Wednesday, December 24, 2008

கருத்த லெப்பை - அருவத்தின் உருவம் - ஹரன் பிரசன்னா


கருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.

சிறுவயதில் நாங்கள் சேரன்மகாதேவியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு குறுக்கு வழியுண்டு. அந்த வழியில், கேஸ் சிலிண்டரின் வடிவத்தில் கல்லாலான ஒரு பீப்பாய் நின்றுகொண்டிருக்கும். அதன் குறுகிய கழுத்தில் கற்களைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் நண்பர்கள். அதனுள்ளே ஒரு பூதம் காத்திருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். அதன் உருவம் பற்றிப் பல கதைகள் நிலவி வந்தன. சில நண்பர்கள் அந்த பீப்பாயின் குறுகிய கழுத்திற்குள் நெருங்கிப் பார்த்து, அதன் உருவத்தைப் பற்றிய கதையை அளந்தார்கள். நான் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு கற்களைப் போட்டுவிட்டு ஓடுவேன். ஒருதடவைகூட அதன் உள்ளே இருக்கும் பூதத்தின் உருவத்தைப் பார்த்ததில்லை. நிலவொளியில் வெட்ட வெளியில் ஒண்ணுக்கிருக்கும்போது அப்பூதம் பற்றிய பல்வேறு கற்பனைகள் எழும். அதன் உருவத்தைக் கண்டுவிட்ட சக வீர நண்பர்கள் மீது பொறாமையும், என் மீது எரிச்சலும் வரும். ‘சின்ன புள்ளைங்க ஆசையா வாட்சும் மோதிரமு செஞ்சு தரக் கேட்டாக்க, நீ சைத்தானச் செய்யச் சொன்னவனாச்சேடா’ என்கிற ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்படுகிறது கருத்த லெப்பையின் கதாபாத்திரம். ராதிம்மா நாயகத்தின் கம்பீரத்தைச் சொல்லுமிடங்களில் கற்பனையில் அலையும் கருத்த லெப்பை தானாக ஒரு உருவத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவ்வுருவத்தை களிமண் சிலையாக்குகிறான் கருத்த லெப்பை.

கருத்த லெப்பையின் அக்கா ருக்கையா வயது அதிகமுள்ள, சாத்தான் வாசம் செய்யும் வீட்டிலிருக்கும் பதருதீனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். பதருதீன் சரியாவான் என நினைக்கும் ருக்கையாவின் வாழ்க்கை நிர்மூலமாகிறது. தன்னை அடைய நினைக்கும், பதருதீனின் அண்ணன் ஈசாக்கைப் புறந்தள்ளிவிட்டு, மனநிலை சரியில்லாத கனவோடு வெளியேறுகிறாள் ருக்கையா.

அஹம்மது கனி, எந்த ராவுத்தர் ஒரு லெப்பைக்கு ஓட்டு போட்டது என்று தீவிரமாக ஆராய்கிறார். பன்னிரண்டு வயதுப்பையன் அன்சாரியை முழுக்கப் பார்த்து முறுக்கேறிப்போகிறார். நூர்லெப்பைக்கு நெஞ்சுவலி வரும்போது பழிவாங்குகிறார்.

கருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் கதை, அதன் வழியாக பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறது. கருத்த லெப்பையின் உலகம் விசித்திரமானது. அவன் சிறு வயதுமுதலே சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல வளர்கிறான். உண்மையில் அவன் சரியானவனாக இருந்தாலும், அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கற்பனைகள் எல்லாமே அவனுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிரானவையாக இருக்கின்றன. லெப்பைகளுக்கு சரியான மரியாதையும் சம உரிமையும் தராத ராவுத்தர்களையும், ராவுத்தர்களுக்கு இணங்கிப்போகும் லெப்பைகளையும் கேள்வி கேட்கிறான். நாயகத்தின் உருவத்தை உருவாக்குகிறான். பாவாவுடன் சேர்ந்து கஞ்சா உண்கிறான். போர்ட்டரால் ஓரின வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறான். உருவம் செய்த விஷயம் வெளியில் தெரிய கல்லெறி பட்டு உயிரை விடுகிறான். கருத்த லெப்பையின் கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாத்திற்குரியவை. ‘மீன்காரத் தெரு’ நாவலில் ஜாகிர் ராஜா முன்வைத்த லெப்பை-ராவுத்தர் விஷயங்கள் இந்நாவலிலும் முக்கியத்துவம் கொள்கின்றன. அதோடு, ஓரினப் புணர்ச்சி, வயதான ஆண் ஒரு சிறுவன் மேல் கொள்ளும் ஓரின ஆசை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜாகிர் ராஜா.

இரண்டு விஷயங்களில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, லெப்பைகளின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்கிறது. ஏற்கெனவே ‘மீன்காரத் தெரு’ நாவலில் லெப்பைகள் பற்றி எழுதிவிட்டாலும், அவற்றில் சொல்லப்படாத விஷயங்களை எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா. இரண்டாவது, உருவம் பற்றிய சிறுவனின் ஆசை விபரீதமாகப் போகும் விஷயத்தை பிரசார தொனியின்றி சொன்னது. உருவத்தை நினைத்தது மார்க்க ரீதியாகத் தவறு என்பதால் கருத்தலெப்பை இறந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்துவிடுகிறோம். ஜாகிர் ராஜாவும் கருத்தலெப்பைக்கு அதே முடிவையே தருகிறார். இதன்மூலம் நாவலை சமநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.

மிகச் சிறிய விவரணைகளில் கதாபாத்திரங்களை நிறுவிவிடுவதில் ஜாகிர் ராஜாவின் திறமை வெளிப்படுகிறது. சாத்தான் உருவத்தில் மிட்டாய் செய்யச் சொல்லிக் கருத்த லெப்பை கேட்கும்போது, கருத்த லெப்பையின் ஒட்டுமொத்த உருவம் அங்கே கிடைத்துவிடுகிறது. ராதிம்மா நாயகத்தைப் பற்றிய விவரணைகளைச் சொல்லத் தொடங்கும்போது, இரண்டே வரிகளில் கருத்த லெப்பையின் உருவ ஆசையை விவரித்துவிடுகிறார். நாவலின் மையம் மிக அழகாக வெளிப்படும் அத்தியாயம் அது. ஈசாக் ருக்கியாவை அடைய நினைத்து, அவள் தன் கணவன் பதருதீனோடு வெளியேறும் காட்சியும் சில வரிகளில் முடிந்துவிடுகிறது. தன்னைவிட்டுவிட்டு வேறொருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் தன் கணவன் இறந்ததும், அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் முஸ்லிம் பெண்; அவன் இறந்ததும் அவனோடு தொடுப்பு வைத்திருக்கும் பெண் தன் முலையை அறுத்து கதறும் காட்சி என இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருந்தாலும், அவற்றின் மூலம் இரண்டு பெண்களின் இருப்பையும் கவனப்படுத்துகிறார். இப்படி நாவல் அழகு கொள்ளும் இடங்கள் ஏராளம்.

சில அழகழகான விவரணைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. பாவாவும் சோமனும் பேசிக்கொள்ளும் காட்சிகள், அம்மா முறுக்கு பிழியும் அழகிற்கு கருத்த லெப்பை நினைக்கும் உவமைகள், ருக்கையா பதருதீனுக்கு உணவு ஊட்டும்போது கொள்ளும் தாய்மையின் பரவசம் என கவித்துவம் கொள்ளும் வரிகளை நாவல் முழுதும் எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா.

‘மீன்காரத் தெரு’ நாவலில் தென்பட்ட அதே குறைகளே இங்கும் சொல்லப்படவேண்டியதாகிறது. அதிகமான பக்கங்களில் எழுதப்படவேண்டிய நாவல், 74 பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய குறை. இதனால் மிகப்பெரிய ஆளுமைகளாக உருவம் பெறவேண்டிய கதாபாத்திரங்கள் சட்டெனத் தோன்றி, சட்டென மறைகின்றன. கருத்த லெப்பை நாயகத்துக்கான உருவத் தேடலில் ஆர்வம் கொள்ளும் முகாந்திரங்கள் சரியாக விளக்கப்படவில்லை. மிக அழகாக ராதியம்மா சொல்லும்போது கற்பனை செய்தாலும், அக்கற்பனை அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இல்லை. ஒரு சிறுவனின் இயல்பு அது என்றால், அது எப்படி உருவம் செய்யும் அளவிற்கு தீவிரம் பெறுகிறது என்பதைப் பற்றிய செய்திகள் இல்லை.

அஹம்மது கனி, பாவா, மாமு, சின்னப்பேச்சி, அபுபக்கர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள், எண்ணெய் கலந்த நீரில் தோன்றி மறையும் வர்ணங்கள் போலத் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களே அவர்களை நாம் நினைத்துக்கொள்ள வைக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் விளக்கியிருந்தால், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் வளர்ந்து, மிகச்சிறப்பான நாவல் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும். இதை அதிக ஆர்வத்திலும் அவசரத்திலும் ஜாகிர் ராஜா செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

லெப்பைகளின் வாழ்க்கையில் புரையோடிப்போயிருக்கும் சில முக்கியமான விவாதத்திற்குரிய விஷயங்களை இந்நாவல் முன்வைக்கிறது என்கிற வகையில் இது முக்கியமான பதிவாகிறது. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்கிற நிலையில், அதற்கான திறப்புகள் உள்ள நிலையில் அவை சரியாகப் பயன்படுத்தப்படாததால் ஏமாற்றத்தையும் தருகிறது. அதே வேளையில், ஜாகிர் ராஜாவின் பயணத்தில் மிகச்சிறந்த நாவலொன்று வரும் நாள் அதிகமில்லை என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது. நன்றி: http://nizhalkal.blogspot.com

Friday, December 19, 2008

மறைபொருள் - குறும்படம்

'மீன்காரத் தெரு' நாவலுக்கு ஈரோடு மாவட்ட தமுஎச மாநாட்டில் 18.08.2007 அன்று சிறந்த நாவலுக்கான 'பெருமாயி குப்பண்ணன்' விருது கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கு அதிகாலையே நானும் ராஜியும் குழந்தைகளும் தஞ்சை நண்பர்கள் செல்வா, சசிகுமார், செந்தில் ஆகியோரும் புறப்பட்டுச் சென்றோம். அந்தப் பயணம் இனிமையான அனுபவமாக இருந்தது. பேருந்து குளித்தலை அருகே சென்றபோது வாழைப்பழம், வெள்ளரிக்காய்கள் வாங்கி சுவைத்துக்கொண்டே இலக்கியம் தவிர்த்த வளவளவென்ற உரையாடல்கள் - நகைச்சுவைத் துணுக்குகள் வழியெங்கும் சிதறிக் கொண்டிருந்தன. நீண்ட பயணம்தான். நண்பர்கள் உடனிருந்ததால் அயர்ச்சியைத் தணித்துக்கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சியை ஈரோடு மாவட்டத் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். என்னுடன் இரா.நடராசன், அ. மார்க்ஸ், புதிய ஜீவா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. மார்க்ஸ் விழாவுக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக ஓடைதுரையரசன் விருது பெற்றுக்கொண்டார். அப்போது ஈரோடு மாவட்ட ஆட்சித் உதயசந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தார். பொதுச் செயலாளர் ச. தமிழ்செல்வன், கவிஞர் ஆதவன் தீட்சண்யா கலந்துகொண்டனர்.

கீரனூரிலிருந்து கூடலிங்கமும் முருகேசும் வந்திருந்தனர். மகிழ்ச்சியாக இருந்தது. விழா தொடங்கும்முன் பல குறும்படங்கள் திரையிட்டனர். அவற்றுள் பொன். சுதா இயக்கிய 'மறைபொருள்' என்னை பாதித்தது. வசனம் எதுவுமில்லாத அந்த ஐந்து நிமிடக் குறும்படம் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான ஒரு குரலை மௌனமாகப் பதிவு செய்ததால் பார்வையாளர்களைக் கவர்ந்தது. பல நிமிடங்கள் கைத்தட்டலைப் பெற்றது. குறும்படம் காட்சி ஊடகத்தின் குறைவான கால அளவைக் கோருகிறது. ஆனால் பெரிய தாக்கத்தைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துகிறது. 'மறைபொருள்' ஒரு செய்தியை எப்படிக் கலை வடிவமாக்குவது என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. பொன்.சுதாவுக்கு என் வாழ்த்துகள்.

Monday, December 15, 2008

ஏலாதி இலக்கிய விருது





15.08.2008 அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் தக்கலையில் நடைபெற்ற விழாவில் 'மீன்காரத் தெரு' நாவலுக்கு ஏலாதி விருது வழங்கப்பட்டது. கவிஞர் இன்குலாப் இவ்விருதை எனக்கு வழங்கினார். என்னுடன் எழுத்தாளர் பெருமாள் முருகனும் 'கங்கணம்' நாவலுக்காக விருது பெற்றார். கவிஞர் HG ரசூல், ஹாமீம் முஸ்தபா, நட.சிவகுமார் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதே நிகழ்ச்சியில் ரசூல் மீதான ஊர் விலக்க, மத விலக்க நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எழுத்தாளர்கள் பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்


04.04.2008 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'கருத்த லெப்பை' நாவலைத் துணைவேந்தர் சி. சுப்பிரமணியம் வெளியிட கவிஞர் ஆதவன் தீட்சண்யா பெற்றுக்கொண்டார். துணைவேந்தருடன் உரையாடும்போது கீரனூரை நினைவு கூர்ந்தார். அவருக்கு சொந்த ஊர் அரவாக் குறிச்சி.

சாகித்ய அகாதமி கருத்தரங்கம்


திருப்பூரில் சாகித்ய அகாதமி நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியது மறக்க முடியாத அனுபவம். சா. கந்தசாமி, சிற்பி பாலசுப்பிரமணியம், புவியரசு, சுப்ரபாரதி மணியன், 'கற்றது தமிழ்' இயக்குனர் ராம், இளங்கோவன் மற்றும் பல இலக்கிய நண்பர்களை இந்த நிகழ்வில் சந்திக்க வாய்த்தது.

செம்பருத்தி பூத்த வீடு - நூல் வெளியீட்டு விழா


அனன்யா பதிப்பகம் சார்பாக என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 'செம்பருத்தி பூத்த வீடு' தஞ்சாவூர் - பெசன்ட் இல்லத்தில் 22.5.2005 அன்று மாலை சட்டமன்ற உறுப்பினர் சி. நா. மி. உபயதுல்லா (தற்போதைய தமிழக வணிக வரித்துறை அமைச்சர்) முன்னிலையில் வெளியிடப்பட்டது. விழாவில் எழுத்தாளர்கள் யூமா வாசுகி, களந்தை பீர் முகமது, பொ. வேல்சாமி மற்றும் திரளான எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். எழுத்துலக வாழ்க்கையில் என்னுடைய அடுத்த கட்டப் பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது.

Saturday, December 6, 2008

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் " ஓடும்நதி " படைப்புலகம் - கீரனூர் ஜாகிர்ராஜா

தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை தரிசிக்க வைக்கின்றன. சமகாலப் படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாக எழுத தமிழ்ப் புதினப் பாதையை žராக்கித் தந்துள்ளனர்.

சுப்ரபாரதிமணியன் திருப்பூரை வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 1970-களில் சுகாதாரமான பூமியாக இருந்த திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் துளிக்கத் தொடங்கியபோது அடித்தள மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. ஒன்றிரண்டாகப் பெருகிய கம்பெனிகள் ஒரு கட்டத்தில் திகைப்புக்குரிய அளவில் வளர்ச்சியுற்று நகரத்தையே வசப்படுத்திவிட்டன. விவசாயம் அழிந்தது. விளைநிலங்கள் வணிக வளாகங்களாயின. நொய்யலாறு கழிவுகளின் பிறப்பிடமாயிற்று. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் இணைந்தனர். இடநெருக்கடி, குடிநீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசுகள் அதிகரித்தன. திருப்பூர் நகரம் திக்கித் திணறிற்று. கம்பெனிகளோ சிப்டுகளை அதிகப்படுத்தின. தாலி கிடைத்துவிடுமெனும் நம்பிக்கையில் பனியன் கம்பெனியின் கொட்டடிகளில் இளம்பெண்கள் சுமங்கலித்திட்டம் என்ற வருடாந்திர ஒப்பந்தங்களின் பெயரில் அடிமைப்பட்டனர். சமூக அக்கறையாளர்கள், தன்னார்வலர்கள், இலக்கியவாதிகள் இதன்மேல் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். சுப்ரபாரதிமணியன் இவர்களுக்கிடையில் தன் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரின் " தேநீர் இடைவேளை " என்னும் நாவல் திருப்பூர் நகரத்தின் பிரச்சனகளையும், கோவை மாவட்டத்தின் தொழிற்சங்க வரலாறையும் வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்த படைப்பு. அந்நாவல் முழுவதும் கடிதங்களே இடம் பெற்றிருந்தன. " ஓடும்நதி" என்னும் இந்நாவலிலும் கடித உத்தியை பயன்படுத்தி நாவலின் ஒரு பகுதியை நகர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.

செல்வன்- செல்லம்மிணி இருவரின் நட்பு கடிதங்களின் வழியே விரிகிறது. செல்லம்மிணி தன் தந்தையுடன் கொங்குமண்டலத்தின் உள்ளொடுங்கிய கவுண்டர் இனத்தின் ஆதிக்கப் போக்குமிக்கதொரு கிராமத்தில் வசிக்கிறாள். தண்­ர் பிரச்சனை, காமுகர்களின் வெறியாட்டம் இவர்களை கம்பெனிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. பவர்லூம் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் செல்லம்மிணி. தலைக்கு குளித்த ஜந்தாம் நாள் அயர்ந்துறங்கும் வேளையில் பழைய பாத்திரக்காரனால் பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மீண்டும் கம்பெனி வேலைக்கு செல்கையில் செல்வனை சந்திக்கிறாள். கம்பெனியில் சொக்கன் என்பவனுடன் நெருங்கிப் பழகி செகந்திராபாதுக்கு அவனுடன் சென்று மூன்று மாதகாலம் சேர்ந்து வாழ்கிறாள். சொக்கன் பிரிகிறான். அப்பாவின் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு சித்தப்பாவிடம் அடைக்கலமாகிறாள். சித்தப்பா சிறிது காலம் அவளுக்கு ஆதரவளித்து மீண்டும் அவளை அவளின் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கால் சூம்பிய ரங்கண்ணனிடம் செல்லம்மிணியை சேர்ப்பித்துவிட்டு அவரும் மரணிக்கிறார். தன்னை சிதைத்த பாத்திரக்காரனை அவள் மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவன் அவளை மீண்டும் žண்டுகிறான். குழப்பத்தினூடாக உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறாள். கல்வியறிவில்லாத பலருக்கு கடிதம் எழுதிக்கொடுத்து மனநிறைவடைகிறாள். இதற்கிடையில் நாகாலாந்திலிருந்து திரும்பும் செல்வன் மல்லிகா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரில் தமிழ்வழிக்கல்விப் பாடசாலை தொடங்கி நடத்துகிறான்.

இந்த நெடுங்கதையினூடாக மேரி என்னும் பாவப்பட்டவளின் கிளைக்கதையும், செகந்திராபாத் ஜுலியின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றது. செல்லம்மிணி என்னும் குணசித்திரத்தின் வாயிலாக அல்லலுறும் பெண்ணின் ஆன்மாவை வாசகர்களுக்கு தரிசிக்கத் தருகிறார் சுப்ரபாரதிமணியன். நம் தேசத்து புறக்கணிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தப் பிம்பம்தான் செல்லம்மிணி. வல்லரசு ஆகப்போகும் தருணத்திலும் ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் செல்லம்மிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதும் வன்முறைக்குள்ளாகின்றனர் என்பதும் கசப்பான நிஜமாகி நம்மை கலவரப்படுத்துகின்றது.

சுப்ரபாரதிமணியனின் முந்தைய படைப்புகளிலிருந்தும் " ஓடும்நதி "மாறுபட்டு வேறுவேறு திசைகளில் பரவிப் பாய்ந்து செல்கிறது. பல நேரங்களில் ஒரு தேசாந்திரியின் பயணக்குறிப்புகளைப் போலவும் சில நேரங்களில் ஒரு துயர நாடகத்தைப் போன்றும் பிறிதொரு சமயத்தில் ஒரு பேரிலக்கியத்தின் நுண்ணிய கூறுகளுடனும் "ஓடும்நதி"கண்ணாமூச்சி காட்டுகிறது. கதைச் சம்பவங்கள் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் என ஸ்தலங்கள் மாறி நிகழ்ந்து ஓய்கின்றன. நாகாலாந்த், கவுஹாத்தி, அசாம் மலைப்பகுதி நிலக்காட்சிகள், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆசிரியரால் அவதானிப்புக்குள்ளாகியுள்ளன.

காட்டெருமையை வேட்டையாடி அதன் தலையைக் கொய்து வருபவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுதல், புராதன கட்டிடமொன்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கி விரும்புகிறவர்களுடன் தங்கு தடையற்ற பாலுறவு கொள்ளுதல், மரணைத்தவரின் உடலைப் புடைக்காமல் எரியும் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு அது வெந்து வடியும் நிணத்தை உடம்பில் பூசிக்கொள்வது என்று மலைவாழ் மக்களின் வினோத சடங்குகள் நம்பிக்கைகள் நாவலாசிரியரால் நுட்பமாக விவரிக்கப்படும் பொழுது அதிர்வும் பீதியுமான வாசக அனுபவத்துக்குள்ளாக முடிகிறது. " ஓடும்நதி " சுப்ரபாரதிமணியனின் பெரும் பயணத்துக்கான வெள்ளோட்டம்.

ஒடும் நதி (நாவல்)

சுப்ரபாரதிமணியன்

விலை-150/- வெளியீடு: அம்ருதா

பக்கம் - 336. எண்.5. 5வது தெரு,

எஸ்.எஸ்.அவென்யூ, சக்தி நகர்,போரூர்,

சென்னை-11