Thursday, March 28, 2013

ஜின்னா என்கிற இந்தியன்


ஜின்னாவின் டைரி என்றொரு நாவலை நான் எழுதத் தொடங்கி, அதற்கான விளம்பர அறிவிப்பு பத்திரிகையில் வெளிவந்த போது, எனது நண்பர்களில் சிலர் தலைப்பு பயங்கரமாக இருக்கிறது ஜாகிர்ÕÕ என்றனர். உண்மையில் நான் எழுத முயற்சித்தது நண்பர்கள் கருதிக் கொண்டது போல ஒரு அரசியல் வரலாற்று நாவலை அல்ல. ஆனாலும் ஜின்னா என்னும் பெயர் அவர்களுக்கு அப்படியான யூகத்தைத் தந்திருந்ததில் வியப்பதற்கு ஏதுமில்லைதான்.
 என் பள்ளிப் பிராயத்தில் இந்திய வரலாற்றின் மேல் எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. என் கல்வியையும் வரலாறு சார்ந்ததாக உருவாக்¢கிக்  கொண்டு, அதைக் குறித்த தேடல்களுடனேயே பயணித்திருப்பேனேயானால் ஒரு வேளை என் தலைவிதி வேறுவிதமாக மாறியிருக்கக்கூடும்.  ஆனாலும் இன்றைய என் நிலையில் பெருமளவு அதிருப்தி இல்லை. நான் எதை நினைத்தேனோ அதுவாகவே ஆகியிருக்கிறேன்.
 1980களில் பள்ளிக்கூட நாட்களில் என் தாத்தா தன் தவச்சாலையான எங்கள் வீட்டு மாடியில் அமர்ந்து கொண்டு முகமது அலி ஜின்னா என்னும் பெயரைத் தனது சக நண்பர்களுடனான உரையாடல்களின் வழியே அடிக்கடி உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன். ஜின்னாவைக் குறித்த சில ஆங்கிலப் புத்தகங்களையும் அவர் புரட்டிக் கொண்டிருந்த நினைவு இருக்கிறது. எனக்கு அப்போது ஜின்னாவைக் குறித்த எவ்விதப் புரிதலும் கிடையாது. அதிகபட்சமாக அது ஒரு இஸ்லாமியப் பெயர் என்பதைத் தவிர்த்து. என் பாடப் புத்தகங்களிலும் ஜின்னாவைக் குறித்த பதிவுகள் இருந்ததில்லை. இந்திய வரலாறு ஒரு மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறு என்பதை என் வாசிப்பனுபவங்களின் வழியாக வெகுவாகப் பின்னால் நான் அறிந்துகொண்டு,  அதிர்ச்சியும்  கலவரமும் அடைந்திருக்கிறேன். வரலாற்றைக் கூட மறைக்க முடியும், அல்லது எழுதப்படுகின்ற வரலாற்றை சிலர் தங்களுக்குச் சாதகமாக எழுதிக் கொள்ள முடியும் என்பதே ஒரு இந்தியனாக நான் அறிந்து கொண்ட முதல் பயங்கரவாதம். இந்த அனுபவம் தந்த பேரதிர்ச்சியிலிருந்து நான் விடுபடுவதற்கு வெகுகாலம் பிடித்தது. பிறகு வரலாறு என்பதே ஒரு புளுகு மூட்டை, அதிகார வர்க்கங்களைத் தவிர்த்துவிட்டு மக்களால் எழுதப்படுகின்ற எதிர்வரலாறு, மாற்று வரலாறே நிஜமான வரலாறு என்பதை எளிதாகப் புரிந்து கொண்டேன். இப்போது அதிர்ச்சிகளும் பயங்கரங்களும் என்னிலிருந்து விடைபெற்றிருந்தன.  எய்ட் இந்தியாவில் வேலைபார்த்து, கோபாலபுரத்தில் தங்கியிருந்த 2008ஆம் ஆண்டின் இளவேனிற்கால நாளன்றில் அகல் பதிப்பகம் பஷீர் அலுவலகத்தில் இந்த மாமனிதர் ஜின்னா புத்தகத்தைப் பார்த்தேன். திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞரும், மார்க்சிய சிந்தனையாளருமான இரா.சி. தங்கசாமி என்பவர் எழுதியிருந்தார். அட்டை உள்ளிட்ட புறவடிவ வேலைப்பாடுகள் என்னை ஈர்க்காவிட்டாலும் உள்ளடக்கம் செறிவாக இருப்பதைப் புரட்டிப் பார்க்கையில் உணர்ந்து பஷீரிடம் கேட்டு புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்.
பிறகு அவ்வப்பொழுது அந்தப் புத்தகத்தை எடுப்பதும் தீவிரமாக எதையோ தேடுவதும் அடிக்கோடுகள் இடுவதுமாக நாட்கள் கடந்தன.
 ஜின்னாவின் இளமைப் பருவம் முதல், அவருடைய இறுதிநாட்கள் வரை சுமார் 15 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டு, நாள் உள்ளிட்ட ஆதார சுருதிகளுடன் எளிய மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது இந்த புத்தகத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது. ஜின்னாவின் கல்வி, வழக்கறிஞர் பணி, அரசியல் பிரவேசம், மணவாழ்க்கை, தேசப் பிரிவினையில் ஜின்னாவின் பாத்திரம் என அடுக்கடுக்காகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்த வாசிப்பில் எனக்கு இது காந்தி க்ஷிs ஜின்னா என்கிற  இரு பெரும் தலைவர்களின் கருத்து மோதல்களையே மைய இழையாகக் கொண்டு பின்னப் பட்டிருப்பதாகத் தோன்றியது.
ÔÔமுதலில் நான் ஒரு இந்து. எனவே நான் ஒரு இந்தியன் என காந்தி கூறியபோது முதலில் நான் ஒரு இந்தியன் அதன் பிறகுதான் ஒரு முஸ்லிம் என தெளிவாகக் கூறிய ஜின்னா, அந்த வாக்கியத்தை தன் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நிரூபணம் செய்து கொண்டேயிருந்திருக்கிறார். ஏனெனில் அவர் பிற இந்தியத் தலைவர்களைப் போல காந்தியால் ஆகர்ஷிக்கப்பட்டவரல்லர். 17 வயதிலேயே தாதாபாய் நவ்ரோஜியின்   அரசியல் பள்ளியில் இணைந்து அவருடைய வழிகாட்டலின் மூலம் அரசியலில் பிரவேசித்தவர்.
 ஜின்னாவின் விசேஷகுணம் எனப் பிறர் கொண்டாடத்தக்க அளவிலிருந்தது அவருடைய கறாரான மதச்சார்பற்ற தன்மைதான் என்று நான் கருதுகிறேன். 1906இல் அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டபோது அதை மதநிறுவனம் என்று விமர்சித்த ஜின்னா லீக்கில் இணைவதற்கு பதிலாக காங்கிரஸில் இணைந்ததும், இஸ்லாமியர்களுக்கு தலைமை தாங்குமாறு  அழைப்பு விடுக்கப்பட்டபோது தாட்சண்யம் ஏதுமின்றி நிராகரித்து நான் முஸ்லிம்களின் தலைவனல்ல  இந்தியாவின் தேசியத் தலைவன்.  முஸ்லிம்களுக்காக மட்டும் நான் செயல்பட முடியாது என்று கர்ஜித்தவர்.
 தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜின்னா இந்த கறாரான போக்கைக் கடைப்பிடித்தார்  என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்தவர்கள் எல்லோரும்  இஸ்லாமியரல்லாதவர்களே. தாடி வைக்காமல், தொப்பி அணியாமல், ரமலான் காலத்தில் விரதம் மேற்கொள்ளாமல் விஸ்கியும், சிகரெட்டும் கையுமாக  இருந்து மதத்தின்  சகல சம்பிரதாயங்களையும் தவிர்த்த காரணத்தால் ஜின்னாவுக்கு காஃபிர் பட்டம் தேடி வந்தது. பொதுவாகவே அவருக்கு ஜாதி மதங்களின் மீதான தீவிரமான ஒவ்வாமை இருந்தது. எனவே நாத்திகன் என்றும் அவருடைய மூதாதையர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் என்பதால் அதன் எச்சம் அவருக்குள் விழுந்திருப்பதாகவும் பல்வேறு விமர்சனங்களை ஜின்னா எதிர்கொண்டார்.
ஜின்னாவின் சுருக்கெழுத்தராக வேலை செய்தவர் பாலக்காட்டைச் சேர்ந்த அய்யர், சமையல்காரர் கோவாவைச் சேர்ந்த இந்து, கார் ஓட்டுநர் சீக்கியர், மருத்துவர் பார்சி இனத்தவர். இதை அவர் திட்டமிட்டுச் செய்ததாகவும் சொல்லப்பட்டதுண்டு. இருந்து விட்டுப் போகட்டுமே கொந்தளிப்பான அக்கால கட்டத்தில் இதுபோன்ற துணிச்சல் யாருக்கு வரும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது எனக்கு. சட்டம் பயின்று  1897ல் வழக்குரைஞர் தொழில் செய்யப் பதிவு செய்துகொண்ட ஜின்னாவின் Ôவக்கீல் வாழ்க்கைÕ ஏற்ற இறக்கங்களும் விசேஷமான திருப்பங்களும் கொண்டது. குடும்பம் எதிர்பாராமல் சந்தித்த பொருளாதார வீழ்ச்சியுடன், கராச்சி தனக்கேற்ற களமல்ல,  எனக் கருதி ஜின்னா பம்பாய்க்கு வந்து சேர்கிறார். அங்கே வந்த பின்பும் ÔÔஎங்க ஆத்துக் காரரும் கச்சேரிக்குப் போகிறார்ÕÕ என்கிற  கதையாகத்தான் அவருடைய வக்கீல் பிழைப்பு இருந்திருக்கிறது. ஆனால் பம்பாய் அட்வகேட் ஜெனரல் சர்மக்பர்சனின் அலுவலகத்தில் கிடைத்தற்கரிய வாய்ப்பாக முக்கியமான சட்ட நூல்களை அவர் பயின்றதும் பிறகு தற்காலிக நீதிபதியாக ஆறுமாதங்கள் பணிபுரிந்து நிரந்தர நீதிபதியாகக் கிடைக்கவிருந்த வாய்ப்பை உதறித்தள்ளி தான் வாதாடும் வழக்குகளுக்கு ஒருநாள் கட்டணம் ரூ.1500 என நிர்ணயித்து எண்ணற்ற வழக்குகளில் ஆஜராகி வெற்றி கண்டது, 1926களில் இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரானது என கதாநாயகனொருவனின் சாகஸங்களுக்கு நிகரானது. ஜின்னாவின் நுட்பங்கள் கூடிய வாதாடும் திறன் அன்றைய பம்பாய் நீதிமன்றத் தாழ்வாரங்களில் பேசுபொருளாகின.  ÔÔபண்பு, துணிவு, உழைப்பு, முயற்சி ஆகிய நான்கு தூண்களில்தான் மானிட வாழ்க்கை என்னும் கம்பீரமான கட்டிடம் எழுப்பமுடியும். தோல்வி என்பது வாழ்வில் நான் அறியாத சொல்ÕÕ இதைத்தான் தனது வெற்றியின் ரகசியம் என ஜின்னா நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
 ஜின்னா அரசியலுக்கு வந்தபோதும் வந்த பின்பும் பாகிஸ்தான் பிரிவினை குறித்த எவ்விதமான முன் முடிவுகளும் திட்டங்களும் அவருக்கு இருந்ததில்லை. முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டபோது அதில் அவர் இணையவுமில்லை. தலைமை தாங்க அவர் மனப்பூர்வமாக விரும்பியதுமில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவரை அது போலாக்கியது. காங்கிரசையும் முஸ்லிம்லீக்கையும் இணைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமாக இருந்தது. இந்த இடத்தில் சட்டசபைக்கு முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவிக்கு ஜின்னா தேர்ந்தெடுக்கப்பட்டதை விமர்சிப்பவர்கள் உண்டு. அதேபோன்று முஸ்லிம் லீக்கைப் புறக்கணித்த அவர் அஞ்சுமன் -இ-இஸ்லாம் அமைப்பில் உறுப்பினரானது, முஸ்லிம் வஃக்பு சட்ட  முன்வரைவை சட்டசபையில் தாக்கல் செய்தது போன்ற செயல்பாடுகளுக்காகவும் நடுநிலைவாதிகளால் விமர்சிக்கப்பட்டார். இவை சரியான பிரதிநிதித்துவமற்ற சிறுபான்மை சமூகத்திற்காக அவர் மேற்கொண்ட காரியங்கள் எனக் குறிப்பிடுகிறவர்களும் உண்டு.
 இந்திய  அரசியலில் மதம் கலப்பதை அறவே விரும்பாத ஜின்னா இந்து-முஸ்லிம் ஒற்றுமை சாத்தியமானது என்று பெரிதும் நம்பியிருந்தார். தேசவிடுதலைக்கு முன்னதாக இதை நிறைவேற்றிக் காட்டவேண்டும் என்கிற வெறி அவரிடம் இருந்தது. ஆனால் மதச்சார்பற்ற தன¢மை, சாதுர்யமான செயல்பாடுகள் இவற்றால் காங்கிரஸில் முக்கியமான இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஜின்னாவின் வேகமான வளர்ச்சி காங்கிரஸ் தலைமைக்கு உள்ளூற அச்சத்தை அளித்தபடியிருந்தது. ஜின்னாவின் வளர்ச்சியைத் தடுக்கிற மலினமான உத்திகளை காங்கிரசில் ஒரு பிரிவு தொடர்ந்து பிரயோகித்து வந்தது.
 தேசியநீரோட்டத்திலிருந்து ஜின்னாவை அகற்றுவதில் இந்துத்துவவாதிகளின் திட்டமும், முஸ்லிம் மக்களை வழிநடத்த ஜின்னாவைக் கவர்ந்திழுப்பதில் இஸ்லாமிய வகுப்புவாதிகளின் திட்டமும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நடந்தேறின. இவை இரண்டும் தேர்ந்த சதி, என்பதை நடுநிலையாளர்கள் அவதானித்து வந்தனர்.
காங்கிரஸில் தான் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதை உணர்ந்த ஜின்னா மெல்ல மெல்ல லீக்கைத் தழுவினார். (காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தபோது ஜின்னா காங்கிரஸின் முக்கியமான இடத்திலிருந்தது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது)  மேல்நாட்டுப் பாணியில் தைக்கப்பட்ட நாகரீக உடைகளை அணிந்தபடி, மேல் தட்டு வர்க்கத்தினமிடையே கலந்து பழகிய ஒரு வழக்கறிஞர், இஸ்லாமியர்களை அரசியல் இயக்கமாக ஒன்று திரட்டி, இந்து தேசிய இயக்கத்துக்கு அச்சுறுத்தலாக வளர்ந்துவிடுவார் என்று 1935ஆம் ஆண்டிற்கு முன்னர் காங்கிரசார் நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்ÕÕ என்று ஒருகட்டத்தில் இந்நூலாசிரியர் குறிப்பிடுவதை நாம் பொருட்படுத்தவேண்டியுள்ளது. இதையே தோழர் இ.எம்.எஸ் தனது இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்னும் நூலில் ÔÔஇந்திய அரசியலின் ஆரம்ப நாட்களில் ஒரு முற்போக்காளராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய ஜின்னா பிற முஸ்லிம் தலைவர்களைப் போலன்றி ஒட்டுமொத்த இந்திய முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக வட்டமேசை மாநாட்டுக்காலம் வரையிலும் பாடுபட்டு வந்தார். தீவிர உணர்வு மிக்க ஒரு தேசியவாதியாக இருந்த இந்த முற்போக்கான அரசியல் தலைவர் முஸ்லிம் குறுங்குழுவாதத்தின் சிறந்த பிரதிநிதியாக இறுதியில் தம்மை மாற்றிக் கொண்டிருந்தார். முஸ்லிம் முதலாளி வர்க்கம் வளர்ச்சி பெற்றதும் இதன் விளைவாக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத முதலாளிவர்க்கப் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் இவற்றின் பின்னணியில் தான் ஜின்னாவின் அரசியல் வாழ்வில்  ஏற்பட்ட இந்த மாற்றத்தை மதிப்பீடு செய்ய முடியும்Õ என்று குறிப்பிடுகிறார்.ÕÕ (பக்832)
 தோழர் இ.எம்.எஸ்.ஸின் கருத்துப்படி ஜின்னாவை வர்க்க கண்ணோட்டத்தில் அணுக மாமனிதர் ஜின்னா என்னும் இந்நூலில் எவ்விதமான சந்தர்ப்பமும் இல்லை. ஒரு சில இடங்களைத் தவிர்த்து இந்நூல் முழுக்கவும் தலைப்புக்கேற்ற விதத்தில் ஜின்னாவை மாமனிதராகச் சித்தரிக்கும் விதத்திலேயே தகவமைக்கப்பட்டுள்ளது..
 காந்திக்கு நிகரான காந்தியின் எதிரியாக ஜின்னா மட்டுமே விளங்கினார். பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு கட்டம்வரை காந்தியை வலுவான எதிரியாக பாவிக்கவில்லை. மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய சமயத்தில் காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவான தொனியிலேயே செயல்பட்டார். ஜின்னாவின் முயற்சியால் அமைதிப்பட்டிருந்த இஸ்லாமிய வகுப்புவாதத்தை காந்தி கிலாபத் இயக்கத்திற்கு அளித்த ஆதரவின் மூலமாக  (அலி சகோதரர்களை இணைத்துக் கொண்டு) கிளர்ந்தெழச் செய்ததையும்  துருக்கியில் கிலாபத் இயக்கம் அமைதியுற்றதும் காந்தியும் கிலாபத் இயக்கத்தை இந்தியாவில்   கைவிட்டு இஸ்லாமியரின்  பிரச்சனைகளை இஸ்லாமியர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவித்ததும் பிரிவினைக்கு முந்தைய காந்தியின்  கைங்கர்யங்கள்  காந்தியின் கிலாபத் இயக்க ஆதரவுச் சறுக்கல்களும் அதற்கான ஜின்னாவின் கடுமையான எதிர்ப்பும் இந்நூலில் விரிவான முறையில் பதிவு பெற்றுள்ளன. மேலும் காந்தியின் மதம்சார்ந்த அரசியல் கோட்பாடுகள் இந்நூலின் பல பக்கங்களில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 காங்கிரஸை விட்டுப் பிரிந்து சென்ற பின் 1946 இல் காங்கிரஸ் அமைத்த இடைக்கால அரசாங்கத்தில் நிதி மற்றும்  வணிகத்துறைகளை  இஸ்லாமியர்களுக்குப் பெற்றுத் தந்தது  ஜின்னாவின் சாணக்கியத் தனம்   என்று கூறப்பட்டது.  1946ல் தாக்கல் செய்யப்பட்ட அந்த பட்ஜெட்டில்தான் உப்புவரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்த லியாகத் அலிகான்  அதை ஒரு ÔÔசோசலிஷ பட்ஜெட்ÕÕ என வர்ணித்தார். இதுவும் ஜின்னாவின் இடத்தை அகில இந்திய அளவில் உயர்த்தியது. காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் துறைகளுக்கான நிதி ஆதாரங்களுக்கு லியாகத் அலிகானை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை நேரு, படேல் போன்ற தலைவர்களை  உணர்ச்சிவயப்பட்ட நிலையில் யோசிக்க வைத்தது. இதனால் பாகிஸ்தானைப் பிரித்துத் தருவது, அதன் மூலமாக தங்களுக்குத் தடைக்கல்லாக நிற்கின்ற  ஜின்னாவை  இந்தியாவை விட்டு அப்புறப்படுத்துவது என ஒரு சமரசமற்ற திட்டம் அவர்களால் உருவாக்கப்பட்டது. மறுபக்கம் இஸ்லாமிய   வகுப்புவாதிகள்  ஜின்னாவின்  மதச்சார்பற்ற செயல்பாடுகளினால் ஆத்திரமடைந்தவர்களாக பொறுமிக் கொண்டிருந்தனர்.
பால்ய விவாகத்தைத் தடை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சாரதா சட்டம் இந்துக்களுக்கு மட்டுமானதாக இருந்ததை ஜின்னா கடுமையாக வாதாடி இஸ்லாமியர்களுக்குமானதாக  மாற்றியதும்,  ஜின்னாவின் முயற்சியால் ஷரியத் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு  உடலுறுப்புகளை வெட்டியும், கல்லெறிந்தும் கொல்வதுமான அரேபிய நாட்டின் காட்டுமிராண்டித்தன வழக்கத்திலிருந்து  இந்தியாவிலுள்ள இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் காப்பாற்றப்பட்டது என ஜின்னாவின் மீதான அடிப்படைவாதிகளின் கோபம் அதிகரித்துக் கொண்டே வந்தது. முஸ்லீம் லீகிலிருந்து ஜின்னா பிற்போக்குவாதிகளை களையெடுத்துக் கொண்டேயிருந்தார். மவுலவிகள், மவுலானாக்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார்.
 1946ஆம் ஆண்டு இறுதி வரையிலும் கூட ஜின்னா பிரிவினைக்கான சிந்தனையற்றிருந்ததாகவே வரலாற்றாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். சுயராஜ்ய இதழில் இராஜாஜியும் இதைக் குறிப்பிடுகிறார். ஆனால் நேரு மிகத் தெளிவாக இருந்திருக்கிறார். ÔÔஇந்தியாவில் உள்ள பிரச்சனைகளில் ஜின்னா தொடர்ந்து தலையிடாமல் இருப்பதற்கும் அரசியலை விட்டு அவரை முற்றிலும் விலக்கி வைப்பதற்கும் பாகிஸ்தானை அல்லது ஏதாவது ஒரு பகுதியை உருவாக்கி விடுவது நல்லதுÕÕ என்றே அவரது நாட்குறிப்பும் கூறுகிறது.
விடுதலைக்குப் பிறகான இந்திய அரசாங்கத்தில் ஜின்னாவின் தலையீட்டை விரும்பாத காரணத்தால் காங்கிரஸே முன்னின்று பிரிவினையைச் செய்தது. வேறு வழியின்றிப் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது அதை இரண்டு துண்டுகளாக மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் எனப் பிரித்து வாங்கியதற்காக கடைசியாக நடந்த முஸ்லீம் லீக் கூட்டத்தில் ஜின்னாவிற்கு துரோகிப் பட்டம் கிடைத்தது.
தேசப்பிரிவினைக்கு ஜின்னா ஒப்புக் கொண்டபோதும், பாகிஸ்தான் உருவாகி சில நாட்களிலும் ஜின்னாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் அவர் மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலகாததை வெளிக்காட்டியது. மௌலவிகளின் வழி காட்டலில் புதிய இஸ்லாமிய அரசு  பாகிஸ்தானில் அமையுமா என்று கேட்கப்பட்டபோது ÔÔமுட்டாள்தனமாகப் பேசாதீர்கள்ÕÕ என்று ஜின்னா நிருபர்களிடம் சீறியிருக்கிறார்.   புதிய அரசை இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பின்பற்றச் சொல்லி  சில உலமாக்கள் கேட்டுக் கொண்டபோது அப்படியான எண்ணம் இல்லை என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். அப்போதே ஜின்னாவை ஓரங்கட்டுகிற திட்டம் பாகிஸ்தானில் உருவாகியிருக்க வேண்டும். ஏனெனில் புதிய தேசத்தைக் கண்டவர்கள் அறிந்தோ அறியாமலோ இந்தியாவின் மீது வன்மத்தையும், பிரிந்ததால் வெற்றிப் பூரிப்பையும் கொண்டிருந்தார்கள். ஜின்னாவின் மனநிலை அப்படி ஒரு போதும் இல்லை என்பதுதான் உண்மை பாகிஸ்தானிலிருந்த சிறுபான்மையினர் (இந்தியர்) நலனில் ஜின்னா கொண்டிருந்த ஆர்வம் பாகிஸ்தானியர்களின் மனநிலைக்கு ஒவ்வாததாகவே இருந்தது. பழைய வெறுப்பிலேயே இந்தியர்கள் பார்க்கப்பட்டனர். 1948 இறுதியில் கராச்சியில் நடந்த கலவரத்தைக் கண்டு ஜின்னா திகைத்து தெம்பிழந்து போனார். இதற்கிடையில்  அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் ஜின்னாவைக் கொலை செய்யும் முயற்சியும் நடந்தது. சிறுபான்மையினராகிய இந்துக்களுக்கு  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்து இந்துக்களின் அகதிமுகாம் ஒன்றில் ஜின்னா கதறி அழுதது இந்தியாவரை எதிரொலித்தது. ஆதரவற்ற கையறு நிலையில் ஜின்னா இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல விரும்பியது வரலாற்றின் உச்சகட்டச் சோகம்.
 மன உளைச்சல்களாலும்  தொடர்ந்து புகைப்பிடிக்கும்  பழக்கத்தாலும்  நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜின்னா 11.9.1948 அன்று இரவு மரணமடைந்தார். ஜமாத்- இ-இஸ்லாம்  தலைவர் ஜின்னாவைப் போன்ற காஃபிருக்கு, நாத்திகருக்கு, மதவிரோதிக்கு இறுதிச் சடங்குகள் செய்யமாட்டேன் என மறுத்ததுடன் அவரது மரண தினத்தை மகிழ்ச்சிக்குரிய நாளாகக்  கொண்டாடினார்.
 ஜின்னாவைப் போல இத்தனை மோசமான துயரம் ஆசியக் கண்டத்தில் எந்தத் தலைவருக்கும் நேர்ந்ததில்லை. ஒரு மதத்தின் பிரதிநிதியாக விருப்பமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவரை மதமே தீர்த்துக்கட்டியது.  தனக்கு விசுவாசமில்லாதவரை மதம் ஈவுஇரக்கமற்ற முறையில் விழுங்கத் தயங்காது என்பதற்கு ஜின்னாவின் வாழ்க்கை ஒரு உதாரணம். மாமனிதர் ஜின்னா என்னும் இந்த 220 பக்க நூல் ஏற்கெனவே  எழுதப்பட்ட இந்தியாவின் சரித்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.  இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் எந்தப் பக்கத்தில் ஜின்னா விருப்பு வெறுப்பற்ற முறையில் பதிவாகியிருக்கிறார்? இந்தக் கேள்வி தரும் உளைச்சல்தான் இந்த புத்தகத்தின் வாசிப்பனுபவம். ஜின்னா கடைசிவரை ஒரு பாகிஸ்தானியாக மாறவில்லை. அவர்  ஒரு இந்தியனாகத்தான் வாழ்ந்தார்.

1 comment:

  1. Where we will get the books of Akal pathippakam ? The phone number 044- 28115584 is continuously ringing . No one is picking up.

    ReplyDelete