Sunday, March 22, 2009

நானும் கதைகளும் - நன்றி கனவு

மனதின் அடிப்பரப்பில் பாசி போல் படர்ந்து இன்று இறுகிப் பாறையாகி விட்ட பால்யத்தின் நிழல்களே என் எழுத்து. ஒரு கையளவு இடத்திலிருந்து ஊற்றெடுக்கிற காவிரியைப் போல எனக்கான எழுத்தை அரைக்கால் பருவத்திலிருந்தே நான் அகழ்ந்தெடுக்கிறேன். 6ம் வகுப்பு படிக்கையில் நிழல் என்று கதை எழுதி ஆத்தாவிடம் வாசிக்கத் தந்தது நினைவிலிருக்கிறது. எங்கள் வீட்டுக் கொட்டத்தில் ஒரு பக்கம் இறைச்சி வெந்துகொண்டிருந்த அடுப்பு கொத்து கொத்தாய் புகை கிளப்பிக் கொண்டிருந்தது. அம்மா அகலமானதொரு அம்மியில் கொத்தமல்லி செலவு அரைத்துக் கொண்டிருந்தாள். அரைக்குயர் ரஃப் நோட்டில் இரண்டு காகிதங்களைக் கிழித்து மைப்பேனவில் எழுதிய அந்தக் கதையில் துர்மரணமடைந்த பெண்ணொருத்தியின் நிழல் அவளது பூர்வீக வீட்டின் சுவரில் அழியாது படிந்திருந்ததாய் எழுதியதை இன்று நினைக்கையிலும் மயிர்க்கால் விறைக்கிறது.

அடர்த்தியான வெயில், சிம்னி விளக்கொளி நிலாக் கிரணங்களிலான எந்த வெளிச்சத்திலிருந்தும் கிடைக்கின்ற நிழல்களின் மேல் எனக்கு அளவற்ற ஈர்ப்பு உண்டு. சிம்னி சுடர்விட சுவரில் நீண்டெழும் என் பிம்பங்கள்ளை பலவித பாவனைகள் காட்டி ரசிப்பேன். திண்ணையில் படுத்துறங்குகையில் பௌர்ணமி ஒளியில் நிழலாடும் அந்தி மந்தாரைகளின் பிம்பம் அன்றைய இரவின் சுகானுபவம். அர்த்த ஜாமத்தில் வந்து அகப்படாமல் தப்பிய திருடனின் நிழலை இன்னும் அப்படியே மனச்சிலேட்டில் பதிந்து வைத்திருக்கிறேன். இறந்துவிட்ட என் ஆத்தாவின் நிழல் இன்னும் என்னைத் தொடர்ந்து வந்து துன்புறுத்துவதாகவே உணர்கிறேன். நிழல்களுடனான என் உறவைப் பாட்டி சைத்தான்களின் சகவாசம் என்பாள்.

‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ என்று அழியாச்சுடரில் மௌனி கேட்பார். நம் மூதாதையரின் நிழல் படிந்த பூர்வீக வீடு பல தலைமுறைகளின் தொகுப்பாகி வாழ்வின் பொருளை நமக்கு உணர்த்துகிறது.

பழநியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒரு இடுக்கில் சிக்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம் என் கீரனூர். ஒரு காலத்தில் இது முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்ததாகக் கேள்வி. சண்முகநதி சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்த காலம் என் விடலைப் பருவமாயிருந்தது. ஒரு நீர்வாழ் ஜீவராசியைப்போல ஆறுகளும் குளங்களும் கிணறுகளுமே அப்போதைய என் வாழ்விடங்களாக இருந்தன. அவற்றிலொரு மீனைப்போல நான் நீந்திக்கொண்டிருந்தேன். என் உடன் பயின்ற இருவர் பைத் கானம் இசைக்கும் கோஷ்டியினர். என்னை மூத்த கருத்தமுத்து என்னும் வாட்டசாட்டமான தடியன் எல்லோருடன் நானும் காடு கழனிகளில் சுற்றி இலந்தை, நாவல் பறித்து, கரும்புகளடித்து, ஒடக்கான் அடித்து அலைந்து திரிவேன். மனதில் துக்கத்தின் சாயைகள் துளியும் கவியாத பருவம்.

அச்சம் என்பதற்ற நாட்கள். கால்களில் செருப்புமிருக்காது. நேரத்துக்கு உணவுமெடுத்துக்கொண்டதில்லை. பள்ளிப்பாடங்கள் குறித்த லட்சியமில்லை. இவ்வாறு நான் ஊர் சுற்றியாகிப் போனது எங்கள் குடும்ப கலாச்சாரத்துக்கு ஒவ்வாதது. நுனி நாக்குப் பேச்சும் கலையாத ஆடைகளும் ஐவேளைத் தொழுகையுமாயிருந்த எங்க பசங்களிடம் எனக்கு ஒரு ஒட்டுதல் இருந்ததில்லை. மீன்காரத் தெரு சகவாசம் கூடாதென்னும் கட்டுப்பாடு வீட்டிலிருந்தது. அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் பைத் கானங்கள் என்னை அங்கு கொண்டுபோய் நிறுத்தும். பறத்தெருவுக்குள் நுழையத் தடையிருக்கும். நையாண்டி மேளமும் நாதஸ்வரமும் கரகாட்டமும் எனக்கு அங்கிருந்துதான் கிடைக்கும். விசேஷ இரவுகளில் தீப்பந்தங்களும் கியாஸ் விளக்குகளும் சூழ அந்த கருப்பு ஜனங்கள் சீர் செனத்தி எடுத்துச் செல்லும் அந்தப் பாமர அழகை ரசித்துக் கொண்டே பின்தொடர்வேன். அவ்வாறு விடியாத இரவுகள் பல உண்டு.

எங்கள் தெருவில் நிலவிய அமைதியும் தூய்மையும் ஒழுங்கமைவும் எவ்வித சலனத்தையும் தராதபோது பிற தெருக்களின் வீச்சம் என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அந்தத் தெருக்களில் தான் எனக்கு மாறுபட்ட மனிதர்கள் வாய்த்தனர். அழுத்தமான சம்பவங்கள் கிடைத்தன.

ஏற்றத்தாழ்வுகள் என் சமூகத்தில் இயல்பாகவே நிலவி வந்த விஷயம். பொருளாதாரத்தில் பலமுள்ளவனுக்கு எப்போதும் தனி மரியாதை இருந்தது. சிறு பிராயத்திலிருந்து இதை நான் மிகுந்த துக்கத்தினூடாக மனப்பதிவு செய்து வந்திருக்கிறேன். வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் என்று தனி வம்சமாக அடையாளப்படுத்துகிற அளவு ஒரு சந்ததியினர் ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு சிதைந்த குடும்பங்களின் அவலம் பதிந்த களையிழந்த வீடுகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்தப் பிரதேசத்தைக் கடந்து செல்கையில் ஒரு வித சூன்யம் நம்மையுமறியாமல் நம் மேல் கவிந்து துன்புறுத்தும். கொடிய கரங்கள் நீண்டுவந்து நம்மை இருள் குகைக்குள் தள்ளும்.

இதைப் போன்ற பிராயத்துச் சித்திரங்கள் மனப்பரப்பில் தங்கி பிறகு ஒரு கணத்தில் தொடர்ந்த கிளறல்களின் மூலமாக மேலெழும்பி வந்து இனம்புரியாக் கிலேசங்களை மன நெருக்கடிகளை புரியாத ஆனந்தத்தை உருவாக்கியுள்ளன. அத்தாவின் தாயார் குஞ்சம்மாள் என்கிற சஹர்பான் பீவி என் பாட்டி. ஆயம்மா என்றே அழைப்பேன். அம்மாவுடன் அவர் சண்டையிட்ட நேரம்போக மீதி நேரங்களில் எனக்கு அகண்டதொரு இஸ்லாமிய கலாச்சார வாழ்வியல் அடையாளங்களையும் விசித்திரமான குரான் கதைகளையும் சொல்லி பிறிதொரு உலகத்தை அறிமுகப்படுத்தியவர்.

ஆதம்மையும் ஹவ்வாவையும் உலகின் முதல் ஆண் பெண் என்றும், ஆதம்மை இறைவன் மண்ணாலும், ஹவ்வாவை ஆதம்மின் விலா எலும்பாலும் படைத்தான் என்றும் முதல் கதையைச் சொன்னபோதே என்னை கண்கள் விரிய வைத்தவள். எப்படி ஒருவரை மண்ணாலும் விலா எலும்பாலும் படைக்க முடியும் என்கிற என் பிள்ளைப் பருவத்து எதிர்வினைகளையும் சந்தித்து சகிப்புத் தன்மையுடன் தொடர்ந்து என்னிடம் உரையாடியவள். ஆதம்மும் ஹவ்வாவும் இறைவனின் எச்சரிக்கையை மீறி விசித்திரக் கனியைத் தின்றதுதான் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூல காரணம். இது சைத்தானின் சதி என்றும் கேட்டபோது மெல்ல கதை உலகம் விஸ்தீரமடைந்தது. சைத்தானை மிகப்பெரிய வில்லனாக நான் மனக்கண்ணில் பார்த்து மிரண்டேன். விசித்திரக் கனிகள் கொண்ட அந்த விருட்ச மரம் இந்த பூமித் தாழ்வாரத்தில் எங்கேனும் வேர்பரப்பி நிற்கிறதா என்று நான் அலைந்து தேடிச் சலித்திருக்கிறேன்.

அன்பானவர்களே! அகில உலகத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்ற ஒப்பற்ற இறைவனுக்கு உருவமில்லை என்னும் கருத்தே எனக்கு அப்போது வித்தியாசமாகவும் வியப்பாகவும் நம்பமுடியாததாகவும் பட்டது. பிறகு இறைவன் தூணிலிமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என்கிற நம்பிக்கையையும் அவ்வாறே நான் பரிசீலித்துப் பார்க்க வேண்டியிருந்தது. இறைவனால் 1,24,000 தூதர்கள் நபிமார்கள் இந்த பூமிக்கு இறக்கப்பட்டார்கள் - என்றாள் ஆயம்மா வெற்றிலை குதப்பிய வாயுடன். நான் அவர்கள் வானுலகத்திலிருந்து குதித்திருப்பார்களா ஏணிப்படிகளமைத்து இறங்கியிருப்பார்களா என்று கற்பனை செய்தேன். குரானில் 25 நபிமார்களைத் தானே சொன்னாய் என்று குறுக்குக் கேள்வியும் கேட்டு வைத்தேன். ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக 23 வருட காலகட்டத்தில் குரானின் வசனங்கள் வெளிப்பட்டதை அவள் சொல்லி ஓய்ந்தாள். ஜிப்ரீல் ஒளியால் படைக்கப்பட்டவர். மனிதக் கண்களுக்குப் புலப்பட மாட்டார் என்றும் அறிந்து கொண்டேன்.

ஹ¨கபாயில் 36000 இறக்கைகளுடன் 50000 ஆண்டுகள் பறந்த போதும் ஏழுவானங்களுக்கு அப்பால் மரகதத்தினால் உருவாக்கப்பட்டு நீரில் மிதக்கும் உலகத்தில் போடப்பட்டிருக்கும் இறைவனின் சிம்மாசனமாகிய அர்ஷ்ஷின் ஒரு தூணின் நுனியைக்கூட தொட முடிந்ததில்லை; உயிரினங்களின் தோற்றத்தில் நடமாடும் தீப்பிழம்பால் படைக்கப்பட்ட ஜின்களின் கூட்டம் கண்ணுக்குத் தெரியாத வாயுவாகவும் மாறவல்லது; தொட்டிலில் தூங்கும் குழந்தையை தானாக சிரித்து தானாக அழவைக்கும் சொர்க்கத்தின் கண்ணழகிகள் ஹ§ருள்ஈன்கள், கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமாகிய வெண்ணிறத்திலான மின்னல் வேக வாகனம் புராக்கிலமர்ந்து நபிகள் நாயகம் விண்ணுலகப் பயணம் சென்று மிஃராஜ் இரவில் இறைவனுடன் உரையாடியது; மீனின் வயிற்றுக்குள் வாழ்ந்த யூனுஸ் நபி கடலைப் பிளந்து பாதையமைத்து பகைவர்களிடமிருந்து தப்பிய மூஸா நபி - அற்புதங்கள் நிகழ்த்த அவரிடமிருக்கும் அஸா என்னும் கைத்தடி; மரணத்தறுவாயில் உயிரைப் பறிக்க வரும் இஸ்ராயீல்; பறவைகளிடமும் ஏன் எறும்புகளிடமும்கூடப் பேசும் ஆற்றல் பெற்ற சுலைமான் நபி, இறந்தவர்களை உயிர்ப்பிக்க வல்ல சக்தியுடைய ஈஸாநபி, சந்தூக்கு என்னும் மரணப் பல்லக்குகள், இறந்தபிறகு கேள்வி விசாரணை கிளப்ப வரும் முன்கர் - நக்கிர்; உலகம் அழிந்தபிறகு இறந்துபோன எல்லா மனிதர்களுக்கும் உயிரூட்டி எழுப்புகின்ற மஹ்சர் மைதானம் நரகத்தின் மீது வாளைவிட கூர்மையாகவும் ரோமத்தைவிட மெலிதாகவும் போடப்பட்டுள்ள சிராத்துல் முஸ்தகீம் பாலம் இபுராகீம் நபியின் பிறப்பால் தன் ஆட்சிக்கு முடிவு காலமெனக் கருதி அப்போது பிறந்திருந்த 77000 குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்ட பாபல் நகர மன்னன் நம்ரூத், மரணச் செய்தியை அறிவிக்கும் மலக்குல் மௌத் குருவி, உண்மைகளைக் கண்டறிந்து சொல்ல சுலைமான் நபி தூது விட்ட ஹ§த்ஹ§த் பறவை, களிமண் உருண்டைகளை வீசியெறிந்து யானைப்படையை விரட்டிய அபாபீஸ் பறவைக் கூட்டம், கழுதை வாகனத்தில் அமர்ந்து வலதுகண் இல்லாமல் உலக அழிவின் அறிகுறியாய் வர இருக்கும் தஜ்ஜால் - இன்னுமின்னும் ஆயம்மாள் காட்டிய உலகம் மாந்த்ரீக யதார்த்தங்களால் நிரம்பிவழிந்த மகா சமுத்திரம்.

இவற்றையெல்லாம் என் கதைகளில் நாவல்களில் நான் வலிந்து திணித்ததில்லை. இவ்வகை மாந்த்ரீக யதார்த்தங்களை என் படைப்பில் தேவைப்படும் இடத்தில் அத்தியாவசியம் கருதி மட்டுமே பயன்படுத்துகிறேன். என் கதைக் களங்கள் எதுவும் ஏழு வானங்களுக்கு அப்பால் இல்லை. நாற்றமும் கவுச்சியும் புழுவும் பூச்சிகளும் சூழ்ந்த தெருக்களில் இரண்டு கைகளையும் கால்களையும் தவிர எவ்வித பலமுமற்ற - அமானுஷ்ய சக்தியற்ற எளிய மனிதர்கள் என் கதை மாந்தர்கள். இவர்களுக்கு பசியும் காமமும் காழ்ப்பும் வக்கிரமும் பொறாமையும் பொச்சரிப்பும் வன்மமும் உண்டு. பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் தான் ஊரை விட்டுப் பிரிந்தபோது எப்படி ஊர் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கும் என்று எதிர்பார்த்து வரும் அப்பாவியும், பிரியமாய் வளர்த்த ஆட்டுக்குட்டியை ரம்ஜான் துணி வாங்குவதற்காக விட்டுத்தர மறுக்கும் சிறுமியும் பண்டிகைக்கு விற்றுவிடலாமென்று ஒரு பட்டி செம்மறி ஆடுகளை ஓட்டிவந்து, ஒட்டகத்தை அறுத்து ஓர் விருந்து தரும் முதலாளியிடம் ஏமாந்து விடும் கசாப்பு வியாபாரியும், பிரியாணிக்காக ஏங்கும் கூடலிங்கமும், ஹஜ் பயணத்தின் கிரியைகளில் ஒன்றான சைத்தான் மீது கல்லெறியும் சம்பவத்தில் லட்சோபலட்சமாய் கூடிய கூட்டத்தின் நெருக்கடி தாளாமல் தடுமாறி வீழ்ந்து உதையும் மிதியும் படும் ஹாஜியும், மதமாற்ற வலையில் சிக்கியிருந்து விளிம்பில் தப்பித்துச் செல்லும் சுடலை மாதாரியும், ஜவுளிக்கடையில் கணக்குப் பிள்ளையாய் இருந்து கம்ப்யூட்டரின் வருகையால் வேலை இழக்கும் ஹஸன் முகம்மது மாமுவும், கணவனால் தலாக் என்னும் விவாகரத்து பெற்று கைக்குழந்தையுடன் தத்தளிக்கிற பெண்ணும்,

விசா வாங்கித் தருவதாக ஏஜண்டால் ஏமாற்றப்பட்டு துபாய் சிறையில் காலம் கழிக்கிற இளைஞனும், நோன்புக்கஞ்சி கிடைக்குமென்று கருதி இறுதியில் அது கிடைக்கப்பெறாத மாரியம்மாளும், ஒவ்வொரு பள்ளி வாசலிலும் வெள்ளிக்கிழமையன்று கையேந்தும் பெண்மணியும், வீட்டு வேலைக்கென்று போய் முதலாளி மகனிடம் கற்பைப் பறிதரும் ஆமினாவும், மேட்டுக்குடியினர் வாழும் பங்களாத் தெருமீது தீராத வன்மம் கொண்டலைகிற நைனாவும், பெருமாள் கோயில் பூசாரிக்கு மர்மஸ்தானத்திலுள்ள மயிர் நீக்கும் ஏழை நாவிதன் துருத்தியும், அழகானவரென்றும் அறிவானவரென்றும் வர்ணிக்கப்படும் தங்களின் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் உருவத்தை தரிசித்துவிடத் துடிக்கும் கலைமனம் கொண்ட கருத்தலெப்பையும், புத்திசுவாதீனமுள்ளவனெனத் தெரிந்தும் அவனையே மணாளனாக ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்படும் ருக்கையாவும், ராவுத்தர் - லெப்பை எனப்பிரிந்து உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளும் மனிதர்களும், மனைவியுடன் பிணங்கிப் பிரிந்து ஜவ்வு மிட்டாய் விற்று முக்கு முறுங்கை மரத்தடியில் காலங்கழிக்கும் ஹமீதுவும், அஷ்டாவதனம் புரியத் தகுதியுள்ளவனே ஆயினும் சாம்பான் மடத்தில் கஞ்சா புகைத்தவாறு ஞான லோகத்தில் சஞ்சரிக்கிற பாவாவும், பாலியல் வறட்சியால் ஓரினப் புணர்ச்சிக்குத் தள்ளப்பட்ட மாந்தர்களும் இன்னுமின்னும் இஸ்லாம் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுமே என் கதை மாந்தர்கள். கதைகளையோ, புதினத்தையோ அனுபவத்தின் சாரமின்றி மொழியின் வலிமையாலோ புனைவின் திறத்தாலோ தூக்கி நிறுத்த முடியாது. எப்படைப்பும் அது ரத்தமும் சதையுமான வாழ்வின் பதிவாக மனித அவலத்தை உன்னதத்தை வாசகனுக்குப் பரிமாற வேண்டுமென்பதில் தளராத நம்பிக்கை கொண்டவன்.

(திருப்பூரில் நடைபெற்ற சாகித்ய அகாதமியின் தமிழ் நவீன இலக்கியம் கருத்தரங்கக் கட்டுரை. பிற கட்டுரையாளர்கள்: சிற்பி, புவியரசு, சி.ஆர்.ரவீந்திரன், இந்திரா, தமிழ்நாடன், சுப்ரபாரதிமணியன்)

No comments:

Post a Comment