Wednesday, July 29, 2009

செம்பருத்தி பூத்த வீடு - வெங்கட் சாமிநாதன் விமர்சனம்

ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’

தமிழில் இப்போது நிறையப் பேர் நன்றாக எழுதுகிறார்கள்தான். ஆரம்ப காலங்களில், முப்பது நாற்பதுக்களில் இப்படி ஒரு எழுத்துத் திறன், சிலருக்கு வரப்பிரசாதம் போல் வந்தடைந்தது. அனேகருக்கு பயிற்சியினால்தான் கிடைக்கவிருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைக் காலத்திற்குப் பிறகு, எழுத ஆரம்பிக்கும்போதே ஏதோ பிதுரார்ஜித சொத்துக்கு வாரிசானது போலத்தான் எழுத்துத்திறன் தானாகவே சித்தித்து விடுகிறது. இருந்தாலும், ஒரு புதிய திறனைப் பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. எழுத்துத்திறன் மாத்திரம் இல்லை. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும், வாழ்க்கையையும் சொல்லிவிட முடிகிறது சரி. அதிலும் எழுதுபவனின் தனித்துவத்தை அடையாளம் காட்டும் எழுத்தாகவும் இருந்து விட்டால் இன்னமும் சிறப்புத்தான். சாதாரணமாகச் சொல்லிவிடலாம். எழுதுகிறவனின் தனித்துவம் இல்லாத எழுத்து என்ன எழுத்து என்று. வாஸ்தவம்தான்.

ஆனால், இன்று அப்படி எல்லோராலும் இருந்துவிட முடிகிறதில்லை. ஸ்தாபனம் சார்ந்து, கட்சி சார்ந்து, வரித்துக் கொண்ட சித்தாந்தம் சார்ந்து, எல்லைக்கோடுகள் வரையப்பட்டுவிடுகின்றன. அததற்கான சித்தரிப்புகள், மனித குணாம்சங்கள், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றன. அவற்றை மீறுவது இயலாத ஒன்றாகிவிடுகிறது. முதலில் மீறும் எண்ணம் இருப்பதில்லை. ஒரு முற்போக்கு எழுத்தாளன் அவனே ஒரு ஆட்டோ ரிக்ஷாக்காரனின் அடாவடித்தனத்திர்கு இரையாகியிருந்தாலும், அப்படி ஒரு சித்தரிப்பைக் கொடுத்து விடமுடியாது. ரிக்ஷாக்காரன் ஒரு பாட்டாளி. அவன் சுரண்டலுக்கு இரையாகிறவன் என்று ஒரு வாய்ப்பாடு தரப்பட்டிருக்கிறது. பணம் படைத்தவன் இரக்கமற்றவனாகத்தான் இருப்பான். அதெப்படியோ அந்தப் பணக்காரனின் பெண்ணைத்தான் ஒரு ஏழைத் தொழிலாளி காதலித்துத் தொலைப்பான். (ரகுநாதனின் பஞ்சும் பசியும்.) இப்படி ஒவ்வொரு வகைக்குமான குணச்சித்தரிப்பு வாய்பாடு இருக்கிறது.

இதையெல்லாம் இப்போது நாம் சீரியஸாக எடுத்துக் கொள்வது கிடையாது. வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டகாசங்களைப் பற்றி இப்போது எந்த முற்போக்கும் கவிதையும் எழுதுவது கிடையாது. அவர்களில் பலரை இப்போது கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களில், அல்லது கலைஞரைப் பாராட்டும் விழா மேடைகளில் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு கட்சிக் கொள்கை, சித்தாந்தம் சார்ந்த எழுத்தாளர்களுக்கு அததற்கான வரையரைகள், பார்வைக் கோணங்கள் உண்டு. ஒரு காலகட்டம் வரை இந்த வரையறைகள் பொதுவாக நமக்குத் தெளிவாகத் தெரிந்ததில்லை. கழகத்தாரின் எழுத்துக்களும் முற்போக்குகளின் எழுத்துக்களும் அனேகமாக வரும் வழியிலேயே பின்தங்கி விட்டன. வானம்பாடிகளை, பாரதிதாசனை, சிதம்பர ரகுநாதனை, கழக எழுத்துச் சிற்பிகளை ஓவியர்களைப் பற்றி யாருக்கு இப்போது கவலை? தலித் எழுத்தாளர்கள் தான் எந்த எல்லை விதிப்புக்கும் கட்டுப் படாமல் தம் அனுபவம் சார்ந்து எழுதுகின்றனர். அந்த அனுபவங்களும் எழுத்துக்களும் சித்தாந்திகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சிரமம் தருகின்றன.

ஆனால் இதையெல்லாம் பார்க்க, இப்போது அதிகம் கெடுபிடிகளுக்கு உள்ளாவது முஸ்லிம் சமுதாயத்திலிருந்து எழும் எழுத்தாளர்கள்தான். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுதும் நிலவும் கெடுபிடி. இந்த விதிமுறைகளும், மீறுவோர்க்கான கண்டனங்களும், எழுத்துலகத்திலிருந்து வருவதில்லை. மதத்தலைவர்களிடமிருந்து வருகின்றன. மதத்தலைவர்களின் தாக்கீதுகளுக்கு பயந்து வாழும் முஸ்லிம் எழுத்துலக பிரகிருதிகளிடமிருந்து வருகின்றன. இந்தக் கெடுபிடிகள், முற்போக்குகளும் தலித் எழுத்தாளர்களும் எதிர்கொள்வதைவிட மிகக் கடுமையானவை. சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் அளவுக்கு அவை கடுமையானவை. இதற்கு மேலும் கடுமை கொள்வது தமிழ்நாட்டில் இதுவரை நிகழவில்லை என்பதில் நாம் ஆசுவாசம் கொள்ளலாம்.

சமீப காலங்களில் முஸ்லிம் சமுதாயக் கவிஞர், கதைக்காரர்கள் தம் சமுதாயத்தைப் பற்றிய சித்தரிப்பில் தம் அனுபவ உண்மையையே எழுதி வருகிறார்கள். அவர்கள் தம் சமுதாயத்திற்கு எதிராக எழுத வேண்டும், ஏதும் புரட்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை தான். எந்த சமுதாயத்திலும் காணும் காட்சிகளைத் தான் அவர்கள் தம் அனுபவத்திலும் கண்டு எழுதியுள்ளார்கள். ஆனால், அவர்கள் முஸ்லிம்களாதலால், அவர்கள் வாழும் உலகைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள தனிமனிதர்களின் குணக்கேடு தனி மனிதக் குணக்கேடேயல்லாது, மதம் சார்ந்ததல்ல என்பதை மதத் தலைவர்கள் புரிந்து கொள்வதில்லை. பாதகமான ஒரு செயலோ நிகழ்வோ ஒரு முஸ்லிமோடு சம்பந்தப்பட்டிருந்தால் அது இஸ்லாமையே குறித்ததாக எடுத்துக்கொள்கிறார்கள். இது அவர்கள் பார்வைக் குறுகலையே வெளிப்படுத்துகிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

‘செம்பருத்தி பூத்த வீடு’ என்று ஒரு சிறுகதைத் தொகுதி, கீரனூர் ஜாகிர் ராஜா எழுதியது. ஐந்து வருடங்களுக்கு முன் வெளிவந்தது, இப்போதுதான் என் பார்வையில் பட்டது. காலதாமதமானாலும் இப்போதாவது எனக்குப் படிக்கக் கிடைத்ததே என்று சந்தோஷப்படவைக்கும் எழுத்து கீரனூர் ஜாகிர் ராஜாவினது. முஸ்லிம் சமூகத்திலிருந்து வரும் எழுத்தாளர்கள் எழுத உட்காரும்போதே மிகுந்த தயக்கத்தோடேயேதான், தான் ஒரு முஸ்லிம், தனக்குத் தெரிந்த உலகைப் பற்றிய அனுபவங்களைத்தான் எழுதினாலும் யார் என்ன சொல்வார்களோ, என்னென்ன பாதக விளைவுகளைச் சந்திக்க வேண்டுமோ என்ற பயத்தோடும் எச்சரிக்கையோடும்தான் எழுதுவார்களோ என்று எண்ணத் தோன்றுவது, மதவாதிகளின் கெடுபிடிகள் அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இயல்புதான். ஹெச்.ஜி. ரசூல் படும்பாடு நமக்குத் தெரியும். இன்னம் இங்கு யாரும் எந்த மதத் தலைவரும் அயதொல்லா கொமீனியாகவில்லை.

ஆனால் இம்மாதிரியான தயக்கங்களுக்கோ பயங்களுக்கோ ஜாகிர் ராஜாவின் கதைகளில் இடமில்லை. எச்சரிக்கையோடு எழுதுகிறார் என்று அர்த்தமில்லை. யாரும் எந்த சமூகத்திலிருந்தாலும், தன் அனுபவங்களை எழுதுவது போலத்தான் இவரும் தன் உலகின் மனிதர்களையும் நடந்த சம்பவங்களையும் எழுதுகிறார். இவர் ஒரு ஜாகிர் ராஜாவாக இல்லாது ஒரு சிவராமனாக, பழனிச்சாமியாக இருந்திருந்தால் மேலே எழுதியது எதுவும் எழுதவேண்டியிராது.

தலைப்புக் கதையையே எடுத்துக் கொள்ளலாமே. படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு பெண்ணிடம் கொண்டிருந்த ஒரு கிறக்கம். அப்பா இறந்ததும் பெரியப்பாவோடு வியாபாரத்தில் இறங்கி கேரளம் போய் பத்துப் பதினைந்து வருடங்களாயிற்று. பின் வியாபாரம் படுத்துவிடவே ஊர் திரும்பும்போது சின்ன வயசுக் காதலி பற்றிய நினைப்பு வருகிறது. பழைய செம்பருத்தி பூத்த வீடு இருக்கிறது. ஆனால் அந்த கவுண்டப் பொண்ணு மயிலாத்தா எப்பவோ இறந்துவிட்டதாக செய்தி சொல்வது சின்ன வயசிலிருந்து மிக நெருக்காமாகப் பழகிய கூடலிங்கம்தான். “மாப்ள, அந்தப் புள்ளே செத்துப் போயி ஏழெட்டு வருஷமாச்சேடா…” என்கிறான் கூடலிங்கம். அந்த ஊர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர் என்று தெரிகிறது. அப்படியிருந்தும், மைதீனுக்குப் பிடித்த ஒரே நண்பன் கூடலிங்கம்தான். இந்த கூடலிங்கம் இன்னும் அனேகக் கதைகளில் நண்பனாக வருகிறான். வேறு எந்த பெயரும் இவ்வளவு நெருக்கத்தில் பேசப்படவில்லை.

மயிலாத்தா இருக்கும் கவுண்டரோட வீடு … “எப்பண்ணாலும், யாருண்ணாலும் போகலாம்….எங்க வீடு மாதிரி ஜென்னலுக்கு மறைப்பு, கதவுக்கு மறைப்பு, கதவுக்கு அங்கிட்டு ஒரு மறைப்புன்னல்லாம் இருக்காது. தொறந்த வீடு. வாசல்பூராவும் பூச்செடிங்க ….” இது ஒருவாறாக ஜாகிரின் மனநிலையைச் சொல்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

அனீஃபா ராவுத்தர் தன் பெண் பரீதாவை தன் சொத்தெல்லாம் வித்து கட்டிக்கொடுத்துவிட்டார். மாப்பிள்ளை மஜீத் தை நாலு நாள் மீனும் கறியுமாக உபசாரம் செய்ய வழி தெரியாது, பள்ளிவாசல் குளத்தில் இருக்கும் ராஜ மீனைத் திருடிவிடுகிறார். “இந்த வாழ்க்கை வாழறதுக்கு பதிலா கபர்ஸ்தான் வந்து குழிவெட்டி படுத்துக்கலாம்” என்று சொல்கிறார் இபுராஹீம் லெப்பை.

எங்கும் காணும் ஏழ்மையின் கொடுமைதான். அதை உணர மறுக்கும் பணத்தின் மூர்க்கம்தான். ஆனால் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆயிஷா என்னும் சிறுபெண் இருப்பது அதிசயம் தான். ஆயிஷாவின் உயிருக்குயிரான நூரின்னிசா இறந்து விடுகிறாள். பின்னால் ஆயிஷா பாசம் கொள்ளும் ஆட்டுக்குட்டியே நூரின்னிசாவாகத் தோன்றுகிறது ஆயிஷாவுக்கு. நூரின்னிசாவின் பாத்திஹாவின்போது ஐம்பது பேருக்கு சாப்பாடு போட பணம் சேர்க்கிறாள் ஆயிஷா. சித்தப்பா வீட்டுக்குக் கொஞ்ச நாள் போய்விட்டுத் திரும்பியபோது ஆட்டுக்குட்டியைக் காணோம். பக்ரீது செலவுக்குப் பணம் வேண்டுமே விற்றாயிற்று. இது தெரிந்ததும் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு நூரின்னிசாவை வாங்க ஓடுகிறாள் ஆயிஷா. ஆயிஷா ஒரு தனிப் பிறவிதான். “இந்த துனியாவில் மாமிசம் மறுத்த முதல் முஸ்லிம் பெண்ணல்லவா அவள். அவளை ஏர்வாடிக்குக் கூட்டிட்டுப்போயி ஓதிப்பார்த்து ஒரு தாயத்து கட்டி இழுத்துட்டு வரவேண்டிய கேஸ்,” என்றுதான் அம்மாவுக்கு அத்தாவுக்கும் அபிப்ராயம். இப்படி ஒரு சிறு பெண் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் காண்பது ஆச்சரியம்தான். ஆனால், அப்துல் கலாம் இருக்கிறாரே என்று சொல்லலாம். ஆச்சரியம்தான். ஆயிஷாவின் ஆத்தா நோயாளி. இருந்தாலும் நோன்பிருக்கிறாள். ‘நோன்பு திறக்க’ பள்ளி வாசலிலிருந்து அறிவுப்புக்காகக் காத்திருக்கிறாள், ஆத்தா. அவள் முன்பு கஞ்சியும் கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சம் பழங்களும். கஞ்சி சரி. பேரீச்சம்பழங்கள்? வேறு பழங்கள் உதவாது போலும்.

பக்ரீது ஆடுகள் என்று ஒரு கதை. பல கதைகளில் பேசப்படும் சுலைமான் ராவுத்தர்தான் ஆடுகளை பல ஊர்களிலிருந்து வாங்கி வந்து உள்ளூரில், பல கதைகளில் பேசப்படும், ஏ.எம்.எஸ் முதலாளிக்கும் இன்னும் மற்ற வேண்டுபவர்களுக்கும் பக்ரீத் குர்பானிக்காக சப்ளை செய்பவர். இப்படித்தான் அவர் பிழைப்பு நடந்து வருகிறது. சுலைமான் ராவுத்தரும் அவர் உதவியாள் ஜின்னாவும் இந்த வருஷமும் வெளியூர்களிலிருந்து ஆடு பத்திக்கொண்டு வந்து முதல் நாள் இரவே ஊரில் எல்லோருக்கும் செய்தி சொல்லியும் ஆயிற்று. ஆனாலும் ஆடு கேட்டு யாரும் கதவைத் தட்டவில்லை. என்னவென்று விசாரிக்கப் போன இடத்தில் ஒரே கூட்டம். யாரும் ராவுத்தரைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஏ.எம்.எஸ் முதலாளி ப்ளஷர் காரில் வந்து இறங்குகிறார். அவர் பின்னால் ஒரு லாரியில் வந்து இறங்குவது ஒட்டகம். “வக்காலி, சுத்து வட்டாரத்திலே நம்ம சனத்திலே எவனாச்சி ஒட்டகம் அறுத்து குர்பானி குடுத்ததா கதையாச்சிம் உண்டா?” என்று பெருமிதத்துடன் தன் செயலை சொல்லிக் கொள்கிறார். மாறி வரும் வாழ்க்கைச் சூழல் மதிப்புகள்! இனி சுலைமான் ராவுத்தருக்கு அடுத்த ஊர் சந்தைக்குப் போனால் பத்தாது. ராஜஸ்தானுக்குப் போகவேண்டும். இல்லை, ஹஜ் போய்த் திரும்பும்போது ஆளுக்கொரு ஒட்டகத்தையும் ஓட்டிக்கொண்டு வரவேண்டும்.

அமானுஷியில் ஒரு அமானுஷ்ய நிகழ்வையும் அமானுஷ்யப் பெண்ணையும் சந்திக்கிறோம். ரஜியா நிக்காஹ்-க்காகக் காத்திருக்கும் பெண். அவளுக்கு “கனவில் நாகூர் ஆண்டவரும் இன்னும் நானூத்தி நாலு பேரும் வந்து அவளுக்கு ஏதோ ரகசியமாகச் சொல்லி” விட்டுப் போகிறார்கள். ரஜியா அந்த ரகசியம் என்னவென்று சொல்வதில்லை. ஆத்தா, பெத்தம்மா, அம்மா, முஜி, யாருக்குமே. ஒவ்வொரு சமயம் பூடகமாக ஏதோ சொல்வாள். “வாய் தவிக்கும், நாக்கு வறளும், கிணறு…” என்று போய்ப்பார்த்தல், கிணற்றில் ஒரு ஆண் பிணம். இப்படிப் பல. நாகூர் தர்காவுக்கே போகாத ரஜியா நாகூரைப் பற்றி விலாவாரியாகச் சொல்கிறாள். ஆக, அவள் ஏதும் புது ரகசியம் இருப்பதாகச் சொல்லும்போதெல்லாம், எல்லோருக்கும் என்ன நடக்குமோ என்று பயம். அவள் ஏர்வாடி கேஸ் இல்லை, அது போலத் தோன்றினாலும். ஒரு முறை பேஷ் இமாமை அழைத்து வந்து என்ன ரகசியம் என்று அவளைக் கேட்கச் சொல்கிறார்கள். ரஜியா ஒரு அறையில் அடுத்த அறையில் பேஷ் இமாம். அறைகளுக்கு வெளியே ஊரே திரண்டு ஒரே கூட்டம். பேஷ் இமாம் நடுச்சுவரில் காதை வைத்து என்ன ரகசியம் சொல் என்கிறார். ரஜியா சொல்கிறாள், “பேஷ் இமாம் அவர்களே, குரானின் முப்பது ஜூஸ்களையும் நீங்கள் மனப்பாடமாக ஓதிக் காட்டினால், அந்த ரகசியத்தைச் சொல்கிறேன்” என்கிறாள். இமாம் திடுக்கிட்டு வெலவெலத்துப் போகிறார். அந்த சமயத்தில் பள்ளிவாசல் பாங்கு கேட்கிறது. தொழுகைக்கு நேரமாகிறது என்று சொல்லிக் கொண்டே பள்ளிவாசலுக்கு ஓடி விடுகிறார், இமாம்.

“சொடலை வந்திருக்கேன், சாமி” என்று நாணாவின் வீட்டு முன் வந்து கத்துவான் சக்கிலியன் சொடலை. மிஞ்சிப் போன சோறு, கறி ஆணம் என்று கொண்டு போடுவாள் ஆமினா. சக்கிலியன் சொடலையிடம் இந்தக் கருணை காட்டுவது நாணா மாத்திரமே அந்த ஊரில். மற்ற எல்லா இடத்திலும் கிடைப்பது அவமானம்தான். சொடலையின் பெண்டாட்டிக்கும் நாணாவுக்கும் ஒரு ஒட்டுதல். சக்கிலிப் பெண் என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. “இஸ்லாத்தில் சேந்து விடு. ஒத்தரும் ஒதுக்கமாட்டான். எல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு!” என்று ஆசை காட்டுகிறார். அவனுக்கும் ஆசைதான். மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று.

இரண்டு நாள் கழித்து நாணா வீட்டுத் திண்ணையில் ஒரு பையில் கைலி, சட்டையெல்லாம் திணிக்கப்பட்டுக் கிடக்கிறது. சுடலை பழைய காக்கி உடையில் பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டு நிற்கிறான், வாசலில்.

மார்க்க விஷயத்தில் ‘கெடுபிடியான’ ஆளான காசிம் ராவுத்தரின் ஏழ்மையில் அவர் மகன் அப்துல்லா ராமசாமி கடையில் வேலைக்குச் சேர்கிறான். ஒரு ஸ்டூல் மேல் ஏறி, கடையில் இருக்கும் சாமி படங்களுக்கெல்லாம் பூ சார்த்துவான் அப்துல்லா. இந்த சமாசாரம் காசிம் ராவுத்தருக்கு ஒருநாள் தெரிந்ததும், “ஒரு காஃபிரை எனக்குப் புள்ளையா தந்துட்டியேடா, யா அல்லாஹ்” என்று புலம்புகிறார். “அப்படியானால் இந்த நாட்டில் எத்தனை லட்சம் காஃபிர்கள்” என்று அப்துல்லாவின் மனதில் கேள்விகள். அத்தா அவனை மன்னிக்க மறுத்துவிடுகிறார். அப்துல்லாவின் கனவில் கதீஜா ஒரு பொட்டலம் பூவைக்கொடுத்து அனுப்புகிறாள் கடைக்கு. அத்தா அவனை ஆதுரத்துடன் பார்க்கிறார். ஆனால் அது அவன் கனவுதான். வீடு என்னவோ வெறிச்சிட்டிருக்கிறது. இந்தக் கதை ‘காஃபிர்.’

குஜராத் போன்ற இடங்களுக்கு ஆட்கள் அனுப்ப கறுப்புக்கோட்டுக்கு புரோக்கராக தொழில் செய்து கமிஷனில் வாழ்பவர் முத்தலீப். இப்போது நிலைமை மாறிவிட்டது. பூகம்பம், குஜராத் கலவரம் எல்லாம் சேர்ந்து ஆள் கிடைப்பது துர்லபமாகிக்கொண்டு வருகிறது. நம்ம கமிஷன்லேதானே இவன் நாலு குமருகளுக்கு நிக்காஹ் செஞ்சு வச்சான், இப்போ இப்படி காலை வாறுகிறானே என்று கருப்புக் கோட்டுக்குக் குமுறல். இன்னம் ஒரு பொண்ணைக் கரையேத்தணுமே என்று முத்தலீபுக்கு கவலை. வெளியூர்லே ஒருத்தருக்கும் காட்டாமே படிக்க வச்சிட்டிருக்கியே உன் மவன். அவனை சேர்த்து மூணு பேரை நாளைக்கு அனுப்பிடு என்று கட்டளை பிறக்கிறது கறுப்புக்கோட்டிடமிருந்து. எவன் எக்கேடு கெட்டால் என்ன, தன் வியாபாரம் தொடரணும் கறுப்புக் கோட்டுக்கு.

சஃபியா தன் கணவன் இக்பாலால் கைவிடப்பட்டவள். மூன்று வயதுக் குழந்தை வேறு. மதரசாவில் கற்ற இஸ்லாம் மார்க்க கல்வி அவளுக்கு உதவுகிறது. மேலும் மௌல்வியின் பெண் என்ற காரணத்தாலும் மதரஸாவில் அவளுக்கு வேலை கிடைக்கிறது. இக்பால் தலாக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறாள் சஃபியா. ஆனால் அவன் கொடுப்பதாக இல்லை. “அல்லாஹ் மிகவும் மனம் வெறுத்துத் தான் இதற்கான அனுமைதியைத் தந்திருக்கிறான். தலாக்கின் மூன்று நிலைகள், அந்த அவகாசங்கள் மிக முக்கியமானவை. அதை எவரும் லட்சியப்படுத்துவதில்லை” என்றும் ஜாகிர் ராஜா கதையில் சொல்கிறார். பள்ளி வாசலில் சஃபியாவின் மனதைச் சஞ்சலப்படுத்துவது பிலால். “அவன் கவிதை ‘ஆதம் ஹவ்வா’ காலம், ஷாபானு, சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன் வரை பேசி, ஒரு வழக்கமான முஸ்லிம் குரலாய் பாபரி மஸ்ஜித், பொதுச் சிவில் சட்டம் வரை அலசி ஒய்ந்து..” என்று இக்பாலைப் பற்றிச் சொல்கிறது கதை.

‘செம்பருத்தி பூத்த வீடு’ தொகுப்பில் 19 கதைகள். இக்கதைகளினூடே, இன்றைய தமிழ்நாட்டு முஸ்லிம் சமூகம், அதன் பல வண்ணங்கள் மாத்திரமல்ல, ஜாகிர் ராஜாவையும் கூட சந்திக்கலாம். இனி ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

செம்பருத்தி பூத்த வீடு - ஜாகிர் ராஜாவின் சிறுகதைகள்.

வெளியீடு:

அனன்யா பதிப்பகம்
8/37, பி.ஏ.ஒய். நகர் (குழந்தை இயேசு கோயில் அருகில்)
புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613005

நன்றி: தமிழ்இந்து.காம்

தமிழ்இந்து.காம்-ல் வாசிக்க: http://www.tamilhindu.com/2009/07/jakir_raja_book_review/

Monday, July 13, 2009

ஜெகநாதன் said...

அன்பு ஜாகிர்ராஜா,
பாங்கு ஒலியை காலை அலராமாக ​கொண்டிருந்தாலும், கறி பிரியாணியாக ​நோன்பு நாளை அடையாளங்​கண்டிருந்தாலும், மாமா மாப்ளேன்னு வாயார குசலம் விசாரித்துக் ​கொண்டாலும், துலுக்கத் திமிரு என்று தள்ளியே வாழும் சாமானியனாகவே இருந்தேன் - உங்கள் எழுத்தை வாசிக்கும் முன். நம்மூரு (ஐம் ப்ரம்
தாராபுரம்) ஸைடுல எழுதுறவங்கன்னா சுப்ரபாரதிமணியன், க.சீ. சிவக்குமார், என். ஸ்ரீராம் இப்படி கொஞ்சம் பேர தான் தெரியும். 2000-ல் தருமபுரி ​நூலகத்தில் உங்க சிறுகதை ​​தொகுதி ​செம்பருத்தி பூத்த வீடு கிடைச்சது (அப்ப அங்க பொறியியல் படிச்சுக்கிட்டு இருந்தேன்) படிச்சு முடிச்சதும் கீரனூர் கிளம்பி உங்களப் பாக்கணும்னு ​தோணுச்சு. விசாரிச்சதுல நீங்க தஞ்சாவூர் பக்கமா ஸெட்டில் ஆயிட்டதா சொன்னாங்க. அப்ப இருந்து புத்தகத்துக்கு நடுவுல வெச்சிருக்கிற மயிலிறகு மாதிரி இருக்கு உங்க எழுத்து. இப்ப இந்த மாதிரி பிளாக்கில உங்கள சந்திக்கிறது ​ஒரு சைபர்த்தனமான சந்தோஷமா இருக்கு.
உங்கள் கதைங்கள் ​கொங்கு நிலப்பரப்பை ஒட்டிய இஸ்லாமிய வாழ்வுமுறையை யதார்த்தமாக உணர்த்துகிறது. பாங்கு ஒலி, பர்தா மறைத்த அழகு, உருது பாஷை, பிற சம்பிரதாயங்கள் என பாகுபாடுகள் அனைத்தும் ஒரே தள்ளலில் தள்ளி அந்த எளிய உலகத்தினுள் பிரவேசிக்க முடிகிறது. இவ்வளவு எளிமையாய் முஸ்லீம்
சமுதாயத்தை படித்துணர முடியும் என எப்போதும் நினைக்கவில்லை. சொல்லப்​போனால் உங்கள் எழுத்து ஒரு யாத்ரீகன் எழுதியது போல் நேர்மையாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.
தற்​போது என்னிடம் உங்கள் புத்தகம் எதுவும் இல்லை. சரியான வரிகளை நினைவு கூற முடியவில்லை. இருப்பினும் மசூதி குளத்தின் மீனைத் திருடும் மாமனார், குளத்துக்குள் குசு விட்டால் குமிழிகள் வரும் எனும் கஞ்சா ​தோழன், மதினாவுக்கு யாத்திரை ​சென்ற தம்பதியினர், மதம் மாற்றப்படுபவன், ஒட்டக வரவால் ஆட்டு வியாபாரத்தை இழக்கும் கசாப்புக் கடைக்காரர், லப்பை-ராவுத்தர் ​வேற்றுமை என இந்த உலகம், பக்கத்திலேயே இருந்தாலும் பார்வைக்கு தட்டுபட்டதேயில்லை.
எல்லா மதத்திலும் ​பொதுவான விஷயம் - வறுமையை ஒண்ணும் செய்ய முடியாதுங்கிறதுதான் போலிருக்கிறது. என்ன ​செய்ய வறுமைதானே மதத்தையே தோற்றுவித்திருக்கிறது.

வாழ்த்துக்களுடன்..

க. ஜெகநாதன்
http://jaganathank.blogspot.com/

Tuesday, July 7, 2009

முதல் பிரவேசம்

நினைவிலிருக்கும் அபூர்வ கனம்



Keeranur Jaheerraja முதல் புத்தகம் குறித்து எழுதச் சொன்னதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது என்பார்கள். இவை இரண்டும் எனக்கு வாய்த்ததாக நினைவில்லை. ஆனால் முதல் புத்தகம் குறித்த நினைவுகள் மனம் விட்டு அகலாப் படிமமாகி-விட்டது. பின்னோக்கிச் செல்ல பெரிய கால தூரம் எல்லாம் கடந்துவிடவில்லை. 2005_ல் தான் என் முதல் தொகுதி வெளியானது. 1995_ல் எழுதத் தொடங்கி பத்து ஆண்டுகள் கழித்து இது நிகழ்ந்தது. இன்றைக்குப் புதிதாக எழுத வருகிறவர்கள் முதல் புத்தகத்துக்கு அட்டையைத் தயார் செய்து விட்டுத்-தான் எழுத ஆரம்பிக்கின்றனர். இதை நான் குறையாகச் சொல்லவில்லை. தமிழ் பதிப்புத் துறையின் அதிவேக வளர்ச்சியைத்தான் இந்த இடத்தில் சுட்டிக் காட்டுகிறேன்.

எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் பெரும்பா-லும் கவிதைகளும் சிறுகதைகளும்தான். சின்னச் சின்ன இதழ்களில் அவை பிரசுரமாகி வெளிவந்தன. காலச்சூழலில் சிறு பத்திரிகைச் சூழலுக்கு நான் பொருந்திப்போய்விட்டேன். ஒரு சமயத்தில் ‘இனி எழுதாமல் இருக்க முடியாது’ என்கிற நிலைக்கும் வந்து நின்றேன். இஸ்லாமிய சமூகத்தின் மறைக்கப்-பட்ட வாழ்க்கை நிதர்சனங்களை துளியளவும் சமரசமில்லாமல் பதிவு செய்தன என் படைப்புகள். தொடக்கம் முதலே அவற்றுக்கு வரவேற்பிருந்தது.

காதலித்து கலப்பு மணம் செய்து கொண்டு சமூகத்தாலும் வீட்டாலும் புறக்கணிப்புக்குள்ளாகி கஷ்டங்களுக்குள்ளான காலம். இப்போதும் போலவே அப்போதும் எழுத்தை நம்பி எதுவும் செய்ய முடியாது என்னும் நிலை. தஞ்சாவூர் மன்றத்தினர் நடத்திய வாராந்திர அறைக் கூட்டங்களில் கலந்து கொண்டு கைதட்டல்களுடன் வீடு திரும்புவேன். ராஜி கடன் கணக்கை எழுதிக் கூட்டிக் கொண்டிருப்பாள். நான் வீடு வந்ததும் கூட்டத்தில் என்னுடைய பங்களிப்பைக் குறித்து ஆர்வமாகக் கேட்பாள். கடன் சுமை குறித்து எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள். இது எந்த எழுத்தாளனுக்கும் வாய்க்காத வாழ்க்கைத்-துணை. எப்போதும் இவ்விஷயத்தில் எனக்குப் பெருமிதம் உண்டு.

கவிஞனா, புனைகதையாளனா என்னும் ஒரு குழப்பமிருந்து, எழுத்தாளன் என்று தீர்மானித்துக் கொண்டபின் ஒரு தேர்ந்த கதை சொல்லியாகிவிட வேண்டுமென்கிற முயற்சியின் ஈடுபட்டிருந்தேன். ப்ரகாஷ் தஞ்சை பெரியகோவில் புல் வெளியில் ‘தளி’ இலக்கியச் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்தார். நிறைய நண்பர்கள் அங்கே வருவார்கள். அவ்வப்-பொழுது அருள் என்கிற வியாகுலனும் வருவார். பின்னாளில் அவர்தான் என் தொகுதியைப் பதிப்பிக்கப் போகிறார் என்றெனக்கு அப்போது தெரியாது. நிஜத்தில் ஒரு படைப்பாளியாக நான் பரிணாமம் பெற்றது ப்ரகாஷ் பட்டறையில் தான். ப்ரகாஷ் காற்று வெளியிடை அமர்ந்து கலாபூர்வமான விஷயங்களைப் பேசுவார். உலக இலக்கியப் பரிச்சயம் ஓரளவு எனக்குக் கிடைத்தது பெரியகோவிலில்தான்.

நண்பர் யுகபாரதி கணையாழி இதழில் உதவி ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் என்னுடைய ஐந்தாறு கதைகள் அந்த இதழில் வெளியாகின. வெவ்வேறு வாசக தளத்துக்கு அந்தக் கதைகள் என்னைக் கொண்டு சென்றன. அவற்றுள் ஒரு கதை ‘இரட்டை மஸ்தான் அருகில்’ ஒருமுறை வியாகுலனை சந்தித்த வேளை இரட்டை மஸ்தான் சிறுகதையைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார். அத்துடன் சிறுகதையைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார். அத்துடன் நில்லாமல் “உங்கள் கதை-களைத் தொகுத்துக் கொடுத்தால் நான் வெளியிடு-கிறேன்’’ என்றும் சொன்னார். அப்போது தஞ்சாவூரில் புத்தகம் போடுவது பெரிய விஷயமாகத்தானிருந்தது. வளமான பொருளாதாரப் பின்புலமுள்ளவர்கள் கைக்காசைக் செலவழித்து புத்தகம் போட்டுக் கொண்டிருந்தனர். “ஒரு தொகுப்பைக் கொண்டு வந்துவிட்டால் கவனம் பெற்று விடுவீர்கள். மாநில அளவில் அங்கீகாரம் பெற வேண்டியவை உங்க-ளுடைய படைப்புகள்’’ என்று தெ. வெற்றிச் செல்வன், அம்மா. குருமுருகன் போன்ற நண்பர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இருவருமே படைப்பாளிகள். எனவே அவர்களுடைய கூற்றில் இருக்கும் அக்கறையைப் புரிந்து மேலும் என்னுள் லட்சம் கதைகள் புதையுண்டிருக்கும் சுய ரகசியமும் நான் அறிவேன்.

யாரை எங்கே அணுகி புத்தகம் போடச் சொல்வது என்பதுதான் அந்நாளின் தலையாய பிரச்சனையாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து நாமே சுயமாக வெளியிடலாமா அல்லது ஒளிஅச்சு (ஜெராக்ஸ்) முறையிலேனும் தொகுப்பை கொண்டு வந்து விடலாமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். கிடைத்த வருமானம் குடும்ப செலவுக்கே போதவில்லை. இப்படியான சூழலில் வியாகுலன் புத்தகம் போட்டுத் தருவதாகச் சொன்ன-வுடன் எனக்கது அதிர்ச்சியாகக் கூட இருந்தது. காரணம் வியாகுலனின் இலக்கியப்போக்கு நானறிந்ததே. புல்வெளிக் கூட்டத்துக்கு வந்து நண்பர்-களின் கவிதைகளை அவர் ஒரு முரட்டுப் பிடிவாதத்-துடன் நிராகரித்ததைக் கண்டிருக்கிறேன். பல சமயங்களில் கவிதை குறித்த உரையாடல்களில் ப்ரகாசுக்-கும் அவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. பின்னாளில் அவருடைய போக்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டிருந்தது.

நானும் ராஜியும் இரண்டு குழந்தைகளுடன் தஞ்சாவூர் செட்டிபாளையம் சாலையில் செம்பருத்தி-கள் பூத்துக் குலுங்குமொரு வீட்டில் குடியிருக்கையில் முதல் தொகுதிக்கான வேலையை ஆர்வத்துடன் தொடங்கினோம். பல்வேறு இதழ்களில் வெளியான 19 கதைகளைத் தொகுத்து அப்போது யாகப்பா வளாகத்துள் மரங்களடர்ந்த சூழலில் இயங்கிக் கொண்டிருந்த வியாகுலனின் அலுவலகத்தில் கொண்டுபோய் சேர்த்தேன். சில நாட்களில் ஞிஜிறி செய்து பைண்ட் செய்த கதைக் கொத்தை மெய்-திருத்தம் பார்க்குமாறு என்னிடம் கொடுத்தார். எல்லா கதைகளையும் ஒருங்கிணைத்துப் பார்த்த அந்த நிமிசத்தில் நான் கொண்ட மகிழ்ச்சிதான் என் வாழ்வின் முக்கிய தருணமாகும். பிறகு ஓவியர் டக்ளஸின் அட்டைப் படத்துடன் ‘செம்பருத்தி பூத்த வீடு’ தயாராகிவிட்டது. வியாகுலன் மிகுந்த ஈடுபாட்டுடன் இந்தத் தொகுதிக்கான பணிகள் மேற்கொண்டதை பல சந்தர்ப்பங்களில் கவனித்து மகிழ்ந்திருக்கிறேன். வெளியீட்டு விழாவையும் அனன்யா பதிப்பகம் சார்பாக அவரே பெசன்ட் அரங்கில் வைத்து நடத்திக் காட்டினார்.

பொ. வேல்சாமி, களந்தை பீர்முஹம்மது, யூமா. வாசுகி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இப்போது வணிக வரித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் எஸ்.என்.எம். உபயதுல்லா அப்போது தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் வந்திருந்து வாழ்த்திப் பேசியதும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். சொல்லப்போனால் என்னுடைய இலக்கிய வாழ்க்கையின் அடுத்த கட்டம் அந்த மேடையிலிருந்துதான் தொடங்கியது.

இன்றைக்கு சிறுகதைகள், நாவல்கள், குழந்தை இலக்கியம் என்று என் பெயரில் சுமார் பத்து புத்தகங்கள் வெளிவந்து ஓரளவு அங்கீகாரமும் கிடைத்து விட்டது. எழுதத் துவங்கி 16 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் நான் எழுத வந்து பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் என்னுடைய முதல் தொகுதி வெளிவந்தது. இத்தகைய கால இடைவெளி-யில்தான் நான் என்னுடைய எழுத்துக்கான ஆதார சுருதியைக் கண்டடைந்தேன். தோல்வி, அவமானங்கள், போராட்ட மயமான வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில் தான் நான் முகிழ்த்தெழுந்தேன். எனக்கு இனி கலை இலக்கிய வாழ்வுதான் என்பது ஸ்திரப்பட்டுவிட்டது. இதற்கு காரணங்களாயிருந்த என்னுடைய பதிப்பாளர்கள் வியாகுலன், மருதா பாலகுரு, அகல் பஷீர், ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை படைப்பாளியாக அங்கீகரித்ததில் பெரும்பங்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துக்கு இருக்கிறது. அவ்வியக்கத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

- நன்றி
புத்தகம் பேசுது.

Sunday, March 22, 2009

நானும் கதைகளும் - நன்றி கனவு

மனதின் அடிப்பரப்பில் பாசி போல் படர்ந்து இன்று இறுகிப் பாறையாகி விட்ட பால்யத்தின் நிழல்களே என் எழுத்து. ஒரு கையளவு இடத்திலிருந்து ஊற்றெடுக்கிற காவிரியைப் போல எனக்கான எழுத்தை அரைக்கால் பருவத்திலிருந்தே நான் அகழ்ந்தெடுக்கிறேன். 6ம் வகுப்பு படிக்கையில் நிழல் என்று கதை எழுதி ஆத்தாவிடம் வாசிக்கத் தந்தது நினைவிலிருக்கிறது. எங்கள் வீட்டுக் கொட்டத்தில் ஒரு பக்கம் இறைச்சி வெந்துகொண்டிருந்த அடுப்பு கொத்து கொத்தாய் புகை கிளப்பிக் கொண்டிருந்தது. அம்மா அகலமானதொரு அம்மியில் கொத்தமல்லி செலவு அரைத்துக் கொண்டிருந்தாள். அரைக்குயர் ரஃப் நோட்டில் இரண்டு காகிதங்களைக் கிழித்து மைப்பேனவில் எழுதிய அந்தக் கதையில் துர்மரணமடைந்த பெண்ணொருத்தியின் நிழல் அவளது பூர்வீக வீட்டின் சுவரில் அழியாது படிந்திருந்ததாய் எழுதியதை இன்று நினைக்கையிலும் மயிர்க்கால் விறைக்கிறது.

அடர்த்தியான வெயில், சிம்னி விளக்கொளி நிலாக் கிரணங்களிலான எந்த வெளிச்சத்திலிருந்தும் கிடைக்கின்ற நிழல்களின் மேல் எனக்கு அளவற்ற ஈர்ப்பு உண்டு. சிம்னி சுடர்விட சுவரில் நீண்டெழும் என் பிம்பங்கள்ளை பலவித பாவனைகள் காட்டி ரசிப்பேன். திண்ணையில் படுத்துறங்குகையில் பௌர்ணமி ஒளியில் நிழலாடும் அந்தி மந்தாரைகளின் பிம்பம் அன்றைய இரவின் சுகானுபவம். அர்த்த ஜாமத்தில் வந்து அகப்படாமல் தப்பிய திருடனின் நிழலை இன்னும் அப்படியே மனச்சிலேட்டில் பதிந்து வைத்திருக்கிறேன். இறந்துவிட்ட என் ஆத்தாவின் நிழல் இன்னும் என்னைத் தொடர்ந்து வந்து துன்புறுத்துவதாகவே உணர்கிறேன். நிழல்களுடனான என் உறவைப் பாட்டி சைத்தான்களின் சகவாசம் என்பாள்.

‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ என்று அழியாச்சுடரில் மௌனி கேட்பார். நம் மூதாதையரின் நிழல் படிந்த பூர்வீக வீடு பல தலைமுறைகளின் தொகுப்பாகி வாழ்வின் பொருளை நமக்கு உணர்த்துகிறது.

பழநியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒரு இடுக்கில் சிக்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம் என் கீரனூர். ஒரு காலத்தில் இது முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்ததாகக் கேள்வி. சண்முகநதி சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்த காலம் என் விடலைப் பருவமாயிருந்தது. ஒரு நீர்வாழ் ஜீவராசியைப்போல ஆறுகளும் குளங்களும் கிணறுகளுமே அப்போதைய என் வாழ்விடங்களாக இருந்தன. அவற்றிலொரு மீனைப்போல நான் நீந்திக்கொண்டிருந்தேன். என் உடன் பயின்ற இருவர் பைத் கானம் இசைக்கும் கோஷ்டியினர். என்னை மூத்த கருத்தமுத்து என்னும் வாட்டசாட்டமான தடியன் எல்லோருடன் நானும் காடு கழனிகளில் சுற்றி இலந்தை, நாவல் பறித்து, கரும்புகளடித்து, ஒடக்கான் அடித்து அலைந்து திரிவேன். மனதில் துக்கத்தின் சாயைகள் துளியும் கவியாத பருவம்.

அச்சம் என்பதற்ற நாட்கள். கால்களில் செருப்புமிருக்காது. நேரத்துக்கு உணவுமெடுத்துக்கொண்டதில்லை. பள்ளிப்பாடங்கள் குறித்த லட்சியமில்லை. இவ்வாறு நான் ஊர் சுற்றியாகிப் போனது எங்கள் குடும்ப கலாச்சாரத்துக்கு ஒவ்வாதது. நுனி நாக்குப் பேச்சும் கலையாத ஆடைகளும் ஐவேளைத் தொழுகையுமாயிருந்த எங்க பசங்களிடம் எனக்கு ஒரு ஒட்டுதல் இருந்ததில்லை. மீன்காரத் தெரு சகவாசம் கூடாதென்னும் கட்டுப்பாடு வீட்டிலிருந்தது. அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் பைத் கானங்கள் என்னை அங்கு கொண்டுபோய் நிறுத்தும். பறத்தெருவுக்குள் நுழையத் தடையிருக்கும். நையாண்டி மேளமும் நாதஸ்வரமும் கரகாட்டமும் எனக்கு அங்கிருந்துதான் கிடைக்கும். விசேஷ இரவுகளில் தீப்பந்தங்களும் கியாஸ் விளக்குகளும் சூழ அந்த கருப்பு ஜனங்கள் சீர் செனத்தி எடுத்துச் செல்லும் அந்தப் பாமர அழகை ரசித்துக் கொண்டே பின்தொடர்வேன். அவ்வாறு விடியாத இரவுகள் பல உண்டு.

எங்கள் தெருவில் நிலவிய அமைதியும் தூய்மையும் ஒழுங்கமைவும் எவ்வித சலனத்தையும் தராதபோது பிற தெருக்களின் வீச்சம் என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அந்தத் தெருக்களில் தான் எனக்கு மாறுபட்ட மனிதர்கள் வாய்த்தனர். அழுத்தமான சம்பவங்கள் கிடைத்தன.

ஏற்றத்தாழ்வுகள் என் சமூகத்தில் இயல்பாகவே நிலவி வந்த விஷயம். பொருளாதாரத்தில் பலமுள்ளவனுக்கு எப்போதும் தனி மரியாதை இருந்தது. சிறு பிராயத்திலிருந்து இதை நான் மிகுந்த துக்கத்தினூடாக மனப்பதிவு செய்து வந்திருக்கிறேன். வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் என்று தனி வம்சமாக அடையாளப்படுத்துகிற அளவு ஒரு சந்ததியினர் ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு சிதைந்த குடும்பங்களின் அவலம் பதிந்த களையிழந்த வீடுகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்தப் பிரதேசத்தைக் கடந்து செல்கையில் ஒரு வித சூன்யம் நம்மையுமறியாமல் நம் மேல் கவிந்து துன்புறுத்தும். கொடிய கரங்கள் நீண்டுவந்து நம்மை இருள் குகைக்குள் தள்ளும்.

இதைப் போன்ற பிராயத்துச் சித்திரங்கள் மனப்பரப்பில் தங்கி பிறகு ஒரு கணத்தில் தொடர்ந்த கிளறல்களின் மூலமாக மேலெழும்பி வந்து இனம்புரியாக் கிலேசங்களை மன நெருக்கடிகளை புரியாத ஆனந்தத்தை உருவாக்கியுள்ளன. அத்தாவின் தாயார் குஞ்சம்மாள் என்கிற சஹர்பான் பீவி என் பாட்டி. ஆயம்மா என்றே அழைப்பேன். அம்மாவுடன் அவர் சண்டையிட்ட நேரம்போக மீதி நேரங்களில் எனக்கு அகண்டதொரு இஸ்லாமிய கலாச்சார வாழ்வியல் அடையாளங்களையும் விசித்திரமான குரான் கதைகளையும் சொல்லி பிறிதொரு உலகத்தை அறிமுகப்படுத்தியவர்.

ஆதம்மையும் ஹவ்வாவையும் உலகின் முதல் ஆண் பெண் என்றும், ஆதம்மை இறைவன் மண்ணாலும், ஹவ்வாவை ஆதம்மின் விலா எலும்பாலும் படைத்தான் என்றும் முதல் கதையைச் சொன்னபோதே என்னை கண்கள் விரிய வைத்தவள். எப்படி ஒருவரை மண்ணாலும் விலா எலும்பாலும் படைக்க முடியும் என்கிற என் பிள்ளைப் பருவத்து எதிர்வினைகளையும் சந்தித்து சகிப்புத் தன்மையுடன் தொடர்ந்து என்னிடம் உரையாடியவள். ஆதம்மும் ஹவ்வாவும் இறைவனின் எச்சரிக்கையை மீறி விசித்திரக் கனியைத் தின்றதுதான் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூல காரணம். இது சைத்தானின் சதி என்றும் கேட்டபோது மெல்ல கதை உலகம் விஸ்தீரமடைந்தது. சைத்தானை மிகப்பெரிய வில்லனாக நான் மனக்கண்ணில் பார்த்து மிரண்டேன். விசித்திரக் கனிகள் கொண்ட அந்த விருட்ச மரம் இந்த பூமித் தாழ்வாரத்தில் எங்கேனும் வேர்பரப்பி நிற்கிறதா என்று நான் அலைந்து தேடிச் சலித்திருக்கிறேன்.

அன்பானவர்களே! அகில உலகத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்ற ஒப்பற்ற இறைவனுக்கு உருவமில்லை என்னும் கருத்தே எனக்கு அப்போது வித்தியாசமாகவும் வியப்பாகவும் நம்பமுடியாததாகவும் பட்டது. பிறகு இறைவன் தூணிலிமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என்கிற நம்பிக்கையையும் அவ்வாறே நான் பரிசீலித்துப் பார்க்க வேண்டியிருந்தது. இறைவனால் 1,24,000 தூதர்கள் நபிமார்கள் இந்த பூமிக்கு இறக்கப்பட்டார்கள் - என்றாள் ஆயம்மா வெற்றிலை குதப்பிய வாயுடன். நான் அவர்கள் வானுலகத்திலிருந்து குதித்திருப்பார்களா ஏணிப்படிகளமைத்து இறங்கியிருப்பார்களா என்று கற்பனை செய்தேன். குரானில் 25 நபிமார்களைத் தானே சொன்னாய் என்று குறுக்குக் கேள்வியும் கேட்டு வைத்தேன். ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக 23 வருட காலகட்டத்தில் குரானின் வசனங்கள் வெளிப்பட்டதை அவள் சொல்லி ஓய்ந்தாள். ஜிப்ரீல் ஒளியால் படைக்கப்பட்டவர். மனிதக் கண்களுக்குப் புலப்பட மாட்டார் என்றும் அறிந்து கொண்டேன்.

ஹ¨கபாயில் 36000 இறக்கைகளுடன் 50000 ஆண்டுகள் பறந்த போதும் ஏழுவானங்களுக்கு அப்பால் மரகதத்தினால் உருவாக்கப்பட்டு நீரில் மிதக்கும் உலகத்தில் போடப்பட்டிருக்கும் இறைவனின் சிம்மாசனமாகிய அர்ஷ்ஷின் ஒரு தூணின் நுனியைக்கூட தொட முடிந்ததில்லை; உயிரினங்களின் தோற்றத்தில் நடமாடும் தீப்பிழம்பால் படைக்கப்பட்ட ஜின்களின் கூட்டம் கண்ணுக்குத் தெரியாத வாயுவாகவும் மாறவல்லது; தொட்டிலில் தூங்கும் குழந்தையை தானாக சிரித்து தானாக அழவைக்கும் சொர்க்கத்தின் கண்ணழகிகள் ஹ§ருள்ஈன்கள், கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமாகிய வெண்ணிறத்திலான மின்னல் வேக வாகனம் புராக்கிலமர்ந்து நபிகள் நாயகம் விண்ணுலகப் பயணம் சென்று மிஃராஜ் இரவில் இறைவனுடன் உரையாடியது; மீனின் வயிற்றுக்குள் வாழ்ந்த யூனுஸ் நபி கடலைப் பிளந்து பாதையமைத்து பகைவர்களிடமிருந்து தப்பிய மூஸா நபி - அற்புதங்கள் நிகழ்த்த அவரிடமிருக்கும் அஸா என்னும் கைத்தடி; மரணத்தறுவாயில் உயிரைப் பறிக்க வரும் இஸ்ராயீல்; பறவைகளிடமும் ஏன் எறும்புகளிடமும்கூடப் பேசும் ஆற்றல் பெற்ற சுலைமான் நபி, இறந்தவர்களை உயிர்ப்பிக்க வல்ல சக்தியுடைய ஈஸாநபி, சந்தூக்கு என்னும் மரணப் பல்லக்குகள், இறந்தபிறகு கேள்வி விசாரணை கிளப்ப வரும் முன்கர் - நக்கிர்; உலகம் அழிந்தபிறகு இறந்துபோன எல்லா மனிதர்களுக்கும் உயிரூட்டி எழுப்புகின்ற மஹ்சர் மைதானம் நரகத்தின் மீது வாளைவிட கூர்மையாகவும் ரோமத்தைவிட மெலிதாகவும் போடப்பட்டுள்ள சிராத்துல் முஸ்தகீம் பாலம் இபுராகீம் நபியின் பிறப்பால் தன் ஆட்சிக்கு முடிவு காலமெனக் கருதி அப்போது பிறந்திருந்த 77000 குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்ட பாபல் நகர மன்னன் நம்ரூத், மரணச் செய்தியை அறிவிக்கும் மலக்குல் மௌத் குருவி, உண்மைகளைக் கண்டறிந்து சொல்ல சுலைமான் நபி தூது விட்ட ஹ§த்ஹ§த் பறவை, களிமண் உருண்டைகளை வீசியெறிந்து யானைப்படையை விரட்டிய அபாபீஸ் பறவைக் கூட்டம், கழுதை வாகனத்தில் அமர்ந்து வலதுகண் இல்லாமல் உலக அழிவின் அறிகுறியாய் வர இருக்கும் தஜ்ஜால் - இன்னுமின்னும் ஆயம்மாள் காட்டிய உலகம் மாந்த்ரீக யதார்த்தங்களால் நிரம்பிவழிந்த மகா சமுத்திரம்.

இவற்றையெல்லாம் என் கதைகளில் நாவல்களில் நான் வலிந்து திணித்ததில்லை. இவ்வகை மாந்த்ரீக யதார்த்தங்களை என் படைப்பில் தேவைப்படும் இடத்தில் அத்தியாவசியம் கருதி மட்டுமே பயன்படுத்துகிறேன். என் கதைக் களங்கள் எதுவும் ஏழு வானங்களுக்கு அப்பால் இல்லை. நாற்றமும் கவுச்சியும் புழுவும் பூச்சிகளும் சூழ்ந்த தெருக்களில் இரண்டு கைகளையும் கால்களையும் தவிர எவ்வித பலமுமற்ற - அமானுஷ்ய சக்தியற்ற எளிய மனிதர்கள் என் கதை மாந்தர்கள். இவர்களுக்கு பசியும் காமமும் காழ்ப்பும் வக்கிரமும் பொறாமையும் பொச்சரிப்பும் வன்மமும் உண்டு. பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் தான் ஊரை விட்டுப் பிரிந்தபோது எப்படி ஊர் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கும் என்று எதிர்பார்த்து வரும் அப்பாவியும், பிரியமாய் வளர்த்த ஆட்டுக்குட்டியை ரம்ஜான் துணி வாங்குவதற்காக விட்டுத்தர மறுக்கும் சிறுமியும் பண்டிகைக்கு விற்றுவிடலாமென்று ஒரு பட்டி செம்மறி ஆடுகளை ஓட்டிவந்து, ஒட்டகத்தை அறுத்து ஓர் விருந்து தரும் முதலாளியிடம் ஏமாந்து விடும் கசாப்பு வியாபாரியும், பிரியாணிக்காக ஏங்கும் கூடலிங்கமும், ஹஜ் பயணத்தின் கிரியைகளில் ஒன்றான சைத்தான் மீது கல்லெறியும் சம்பவத்தில் லட்சோபலட்சமாய் கூடிய கூட்டத்தின் நெருக்கடி தாளாமல் தடுமாறி வீழ்ந்து உதையும் மிதியும் படும் ஹாஜியும், மதமாற்ற வலையில் சிக்கியிருந்து விளிம்பில் தப்பித்துச் செல்லும் சுடலை மாதாரியும், ஜவுளிக்கடையில் கணக்குப் பிள்ளையாய் இருந்து கம்ப்யூட்டரின் வருகையால் வேலை இழக்கும் ஹஸன் முகம்மது மாமுவும், கணவனால் தலாக் என்னும் விவாகரத்து பெற்று கைக்குழந்தையுடன் தத்தளிக்கிற பெண்ணும்,

விசா வாங்கித் தருவதாக ஏஜண்டால் ஏமாற்றப்பட்டு துபாய் சிறையில் காலம் கழிக்கிற இளைஞனும், நோன்புக்கஞ்சி கிடைக்குமென்று கருதி இறுதியில் அது கிடைக்கப்பெறாத மாரியம்மாளும், ஒவ்வொரு பள்ளி வாசலிலும் வெள்ளிக்கிழமையன்று கையேந்தும் பெண்மணியும், வீட்டு வேலைக்கென்று போய் முதலாளி மகனிடம் கற்பைப் பறிதரும் ஆமினாவும், மேட்டுக்குடியினர் வாழும் பங்களாத் தெருமீது தீராத வன்மம் கொண்டலைகிற நைனாவும், பெருமாள் கோயில் பூசாரிக்கு மர்மஸ்தானத்திலுள்ள மயிர் நீக்கும் ஏழை நாவிதன் துருத்தியும், அழகானவரென்றும் அறிவானவரென்றும் வர்ணிக்கப்படும் தங்களின் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் உருவத்தை தரிசித்துவிடத் துடிக்கும் கலைமனம் கொண்ட கருத்தலெப்பையும், புத்திசுவாதீனமுள்ளவனெனத் தெரிந்தும் அவனையே மணாளனாக ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்படும் ருக்கையாவும், ராவுத்தர் - லெப்பை எனப்பிரிந்து உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளும் மனிதர்களும், மனைவியுடன் பிணங்கிப் பிரிந்து ஜவ்வு மிட்டாய் விற்று முக்கு முறுங்கை மரத்தடியில் காலங்கழிக்கும் ஹமீதுவும், அஷ்டாவதனம் புரியத் தகுதியுள்ளவனே ஆயினும் சாம்பான் மடத்தில் கஞ்சா புகைத்தவாறு ஞான லோகத்தில் சஞ்சரிக்கிற பாவாவும், பாலியல் வறட்சியால் ஓரினப் புணர்ச்சிக்குத் தள்ளப்பட்ட மாந்தர்களும் இன்னுமின்னும் இஸ்லாம் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுமே என் கதை மாந்தர்கள். கதைகளையோ, புதினத்தையோ அனுபவத்தின் சாரமின்றி மொழியின் வலிமையாலோ புனைவின் திறத்தாலோ தூக்கி நிறுத்த முடியாது. எப்படைப்பும் அது ரத்தமும் சதையுமான வாழ்வின் பதிவாக மனித அவலத்தை உன்னதத்தை வாசகனுக்குப் பரிமாற வேண்டுமென்பதில் தளராத நம்பிக்கை கொண்டவன்.

(திருப்பூரில் நடைபெற்ற சாகித்ய அகாதமியின் தமிழ் நவீன இலக்கியம் கருத்தரங்கக் கட்டுரை. பிற கட்டுரையாளர்கள்: சிற்பி, புவியரசு, சி.ஆர்.ரவீந்திரன், இந்திரா, தமிழ்நாடன், சுப்ரபாரதிமணியன்)

எல்லோருக்குள்ளும் ஒரு கருத்த லெப்பை - க. சுப்பிரமணியன், நன்றி கனவு

உ ருவ வழிபாடும் அரூப வழிபாடும் இரண்டு வழிமுறைகள் விதவிதமாய் செதுக்கி, வடித்து, வரைந்து உருவங்களே அனைத்துமாய் ஆகி புரதானத்தை இழந்து விடுவது ஒரு எல்லையென்றால், உருவங்களை ரசிக்கின்ற கலைமனம் கூட குற்றமாய் ஆகிவிடுவது மற்றொரு எல்லை.

விதவிதமாய் மிட்டாயில் உருவங்களைப் படைக்கும் அமீதுவிடம், குழந்தையாய் இருக்கும் கருத்தலெப்பை செய்துதரக் கேட்பது சைத்தானை. அதே கருத்த லெப்பையால் அமீதுவுக்குள் வீணாகிக் கொண்டிருக்கும் ஒரு ஓவியனையும் அடையாளம் காண முடிகிறது.

‘உருவம் நமக்கு ஆகுமாடா’ எனக் கேட்கும் அம்மா விடம் ‘நீயும் நானும்கூட உருவம்தானேம்மா’ என்று சொல்லும் அவனது ரூபங்களின் மீதான காதல் ரகசிய மாக அமீது மூலம் அண்ணல் நபியை உருவமாய்ச் செய்து பார்க்கத் துடிக்குமளவுக்கு வளர்ச்சி பெறுகிறது. நாவலின் மற்றொரு முக்கிய இழையாக ஓடுவது ராவுத்தர் - லெப்பை அடையாளம் சார்ந்து ஊருக்குள் இருக்கும் பேதம். பள்ளிவாசல் மகாசபைத் தேர்தலில் நூர்முஹம்மது லெப்பை காரியதரிசி பொறுப்புக்கு போட்டியிடுவதைத் தொடர்ந்து ராவுத்தர்களிடம் கிளம்பும் ஆத்திரமும் அதன் விளைவுகளுமாய்ப் பயணிக்கிறது.

சிலருக்கு சிந்தனையும் இன்னும் சிலருக்கு செயல்களும் வசப்பட்டுவிடும். செயலும் சிந்தனையும் ஒரே லயத்தில் வாய்ப்பவர்கள் அரிது. மாட்டிறைச்சி தின்னும் லெப்பைகளின் நியாயம் எடுபடுவதில்லை என்று வருந்தும் அம்மா இடுப்பொடிய பிழியும் முறுக்குகளை எண்ணிக்கையில்லாமல் அண்டாவின் கொள்ளளவே கணக்காய் வாங்கும் முதலாளிகளின் நியாயத்தை எண்ணிப் பொருமும் ராவுத்தரை எதிர்த்து கொடி பிடிக்காமல் அனுப்பியதும் திரும்பி வந்ததற்கான அம்பாவை ‘அவனையும் சேத்துதான் சொல்றேன்’ என்று சீறும் கருத்தலெப்பையால் யதார்த்தத்தில் எதையுமே மாற்ற முடிவதில்லை. தன் ப்ரியத்துக்குரிய அக்கா ருக்கையாவின் வாழ்க்கையில் கூட எதுவும் செய்ய முடிவதில்லை. அதிகபட்சமாக ராவுத்தர் அண்ட்-கோவுக்கு மாற்றாக ஒரு லெப்பை அண்ட்-கோ குறித்து கனவுதான் காண முடிகிறது.

மேலும் மிட்டாய் அமீதுவிடம் ‘நீ மொதல்ல பித்துலெவக் கொட்டத்த அடக்கி ஒங்க அக்காக்காரிய வாழவெய்யிடா. அப்புறமா ராவுத்தனுங்க கொட்டத்த அடக்கலாம்’ என்று பேச்சுக் கேட்கத்தான் முடிகிறது. ஆழமாய்ப் பார்த்தால் நம்மில் பெரும்பாலோருள்ளும் ஒரு கருத்தலெப்பையை அடையாளம் காணலாம். ஜாகிரின் பேனா தயக்கமின்றியும் எளிதாகவும் அஹமது கனி ராவுத்தருக்கு பன்னிரண்டு வயது விடலைப் பையனிடம் ஏற்படும் ப்ரியத்தையும், மழையிரவில் சுயநினைவின்றி தபாலாபீஸ் திண்ணையில் கிடக்கும் கருத்த லெப்பையைத் தன் தாகம் தீர்க்க குதுபுதீன் பயன்படுத்திக் கொள்வதையும், தன் அம்மாவின் பருத்த பிருஷ்டம் கருத்த லெப்பைக்குள் ஏற்படுத்தும் இனம் புரியாத சங்கடத்தையும் சொல்லிவிடுகிறது.

சாம்பான் மாடத்து பாவா, கொடிக்கால் மாமு, சின்னப் பேச்சி என்று எழுபது பக்க குறுநாவலுக்குள் இன்னும் பேசுவ தற்குத் தோதான கதாபாத்திரங்கள் இருக்கவே செய்கின்றன. இன்னும் விரிவாய் எழுதுவதற்குத் தோதான களமிருந்தும் குறுநாவலாகவே வார்த்திருக்கிறார் ஆசிரியர். ஒரு வேளை இத்தனை நறுக்காகச் சொன்னதனால்தான் இந்தச் சுவையோ!

கருத்த லெப்பை
குறுநாவல் : கீரனூர் ஜாகிர்ராஜா
மருதா, 6(32) அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை 92. பக்கம் 72, ரூ. 40