Sunday, March 22, 2009

வாழ்க்கையைப் பிழிந்து சொட்டும் கதைகள் - நன்றி கவிதாசரண்

(கீரனூர் ஜாகிர்ராஜாவின் "பெருநகரக் குறிப்புகள்” நூலை முன்வைத்து) ஹரணி

காய்ந்து கிடக்கிற நதியில் எல்லாமும் கிடக்கின்றன. அதுகுறித்து நதியிடம் எந்தவிதமான கருத்தோ கோபமோ ஆனந்தமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீர் நிறைந்து கரைமேவி ஓடுகையில் நதியின் அழகு சொல் லொண்ணா எண்ணக்குவியலை மனத்துள் விதைக்கிறது. சாதாரண மனிதன் குளிக்க இறங்கி ஆனந்தம் கொள் கிறான். நீச்சல் தெரிந்த குழந்தைகள் ஆசையில் அலுப்பு தீருமட்டும் நதியில் விளையாடி களைக்கின்றன களிப்பில். நீச்சல் தெரியாதவன் நதியைப் பார்க்கையில் பயத்துடன் எதிர்கொள்கிறான். கவிஞனுக்கு நதி ஆயிரம் சொல்லித் தருகிறது. பல்லாயிரம் படைப்புகளில் நதி நுரைத்துப் பொங்கி ஓடிக்கொண்டுதானிருக்கிறது. இப்படிப்பட்ட நதி காய்ந்து கிடக்கும் காலங்களில் பார்க்க வலி பொங்குகிறது. எல்லாமும் அதில் கொட்டப்படும் போது ஆத்திரம் வருகிறது. இதற்கும் நதி எதுவும் சொல்வதில்லை. இப்படித்தான் வாழ்க்கை எல்லோர் வாழ்விலும் நதியைப்போல வறண்டும் நிறைந்தும் கிடக்கிறது. வாழ்கிற நிலைப் பாட்டில்தான் எல்லாமும் சமன்படுகிறது.

அவரவர் தன்மைக்கேற்ப அல்லது அமைந்துவிடுகிற சூழலுக்கு ஏற்ப இந்த நிலைப்பாட்டை சமன் செய்கிற அல்லது சமன் செய்துவிட்டதான திருப்தியில் வாழ்க்கை முடிந்துபோகிறது. இங்கே இந்த நிலைப்பாட்டிற்காக காயங்களும் மகிழ்ச்சியும் உருவாக்கம் கொள்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் மதமும் இனமும் ஜாதியும் பேதங்களும் வேராக நிற்கின்றன. இது சாதாரண மனிதனை அவஸ்தைப்படுத்துகிறது. படைப் பாளனுக்குச் சவாலாக அமைகிறது. தன்னுடைய சமன்பாட் டிற்காகவும் தன்னைப்போன்றோரின் சமன்பாட்டிற்காகவும் இந்தச் சவாலை ஏற்கும் கட்டாயத்தை அவன் பிறந்து வளர்ந்த சமூகமே அவனுக்கு விதிக்கும்போது காயங்களால் தாக்கப்பட்டும் அவமானங்களால் உணர் வூட்டப்பட்டும் வலிகளின் வெப்பத்தில் உருகுகிறான். படைப்பாளனாகக் களத்தில் நிற்பவன் இவ்வெப்பத்தைப் படைப்புக்குள் பரப்பி அதை எல்லோருக்கு மான வலியாக உணர்த்தி நிற்கிறான். ஜாகிர்ராஜாவும் இப்படித்தான்.

எப்போதும் ஏராளமான காயங்களையும் உணர்வுச் சிதைவுகளையும் அவமானங்களையும் சந்தித்த வடு மாறாமல் தொடர்வதை மனம் கசிவோடு ஒவ்வொரு கதையிலும் உணர முடிகிறது. எனவே புனைகதையின் ஒரு முக்கியக் கூறாக இருக்கும் சிறுகதை புனையப்படும் கதை எனும் பொருண்மைக்கு அழுத்தமான பொருளாக வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புனைதல் எனும் நிலையில் "பெருநகரக் குறிப்புகள்” தொகுப்பை வாசித்து முடிக்கையில் மனம் நனைகிறது. ஒரு சமூகம் என்பது அதில் அடங்கியுள்ள மக்கள் கூட்டத்தை வைத்து அடையாளப்படுத்துவது அதன் பொருளாக அறியப்படுவது. எனவே அதன் பொறுப்பு என்பது பொதுமையானது, சமமானது, நலம் பயக்குவது என்பதைத் தாண்டி, காக்க வேண்டிய சமூகமே நசுக்கிச் சிதைப்பதைச் சிறுவயது முதல் கவனித்து அதை மறக்க முடியாமல் மன்னிக்கவும் தயாராக இல்லாமல் கடுமையாக விமர்சித்து ஒவ்வொரு கதையிலும் நெஞ்சு நிமிர்த்தும் ஜாகிர் எனும் படைப்பாளனின் தெளிவு அதிசயமானது, ஆச்சர்யமானது, பாராட்டுக்கு மிக உரியதும்கூட. ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் சொல்லும் விதமும் உணர்த்தும் விதமும் மொழிநடையும் எதார்த்தமும் அழிக்கமுடியாத அழுத்தம் கொண்டு லபக்கென்று விழுங்குவதுபோல வாசிக்கிற மனசுக்குள் போகிறது. இருப்பினும் சில கதைகளில் சிறுவயது நிகழ்வுகளில்கூட இடையிடையே இன்றைய வயது ஜாகிர்ராஜா கருத்துச் சொல்வது யதார்த்தம் மீறியது என்றாலும் அது பட்டுக் காய்த்துப்போன வடுவின் உறுத்தல் எனும் நிலையில் ஏற்றுக்கொள்ளவே தோன்றுகிறது.

இத்தொகுப்பு மட்டுமல்ல ஜாகிர்ராஜாவின் கதைகள் முழுக்கவே ஒரு சிறப்பான அம்சமாகப் பார்ப்பது அவற்றில் எந்தத் திணிப்பும் இல்லை. வலிகளுக்கான அறிவுரை மருந்தும் இல்லை. தனக்குத் தன்னுடைய பிறந்த சமூகம் விதித்ததை, அதனால் பட்ட இன்னல்களை சிறுவயது முதலே மனத்தில் அழிக்கமுடியாத காய பிம்பமாக உள் வாங்கிப் பின்பருவத்தில் படைப்பு மனமாக உருக்கொண்ட நிலையில் படைப்பில் அதனைக் கொட்டுகிறார். படிப்போர்க்கு நீதி சொல்வதல்ல இக்கதைகளின் நோக்கம். ஒரு சமூக வலியை காட்சிப்படுத்துவதில் இவை சிறப்புறுகின்றன. மேலும் சமூகத்தை எதிர்ப்பது அல்லது போர்க்கொடி உயர்த்துவதும் நோக்கமல்ல. ஆனால் தான் பட்ட வலியை தன் சாதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பட்ட அவமானங்களையும் படும் வேதனை களையும் மாற்றி சமூகம் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை உறுத்தலோடு உணர்த்துவது தன்னுடைய படைப்பு நோக்கமாக ஜாகிர் கொண்டிருக்கிறார் என்றே உணர முடிகிறது. இஸ்லாமியச் சமூகத்தின் சடங்குகளையும் மரபுகளையும் தேவைப்படும் சூழல்களில் கதைகளில் இயல்பாகச் சொல்லும் போக்கில் அவர் கொண்டிருக்கும் பற்றும் தெளிவுறத் தெரிகிறது. ஒரு தாய் அல்லது தந்தை தவறு செய்யும்போது அதை வயதில் குறைந்த மகன் சுட்டுவிரல் நீட்டிக் குற்றத்தை உணர்த்தும்போது அதைத் தாங்கிக்கொள்ள இயலாத மனோபாவத்தைத் தவிர்த்து சமூகம் ஜாகிரின் படைப்பு மனத்தைக் கருதவேண்டும் என்றே தோன்றுகிறது. குற்றங்களைக் கண்டிக்கும் உரிமை ஒரு மகனுக்கு உண்டு என்பதைக் கட்டாயம் ஏற்க வேண்டும். இதைத்தான் ஜாகீர் சிறுகதைகள் உணர்த்துகின்றன.

எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்று வெகு காலமாய் சொல்லிக்கொண்டே வருவதை மரபாகக் கொண்டிருந்தாலும் ஒரு எழுத்து என்பது நேர்மையான வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். ஒரு நல்ல மனிதனாக, நேயமுள்ள குடும்பத்திற்குப் பொறுப்பானவனாக இருந்து விட்டால் எழுத்து தேவையில்லை. அப்படி வாழ்ந்தால் போதுமானதே. இந்தப் போதாமையால்தான் அவரவர் சமூகத் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் எழுத்தைக் கைக்கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு படைப் பாளனுக்கும் நேர்கிறது. எனவேதான் எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்பதை சொல்லித்தீர வேண்டிய நிர்ப்பந்தம் நிகழ்கிறது. ஜாகிரைப் பொறுத்தளவில் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு துளியையும் கூர்ந்து கவனித்து அதைப் படைப்புக்குள் பதிவுசெய்து கொண்டே போவதை இத்தொகுப்பின் சிறுகதைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் காட்டுகிறது. வாழ்வதையே படைப்பாகக் காட்டி வாழ்கிறார்.

காதலின் நுட்பமும் நேயமும் உணரப்படாமை, மனித மதிப்பீடுகள் அலட்சியப்படுத்தப்படுதல், மனம் சிதைத்தல், பசியின் தாகம், நட்பின் அழுத்தம், உறவின் மேன்மை, வாழ்வதற்காக அலைக்கழிக்கபடும் வாழ்க்கை, சடங்குகளின் பெயரால் சாதிகளின் பேதத்தால் மிருகமெனப் பாயும் மேலாதிக்கங்கள், அதற்கான போராடுதல்கள், அவற்றின் தோல்வியும் அவமானங்களும், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் நிகழும் மன வெடிப்புகள் போன்றவை இவரது கதைகளின் கருக்களங்களாக நுரைத்துக் கிடக்கின்றன. சக்கிலி மத்தை, (மந்தைய எங்களுக்குன்னு ஒதுக்கிக் குடுக்கற வரைக்கும் நாங்க யாரும் எடுப்பு கக்கூஸ் அள்றதுக்கு வர மாட்டோம்), மழை - மகனைப் புரிந்துகொள்ளாத தந்தை (....அங்கேயே சென்ட்ரல் தண்டவாளத்திலேயோ கூவத்திலோ விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளலாம். உன் தீதார்கூட எங்களுக்குத் தேவையில்லை..... நல்லவர்களுக்கொல்லாம் சீக்கிரமாய் மௌத் வந்துவிடுகிறது. வேணும் ஸலாம். நாயன் துணை), மனத்தை உருக்கும் வெம்மை (....மனதுக்குள் சுடர்விட்ட வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை அவன் தன் பிஞ்சு வாயால் ஊதி ஊதி அணைக் கிறான்.

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனுக்கு இந்த சிறைச்சாலையின் நெடிய சுவர்களுக்குள்ளிருந்து நான் கூறும் வாழ்த்துகள் கேட்கவா போகிறது), சுவடுகள் வாழ்வின் அவலத்தை மிக நெருப்போடு உணர்த்தி வலிக்கச் செய்கிறது (....நெடுஞ்சாலைகளும் எல்லாவிதமான சீதோஷ்ணங்களும், யாசகக் குரல்களும், புறக்கணிப்பும் அத்தாவுக்கு ரத்தத்தில் கலந்தவை.) அறைச்சுவர்கள் சிரிக்கின்றன, (....அவர்களுக்கு உடமையான பெட்டிகளிலிருந்து மேலும் பல ஜாதிப் பாம்புகள் எட்டிப் பார்க்கின்றன....சற்றுமுன் நிகழ்ந்த வாதங்கள் மறந்து கண்களுக்கு முன்னால் பானம் நிறைந்த குவளை தோன்றவும் குளிர்ந்துபோனான்), அடையாளம் - பசியின் மகத்துவத்தை, மேன்மையை அடையாளப்படுத்துவது (....பள்ளி வாசல் வீதியில் அவள் கிழக்கும் மேற்குமாய் அலைந்ததைக் கண்டு ராவுத்தப் பசங்கள் சிரியாய்ச் சிரிப்பார்கள்...... நம்மளப் போல ஏழைக்கி பட்டினி கெடக்குற நாளெல்லாம் நோம்புதா) இவையெல்லாம் தொகுப்பின் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய கதைகள். வாழ்வை ஒருமுறைக்கு நூறு முறையாகப் பரிசீலித்து வாழ வேண்டிய தேவையை உணர்த்துபவை.

தேர்ந்த எழுத்தாளுமையை ஒவ்வொரு கதையும் வெளிக்காட்டுகிறது. தடையற்ற பிரவாகம் சொற்களினூடாக பாம்பு செல்வதுபோல அமைந்திருப்பது படிப்பதற்கான ஆர்வத்தை குறைக்காது காக்கிறது. என் வாழ்க்கையும் அதன் மீது கொட்டப்பட்ட சமூகத்தின் ஆதிக்கக் குப்பையும் அதனைப் பற்றவைத்து நெருப்புக் காட்டிய சாதியப் பிரிவும் தவிர வேறு வேண்டியதில்லை என்பதான ஜாகிரின் எழுத்து அதன் மூலம் ஒரு பொதுமையான சமூக அவலத்தை, அசிங்கத்தை உரித்துக் காட்டுவது இக்கதைகளின் சாகா வெற்றியாகக் கருதிக்கொள்ளலாம். கதைகளின் மொழிநடை தேர்ந்த நடையாக உள்ளது. அவற்றிலும் எளிமையும் இயல்பும் அதேசமயம் செழுமையான அழுத்தமும் கொண்டு மைந்துள்ளது. சிலவற்றைச் சான்று காட்டலாம்.

நான் இங்கு கொட்டும் பனியிலும், மழையிலும் வம்பாடு பட்டு தொகை தொகையாக அனுப்பினால் தின்று தெறித்து ஊரைச் சுற்றுவது உன் வழக்கமாகிவிட்டது. மானம், ரோஷம் என்பது மருந்துக்குக்கூட இல்லாத மழுங்கைதான் நீ.

....தணிக்கவியலாத வெம்மை... அதன் இறுக்கமான பிடி மலைப் பாம்பின் நெரிப்பென எலும்புகளை முறிக்கிறது.

யாசகக் குரல். அதுவும் அக்காவின் சோகம் ததும்பிய யாசகக் குரல் எத்தனை துன்பமானது. ஒரு நாளேனும் அத்தா இதை உணர்ந்ததில்லை. புவ்வாவின் ஆல்பம் குட்டை மர பீரோவுக்குள் இருக்கிறது. ஆல்பத்தில் கணக்கற்ற கன்னிகள் நீந்துகிறார்கள். அது பெருமூச்சுகளின் சமுத்திரம் என மாறுகிறது... விதவிதமான பெண்களின் நீண்டகால கனாக்கள் ஆழத்தின் ஆழத்துள் பாறைப் பாசியாய் படர்ந்து கிடக்கிறது. அபிலாஷைகளின் இழைகளால் நெருக்கி நெய்யப்பட்டது அவர்களின் ரூபங்கள்.

வாழ்வின் உண்மைகளுக்குள் நீந்திக்கொண்டிருக்கிற படைப்பாளனின் உணர்வுபூர்வமான இத்தொகுப்பும் படைப்பாளனும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இத்தொகுப்பை வாசித்துவிட்டு எதுவும் பேசலாம். இடமிருக்கிறது. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஏதாவதொரு சிறுகதையில் வாழ்வதற்கான சாத்தியங்களை இத்தொகுப்பு கொண்டிருப்பதை இத்தருணத்தில் சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

“பெருநகரக் குறிப்புகள்”, சிறுகதைத் தொகுப்பு, கீரனூர் ஜாகிர்ராஜா, விலை ரூ.75/-, வெளியீடு: அனன்யா, 8/37, பி.ஏ.ஒய். நகர், குழந்தை இயேசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613 005.

No comments:

Post a Comment