Thursday, March 28, 2013

மகேந்திரன் உருவாக்கிய மௌனம்


மகேந்திரனை இன்றளவும் நினைத்துப் பார்க்கத் தக்க நல்ல விளைவுகள் சிலவற்றை அவர் தமிழ் சினிமாவிற்குள் நிகழ்த்திக் காட்டியிருப்பது என்னை இந்தத் தொடரில் அவருடைய Ôசினிமாவும் நானும்Õ புத்தகம் குறித்த அபிப்ராயங்களை எழுதத் தூண்டியது. மகேந்திரனுக்கு சற்று முன்னர் தமிழில் பாரதிராஜாவின் வருகை சில நல்ல விளைவுகளை உருவாக்கியிருந்ததை ஒப்புக் கொள்ள வேண்டும்.  புதுமைகள் எல்லாமும் நீர்க்குமிழ்களைப் போல ஒருநொடியில் உருவாகிக் கலைந்து போவன அல்ல. காலம் தான் எது புதுமை என்பதைத் தீர்மானிக்கிறது.  சினிமாவைப் போன்ற கலை வடிவங்களில் நேற்றைக்கான புதுமைகளை, நாளைக்கு கடந்து செல்லும் தருணங்கள் வாய்த்தபடி இருக்க வேண்டும். அவ்வாறு சம்பவிக்கிற போது மட்டுமே கலை வடிவம் எதுவாயினும் உயிர்ப்புடன் இருக்க முடியும். மகேந்திரன் இவ்வாறு சிலவற்றை அனாயசமாகக் கடந்து வந்தவர். அவரால் தமிழ் சினிமா சில அங்குலங்களேனும் நகர்ந்திருக்கிறது.
 பாரதிராஜா ஒரு ஆரவாரமான தெற்கத்தி கிராமத்தை தமிழ்த்திரையில் காட்சிப்படுத்தினார்.  குறிப்பிட்ட சமூகம் மொழி கலாச்சாரக் கூறுகள், விதவிதமான மானுடரூபங்கள், முரண்கள், நேசம், காதல் என தனது பிந்தைய படங்களில் இன வரைவியல் ஒன்றை காட்சி மொழியில் எழுதிக்காட்டும் நுட்பம் அவருக்கு கைகூடி வந்தது. அவரைப் போன்ற ஒருவர் செய்யவே கூடாத தவறுகள் சிலவற்றையும் பின்னாட்களில் அவர் செய்தார். அது இன்னொரு பக்கம்.
 மகேந்திரனின் கிராமங்களில் நமக்குத் திகட்டுகிற மாதிரி மண்வாசனை வீசக்காணோம். அவர் தம் படைப்புகளில் ஏதாவதொரு சமூகத்தை மையப்படுத்துகிற கதைக்களங்களையும் அமைப்பதில்லை. (சாசனம் உள்ளிட்ட சில படங்கள் விதிவிலக்கு) எப்படி யோசித்தாலும் எனக்கு மகேந்திரன்  ஒரு பெரிய  மௌனியாகவே புலப்படுகிறார். திரையில் அவர் உருவாக்கும் மௌனம் அசாத்தியமானது. காட்சி தரும்  ஆழ்ந்த நிசப்தத்தில் கதாபாத்திரங்களை உடல்மொழியால் பார்வையாளர்களுடன் உரையாட வைக்கிறார். இளையராஜாவின் வாத்தியங்கள் கூட அவருடன் சேர்ந்து ஒரு வினோதமௌனத்தைக் கடைப்பிடித்தது வியக்கத்தக்க விஷயம். தமிழ் சினிமாவில் சம்பவித்த இந்த மௌனம் தான், முக்கியத்துவமானது. ஸ்ரீதர், பாலசந்தர் போன்றவர்களையும் இதற்கு முன் உதாரணங்களாக சொல்ல முடியும் என்றாலும் மகேந்திரன் உருவாக்கிய விசேஷமான மௌனத்தை  நாம் வியந்துதான் சுட்ட முடியும்.  முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள், ஜானி, பூட்டாத பூட்டுகள், கைகொடுக்கும் கை என்று  நிறைய உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.  இந்த மௌனம்தான் பாலுமகேந்திரா, மணிரத்னம் என வேறுவேறு தருணங்களில் தமிழ் சினிமாவில்  நீட்சி கண்டது.
 ஒரு காலத்தில் வாத்தியங்கள் இசைக்காத, வசனங்களற்ற காட்சிகளில் பார்வையாளர்கள் உடனடியாக எதிர்வினையாற்றுவார்கள்.  உய்ய்... என்ற விசில் ஒளிகள் கிளம்பும், கெட்ட வார்த்தைகள் நாராசமாக வெளியேறும்.  மகேந்திரனின் காட்சிமொழிதான் முதல் முதலாக அவனைப் போன்ற சகிப்புத் தன்மையற்ற பார்வையாளனை மௌனத்தை அங்கீகரிக்கத் தயார் செய்தது. இங்கிருந்துதான் மகேந்திரன் என்னும் படைப்பாளியை நாம் உரசிப் பார்க்க வேண்டும்.  குறிப்பிட்ட அந்த விசேஷமான மௌனத்தை திரைமொழியில்  பரீட்சார்த்தம் செய்து பார்க்க மகேந்திரன் கடந்து வந்திருக்கிற தொலைவும், கொடுத்திருக்கிற விலையும் அதிகம்.
 மகேந்திரன் எம்.ஜி.ஆரின் கண்டுபிடிப்பு. அவரால் திரைத்துறைக்கு அழைக்கப்பட்டு பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் பயிற்சி பெற்றவர். நான் சிறு வயதில் விரும்பிப் பார்த்த பல ஜனரஞ்சகப் படங்கள்  மகேந்திரனால் எழுதப்பட்டவை என்பதைப் பின்னாளில் அறிந்தபோது ஆச்சரியம் கொண்டேன். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் தந்த மகேந்திரனா, இதையெல்லாம் எழுதியது என்றும் திகைத்துப் போயிருக்கிறேன். தங்கப் பதக்கம், நிறைகுடம், மோகம் முப்பது வருஷம், ஆடு புலி ஆட்டம், பகலில் ஒரு இரவு, கங்கா  இப்படிப் பல படங்கள். வாழ்க்கை குறித்த கவலைகள் ஏதுமின்றி சுதந்திரமாகத் திரிந்த காலத்தில் விமர்சனப் பார்வை துளியும் இல்லாமல் நான் பார்த்து அனுபவித்த படங்கள் இவை. இவற்றையும் வெறும் பொழுதுபோக்குப் படங்கள் என முத்திரையிட்டுப் புறக்கணித்து விட இயலாத அளவிற்கு ஒவ்வொன்றும் சில விசேஷ அம்சங்கள் கொண்டவையாக இருந்ததையும் நினைத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த அனுபவங்களைக் குறித்து மகேந்திரன் இப்படி எழுதுகிறார்.  ÔÔபடிக்கிற காலத்தில் தமிழ் சினிமாவில் நான் கண்டு வெறுத்த குறைகளையே, இப்போது நானும் செய்து ஜெயித்துக் கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வு என்னை சவுக்கால் அடித்துக் கொண்டேயிருந்தது. துக்ளக் பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்த நான் தமிழ்ப்படங்களை எப்படியெல்லாம் விமர்சித்திருக்கிறேன்? நானா இப்போது அதே தவறுகளைச் செய்கிறேன்?ÕÕ
இதுபோன்ற சுயவிமர்சனங்களிலிருந்துதான் மகேந்திரன் இந்தப் புத்தகத்தை உருவாக்குகிறார். அவருடைய ஆளுமையில் என்னை வெகுவாகக் கவர்ந்த  அம்சம்  அவர் இலக்கியங்களைப் படமாக்கிய விதம். குறிப்பாக இலக்கியப் படைப்பொன்றை எவ்வித நெருடலும் இன்றி அவர் தன் சுயவிருப்பத்திற்கு மாற்றி திரைக்கதையாக்கும் வித்தை. உமா சந்திரனின் முள்ளும் மலரும் நாவலில் இருந்து அவர் இந்த உத்தியைக் கையாளத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து புதுமைப்பித்தனின் சிற்றன்னை சிறுகதை, சிவசங்கரியின் நண்டு, பொன்னீலனின் உறவுகள், இப்படி சில நாவல்கள்; கடைசியாக கந்தர்வனின் சாசனம் சிறுகதை. இலக்கியங்களைப் படமாக்குவதற்கான உந்துதலை அவர் சத்யஜித்ரேயிடம்  இருந்து  பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன். ரே இயக்கிய புகழ் பெற்ற திரைப்படங்களான பதேர் பாஞ்சாலி, அபராஜிதா, அபுசன்சார் மூன்றும் வங்கமொழி எழுத்தாளர் பிபூதிபூஷன் எழுதிய நாவல்களை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதையாக்கப்பட்டவை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
உமாசந்திரனின் முள்ளும் மலரும் நாவலை வாசித்துக் கொண்டிருந்தபோது காளி கதாபாத்திரத்தின் கை முறிந்து போகும் அத்தியாயத்துடன் மேற்கொண்டு வாசிக்காமல் நாவலை மூடி வைத்துவிட்டதாக மகேந்திரன் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ளலாம்.  முள்ளும் மலரும் நாவலை வாசித்தவர்களும், முள்ளும் மலரும் படம் பார்த்தவர்களும் நம்மில் இருக்கிறார்கள். அந்த நாவல் வெகுஜனதளத்தோடு நின்றுபோன ஒரு பிரதி.  அது தீவிரவாசகர்களை வந்து அடையவே இல்லை. இரண்டையுமே  அணுகிய  ஒரு சிலர் உண்டு.  மகேந்திரன் பல விஷயங்¢களை இவ்வாறு பரீட்சார்த்தம் செய்து பார்த்திருப்பதை இரண்டையுமே அணுகியவர்கள் அறிந்திருக்கக்கூடும். ஒரு வாசகனாக திருப்தியோ, அதிருப்தியோ கொண்ட மனம் பார்வையாளனாக  மிகுந்த திருப்தியை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்  அதுதான் கதையை செதுக்கி செதுக்கி காட்சிமொழியாக்கிய மகேந்திரனின் ஆளுமை.
 பலநூறு பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை வாசித்துக் கொண்டிருக்கும்போது 50 பக்கத்திலேயே ஒரு இயக்குனருக்குத் தேவைப்படும் முக்கிய அம்சம் கிடைத்துவிடும். அது போதும் திரைக்கதைக்கு... என்று சொல்லும் மகேந்திரனை நம்மில் பலரும் வியந்து பார்க்க வாய்ப்பிருக்கிறது.
புதுமைப்பித்தனின் சிற்றன்னையை மகேந்திரன் கையாண்ட  விதத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வாசித்த அந்தக் கதையை ÔÔஅப்போதே தூக்கிப் போட்டு விட்டேன் ஆனால் மனதிலிருந்து அல்லÕÕ  என்று சொல்லுமிடத்தில் இருந்து  நாம் உதிரிப் பூக்கள் என்னும்  உலகத்தரத்திற்கு  நிகரான ஒரு தமிழ்த்திரைப்பட உருவாக்கத்தை அசைபோட்டுப் பார்க்க வேண்டும்.  ÔÔகுழந்தைகள் ராஜா, குஞ்சு இருவரையும் நான் மனதால் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவர்கள் எனது அருகிலேயே எப்போதும் இருந்தார்கள்ÕÕ என்று தொடர்ந்து சொல்கிறார் மகேந்திரன். எப்படி சார் முடியும் உங்களால்...  அந்தக் குழந்தைகள் தானே உதிரிப்பூக்கள்?  என்று நாம் அவரை திருப்பிக் கேட்கலாம்.
 சிற்றன்னை கதையில் குழந்தைகளின் தாய் இறந்துவிட்டாள் என்ற செய்தியை மேலும் வளர்த்து அவள்  எப்படி இறந்தாள் என்பது மட்டுமின்றி அவளின்  தங்கை,  தந்தை,  என உபகதாபாத்திரங்களை சிருஷ்டித்தது மட்டுமே மகேந்திரன்  உருவாக்கிய திரைக்கதையின் சிறப்பு அல்ல.  சிற்றன்னையில் சித்தரிப்புப் பெற்ற கல்லூரிப் பேராசிரியரான  சுந்தர வடிவேலு என்னும் நேர்மையான கதாபாத்திரத்தை எதிர்மறையாக உருமாற்றியதுதான்  திரைக்கதையில்  நிகழ்த்திய  உச்சபட்ச செயல்பாடு. இதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும்.
மகேந்திரன் ஏற்கெனவே வரையப்பட்ட சித்திரத்தின் ஒரு பக்கத்தை கலைத்து அதை வேறொரு புதிய சித்திரமாக மாற்றுகிறார். ஏற்கெனவே இருந்த சித்திரத்தை வரைந்தவர் தமிழ் இலக்கிய உலகின் ஒரு குறியீடாக மதிக்கப்பட்டவர். புதுமைப்பித்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்த மாற்றத்திற்கு சம்மதித்திருப்பாரா  என்றெல்லாம்  கேள்விகள்  எழுப்ப இயலாத அளவிற்கு கால ஓட்டத்தில் நெடுந்தூரம் கடந்து வந்தாயிற்று. கிட்டத்தட்ட உதிரிப்பூக்களும் கூட இன்றைக்கு தமிழ் சினிமாவின் ஒரு குறியீடாக மாறிவிட்டது.
 ÔÔமுள்ளும் மலரும் படப்பிடிப்பு முடிந்தபிறகு மூடி வைத்த இடத்திலிருந்து உமா சந்திரனின் நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.  அதிர்ச்சியாக இருந்ததுÕÕ என்கிறார்  இந்நூலின் ஒரு இடத்தில் மகேந்திரன். ஆக அவர் வாசித்தவரைக்குமான நாவலை கணிசமான அளவிற்கு மாற்றியும், நிறைய சேர்த்தும், திரைக்கதையாக்கியது புலப்படுகிறது. நான் படம் பார்த்துவிட்டு நாவலையும் வாசித்தவன் என்கிற முறையில் மகேந்திரனின் கவர்ந்து  கொள்ளும் திறனை, காட்சி ஊடகத்திற்கேற்ப வளைத்து, நௌ¤த்து நீக்கிச் சேர்க்கிற உத்திகளை எண்ணி வியக்கத்தான் முடிகிறது.
 மகேந்திரனின் இந்தப் புத்தகம் ஒரு கலைஞனின் தன் வரலாறாகவும் சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதையைப் போலவும் அமைந்திருக்கிறது. துக்ளக் இதழில் மகேந்திரன் பணியாற்றிய சந்தர்ப்பமொன்றில் ஜிமிஜிஙிமிஜிஷி என்கிற ஆங்கில மாத இதழில்  யிளிபிழிகீகிசீழிணி என்ற ஹாலிவுட் நடிகர்  போலீஸ்  உடையில் துப்பாக்கி ஏந்தி குதிரையில் உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்க்கிறார். அந்த நடிகரின் ஒரு கண் கருப்புபட்டையால் மூடப்பட்டிருக்கிறது. அந்த யிளிபிழிகீகிசீழிணி தான் மகேந்திரன் 1970களில் உருவாக்கிய புகழ் பெற்ற கதாபாத்திரமான எஸ்.பி.சௌத்ரிக்கு (தங்கப்பதக்கம்) உந்துதல்.
ÔÔஎதிர்பாராத தற்செயல் நிகழ்ச்சிகள்தான்  என் வாழ்வில் நான் பயணிக்கும் பாதையை தீர்மானித்திருக்கின்றனÕÕ  என்னும் வரிகளை அதற்குப் பொருத்தமான பல சம்பவங்களைக் கூறி ஒரு சுலோகம் போல  உச்சரிக்கிறார்  மகேந்திரன். ஏற்கெனவே கதை   சொல்லி முடிவாகியிருந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திற்கு புதுமுகங்களைத் தேர்வு செய்யும் பொருட்டு மும்பைக்குச் சென்று கடற்கரையையட்டிய விடுதியில் அறை எடுத்துத்  தங்கிய மகேந்திரன்,  நிறைய புதுமுகங்களைப் பார்த்து சலித்து அன்றைய இரவை சிந்தனையுடன் களிக்க வேண்டியதாகிறது. மறுநாள் அதிகாலை எழுந்து விடுதி ஜன்னல்கதவுகளைத் திறக்கிறார். ஒரு யுவதி  ஜிஸிகிசிரி ஷிஹிமிஜில் கடல் அலைகளின்  ஓரமாய் ஓடுகிற காட்சி அவர் கண்களுக்குப் படுகிறது.ÔÔஇன்று தன் உடல் ஆரோக்கியத்திற்காக இப்படி ஓடுகிற பெண் திருமணத்திற்கு பின் வாழ்க்கை  தரும் நிர்ப்பந்தங்களின் காரணமாக எதற்கெல்லாம் ஓட வேண்டியிருக்கும்?ÕÕ என்று பளீரென ஒரு மின்னல் கீற்று அவர் மனதில் வெட்டுகிறது. நெஞ்சத்தை கிள்ளாதே கதையும் அந்தநேரத்தில் உருவாகிறது.
 ஒளிப்பதிவாளருக்கு உதவியாளராக சுகாசினி வேலை செய்து கொண்டிருந்தபோதுதான் அவரை நடிகையாக மகேந்திரனால் பார்க்க முடிந்திருக்கிறது. அதாவது அசோக் குமாருக்கு உதவியாளராக இருந்த சுகாசினியைத் தான் அவர் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் நாயகியாக அறிமுகம் செய்கிறார். இவ்வாறு அவருடைய திரைவாழ்வில் நிகழ்ந்த பல வினோதமான சம்பவங்களை இந்நூல் நெடுகிலும் அவர் சொல்லிப் பார்க்கிறார்.  வணிக இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில்,  ÔÔஇந்த டூயட் பாடல்களை தூக்கி எறிந்தாலே சினிமாவில் நல்ல மாற்றம் வரும்ÕÕ என்கிறார். பாடல்காட்சிகளை அவர் மிகையின்றி நேர்த்தியாகப் படமாக்கியுள்ள விதத்தை நாம் இந்த இடத்தில் அசை போட்டுப் பார்க்கிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக மகேந்திரன் உதவி இயக்குனர்களுக்கு சொல்லும் ஒரு ஆலோசனை என்னை ரொம்பவும் சிந்திக்க வைத்தது. ÔÔஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். பசியில்லாமல் சென்று வாய்ப்புக் கேளுங்கள். அது ஆரோக்கியமாக இருக்கும். தயக்கமோ, கூச்சமோ இருக்காது. வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் சோர்ந்து போகமாட்டீர்கள் இன்னொருவரைத் தேடி கம்பீரமாகச் செல்வீர்கள்ÕÕ வாழ்க்கையைப் பணயம் வைத்து சினிமாவில் போராடும் இளைஞர்கள் இந்த வரிகளை மனதில் இருத்திக் கொள்ளலாம்.
 மகேந்திரனை ஒரு விரிவான நேர்காணல் எடுக்கத்தான் நான் திட்டமிட்டிருந்தேன். அதற்கான அவகாசம் இல்லாமல் நாட்கள் கடந்து கொண்டே இருந்தன. எனவே இத்தொடரில் எழுதி அந்த மனக்குறையை சமன் செய்து கொண்டேன்.
¥ பொன்னியின் செல்வனை படமாக்கத் தமிழில் எவ்வளவோ முயற்சிகள் நடந்து முடியாமல் போனது. எம்ஜிஆருக்காக நீங்கள் எழுதிய பொன்னியின் செல்வன் திரைக்கதைப் பிரதி  இன்னும் உங்களிடம் உள்ளதா?
¥ பூட்டாத பூட்டுக்கள் தோல்வியடைந்தபோது ÔÔவாழ்வின் அருவருப்பான  பகுதிகளைக் கிளறிப்பார்ப்பது கலைஞனின் செயல் அல்லÕÕ என்று புரிந்து கொண்டதாக  சொல்லியிருக்கிறீர்கள். இதில் எந்தளவிற்கு நியாயம் இருக்கிறது?
¥ குறைமாத குழந்தையாய் ஏழு மாதத்தில் பிறந்த உங்களைத் தன்  அடிவயிற்று கதகதப்பில் காப்பாற்றிய டாக்டர் சாராம்மாவின் புகைப்படத்தை தேடிக் கொண்டிருந்தீர்களே, கிடைத்ததா?
 ¥ ஒரு திரைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். நுட்பமான படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவிற்கு மாற்று   அடையாளத்தை உருவாக்கிய உங்களால் இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து ஏன் கடைசிவரை மீள முடியவில்லை?
இது போன்ற சில எளிய கேள்விகள் என்னிடம் மீந்து இருக்கின்றன. மகேந்திரன் என் இருதயத்திற்கு  மிக மிக நெருக்கமானவர். எப்போது வேண்டுமானாலும் நான்  அவரைப் பார்க்கலாம். மகேந்திரனின் உபசரிக்கும் பண்பும், உரையாடும் தோரணைகளும் (அவருடைய ஓவியத்திறன் உட்பட) விசேஷமாக குறிப்பிட்டு சொல்லத்தக்கவை. இப்போது வாய்ப்பில்லை என்றாலும் இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த கம்பீரத்தைக் குறித்தும் கொஞ்சம் எழுத வேண்டும்.

4 comments:

  1. தங்களின் அறிமுகம் :

    Visit : http://geethappriyan.blogspot.in/2014/01/blog-post_28.html

    நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை
    http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete
  3. amazing article, one of best post i found on internet. If anyone looking for high quality instagram promotion services to Buy Instagram Followers Paypal and Paytm.

    ReplyDelete