Wednesday, January 26, 2011

ஹரிகிருஷ்ணனின் பேரண்டச்சி வேஷம்

தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்துப் பேச வருவோர் அது சில நூற்றாண்டுப் பராம்பர்யம் கொண்டதெனச் சொல்லி மகிழ்வர். நம்முடைய பழந்தமிழ்ச் செய்யுள்கள், சங்ககாலக் கவிதைகள் காப்பியங்களினூடே இடம் பிடித்துள்ள கிளைக்கதைகள் - காய சண்டிகை, ஆபுத்திரன் கதைகள், சிலப்பதிகாரத்தில் தேவந்தி மற்றும் பராசரன் கதைகள் போன்றவற்றில் சிறுகதைக் கூறுகள் வெளிப்பட்டுள்ளன. ‘பரமார்த்த குரு’ கதைகளை எழுதிய வீரமாமுனிவரின் உரைநடை வெளிப்பாடுகளில் நாம் கதைகளுக்குரிய சில லட்சணங்களைக் கண்டடைய முடிகிறது. எஸ். எம். நடேச சாஸ்திரியார் 1800 களின் இறுதியில் வெளியிட்ட ‘திராவிட மத்திய காலக் கதைகள்’, அதே நூற்றாண்டில் வாழ்ந்த தாண்டவராய முதலியார் எழுதிய பஞ்சதந்திரக் கதைகள், கதாமஞ்சரி போன்ற கதைக் கொத்துகளும், 20-ம் நூற்றாண்டின் கால்பகுதி வரை வாழ்ந்து மறைந்த செல்வக் கேசவராய முதலியார் எழுதிய ‘அபிநவக் கதைகளும்’ தமிழ்ச்சிறுகதைத் தளத்திற்கு அஸ்திவாரங்களென்று குறிப்பிடலாம். விடுதலை உணர்வு வலுப்பட்டிருந்த காலத்தில் பாரதியும், மாதவையாவும், வ.வே.சு. அய்யரும் சுதேசமித்ரன் போன்ற இதழ்களில் கதைகளை எழுதியுள்ளனர்.
1930-களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மணிக்கொடி’ இதழ், சிறுகதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பி.எஸ். ராமய்யா, ந.பிச்சமூர்த்தி போன்றோரும், தமிழ்ச் சிறுகதையின் சிகரம் தொட்டவரெனக் கருதப்படும் புதுமைப்பித்தனும், ந.சிதம்பர சுப்ரமணியன், எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், க.நா.சு., கு.ப.ரா., சி.சு. செல்லப்பா, மௌனி போன்றவர்களும் பயணம் செய்த தடமாக அது இருந்தது.
இந்தியக் கதை மரபை எடுத்துக்கொண்டால் கதைகளின் பிறப்பிடமாக இந்திய நாடே இருந்திருக்கிறது என்பதை வரலாற்றின் அடிப்படையில் வைத்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பாரசீகனும், அராபியனும் இங்கிருந்து கற்றுக்கொண்ட கதைக்கலைதான் மத்திய கிழக்கு நாடுகளெங்கும் வியாபித்து வேர்விட்டுக் கிளை பரப்பியதாகச் சொல்கிறவர்கள் உண்டு.
பல லட்சம் அத்தியாயங்களில் மாந்த்ரீக மொழியில் சொல்லப்பட்ட ‘பிருகத்’ என்னும் நீண்ட கதைப்படைப்பு கி.பி. 6ம் நூற்றாண்டுகளில் விளங்கியுள்ளது.
தமிழ்ச் சூழலில் கதைகள் நம்முடைய பாரம்பர்யமான பண்பாட்டு வெளிப்பாடுகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஒரு பூம்பூம் மாட்டுக்காரனும், குடுகுடுப்பைக்காரனும், குறிசொல்லியும், ஜோதிடக் கலைஞனும் கதைசொல்லிகளே, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம், புராணக்கதைகளை வெளிப்படுத்துகின்ற தெருக்கூத்து, பொம்மலாட்டம், பாவைக்கூத்து போன்ற யாவும் கதைமரபின் கண்ணிகளே.
இன்றைக்குப் பல்வேறு உத்திகளாலும் வெளிப்பாட்டு த்வனிகளாலும் மொழியின் உபயோகங்களாலும் ஒருவித உன்னத நவீன நிலைமை அடைந்து விட்டதாகக் கருதப்படும் தமிழ்ச்சிறுகதைப் பரப்பிலே ஹரிகிருஷ்ணனின் கதைகள் எவ்விதமாய் இயங்குகின்றன இவருடைய உலகம் எது, உள்ளடக்கம் எது; எதுமாதிரியான அரசியலை இவை முன்வைக்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க அவசியமிருக்கிறது.
இலக்கணம் வகுப்போர் சிறுகதைக்கு எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் வேண்டி நிற்பர். நல்லது ஙீ கெட்டது என்னும் மோதலைக் கேட்பர். சிறுகதைக்கு மையத்தை நோக்கிய நீச்சல் அவசியம் என்கிறவர்கள் உண்டு. திருப்பமும் தேவையாம். மௌனம், ஒருமை, தீவிரத்தன்மை, ஒற்றைப் படையான நகர்வு எல்லாமும் இங்கே சிறுகதைக்குரிய இயல்புகளென வகுக்கப்பட்டுள்ளது.
‘நாயி வாயிச் சீல’ தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும், மேற்கண்ட சிறுகதைப்பண்புகளை ஒருவித முரட்டு தைரியத்துடன் நிராகரித்தபடி அதனதன் எல்லையற்ற இலக்குகளை நோக்கிப் பிரயாணிக்கின்ற தன்மை கொண்டுள்ளவையாக அனுமானிக்க முடிகிறது.
வாழ்க்கை கற்றுத் தருகின்ற அல்லது நிர்பந்திக்கின்ற எண்ணிலடங்காத விஷயங்கள் அனுபவச் சேகரங்களாகி, ஒரு சமயத்தில் புனைவின் நுட்பத்துடன் சிருஷ்டியாக வெளிப்படுவது இயல்பெனினும்; அவ்வகை அனுபவங்களுக்கும் படைப்புக்கும் தொடர்பில்லையெனக் கூறுவோர் உண்டு. நாயி வாயிச் சீல தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஹரியின் அனுபவங்களின் தொகுப்பாகத்தான் எனக்குப் படுகிறது ‘‘இவை ரத்தமும் சதையுமான என்வாழ்விலிருந்து நான் உங்களுக்குத் தருவது’’ - என்னும் வாக்கு மூலம் ஒவ்வொரு கதையையும் வாசித்து முடிக்கும்போது நம்மை எட்டி விடுகிறது.
இலக்கியத்தின் மேல் போலியாகவும் பாவனைகளாகவும் படிந்துள்ள மரபானவற்றின் மேல், படைப்பாளிக்கு நியாயமாக எழுகின்ற கோபங்கள்தான் இக்கதைகளின் தலைப்பு, உள்ளடக்கம், மொழிவெளிப்பாடு இத்யாதி விஷயங்களில் ஒருவித மீறலாக நாம் அடையாளங் காண்பது. ஏற்கனவே உள்ள நியமங்கள் மீது இக்கதைகள் எழுப்புகின்ற கேள்விகள் நியாயமானவை. இவ்வகை மீறல்கள்தான் புதிய வடிவங்களை நிர்மாணிக்க வல்லவை. நம்முடைய முன்முடிவுகளும் நம்முடைய அளவுகோல்களும் நம்மைப் பற்றியுள்ள கற்பிதங்களும் இவ்வகைப் புதிய வடிவ எழுச்சியின் முன் சரணடைகின்றன.
இக்கதைகளில் பிரயோகிக்கப்பட்டுள்ள வட்டாரமொழி இக்கதைகளின் வெற்றியைத் தீர்மானிக்கிற சக்தியாக உள்ளது. விவரணைகளுக்கு நவீன மொழியையும் உரையாடல்களுக்கு வட்டார வழக்கையும் கையாளுகின்ற என்னிடம் அவை ஓயாமல் கேள்விகளை எழுப்புகின்றன. முதல் சொல்லாடலிலிருந்து முடிவு வரை, கொச்சையானதென நம்மால் நம்பப்பட்டுள்ள வட்டார மொழி பொங்கும் இசை வெள்ளமெனப் பாய்ந்தோடுகின்ற அதிசயத்தை இக்கதைகள் முதன்முதலாக நமக்கு உணர்த்துகின்றன.
‘‘கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ்சூள வெச்சாப்பிடி அனாமுத்தாப் பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே. அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா’’
‘‘மூணு தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழுவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசருப் பசுங்கக்கிட்ட குடுத்துர்றான்’’ ‘‘சின்னப்பட்ட கழுதைக்கி செனக்கழுத கூத்தியாளாம். சேட்டு பன்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரான்’’
‘‘ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல’’
“பொழப்புப் போயி பொடக்காலியில நின்னுக்கிட்டு போவுட்டுமா வருட்டுமாங்குது. வவுசி வந்து வாசல்ல நின்னுக்கிட்டு வருட்டுமா போவுட்டுமாங்குது’’
“அஞ்சி உருவா பச்ச நோட்ட கண்ல பாக்கறதுக்குள்ள குண்டியில சீக்கட்டிக்கிது’’ ‘‘தவுசு நாடகத்துல வர்றபேரண்டச்சி வேசமாட்டம் எம்பொண்டாட்டியோட அக்காக்காரி நல்லாப் பெருஞ்சாதிப் பொம்பள. கரும்புக்காட்டுக்கு நெருப்பு வச்சமாதிரி நெறம். தண்ணியக் கழுவி நெவுலப் பூமியிலப் பொதைக்கிற ரகம்’’
‘‘ ஆர்ரா புண்டவாயா உனுக்கென்றா கேடுகாலம்? வவுத்துக்கு சோறு திங்கிறியே, உனக்கு அறுவு இல்ல? நெனவு இல்ல? தாயோட ஒண்ணுடா இந்த கேனச்சி, இவள வந்து இந்நேரத்துக்கு கூப்டுறியே ங்கோயா உன்ன என்னான்னுடாப் பெத்தா? ஈனப்பானங் கெட்டத் தாயோலி! தம்பி எந்திரிச்சிக்கிட்டுத் தாளம்போட்டா கல்லு மேல வெச்சி நைநைன்னு கொட்றது. இல்ல காராம்முள்ள வெச்சி தேய்க்கிறது?’’
‘‘நெருப்பூரு நாவமரைக்கி சீருக்கு போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி சுடுகாட்டுல. மவ மூஞ்சியப்பாக்கக்கூட ரொணமில்ல. ஆவுசந்தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம். நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்? தாயப் பழிச்சமா? தண்ணிய தடுத்தமா? ஏழுய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு, மொண்டி, மொடம் இப்படி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக் கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறு பண்டிவேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக் கண்ணுச் சாமி!’’
_ இவ்வாறு தொகுப்பெங்கும் ஹரிகிருஷ்ணன் முன்வைக்கின்ற சொல்லாடல்கள் கொங்கு மண்டலத்தின் வால் முனையான சேலம் ஏர்வாடி வட்டார வழக்கைத் தோண்டித் தோண்டி நமக்குத் தருகிறது. இவ்வழக்கு பல சமயங்களில், எங்க ஊர் ஆயா ஒருத்தி காரை தூர்ந்த திண்ணையில் கால் நீட்டியமர்ந்து இழந்த தன் வாழ்வின் எச்சங்களை வெற்றிலையாய் உரலில் இடித்துச் சவைக்கிற மாதிரியும், அவளே, காணாத தன் சனஞ்சாதியைக் கண்டு விடும்போது ‘‘இப்புடியெல்லாம் ஆயிப்போச்சே சாமீ...’’ என்று உரத்த குரலெடுத்து ஒப்பாரி வைப்பது போன்றும் பிரம்மைகளை எனக்குத் தருகின்றன.
ஹரிகிருஷ்ணனின் மொழி எனக்க மிக நெருக்கமாக நான் உணர்ந்த மொழி. என் மண்ணின் மொழி. பெயருக்கு முன்னால் ஒரு அடையாளம் போல ஊர்ப் பெயரையும் சுமந்து திரியும் நான் பெருநகரத்து இரைச்சலில், நெரிசலில் என்னை அன்னியமாய் உணர்ந்த சந்தர்ப்பங்கள் தான் அனேகம். இக் கதைகளின் வழியே என் வேர்களை நான் எட்டநின்று தரிசித்த திருப்திகொண்டேன். ஆனால் வேறொருவிதத்தில் இக்கதைகள் என் குற்ற உணர்ச்சிகளைத் திருகித் தூண்டிவிடுகின்றன. மற்றொரு விதத்தில் பெருமிதமும் கொள்ள வைக்கின்றன.
நாட்டார் வழக்கை கதை மொழியாகக் கொண்டு ஒரு சிலர்தான் வெற்றி பெற்றுள்ளனர். கி. ராஜாநாராயணன் அதற்கொரு சிறந்த உதாரணம். ஆனால் இத் தொகுப்பிலுள்ள கதைகளைப் போன்ற உள்ளடக்கம் கொண்டவற்றை கி.ரா., பாலியல் கதைகளென்றே தனியாக அடையாளப்படுத்துகிறார். ஹரி ‘‘என் படைப்புலகமே இவை தான்’’ என்று முன் வைக்கிறார். இதற்கொரு துணிச்சல் தேவைப்படுகிறது.
வாழ்வில் எதிர் கொள்ளும் குரூரங்களின் போதும், அவற்றைப் பதிவு செய்கிறபோதும், பிறிதொருவர் வழியே அவற்றை வாசக அனுபவமாக உணரும் தருணங்களிலும் நம் மனதின் சமநிலை குலைந்து தகர்ந்து விடுகிறது. நாயி வாயிச் சீல’ வாசிப்பனுபவம் எனக்கு அதைத் தந்தது. இந்தத் திக்கத்த சனத்துடன் நானும் ஒருவனாகக் கரைந்து போனபோது நிம்மதியாக உணர்ந்தேன்.
ஒவ்வொருவர் உலகமும் தனித்தனியானது. விசித்ரமானது. அவ்வகையில் கூத்துக்கலையை ஏற்றுக்கொண்ட விளிம்பு நிலைப் பிரஜைகளின் உலகம் அசாதாரணமானது. நம்மால் உன்னதம் என்று கொண்டாடப்படுகின்ற யாவும் அங்கே அர்த்தமிழந்து போகின்றன. அவர்களுடைய கனவுகள் எல்லாம் நமக்கு அன்னியமாகவும் நம்முடைய எதிர்பார்ப்புகளெல்லாம் அவர்களுக்கு சாதாரணமானவையாகவும் இருப்பது கண்கூடு. இந்த இடைவெளி நீளமானது. இதைக் குறைக்கவல்ல அதிசயம் ஒரு போதும் நிகழ்ந்துவிடாது. இதுதான் நம்முடைய இயலாமை.
ஹரிகிருஷ்ணனின் கதைகளில் சமகால சிறுகதைக் கூறுகள் எதுவும் இல்லை. அகமன சஞ்சாரமில்லை. பக்கம் பக்கமான விவரணைகள், வலிந்து திணிக்கின்ற பாலியல் சித்தரிப்புகள் இல்லை. இக்காரணங்களினாலேயே இவை தனித்துவம் பெறுகின்றன. இதே காரணங்களுக்காக நம்முடைய இலக்கிய மேதைமைகள் இவற்றைப் புறக்கணிக்கின்ற சந்தர்ப்பங்களையும் உருவாக்கித் தருகிறார் ஹரி.
இக்கதைகளின் நெடுந்தடமெங்கும் குருதியும் வியர்வையுங் கலந்த நறுமணம் கமழ்கிறது. வழக்கொழிந்த வசவுச் சொற்கள் கூத்துங் கும்மாளமுமாய் கொடியேறிப் படபடக்கின்றன. இதுகாறும் அழகியலோடு சித்தரிப்பைப் பெற்ற திருநங்கையரின் வாழ்வு அசலான முறையில் காட்சிப்பட்டுள்ளது. காலச்சூழலில் தமிழ்ச் சிறுகதையுலகம் தவிர்த்தும் தவறவும் விட்ட நாட்டார் தன்மைகள் மீண்டும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஹரிகிருஷ்ணன் புதுவிதமான எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார். கூத்துக்கலைஞர்களிடமிருந்து பெற்று அவர் தமிழுக்குத் தர நிறைய இருக்கிறது என்பது நம்பிக்கையளிக்கிறது.

1 comment:

  1. இன்றிரவுக்குள் படித்து விடு எனத் தூண்டும் அருமையான விமர்சனப் பகிர்வு. நன்றி.

    ReplyDelete