவதற்கான உட்தூண்டலாக இருப்பதால், அவள் ஒருபோதும் அதை எதிர்த்ததில்லை. தஸ்தயேவ்ஸ்கி அனைத்தைவிடவும் மேலாக அன்னாவை நேசித்திருந்தார். சில நேரங்களில் நாட்கணக்காகப் பட்டினி கிடக்க வேண்டி வரும்போது, அல்லது இருப்பிலிருந்த, அன்னாவின் கடைசி உடையையும் சூதாடித் தோற்கும்போது, ஒரு களங்கமற்ற சின்னஞ்சிறுவனைப்போல அவர் அவள் காலடியில் குமுறி அழுவார்”. 
எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் மனைவிகளும் ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டிய புத்தகமாக இந்த நினைவுக்குறிப்புகளை நான் உணர்கிறேன்.

Friday, April 13, 2012

கீரனூர் ஜாகிர்ராஜாவின் "பெருநகரக் குறிப்புகள்”

எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்று வெகு காலமாய் சொல்லிக்கொண்டே வருவதை மரபாகக் கொண்டிருந்தாலும் ஒரு எழுத்து என்பது நேர்மையான வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். ஒரு நல்ல மனிதனாக, நேயமுள்ள குடும்பத்திற்குப் பொறுப்பானவனாக இருந்து விட்டால் எழுத்து தேவையில்லை. அப்படி வாழ்ந்தால் போதுமானதே. இந்தப் போதாமையால்தான் அவரவர் சமூகத் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் எழுத்தைக் கைக்கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு படைப் பாளனுக்கும் நேர்கிறது. எனவேதான் எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்பதை சொல்லித்தீர வேண்டிய நிர்ப்பந்தம் நிகழ்கிறது. ஜாகிரைப் பொறுத்தளவில் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு துளியையும் கூர்ந்து கவனித்து அதைப் படைப்புக்குள் பதிவுசெய்து கொண்டே போவதை இத்தொகுப்பின் சிறுகதைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் காட்டுகிறது. வாழ்வதையே படைப்பாகக் காட்டி வாழ்கிறார்.
காய்ந்து கிடக்கிற நதியில் எல்லாமும் கிடக்கின்றன. அதுகுறித்து நதியிடம் எந்தவிதமான கருத்தோ கோபமோ ஆனந்தமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீர் நிறைந்து கரைமேவி ஓடுகையில் நதியின் அழகு சொல் லொண்ணா எண்ணக்குவியலை மனத்துள் விதைக்கிறது. சாதாரண மனிதன் குளிக்க இறங்கி ஆனந்தம் கொள் கிறான். நீச்சல் தெரிந்த குழந்தைகள் ஆசையில் அலுப்பு தீருமட்டும் நதியில் விளையாடி களைக்கின்றன களிப்பில். நீச்சல் தெரியாதவன் நதியைப் பார்க்கையில் பயத்துடன் எதிர்கொள்கிறான். கவிஞனுக்கு நதி ஆயிரம் சொல்லித் தருகிறது. பல்லாயிரம் படைப்புகளில் நதி நுரைத்துப் பொங்கி ஓடிக்கொண்டுதானிருக்கிறது. இப்படிப்பட்ட நதி காய்ந்து கிடக்கும் காலங்களில் பார்க்க வலி பொங்குகிறது. எல்லாமும் அதில் கொட்டப்படும் போது ஆத்திரம் வருகிறது. இதற்கும் நதி எதுவும் சொல்வதில்லை. இப்படித்தான் வாழ்க்கை எல்லோர் வாழ்விலும் நதியைப்போல வறண்டும் நிறைந்தும் கிடக்கிறது. வாழ்கிற நிலைப் பாட்டில்தான் எல்லாமும் சமன்படுகிறது.

அவரவர் தன்மைக்கேற்ப அல்லது அமைந்துவிடுகிற சூழலுக்கு ஏற்ப இந்த நிலைப்பாட்டை சமன் செய்கிற அல்லது சமன் செய்துவிட்டதான திருப்தியில் வாழ்க்கை முடிந்துபோகிறது. இங்கே இந்த நிலைப்பாட்டிற்காக காயங்களும் மகிழ்ச்சியும் உருவாக்கம் கொள்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் மதமும் இனமும் ஜாதியும் பேதங்களும் வேராக நிற்கின்றன. இது சாதாரண மனிதனை அவஸ்தைப்படுத்துகிறது. படைப் பாளனுக்குச் சவாலாக அமைகிறது. தன்னுடைய சமன்பாட் டிற்காகவும் தன்னைப்போன்றோரின் சமன்பாட்டிற்காகவும் இந்தச் சவாலை ஏற்கும் கட்டாயத்தை அவன் பிறந்து வளர்ந்த சமூகமே அவனுக்கு விதிக்கும்போது காயங்களால் தாக்கப்பட்டும் அவமானங்களால் உணர் வூட்டப்பட்டும் வலிகளின் வெப்பத்தில் உருகுகிறான். படைப்பாளனாகக் களத்தில் நிற்பவன் இவ்வெப்பத்தைப் படைப்புக்குள் பரப்பி அதை எல்லோருக்கு மான வலியாக உணர்த்தி நிற்கிறான். ஜாகிர்ராஜாவும் இப்படித்தான்.

எப்போதும் ஏராளமான காயங்களையும் உணர்வுச் சிதைவுகளையும் அவமானங்களையும் சந்தித்த வடு மாறாமல் தொடர்வதை மனம் கசிவோடு ஒவ்வொரு கதையிலும் உணர முடிகிறது. எனவே புனைகதையின் ஒரு முக்கியக் கூறாக இருக்கும் சிறுகதை புனையப்படும் கதை எனும் பொருண்மைக்கு அழுத்தமான பொருளாக வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புனைதல் எனும் நிலையில் "பெருநகரக் குறிப்புகள்” தொகுப்பை வாசித்து முடிக்கையில் மனம் நனைகிறது. ஒரு சமூகம் என்பது அதில் அடங்கியுள்ள மக்கள் கூட்டத்தை வைத்து அடையாளப்படுத்துவது அதன் பொருளாக அறியப்படுவது. எனவே அதன் பொறுப்பு என்பது பொதுமையானது, சமமானது, நலம் பயக்குவது என்பதைத் தாண்டி, காக்க வேண்டிய சமூகமே நசுக்கிச் சிதைப்பதைச் சிறுவயது முதல் கவனித்து அதை மறக்க முடியாமல் மன்னிக்கவும் தயாராக இல்லாமல் கடுமையாக விமர்சித்து ஒவ்வொரு கதையிலும் நெஞ்சு நிமிர்த்தும் ஜாகிர் எனும் படைப்பாளனின் தெளிவு அதிசயமானது, ஆச்சர்யமானது, பாராட்டுக்கு மிக உரியதும்கூட. ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் சொல்லும் விதமும் உணர்த்தும் விதமும் மொழிநடையும் எதார்த்தமும் அழிக்கமுடியாத அழுத்தம் கொண்டு லபக்கென்று விழுங்குவதுபோல வாசிக்கிற மனசுக்குள் போகிறது. இருப்பினும் சில கதைகளில் சிறுவயது நிகழ்வுகளில்கூட இடையிடையே இன்றைய வயது ஜாகிர்ராஜா கருத்துச் சொல்வது யதார்த்தம் மீறியது என்றாலும் அது பட்டுக் காய்த்துப்போன வடுவின் உறுத்தல் எனும் நிலையில் ஏற்றுக்கொள்ளவே தோன்றுகிறது.

இத்தொகுப்பு மட்டுமல்ல ஜாகிர்ராஜாவின் கதைகள் முழுக்கவே ஒரு சிறப்பான அம்சமாகப் பார்ப்பது அவற்றில் எந்தத் திணிப்பும் இல்லை. வலிகளுக்கான அறிவுரை மருந்தும் இல்லை. தனக்குத் தன்னுடைய பிறந்த சமூகம் விதித்ததை, அதனால் பட்ட இன்னல்களை சிறுவயது முதலே மனத்தில் அழிக்கமுடியாத காய பிம்பமாக உள் வாங்கிப் பின்பருவத்தில் படைப்பு மனமாக உருக்கொண்ட நிலையில் படைப்பில் அதனைக் கொட்டுகிறார். படிப்போர்க்கு நீதி சொல்வதல்ல இக்கதைகளின் நோக்கம். ஒரு சமூக வலியை காட்சிப்படுத்துவதில் இவை சிறப்புறுகின்றன. மேலும் சமூகத்தை எதிர்ப்பது அல்லது போர்க்கொடி உயர்த்துவதும் நோக்கமல்ல. ஆனால் தான் பட்ட வலியை தன் சாதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பட்ட அவமானங்களையும் படும் வேதனை களையும் மாற்றி சமூகம் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை உறுத்தலோடு உணர்த்துவது தன்னுடைய படைப்பு நோக்கமாக ஜாகிர் கொண்டிருக்கிறார் என்றே உணர முடிகிறது. இஸ்லாமியச் சமூகத்தின் சடங்குகளையும் மரபுகளையும் தேவைப்படும் சூழல்களில் கதைகளில் இயல்பாகச் சொல்லும் போக்கில் அவர் கொண்டிருக்கும் பற்றும் தெளிவுறத் தெரிகிறது. ஒரு தாய் அல்லது தந்தை தவறு செய்யும்போது அதை வயதில் குறைந்த மகன் சுட்டுவிரல் நீட்டிக் குற்றத்தை உணர்த்தும்போது அதைத் தாங்கிக்கொள்ள இயலாத மனோபாவத்தைத் தவிர்த்து சமூகம் ஜாகிரின் படைப்பு மனத்தைக் கருதவேண்டும் என்றே தோன்றுகிறது. குற்றங்களைக் கண்டிக்கும் உரிமை ஒரு மகனுக்கு உண்டு என்பதைக் கட்டாயம் ஏற்க வேண்டும். இதைத்தான் ஜாகீர் சிறுகதைகள் உணர்த்துகின்றன.
காதலின் நுட்பமும் நேயமும் உணரப்படாமை, மனித மதிப்பீடுகள் அலட்சியப்படுத்தப்படுதல், மனம் சிதைத்தல், பசியின் தாகம், நட்பின் அழுத்தம், உறவின் மேன்மை, வாழ்வதற்காக அலைக்கழிக்கபடும் வாழ்க்கை, சடங்குகளின் பெயரால் சாதிகளின் பேதத்தால் மிருகமெனப் பாயும் மேலாதிக்கங்கள், அதற்கான போராடுதல்கள், அவற்றின் தோல்வியும் அவமானங்களும், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் நிகழும் மன வெடிப்புகள் போன்றவை இவரது கதைகளின் கருக்களங்களாக நுரைத்துக் கிடக்கின்றன. சக்கிலி மத்தை, (மந்தைய எங்களுக்குன்னு ஒதுக்கிக் குடுக்கற வரைக்கும் நாங்க யாரும் எடுப்பு கக்கூஸ் அள்றதுக்கு வர மாட்டோம்), மழை - மகனைப் புரிந்துகொள்ளாத தந்தை (....அங்கேயே சென்ட்ரல் தண்டவாளத்திலேயோ கூவத்திலோ விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளலாம். உன் தீதார்கூட எங்களுக்குத் தேவையில்லை..... நல்லவர்களுக்கொல்லாம் சீக்கிரமாய் மௌத் வந்துவிடுகிறது. வேணும் ஸலாம். நாயன் துணை), மனத்தை உருக்கும் வெம்மை (....மனதுக்குள் சுடர்விட்ட வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை அவன் தன் பிஞ்சு வாயால் ஊதி ஊதி அணைக் கிறான்.

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனுக்கு இந்த சிறைச்சாலையின் நெடிய சுவர்களுக்குள்ளிருந்து நான் கூறும் வாழ்த்துகள் கேட்கவா போகிறது), சுவடுகள் வாழ்வின் அவலத்தை மிக நெருப்போடு உணர்த்தி வலிக்கச் செய்கிறது (....நெடுஞ்சாலைகளும் எல்லாவிதமான சீதோஷ்ணங்களும், யாசகக் குரல்களும், புறக்கணிப்பும் அத்தாவுக்கு ரத்தத்தில் கலந்தவை.) அறைச்சுவர்கள் சிரிக்கின்றன, (....அவர்களுக்கு உடமையான பெட்டிகளிலிருந்து மேலும் பல ஜாதிப் பாம்புகள் எட்டிப் பார்க்கின்றன....சற்றுமுன் நிகழ்ந்த வாதங்கள் மறந்து கண்களுக்கு முன்னால் பானம் நிறைந்த குவளை தோன்றவும் குளிர்ந்துபோனான்), அடையாளம் - பசியின் மகத்துவத்தை, மேன்மையை அடையாளப்படுத்துவது (....பள்ளி வாசல் வீதியில் அவள் கிழக்கும் மேற்குமாய் அலைந்ததைக் கண்டு ராவுத்தப் பசங்கள் சிரியாய்ச் சிரிப்பார்கள்...... நம்மளப் போல ஏழைக்கி பட்டினி கெடக்குற நாளெல்லாம் நோம்புதா) இவையெல்லாம் தொகுப்பின் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய கதைகள். வாழ்வை ஒருமுறைக்கு நூறு முறையாகப் பரிசீலித்து வாழ வேண்டிய தேவையை உணர்த்துபவை.

தேர்ந்த எழுத்தாளுமையை ஒவ்வொரு கதையும் வெளிக்காட்டுகிறது. தடையற்ற பிரவாகம் சொற்களினூடாக பாம்பு செல்வதுபோல அமைந்திருப்பது படிப்பதற்கான ஆர்வத்தை குறைக்காது காக்கிறது. என் வாழ்க்கையும் அதன் மீது கொட்டப்பட்ட சமூகத்தின் ஆதிக்கக் குப்பையும் அதனைப் பற்றவைத்து நெருப்புக் காட்டிய சாதியப் பிரிவும் தவிர வேறு வேண்டியதில்லை என்பதான ஜாகிரின் எழுத்து அதன் மூலம் ஒரு பொதுமையான சமூக அவலத்தை, அசிங்கத்தை உரித்துக் காட்டுவது இக்கதைகளின் சாகா வெற்றியாகக் கருதிக்கொள்ளலாம். கதைகளின் மொழிநடை தேர்ந்த நடையாக உள்ளது. அவற்றிலும் எளிமையும் இயல்பும் அதேசமயம் செழுமையான அழுத்தமும் கொண்டு மைந்துள்ளது. சிலவற்றைச் சான்று காட்டலாம்.

நான் இங்கு கொட்டும் பனியிலும், மழையிலும் வம்பாடு பட்டு தொகை தொகையாக அனுப்பினால் தின்று தெறித்து ஊரைச் சுற்றுவது உன் வழக்கமாகிவிட்டது. மானம், ரோஷம் என்பது மருந்துக்குக்கூட இல்லாத மழுங்கைதான் நீ.

....தணிக்கவியலாத வெம்மை... அதன் இறுக்கமான பிடி மலைப் பாம்பின் நெரிப்பென எலும்புகளை முறிக்கிறது.

யாசகக் குரல். அதுவும் அக்காவின் சோகம் ததும்பிய யாசகக் குரல் எத்தனை துன்பமானது. ஒரு நாளேனும் அத்தா இதை உணர்ந்ததில்லை. புவ்வாவின் ஆல்பம் குட்டை மர பீரோவுக்குள் இருக்கிறது. ஆல்பத்தில் கணக்கற்ற கன்னிகள் நீந்துகிறார்கள். அது பெருமூச்சுகளின் சமுத்திரம் என மாறுகிறது... விதவிதமான பெண்களின் நீண்டகால கனாக்கள் ஆழத்தின் ஆழத்துள் பாறைப் பாசியாய் படர்ந்து கிடக்கிறது. அபிலாஷைகளின் இழைகளால் நெருக்கி நெய்யப்பட்டது அவர்களின் ரூபங்கள்.

வாழ்வின் உண்மைகளுக்குள் நீந்திக்கொண்டிருக்கிற படைப்பாளனின் உணர்வுபூர்வமான இத்தொகுப்பும் படைப்பாளனும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இத்தொகுப்பை வாசித்துவிட்டு எதுவும் பேசலாம். இடமிருக்கிறது. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஏதாவதொரு சிறுகதையில் வாழ்வதற்கான சாத்தியங்களை இத்தொகுப்பு கொண்டிருப்பதை இத்தருணத்தில் சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


Thursday, April 5, 2012

இருதயச் சுவர்களில் எழுதிச் சென்ற கலைஞன்



கீரனூர் ஜாகிர்ராஜா

புத்தகச் சந்தைகள் இம்மண்ணில் காலூன்றி வலுப்பெற்ற பிறகு புதிய புத்தகங்களின் வரவு கணிசமாகப் பெருகியுள்ளது. கலை இலக்கியம் மட்டும்தான் என்றில்லை; விதம்விதமான தலைப்புகளுடன் வகை பல மாதிரியான நூல்கள் அச்சாகிக் குவிந்த வண்ணமுள்ளன. வாங்குகிற எல்லோருமே வாசிக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இயலவில்லையாயினும், புத்தகங்கள் நாலா திசைகளிலும் சிதறிப் பரவலாகியுள்ளதை மட்டும் அனுமானிக்க முடிகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் பதிப்புத்துறை வியத்தகு வளர்ச்சி கண்டுள்ளதும், வாழும் ஆளுமைகளின் ஆக்கங்கள் மட்டுமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் விட்டுச் சென்ற பதிவுகளெல்லாம் அச்சாகி நினைவுகளை நெஞ்சகத்தில் மீட்டிப் பார்க்கும்படியான நெகிழ்வான சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளதும் முக்கியமானது. அவ்வகையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர் வெ. ஆறுச்சாமியின் முயற்சியில் அவ்வியக்க வெளியீடாக ‘சுவரெழுத்துப் புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா - சிந்தனைப் பொறிகள்’ நூல் வடிவம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் நீண்ட அரசியல் வரலாற்றில் சுவரெழுத்தை ஒரு பிரச்சார உத்தியாகப் பயன்படுத்திக் கொண்டதில் பெரும்பங்கு பொதுவுடமை இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்குமானது. மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினரின் பத்திரிகை வாசிப்புகளைத் தாண்டிய வெகுமக்கள் கவன ஈர்ப்பு சுவரெழுத்துகளுக்கு உண்டு.

சுவரெழுத்தைக் கலையாக மாற்றுவது ஒருவகையில் நம் குழந்தைகள் தான். குழந்தைகளுள்ள ஒவ்வொரு வீட்டுச் சுவர்களும் கண்டிப்பாக பென்சில் கிறுக்கல் களைக் கண்டிருக்க வேண்டும். இவையே குழந்தைமையின் ஆதி மனப்பதிவுகள்.

எங்கள் வீட்டுப் புழக்கடைச் சுவரில் விறகுக்கரி கொண்டு நானெழுதிய வாசகங்களும் வரைந்து கிறுக்கிய சித்திரங்களும்தான் என் எழுத்து வாழ்க்கைக் கான தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும்.
கோடையின் வெறிச்சோடிய தெருச்சுவரொன்றில் ‘பச்சை ரத்தம் குடிக்கும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா’ என்கிற குருவிநீலம் கரைத்தெழுதப்பட்ட வாசகங்கள் தீடீரெனப் பதிந்திருக்க அதை திகைத்துப் படித்த கணத்தை இன்னும் மறக்க முடியவில்லை.


இன்றைக்கு சுவரெழுத்து வழக்கொழிந்து வருகிறது. பெரிய ஜவுளி நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே சுவர்களை ஆக்ரமித்திருக்கின்றன. நவீன ஃப்ளெக்ஸ் கலாச்சாரம் வந்து எல்லாத்தெரு முனைகளிலும் பவிசு காட்டி நிற்கிறது. நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல் நேரத்திலும் கூட சின்னங்கள் வரையப்படாத சுவர்களே அதிகம்.

1980 களின் மத்தியில் கோவையில் சுற்றித்திரிந்த காலக்கட்டத்தில் வெங்கிட்டாபுரம் நண்பர்கள் ரவி, கந்தசாமி ஆகியோருடன் ஒரு நிகழ்வில் சுவரெழுத்து சுப்பையாவை சந்தித்துள்ளேன். அந்த நேரத்தில் சுப்பையாவின் திறன்களைத் தாண்டி அவருடைய ஆக எளிமையான தோற்றத்தின் மீதுதான் என் கவனம் குவிந்திருந்தது. பல வருஷங்களுக்குப் பின் சுப்பையாவின் எண்ணங்கள் நூலாகி அதற்கொரு அபிப்பிராயத்தைப் புத்தகம் பேசுது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வேனென கனவிலும் நினைத்ததில்லை.

சாலை அமைக்கப் பயன்படும் தார் எடுத்துக் காய்ச்சி சூடு ஆறிய பின் அதில் மண்ணெண்ணெய் ஊற்றி கையை விட்டுக் கலக்கி சுருட்டி வைத்த மெல்லிய துணியால் தொட்டுத் தொட்டு சுவரில் எழுதும் முறை சுப்பையாவுடையது. தமிழகமெங்கும் இப்படித்தான் பெரியாரின் கருத்துகளை சுப்பையா பதிவு செய்திருக்கிறார். ஆரம்பக் கல்வியைக் கூட முறையாகப் பெற்றிராத இவர் பெரியாரிசத்தை தரவாகக் கற்று ஊர் ஊராய் சுற்றிச் செய்திருக்கும் பணிகளை நினைக்க மலைப்பாய் இருக்கிறது. இதற்கென இவர் நன்கொடை ஏதும் பெற்றதில்லை. பழகிய தோழர்களிடம் அவர் கேட்டுப் பெற்றது பழைய டைரிகளை மட்டுமே.

சுப்பையாவின் சிந்தனைப் பொறிகளை வாசிக்கையில் சூடான மிளகாய் பஜ்ஜியை காரத்துவையலில் தோய்த்துச் சாப்பிட்ட மாதிரி உறைப்பாயிருக்கிறது. குப்பைத் தொட்டியைக் காட்டி‘இதில் எழுதுங்கள் அண்ணே’ என்றால் சுப்பையா உடனே “புராணத்தை இதிலே போடு” என்றெழுதுவாராம். பெரியார் வித்து.

நூலில் சுமார் 600 பக்கங்கள் கட்டெறும்பு ஊர்ந்து செல்வது போன்ற அவருடைய கையெழுத்தில் அத்தனையும் பகுத்தறிவுத் தெறிப்புகள். இந்துப் புராணங்களை ‘ஒரு கை’ பார்க்கும் சுப்பையா, கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் விட்டு வைக்க வில்லை.

‘‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன்.......’’ என்ற மு. கருணாநிதியின் புகழ்பெற்ற பராசக்தி படவசனத்தை மெச்சிப் பேசாத திராவிட இயக்கத்தினர் இருக்க முடியாது. ஆனால் கறாரான கொள்கைப் பிடிப்புள்ள சுப்பையா “கோயில் கூடாது என்பதற்காக அல்ல என்றால் கடவுள் இருப்பதாக நம்புகிறாயா? இது பெரிய அயோக்கியத்தனம்” என்று விமர்சனம் செய்வாராம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் தி.மு.கவினரின் நழுவல்களை சுப்பையா போன்ற பிடிப்புள்ள நாத்திகர்களால் ஜீரணிக்க முடியாதுதான்.

சுப்பையாவுடன் பழகிய பலரும் இந்நூலில் அவருடனான தங்களின் அனுபவங்களை விளம்புகின்றனர். அவை பல தகவல்களை நமக்குத் தருகின்றன.

ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர், தோழர் ஈ.வெ.ராமசாமி, பெரியார் ஈ.வெ.ராமசாமி, தந்தை பெரியார், அய்யா போன்ற பல விதமான விளிப்புகளில் பெரியாருக்கே விருப்பமானது ‘தோழர் ஈ.வெ. ராமசாமி’ என்பதுதான். “தோழர் என்றே விளியுங்கள்” இது பெரியார் எழுதிய குடி அரசு தலையங்கம்.

சொற்பொழிவாற்ற வரும்போது பெரியார் தனக்குச் சேரும் பெருங்கூட்டத்தைப் பார்த்து வியந்து போய் “நேற்று சுப்பையா வந்தாரா” என்று கேட்பாராம். பெரியார் பேசவுள்ள ஊர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகச் சென்று தம்பட்டமடித்தவர் சுப்பையா.

இப்படிப்பட்ட செயல்வீரர் தன் அந்திம காலத்தில் மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் அனாதைப் பிணமாகக் கிடந்தார் என்பதும், திராவிடர் கழகத் தலைமை இவர் போன்ற பெரியார் பெருந்தொண்டரின் புகைப்படத்தைக்கூட வைத்திருக்கவில்லை என்கிற தகவலும் நம்மைக் கலங்கடிக்கிறது.

எனது வடக்கேமுறி அலிமா நாவலில் அதன் நாயகி கழிவறைகளில் எழுதிச் செல்வதும் அதே நாவலில் வரும் கரிக்கோடன் என்னும் சுவரெழுத்துக் கலைஞன் குறித்த புனைவும் சுப்பையாவுடன் தொடர்புடையதாக இருப்பது குறித்து இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஈடுபாடுமிக்க சுவரெழுத்துப் பிரச்சாரகர்கள், இயக்க மேடைகளில் உரத்த குரலெடுத்து நிகழ்வைத் தொடங்கி வைக்கும் பாடகர்கள், கூச்சமில்லாமல் தெருப்புழுதியில் புரண்டு நடிக்கும் கலைஞர்கள் இவ்வாறான அடித்தள உறுப்பினர்களால் மட்டுமே ஒரு இயக்கத்தின் அஸ்திவாரம் உறுதியாகக் கட்டப்படுகிறது.

இன்றைக்கு சுப்பையாவிற்கு தருவதற்கென பழைய டைரிகள் நம்மிடம் நிறைய இருக்கின்றன. சுப்பையாதான் இல்லை. அவருடைய வடிவில் இனிவரப்போகும் சுவரெழுத்துக் கலைஞர்களுக்காக அந்தப் பழைய டைரிகளை நாம் பொத்திப் பாதுகாத்து வைப்போம்.

Wednesday, April 4, 2012

தேய்பிறை இரவுகளின் கதைகள் -- விமர்சனம்

கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணம்!

எஸ்.அர்ஷியா


தேய்பிறை இரவுகளின் கதைகள் கீரனூர் ஜாகிர் ராஜாவின் பதினேழு ஆண்டுகாலத் தனிமையை நம்மிடம் பகிர்வதாக இருக்கின்றன. தன்னை தனது சுற்றுச் சூழலை நேர்மையானப் படைப்பாளியாகக் கேள்விகளுக்கு உட்படுத்துவதுடன் தன் படைப்புகள் மூலம் ஆத்மசோதனையும் சுய உணர்தலும் கொள்கிறார். வாழ்வின் மீது தீராத பற்றும் சக மனிதர்கள் மீது இனிய தோழமை அன்பும் கொண்டிருக்கும் இந்தப் படைப்பாளி அதன்மூலம் தான் அறிந்த மிகவும் எளிய மனிதர்களைப் பற்றி மிகச் சரளமான மொழியில் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போகிறார்.

வழக்கமாக இஸ்லாமியச் சிறுகதைகள் ஏகன் இறைவனின் கருணையையும் நபி பெருமான் அவர்களின் பராக்கிரமங்களையும் ஊரில் பெரிய மனிதராகக் கணிக்கப்பட்டவர் ஹஜ் பயணம் புறப்படும் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது அவர் ஊர் திரும்பும் கொண்டாட்டம் பற்றியதாகவோ இருக்கும். தொழச் சொல்லியும் ஜக்காத் கொடுக்கச் சொல்லியும் வலியுறுத்தும் கதைகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. அப்படிச் செய்தால் வாழ்க்கை வளம்பெறும் என்று பயான்கள் செய்யப்படுவதுண்டு. தொழப்போகாமல் தூங்கிக்கொண்டிருப்பவன் வாய்க்குள் இப்லிஷ் மூத்திரம் மோண்டுவிடும் பயமூட்டல் கதைகள் மட்டுமே இஸ்லாமியக் கதைகள் என்று அடையாளம் காட்டப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கின்றன.

அப்படித் தொழப்போயும் ஏழை எளியவர்கள் ரம்ஜான் குத்பாவுக்கு புதுத்துணி வாங்க முடியாமல் கஷ்டப்படுவதையும் பிறை பார்த்து ஊரெல்லாம் கொண்டாட்டத்தில் இருக்கும்போது சோர்ந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவர்களுக்கு யாரோ வழிப்போக்கர் புத்தாடைகளைக் கொடுத்துவிட்டு மறைந்துபோகும் அற்புதங்கள் நிறைந்தக் கதைகள் ரம்ஜான் மாதத்தில் வணிகப் பத்திரிகைகளிலும் இஸ்லாமியப் பிரச்சாரப் பத்திரிகைகளிலும் பிரசுரமாவதுண்டு. தொழுதலுக்கானப் பரிசு என்று அதை வியந்தோதியும் வந்தார்கள். அந்தக்கதைகளும்கூட முந்திய ஆண்டு எழுதிய அதே எழுத்தாளர் பாத் திரங்களின் பெயர் ஊர் மாற்றி எழுதியதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிலவேளைகளில் பிறை தெரியாத அவஸ்தைக் கதைகளும் வந்ததுண்டு. பக்ரீதுக்கு இருக்கவே இருக்கிறது ஆடுகளும் அதுகுறித்த வதைகளும்.

இவையெல்லாம் இல்லாமல் எளிய மக்களின் பாடுகளையும் வாழ்க்கையின் முரண்களையும் பொருளாகக் கொண்டு ஒன்றிரண்டு கதைகள் எப்போதாவது வந்ததுண்டு. நிச்சயமாக இஸ்லாமியப் பத்திரிகைகளில் அவை அச்சானதில்லை. அதை எழுதியவர்கள் அவற்றை ஏன் தொடரவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. கேள்விக்கு பதிலாக ஒருசிலர் நட்சத்திரங்களாகத் தோன்றியதுமுண்டு. அப்படித் தோன்றியவர்களில் கீரனூர் ஜாகிர்ராஜாவிடம் கூடுதல் ஒளி தென்படுகிறது.

முப்பால்போல தேய்பிறை இரவுகளின் இந்தக்கதைகள் மூன்று வகைமைகளைக் கொண்டதாக இருக்கின்றன. அதை அவர் எழுதிய காலத்தின் அடிப்படையிலும் இடங்களின் சூழலிலும் கதைகளின் தன்மையிலும் பகுக்கலாம். எப்படிப் பகுத்துக் கொண்டாலும் அதை வாசிக்கும்போது அதற்குள் உறைந்து கிடக்கும் வீரியம் இதற்கு முன் வெளிப்படாததாக இருக்கிறது. ஏற்கனவே இஸ்லாமிய எழுத்தாளர்களால் இட்டுக்கட்டப்பட்டதை அல்லது மறைக்கப்பட்டதை உடைத்து வீசுவதாகவும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் உடைய உடைய இதற்கு முன் உண்மை என்று நம்பப்பட்டு வந்த 'மூடாக்குகள்' சிதறி முகத்தில் அறைகின்றன.

முதல் சிறுகதையான வெம்மை லெளகீகத்தின் திசைகள் தோறும் விரிந்திருக்கும் பிடிக்குள் அடங்காமல் மனச் சுதந்திரத்துடன் அலைய விரும்பும் ஒருவன் சமூகத்தின் மறைமுக வாழ்வியல் மிரட்டல்களுக்கும் ஏளனப் பார்வைகளுக்கும் ஆட்பட்டு உள்ளுக்குள் குமுறும் வாழ்வற்ற அவஸ்தையை அப்பட்டமாக்குகிறது. பிறந்த கணத்திலிருந்து இல்லாத அதீதமான ஒரு வெம்மை கல்யாணமான நாள் முதல் உடலைக் கவ்விக் கொண்டு விடமாட் டேனென்கிறது என்று சொல்லும் துயர் அரசு பதவியோ முறையான வருமானமோ அல்லது அரசியல் சம்பாத்தியமோ இல்லாத எல்லா இளைஞர்களுக் கும் பொருந்திப் போகும் ஒன்று. ஒட்டுமொத்த உலக இளைஞர்களின் துயரம். மனைவியின் கிழிந்த துப்பட்டிக்குப் பதிலாக கறுப்பு வண்ண பர்தாவை வாங்கித்தர முடியாமல் வீட்டுக்குள் உருவாகும் அவலம் நிறைந்த சச்சரவு அவனை வெளிநாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போகிறது. துப்பட்டிக்கு மாற்றாக இங்கு கண்டறியப்படும் கறுப்பு வண்ண பர்தா தாய்மண்ணைப் பிரிந்துபோகின்ற மனத்தின் அடிவேரைக் கொத்தாகப் பிடுங்கிய இஸ்லாமிய இளைஞர்களின் ஜீவ உடல் உழைப்பு ரத்தமும் வியர்வையுமாக மணல் காட்டிலும் பொரிக்கும் வெயிலிலும் உறிஞ்சப்பட்டு அதற்கு மாற்றாக சாதாரணப் பண்டமாக இறக்குமதி செய்யப்படும் குறியீடு. கூடவே அதைக்கொண்டு பெண்ணைப் போர்த்தும் அடிமைத்தனத்தையும் இறக்குமதி செய்கிறது. இப்போது வெளியாகும் எந்த இஸ்லாமியப் பத்திரிகையை கையில் எடுத்தாலும் அதன் வண்ண மயமான அட்டையில் பர்தாக்களின் விளம் பரங்களைக் கண்ணாறக் காணலாம். அதனடியில் அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று அடிக்கோடு குறிப்பு இடப்பட்டிருக்கும். மனைவி மக்களைப் பிரிந்து பணத்தின் மீதான வேட்கையுடன் புது நட்பு களுடன் ஒண்ட முடியாமல் முற்றிலும் மாறான இயற்கை அமைப்பில் உடல் உபாதைகளுக்கு ஆளாகி பொலிவிழந்து மன உலைச்சலுக்கு உள்ளாகி அவன் ஈட்டிக்கொண்டு வருவதை பெருஞ்செல்வமாகப் பார்க்கும் சமூகம் அதற்குள் பொதிந்து கிடக்கும் அவனது பேசா மொழியையும் மெளனமுமான உணர்வுகளையும் கண்டு கொள்வதில்லை. அதை அந்தஸ்து என்கிறது. அதில் அவன் தோல்வியடையும்போது அது வன்மமாக உருவெடுக்கவும் செய்யலாம். மனப்பிறழ்வுக்கும் வகை செய்யலாம். இஸ்லாமிய இளைஞர் களுக்கு துபாய் என்றால் மற்றவர்களுக்கு அமெரிக்கா. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் 'இன்னுமா பயணம் புறப்படவில்லை?' எனும் குரல் இஸ்லாமியர்கள் வாழும் தெருக்களில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது.

அப்படி ஈட்டிக்கொண்டு வரும் பொருட்கள் வாழ்க்கையை மட்டுமல்ல நகர்களின் புராதனங்களையும் மாற்றியமைத்து உயர்கோபுரக் கடைகளாகி மாட மாளிகைகளாகி தொன்மங்களை காவு வாங்கி விடுகின்றன. அப்படிக் காவுக்கு உள்ளான தஞ்சாவூரில் உறவுக்கார ஹனிபா மாமுவைத் தேடிக்கொண்டு போகும் 'ரெட்டை மஸ்தானருகில்' சிறுகதை புதிய வேதனையைத் திறந்துகாட்டுவதாக இருக்கிறது. ரெட்டை மஸ்தான் என்பது அந்த ஊரிலிருக்கும் ஒரு தர்ஹா. இஸ்லாமிய மக்களுடன் பிற சமூகத்தினரும் ஆறுதலும் தேறுதலும் கொள்ளும் இடமாகும். அதனருகில் ஏதோ ஒரு அற்புதம் நடக்கப்போகிறது என்பதானத் தூண்டுதலை தலைப்பு கொண்டிருந்தாலும் அதுபேசும்பொருள் முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. புதிதாக அறிமுகமான ஒரு கால்குலேட்டர் எப்படி ஒரு கணக்குப் பிள்ளையின் வாழ்க்கையை முடக்கிவிட்டதோ அதே வேலையை கூடுதலாகக் கம்ப்யூட்டரும் செய்து ஹனிபா மாமுவின் தங்க நிற மூடியைக் கொண்ட பேனாவை மங்கலாக்கியதுடன் வாழ்தலுக்கான புதிய ஒப்பனையை - பெண்களின் பிரத்யேக ஒப்பனையை - அவரை ஏற்றுக் கொள்ளச் செய்திருப்பதை மனஅவசத்தோடு காணச் செய்கிறது. வாழ்தலுக்காக எதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நோக்கும்போது அதிர்ச்சியைத் தாண்டிய நடுக்கம் தோன்றுகிறது.

பிறரைக் காவுகொண்டு களிநடனம் ஆடுகின்றப் 'பெருநகரக் குறிப்புகள்' கலையின் எவ்வகையைச் சார்ந்தவருக்கும் கட்டாயம் கிடைக்கின்ற அனுபவப் பேழை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவம் அதனுள்ளிருந்து எழுந்துவந்து பொருந்திப் போகும். மனக்கிளர்ச்சியைத் தரும். முன்புபட்ட அவஸ்தைகளை மீள் உருவாக்கம் செய்து பார்க்கும்போது கடந்துவந்த திசைகள் மனசில் தவிப்பையும் முகத்தில் புன்சிரிப்பையும் அரும்பச் செய்யும். ஒருவேளைத் தேநீருக்காக... ஒருவேளை உணவுக்காக... தூங்கும் இடத்துக்காக... அவசரத்துக்குக் கைமாத்து கேட்பதற்காக... அலைந்து திரிந்ததை இப்போது பெருமுயற்சிகள்போல பேசச் சொல்லும். அதனூடே தொடர்ந்த பயணம் வெற்றி பெற்றிருந்தால் அவற்றுக்குப் பெயர் நான் நடந்து வந்த பாதை என்று மாறிப்போய்விடுகிறது. அதேவேளையில் தோல்விகள் அதனை காலந்தோறும் குறிப்புகளாக வைத்து பொக்கிஷமாகப் பார்க்கச் செய்கிறது. விஜயராஜின் டிரங்க் பெட்டி நிரம்பி வழிந்ததாகச் சொல்லப்படும் இடம் எப்படியும் வென்றுவிடுவோம் எனும் நம்பிக்கையின் ஆணிவேர். அதுதான் இன்னும் இன்னும் இளைஞர்களை பெருநகரம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. பெருநகர வீதிகளில் நடந்துபோகும் அத்தனைபேரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கிறது. நாளைய பெருநகரக் குறிப்புகள் அவர்களாலும் எழுதப்படும்.

தொகுப்பின் மிக முக்கியமானக் கதையாக 'குடமுருட்டி ஆற்றின் கரையில்' அமைந்து போயிருப்பது தற்செயலானது அல்ல. இஸ்லாமியக் குடும்பங் களில் வரன் தேடும் வைபவம் என்பது புவ்வா போன்றவர்களாலும் வீட்டுக்கு 'சபக்' சொல்லிக் கொடுக்க வரும் உஸ்தாத்பீக்களாலும் நடத்தப்படுகிறது. இவர்கள்தான் நடமாடும் மேட்ரிமோனியல்கள். உள்நுணுக்கங்கள் தெரிந்தவர்கள். எல்லைகளைத் தொடுபவர்கள். உள் விளிம்புகளை வளைத்து எதை யும் சாதித்துக் காரியம் கைகூடிவரச் செய்யும் திறமை அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருப்பது வியப்பு தருவதாக இருக்கிறது. இந்தக்கதையில் வரும் புவ்வா அதையும் தாண்டிய மனுஷியாக இருப்பது அவள் மீது பிரேமையை உருவாக்குகிறது. வாழ்க்கை இழந்து இரண்டு குழந்தைகளுடன் உழன்ற உம்மசல்மாவுக்கு இரண்டாவது நிக்காஹ் நடத்தி வைக்கவும் தெம்பிருந்தது புவ்வாவுக்கு என்ற வரிகள் அந்த பிரேமைக்கு வலுசேர்ப்பதாக இருக்கின்றது. அதே புவ்வாவுக்கு தனது காரியதரிசியான ஹைரூன்னிஸாவுக்கு ஓரிடத்தைக் கோர்த்து விடுவதில் மனமுரணும் இருக்கிறது. அவளிடமுள்ள மெல்லியதான இந்த மனவிலகல்... இந்த முரண்... யதார்த்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறது. அவளுக்குள் ஓடும் வாழ்வியல் அரசியல் கதைக்கு ஓர் அம்சத்தைத் தருகிறது. யதார்த்தத்துக்கும் மாயவாதத்துக்கும் இணைப்பாக சாயாக்கடை ஜக்கரியா இருக்கிறார். அப்துல் காதர் ஜீலானி ஆண்டகை மீரான் மைதீன் கதைகளிலும் எஸ். அர்ஷியாவின் கதைகளிலும் ஜாகிர்ராஜாவின் கதைகளிலும் இடம் பெறுவதில் ஒரு ஓர்மை இருப்பதாகவே படுகிறது. அவர் அற்புதங்களை நிகழ்த்தும் சாதாரண மனிதராகவே காட்சிக்கு வருவதும் அப்படித்தான். அதனாலேயே இந்தக்கதை மற்ற இஸ்லாமிய எழுத்தாளர்களின் கதைகளிலிருந்து ஓர் அங்குலம் முன்னுக்கு இருக்கிறது. யாருமறியாத ரகசியக் கொலுசொலிக்க ஹைரூன் குடத்தை எடுத்துக்கொண்டு அந்த இருளில் ஆற்றை நோக்கி நடந்தாள். நல்ல வியாபாரம் கொழிக்கிற நேரத்தில் சாயாக்கடையில் ஜக்கரியா இல்லாதது புவ்வாவுக்கு ஏமாற்ற மளித்தது என்பதுடன் கதை முடிந்து போகிறது. ஆனால் ஹைரூன்னிஸா வெறுமனே பருத்துப் பிதுங்கும் மார்புகளைக் கொண்ட சதைக்கோளம் அல்ல. உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் ஆன பெண் என்பதை உணர்த்தும் கதை அந்த இடத்திலிருந்துதான் கிளைக்கிறது. அதுவே தொகுப்பில் இந்தக்கதையை முக்கியமான இடத்துக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

உருவம் கதையில் வரும் மனைவியை இழந்த மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது அடையாளங்களுக்குள் உலவும் ஓர் மனிதராகத்தான் தெரிகிறார். பயான் செய்யும் மெளலவிகளும் மிகச்சாதாரண மனிதர்கள்தாம். அவர்கள் மூக்கால் சுவாசிப்பவர்களாகவும் வாயால் உண்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனனம் செய்து துப்பும் வாசகங்கள் நம்மிலிருந்து அவர்களை தூரத்தில் நிறுத்தி அவர்களுக்கு அந்தஸ்தைக் கொடுத்து விடுகிறது. அவர் செய்யும் தொழில் உன்னதமாக்கப்பட்டதால் அவருக்கு அந்த அந்தஸ்து. அவ்வளவுதான். தாடி வளர்த்து குல்லா அணிந்து அத்தர் மணம் கமழ பயான் செய்பவர்களில் பலர் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது சாதாரணமாகவே பார்க்கக் கிடைக்கும். மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது கூட தன்னிலையை ஒப்புக் கொள்வதாக "வாஸ்தவத்தில் நான் இப்படிப்பட்ட ஆளல்ல. கொஞ்சம் நாளா மனசில கொழப்பம். இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு படம் கெடச்சுட்டாப் போதும்னு இப்பத் தோணுது. ஏன்னு தெரியல... எல்லாம் அல்லாஹ் அறிவான்..." என்று சொல்கிறார். இந்த இடம் மிக முக்கியமானது. எந்த மனிதனாலும் நினைவுகளைத் தாண்டிவிட்டுப் போகமுடியாது. அதுபோல இழப்புகளையும். மதம் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகள் எல்லா இடத்திலும் ஒன்றாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் செல்வாக்குடன் திகழும் இஸ்லாமியக் குடும்பங்கள் எத்தனையிருக்கும் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவைகளும்கூட சிதைந்துகொண்டு வருகின்றன என்பது கண்கூடு. அனிபா ராவுத்தரின் ஆயிஷா மன்சில் அப்படிச் சிதைந்து போனவைகளில் ஒன்று. கடன்கூட பெற முடியாத நிலைக்கு உள்ளாகும் அனிபா ராவுத்தரின் கடந்த காலம் படாடோபமாகத்தான் இருந்திருக்கும். இன்று பள்ளிவாசல் ஹவுஜில் ராஜமீனைக் களவாடிய குற்றத்துக்கு உள்ளாகி நிற்கிறார். களவாடிய மீன் மருமகனுக்கு குழம்பாகியோ... பொறிக்கப்பட்டோ போயிருக்கும். ஆனால் அவமானம்? ஹவுஜில் மீன்கள் வளர்க்கப்படுவது தொன்மம். அவற்றை பிடிக்கக்கூடாது என்று சொல்வதுண்டு. வளர்ந்து முதிர்ந்த மீன் என்னாகும் என்ற கேள்வி வேடிக்கைப் பார்க்க... பொறிபோட வரும் சிறுவர்களிடம் இருக்கவே செய்கிறது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா டாக்கிகளில் (நீர்க்குளங்கள்) மீ ன் பிடிக்கக்கூடாது என்று தகவல் பலகையே இருக்கிறது. ஆனால் அக்குளத்து மீன்கள் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டேதான் இருக்கின்றன. வந்துபோகும் யாத்திரிகர்கள் யாரும் அதைத் திருடும் வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போது நகரின் முக்கியமான தொழுகைப் பள்ளிவாசல்களில் ஒலு செய்வதற்காகக் கட்டப்பட்ட ஹவுஜ்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக குழாய்கள் நிறுவப்படுகின்றன. ஹவுஜ் இருந்த இடங்கள் பத்துக்குப் பத்து கடைகளாகி நிர்வாகத்தின் வருமானத்துக்கும் ஊழலுக்கும் அடிகோலுகின்றன.

அதுபோல செம்பருத்தி பூத்த வீடு யாரையும் வசீகரித்துவிடும் வல்லமை கொண்ட கதை. இளமையைத் தொடும் ஆண்பெண் இருபாலர் யாருக்குமே காதல் இல்லாமல் போகாது. குறைந்த பட்சம் மனசுக்குள்ளாவது இருந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பின் ஊர் திரும்பும் நாயகன் தன் இளமைக் கால நாயகி எஸ். மயிலாத்தாவின் செம்பருத்தி பூத்த வீட்டைப் பார்க்கக் கிளம்புகிறான். அதில்தான் எத்தனை சுகம்? எதிர்பார்ப்பு? வீடு மாறாமல் அப்படியே இருப்பதில்தான் எத்தனையெத்தனை ஆனந்தம்! விட்டுப்போன இடைக்காலத்தை மீட்டெடுக்கும் நினைவுகளின் வழியே ஊடுருவும் மனசு. 'ஆத்தா' - 'ஆத்தா' - 'ஆத்தாவ்' - ரொம்ப நாளாயிப் போச்சு இப்டியெல்லாங் கூப்புட்டு கொஞ்சம் வெட்கமாக்கூட இருந்துச்சு. திரும்பத் திரும்பக் கூப்புட்டுப் பாத்துக்கிட்டேன் எனும் வாசகங்களில் அந்த இளம்வயதுக்கே திரும்பிப்போய்விடும் சூத்திரம் ஒளிந்து கிடக்கிறது. வீட்டைப் பார்த்துவிட்ட வனுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கும் ஆவலை மனம் கிளறுகிறது. "மாப்ள அந்தப் புள்ள செத்துப் போயி ஏழெட்டு வருஷமாசேடா" என்கிறான் நண்பன். அவன் மனசுக்குள் பாலாய்ப் பொங்கிக் கொண்டிருந்த அத்தனையும் அடங்கிப்போய்விடுகிறது. போதும் இங்கேயே கதையும் முடிந்துவிட்டதாக உணர முடிகிறது. அதன் பின்பு எதுவாக இருந்தாலும் அது கூடுதல்தான். மாயந்தான் என்றறிந்தாலும் இப்படியான விடலை நினைவுகள் இல்லாத யுவனும்யுவதியும் இந்த லோகத்தில் இல்லவே இல்லை. அந்த சுகமான வலிகள்தான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போகின்றன. காதலும் அதை யொற்றி எழக்கூடிய நினைவுகளும் பசுமையானவை. அதற்குள் பயணம்செய்து எழுத்தாக மீட்டெடுக்கும் லாவகம் படைப்பாளியிடம் தெளிந்து கிடக்கிறது.

ஊர்ஊராய்ச் சுற்றி யாசகம் வாங்கிப் பிழைக்கும் சலீமின் பார்வையிலிருந்து விரியும் சுவடுகள் கதை தருமம் என்ற சொல்லிலிருந்து கிளைந்து அதைப் பெற முயற்சிப்பவர்கள் படும் அவலத்தையும் அவசத்தையும் வெளிப்படுத்துவது. யாசகத்துக்கு பெண்களும் குழந்தைகளுமே முன்னிருத்தப்படுகின்ற னர். அதுதான் தொழிலில் கூடுதல் பொருளீட்டலைப் பெற்றுத் தருகிறது. அந்த முன்னிலைப்படுத்தல்தான் மகளின் அலறலை "உனக்கு பிரம்மையாக இருக்கலாம்" என்று அத்தாவை சொல்ல வைக்கிறது. யாசகம் கேட்டுப்பெறுதல் எனும் எளிய பார்வையைத் தாண்டி அதற்குள் உறைந்து கிடக்கும் மற்றவையான அவமானம் புறந்தள்ளல் கண்டுகொள்ளாமை யார் கண்ணிலும் படாமல் போய்விடுகிறது. கதையில் வரும் அக்காவின் அலறலை சமூகத்தின் அலறலாகக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

வேற்றுக் கிரக அவாந்திரப் பெருவெளியில் பொம்மையுடன் கைகோர்த்தவாறு திரியும் குழந்தை தெளபிக் இடம்பெறும் ஆண்பொம்மை ராட்சஸப் பறவையின் சிறகுகள் கதையில் வரும் சக்கரை முகமதுவின் மன உலைச்சல் ஆதிமை நீஸா என்றொரு சிநேகிதி போன்ற சிறுகதைகள் நிஜங்களுக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. சடங்குக்காக செய்யப்பட்ட சைத்தானை அடிப்பதில் மக்கள் கொள்ளும் ஆர்வம் கடமையாக்கப்படுகிறது.

அதேவேளையில் ஆடான நீஸாவின் சிநேகிதி ஆயிஷா 'சைத்தாம் புடிச்சவளாக' ஆக்கப்படுவது ஆட்டை அறுப்பதுபோல நெஞ்சை அறுக்கிறது. கறுப்புக்கோட்டு பக்ரீத் ஆடுகள் எளிய விளிம்புநிலை மக்களின் பாடுகளை உரித்துக் காட்டுவனவாக இருக்கின்றன. சுவர்கள் சிரிக்கின்றன உள்வெளி போன்ற கதைகள் நிகழ்த்துதலைத் தாண்டிய பதிவுகளாக மட்டுமே இருக்கின்றன. நிழலின் சாயலும் சாயலின் நிழலும் 'சென்னை வாழ்க்கையைப் படம் பிடிக்கிறதா?' என்றாலும் புல் ஓபன் நைட்டின் ஜிப் திடீரென கீழிறங்கி இருந்ததைக் கவனித்தான்."இதுதான் சர்ர்ர்ரியலிசம்..." என்றபடி சுதந்திரமானான் எனும் பகடி ரசிப்பதாக இருந்தது. வேறுகதைகளில் இல்லாதது.

சிறந்த எழுத்து என்று வரையறுக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வு தார்மீக எழுச்சி சுதந்திரம் ஆழம்என சகல மேன்மைகளும் நிரம்பிய அந்தரங்க நிலை படைப்பாளியிடம் கொட்டிக்கிடக்கிறது. அதனாலேயே கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணத்தைக் கொண்டவையாக அவரது கதைகள் இருக்கின்றன.

இந்தப்பின்னணியில் உருவாகியிருக்கும் கதைகளை முன்னரே சொன்னதுபோல மூன்று வகைமைகளாகப் பகுத்தாலும் அதனுள் சூழல் ஜாகிர்ராஜாவை கீர னூர் தஞ்சாவூர் சென்னை என்று மூன்று இருப்பிடங்களில் இருத்தி உருவாக்கிப் பயணிக்கச் செய்திருக்கின்றது. அவற்றுள் சென்னையைக் காட்டிலும் முதலிரண்டு தளங்களில் பின்னப்பட்டக் கதைகள் நெஞ்சை நிறைக்கின்றன. ஆனாலும் கூட ஜாகிர்ராஜாவின் முன்னே இன்னும் இன்னும் விரிந்து பரந்த களம் ஆடப்படாமல் இருக்கவே செய்கிறது. அதில் நிகழ்த்துவதற்கான மூலங்களும் திறமும் அவரிடம் நிறையவே இருக்கின்றது.

நன்றி : உயிர் எழுத்து. நவம்பர் 2011.

Tuesday, April 3, 2012

வடக்கேமுறி அலிமா ம. மணிமாறன்


vadakke-muri-alima

நாவல்களின் உள்ளுறையாக அமைந்திருப்பவை யாவும் தனிமனிதனின் புற உலக ஞாபகங்கள்தான். அகத்தினுள்ளும் ஞாபகங்கள் உறைந்து கிடக்கத்தான் செய்கின்றன. உலகெங்கும் தன் வரலாற்றையே நாவலாக்கிப் பார்த்தனர் எழுத்தாளர்கள். அதன் எல்லை தன் ஊர், தன் குடும்பம், தன் குலவழியின் பல்வேறு கிளைகள் என்ற அளவில்தான் பயணித்தது. எழுத்தாளர்களின் எழுத்துக்கான கச்சாப்பொருளை தன்னிலிருந்து உருவாக்கி அதனை அடுக்கி, அடுக்கி புனைவாக்கிடும் சக்கரவாட்டச் சுழற்சிக்கு உலகின் எந்த மொழியும் தப்பித்ததில்லை. மகத்தான படைப்புகளும் கூட எழுத்தாளனின் வாழ்விலிருந்து கிளைத்து வந்தவையாகத்தான் இருந்தன என்பதை நாம் அறிவோம். இப்பயணத்திலிருந்து விலகிச் செல்லும் படைப்புகள் மீது வாசக மனம் பெரும் விருப்பம் கொள்கிறது. அப்படியான வழமையிலிருந்து விலகிச் சென்ற இலக்கியப் படைப்பே கீரனூர் ஜாகிர் ராஜாவின் “வடக்கே முறி அலிமா எனும் அவரின் நான்காவது நாவல்.

இரண்டாயிரத்துக்குப் பிறகான காலத்தின் மிக முக்கியமான எழுத்துலகப் பிரதிநிதித்துவம் ஜாகிரினுடையது. அவருடைய நான்கு நாவல்களுமே இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது. மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி எனும் மூன்று இலக்கியப் பிரதிகளும் எளிய மொழியில் தனித்த தமிழ் இஸ்லாமிய வாழ்வினைப் பதிவு செய்திருந்தன. ஒரு வகையில் அவை யாவும் கூட தன் ஊரின், தனித்த மனிதர்களின் அகலாத ஞாபகங்கள்தான். வேறு எந்த இஸ்லாமிய நாவல்களும் காட்டியிராத அல்லது காட்டத் தயங்கியவற்றின் மீது தன் எழுத்தென்னும் ஆயுதம் கொண்டு பெரும் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சியவர் ஜாகிர். “அலிமா” முற்றிலும் வேறானதொரு படைப்பு. ஒரு நாவலுக்கான வெளிப்பாட்டு முறையை எழுத்தாளன்தான் முடிவு செய்கிறான் என்ற போதும் படைப்பு முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்ள எழுத்தாளன் எடுத்திடும் முயற்சியும் கூட நாவலுக்கான வடிவத்தை தீர்மானிக்கிறது.

அலிமாவின் வாழ்க்கை ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கவில்லை. தன் பால்யத் தோழனான கெபூருடனான கபுறுகளி ஆட்டத்தில் துவங்கி, முஸ்லியாருடன் உடன் போதல், மம்முதுடன் வெளியேறுதல், அக்கம்மாவான செய்யதலி பாத்திமாவுடனான நெருக்கம், எழுத்தாளர், நடிகை என வேறு வேறு அவதாரம் எடுத்தல் என்பது எல்லாப் பெண்களுக்கு என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை ஒழுங்கிற்குள் சாத்தியமில்லை. அதுவும் வளமான இஸ்லாமியக் குடும்பத்துப் பெண்ணிற்கு இப்படியான வாழ்க்கை அமைந்திட வாய்ப்பே இல்லை. பள்ளிக்கு படிக்கப் போவது, குரான் ஓதிட மதரஸாவிற்குச் செல்வது, பிற ஆடவர் பார்வையில் படும்போது தலையில் முக்காடிட்டுக் கொள்வது, திருமண வயது நெருங்குவதற்கு முன்பாகவே நிக்காஹ் நடந்தேறுவது இவைதான் இஸ்லாமிய பெண்ணிற்கான வாழ்வியல் ஒழுக்கங்கள். இஸ்லாமிய பெண்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களை அலிமாவைக் கொண்டு கலைத்துப் போட்டிருக்கிறார் ஜாகிர். எனவேதான் வடக்கே முறி அலிமா நேர்கோட்டுத் தளத்திற்குள் இயக்கம் பெறவில்லை. மாறாக ஒரு பின் நவீனத்துவப் பிரதியாக வடிவம் பெற்றிருக்கிறது.

வடக்கே முறி அலிமா இஸ்லாமியத் தளத்திற்குள் இயங்குகிற போதும் கூட அவள் நடிகை, எழுத்தாளர் என பரிணாமம் கொள்கிற போது முற்றிலும் வேறு ஒரு பிரதியாக வடிவம் கொள்கிறது. அதிலும் குறிப்பாக அவளுடைய எழுத்து என்பது கழிவறைச் சுவர்களில் இருந்துதான் பிரதியெடுத்து புத்தகமாக்கப்பட்டது என்பது உச்சபட்ச பகடியாகும். எழுத்தாளப் பெருந்தகைகளைப் பகடித்து கேள்விக்கு உள்ளாக்கிடும் எழுத்தே கழுதைக்கு (பத்திரிகை) அலிமா அளித்த பேட்டி என்பதை வாசகன் அறிந்திடுவான்.

சாதாரணமானவர்களால் அசாத்தியமான பெரும் படைப்புகளை உருவாக்கிட முடியாது என வாசக மனங்களில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்து இயல்பானதல்ல. அவற்றை கட்டமைத்ததில் தமிழ் இலக்கியத்திற்குள் காலம் தோறும் இயங்கி வருகிற சிறு பத்திரிகைகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. பேட்டியில் அலிமா சொல்கிறாள் “என் கழிப்பறை எழுத்திற்கு ஆதர்சம் காசிம்” உடனே பேட்டி எடுக்க வந்தவர் - “யார் அந்த காசிம்? புகழ்பெற்ற அரபு யாத்திரிகர் போல இருக்கிறதே” - வாசகனுக்கு மிக நன்றாகத் தெரியும். காசிம், அலிமாவின் வீட்டுச் சமையல்காரன். அவனுடைய கழிவறைக் குறிப்புகளாக உருப்பெற்ற விதவிதமான மனிதர்களின் குறிகள் எதன் குறியீடு என்பதையும் வாசகன் அறிந்திடும் வகையிலேயே நாவல் இயக்கம் பெற்றிருக்கிறது. ஆனாலும் கூட எழுத்தாளன் ஆதர்சம் பெறுவதற்கான ஆளுமையாக சமையல்காரனான காசிம் இருப்பதை நவீன இலக்கிய உலகம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

அமைப்பியல் வாதம் விவாதத்திற்குள்ளான நாட்களில் “பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங்” எனும் எழுதுதல் முறை உலகெங்கும் விவாதத்திற்குள்ளானது. தமிழிலும் கூட தமிழவன் “சரித்திரத்தின் மீது படிந்த நிழல்கள்” எனும் தன்னுடைய முழு நாவலையும் பாலிம் ஸெஸ்ட் பிரதியாகத்தான் உருவாக்கியிருந்தார். பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங் என்றால் நடந்திருக்கும் நிகழ்வுகளின் மீது எழுத்தாளர் தன்னுடைய புனைவை எழுதுகிறபோது நிஜமும், புனைவும் கலங்கி வேறு ஒன்றாக வெளிப்படும் என்பதுதான். அப்படியான புனைவுப் பிரதிகள் பகடியாக வெளிப்படுவதை ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அப்படியான பெரும் பகடிகளின் தொகுப்பாகவும் நாவல் வெளிப்படுகிறது. வாசகனின் கவனத்திற்கென ஒன்றிரண்டை ஞாபகமூட்டுவது சரியாக இருக்கும் என்று படுகிறது.

பதிப்பகத்தினர் குறித்த பகடியென்றே நான் கோழிக்கோடனைக் கருதுகிறேன். ஆலப்புழை நகராட்சிக் கழிப்பறைச் சுவரினைக் கண்ணுற்ற பிறகு அவர் அலிமாவைப் பின் தொடர்கிறார். மொத்தம் 3800 கக்கூஸ்களில் அலிமாவால் எழுதப்பட்ட ‘என்டெ யாத்ரா’ நூலாக வரும் போது 300 பக்கமாக்கப்பட்டது. 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அவளின் காகிதம் கக்கூஸ் சுவர்; அவளின் பேனா விறகுக்கரி. இதைத் தொகுத்தே கோழிக்கோடன் “என்டெ யாத்ரா” - வாக்கிட அதற்கு “முட்டைச் சிம்னி” விருதும் கிடைக்கிறது. விருதின் பெயர்களைப் பாருங்கள் “கட்டஞ்சாயா”, “ஏத்தன் பழம்” இப்படிப் பலப்பல. தமிழில் தான் விரும்புகிற எழுத்துக்களுக்கெல்லாம் எந்த விதிமுறையும், வரைமுறையும் கைக்கொள்ளப்படாமல், அளிக்கப்படுகிற விருதுகளின் மீதான பகடியாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக “முட்டைச் சிம்னி” - விருது நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிற “விளக்கு”- விருதினை வாசகனுக்கு ஞாபகமூட்டத்தான் செய்கிறது.

தவிர்க்கவியலாமல் யார் இந்த அலிமா என்று எனக்குள் நான் கேட்டுக் கொண்டேதானிருக்கிறேன். அலிமா ஒரு நடிகையாக இருப்பதால் அதுவும் இஸ்லாமியப் பெண்ணாக இருப்பதால், அதிலும் கற்பு, ஒழுக்கம் என கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண்ணிற்கு மட்டுமேயான பாலியல் ஒழுங்குகளை கேள்வி கேட்பவளாக இருப்ப தால் வைத்து அலிமாவை நடிகை குஷ்புவாக்கிப் பார்க்கலாமா? என்ற யோசனையை அவர் எழுத்தாளர் இல்லையே என்ற தர்க்கம் உடனே கலைத்தது. பிறகு யார்? கேரளத்தில் பிறந்து, நடிகையாகி, எழுத்தாளராகவும் இருக்கிற அருந்ததிராயின் சாயலை அலிமாவிற்குள் தேடித் தோற்றேன். அலிமா தன்னை கலாச்சாரப் போராளியாக காட்டிடவில்லையே. இப்படியே வாசகா நீயும் கூட உனக்குள் அலிமாவைத் தேடிக் கண்டடையாமல் தவிக்கப் போவது நிஜம்.

அலிமா கமலாதாஸா, குஷ்புவா, அருந்ததிராயா என்கிற யாதொரு குழப்பமும் இல்லாமல் வடக்கே முறி அலிமாவாக மட்டுமே வெளிப்படுகிற இடங்கள் இரண்டு. ஒன்று அவள் ஆடும் கபுறுகளி ஆட்டம். மற்றொன்று சினிமா நடிகையானதால் ஏற்பட்டுள்ள விழுப்புண்ணிற்கு களிம்பு தடவியபடி லாட்ஜ் அறைச் சிறுவனின் முகத்தில் தன்னுடைய கபுறுகளி ஆட்டத் தோழனான “கெபூரைத் தேடிடும் இடத்திலும்தான். அதிலும் கபுறுகளி ஆட்டம் இந்த நாவலின் உச்சம்.

எல்லா மதங்களும் மறுமை குறித்த பயத்தின் மூலமாகவே இம்மையை நிர்பந்திக்கின்றன. மனித வாழ்வில் கடைப்பிடிக்கப்படுவதாக நம்பப்படுகிற எல்லா நடவடிக்கைகளுக்குள்ளும் மைய இழையாக ஓடிக் கொண்டிருப்பது சொர்க்கம், நரகம் குறித்த கட்டமைப்புகளே. இம்மையில் நன்மை செய்ததாக நம்பி உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை சாட்டையால் விளாசி அலிமா எழுப்பும் கேள்விகளும், அந்த கபர்ஸ்தான் காட்சிகளும் மிகுந்த செவ்வியல் தன்மையிலான பதிவாகும். “மய்யத்துகளின் அருகில் நின்று அலிமாவும், கபூரும் கேள்வி எழுப்புவார்கள். “கலிமா சொல்லுங்கோ”, தொழுதியளா? காசு உண்டாக்கினீங்கோ, ஷஜ் செஞ்சியளா?” “உங்க பாரியாளத் தலாக் கொடுத் தீங்களா”. வட்டி வாங்கினதுண்டா, இல்லங்கி இத்தன பைசா எங்கின வந்திச்சு?” . . . . ஹராமெனும் சொல் இஸ்லாமிய கலைச் சொற்களிலேயே மிகுந்த தனித்துவமான சொல். அது குறித்த தர்க்கத்தையே கபுறுகளி ஆட்டத்தின் போது அலிமா நிகழ்த்துகிறாள். இஸ்லாமியப் பெண்களுக்கு பொதுப்பள்ளி வாசலில் தொழுதிட ஜமாத்துகள் அனுமதிப்பதில்லை. இப்போது தான் பெண்களுக்குத் தனியான தொழுகையிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கபர்ஸ்தானுக்குப் போகிற மரண ஊர்வலத்தில் பங்கேற்றிட தமிழ்ச்சாதிகளில் இருப்பதைப் போலவே பெண்களுக்கு இஸ்லாத்திலும் இடம் இல்லை. ஆனால் நம்முடைய அலிமா கபுறு குழிகளையே கேள்வி கேட்கிறாள். இறுகிய மத அடிப்படை வாதத்தின் மீது கேள்வி எழுப்புகிற வல்லமை கொண்ட எழுத்தாளனே ஜாகிர் என்பதற்கான பல சாட்சியங்களை வாசகன் கண்டடைவதற்கான சாத்தியம் கொண்டதாகவே வடக்கே முறி அலிமாவை மதிப்பிடத் தோன்றுகிறது.

மனப்பிறழ்வு குறித்த தர்க்கங்களும், ஏர்வாடி மனப்பிறழ்வாளர்களின் வாழ்விடம் குறித்த காட்சித் சித்திரங்களும் “வதை முகாமிலிருந்து கேட்கும் குரல்” என்ற பகுதியிலும், அலிமாவின் பேட்டியிலும் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் கோபி கிருஷ்ணன் “உள்ளேயிருந்து சில குரல்கள்” - எனும் மனப்பிறழ்வின் துயரத்தை நுட்பமாகவும், ஆழமாகவும் பதிவு செய்த எழுத்துப் பிரதியாகும். அலிமாவிற்குள்ளும் ஆழமும், அழுத்தமுமாக தர்க்கித்து மனப்பிறழ்வு களின் நுட்பங்கள் பதிவு பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக செய்யதலி பாத்திமா எனும் அக்கம்மாவிற்கு அலிமா எழுதும் கடிதம் கவித்துவ உச்சமாகும்.

சாதாரணர்களின் உலகில் அசாதாரணமானவளான அலிமா மனப்பிறழ்விற்கு உள்ளானவளாகத்தான் தென்படுவாள். எழுத்தாளச் சித்தப்பன் எழுதியபடியே நகர்கிறது. அலிமாவின் வாழ்க்கை என்கிற புனைவு வசீகரமான சோகமாக வாசக மனதினில் படிகிறது. எல்லாம் முடிந்தபிறகும் கூட கபூருடன் பட்டாம் பூச்சிகளை கபர்ஸ்தானில் துரத்தியலைகிற அலிமாவைக் கலைக்கிற பள்ளி வாசலின் வாங்குச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

Saturday, March 10, 2012

ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் நடத்திய பாராட்டு விழாவின் சில காட்சிகள்

கடந்த இரண்டு மாதங்களில் முன்னர் ஒரு நாள் என் நண்பர் தஞ்சை இனியன் என்னை போனில் தொடர்பு கொண்டு ‘‘தஞ்சையில் நடக்கவுள்ள 3வது புத்தக கண்காட்சி நாள் ஒன்றில் உங்களுக்கு பாராட்டு விழா. ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் ஏற்பாடு’’ என்று சொன்னார். உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்ததைப் போல ‘நான் என்ன எழுதுகிறேன் என்றே என் தஞ்சை நண்பர்களுக்குத் தெரியாது.’ இது தான் உண்மையும்கூட. மேலும் தஞ்சையின் இளம் வணிகர்கள் குழுமியுள்ள ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூருக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அதில் அங்கம் வகிக்கின்ற இரா. செழியன் உள்ளிட்ட நண்பர்களை எனக்கு நீண்ட நாள் பரிச்சயம் உண்டு அவ்வளவுதான். மேலும் வசிக்கின்ற ஊரில் பாராட்டு விழா என்றால் கொஞ்சம் அசூயை தான்.


ஆனால் இனியனோ விடாப்பிடியாக இருந்து விழாவை நடத்திவிட்டார். முக்கியமாக என்னைக் குறித்து (என் படைப்புகளை குறித்துதான்) பேச வேண்டியவர்களை தேர்ந்துக் கொள்ள எனக்கு சுதந்திரமும் வழங்கினார்.
விழாவன்று மாலை பெசன்ட் இல்லத்தில் பெரிய பேனர் எல்லாம் வைத்திருந்தனர். பெசன்ட் இல்லம் எங்களுக்கு தாய் வீடுமாதிரி. இன்றளவும் தஞ்சையில் நடக்கக்கூடிய இலக்கிய விழாக்களுக்கு குறைந்த கட்டணத்துடன் இடமளிக்கக்கூடிய அரங்கம் அது.

என்னுடைய முதல் புத்தக வெளியீட்டு விழாவும் இங்கே தான் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது. தஞ்சை புத்தக காட்சியில் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனாலும் புத்தகங்கள் விற்றன. பாரதி புத்தகாலயத்தில் எனது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கணிசமான அளவு பிரதிகள் விற்றிருந்தன.

விழா அன்று மாலை ‘ஆதாமின்ட மகன் அபு’ மலையாள திரைப்படத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட கிளை சார்பாக களம் திரைப்பட இயக்கம் திரையிட்டது. பார்வையாளர்கள் பொறுமையாக இருந்து அந்தப் படத்தைப் பார்த்தனர்.



ரோட்டரி களம் சார்பாக எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கி பொன்னாடை போர்த்தப்பட்டது. பல மேடைகள் பார்த்திருந்தாலும் அன்றைக்கு ஏனோ சற்று கூச்சமாகவே உணர்ந்தேன்.
என்னைப் பாராட்டிப் பேச தமுஎகச மாநில தலைவரும், தமிழின் மிக முக்கியமான சிறுகதையாளரும், எனது அண்ணனுமான ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் வந்திருந்தார்கள். முன்னாள் அமைச்சர் இலக்கிய காவலர் சி.நா.மீ உபயதுல்லா, மகாராஜா ரெடிமேட் ஆசிப் அலி, யோகம் ரியல் எஸ்டேட் இரா. செழியன், என்.எஸ்.பி. விஜயகுமார், இலக்கிய நண்பர்கள் என் துணைவி, குழந்தைகள் உறவினர்கள் கீரனூரில் இருந்து என் பாலிய சினேகிதன் கூடலிங்கம் மற்றும் குடும்பத்தினர் செ.இராசன் (களப்பிரன்) பிம்பம் சாகுல், தமுஎகச தோழர்கள் புலியூர் முருகேசன் கவிஞர் நா. விச்வநாதன், முத்தமிழ் விரும்பி மணிச்சுடர் குப்பு வீரமணி, தஞ்சை அனார்கலி, இறை தாசன் என்று வந்திருந்தவர்களால் அரங்கம் நிரம்பியிருந்தது.


தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளரும், விமர்சகருமான கோவை எஸ். பாலச்சந்திரன், எழுத்தாளர் எஸ். அர்ஷியா, ஆகியோர் வந்திருந்து தங்களுடைய மிகச் சிறந்த உரைகளை பதிவு செய்தனர்.
என்னுடைய குருநாதர் தஞ்சை ப்ரகாஷ் அவர்களின் துணைவியார் மங்கையர்கரசி அவர்கள் வந்து எனக்கு பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தியது மனநெகிழ்வை தந்தது. அண்ணன் ச.த. தனது உரையில் மதச்சார்பற்ற தன்மையில் நின்று என் படைப்புக் குரல் ஒலிப்பதையும் மீன் குகை வாசுகி நாவலில் பெண் கதா பாத்திரங்கள் பிரதானமாக எழுந்து நிற்பதையும் குறிப்பிட்டார். அர்ஷியா எனது எல்லா நாவல்களையும் தொட்டு அதிலுள்ள சிறப்பம்சங்களை பேசினார். பாலச்சந்திரன் தனது உரையில் உலக எழுத்தாளர்கள் பலரையும் மேற்கோள் காட்டினார். அவருடைய பரந்த வாசிப்பு வழியே என் எழுத்துக்களின் முக்கிய கூறுகளை பார்வையாளர்களுக்கு எடுத்து விளம்பினார். இம்மூவருமே என்னுடைய எல்லா எழுத்துக்களையும் வாசித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் வழங்கிய விருதுக்கு பெயர் ‘சாதனை இளைஞர்.’ ஐந்து நாவல்களும் ஐம்பதுக்கும் அதிகமான சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளதை சாதனை என்று வியக்கின்ற நேரத்தில் ‘உறங்குவதற்கு முன் நான் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது’ என்கிற புகழ் பெற்ற வாசகம்ஒரு கணம் என் மனதில் வந்து போனது.