Wednesday, December 24, 2008

கருத்த லெப்பை - அருவத்தின் உருவம் - ஹரன் பிரசன்னா


கருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.

சிறுவயதில் நாங்கள் சேரன்மகாதேவியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு குறுக்கு வழியுண்டு. அந்த வழியில், கேஸ் சிலிண்டரின் வடிவத்தில் கல்லாலான ஒரு பீப்பாய் நின்றுகொண்டிருக்கும். அதன் குறுகிய கழுத்தில் கற்களைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் நண்பர்கள். அதனுள்ளே ஒரு பூதம் காத்திருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். அதன் உருவம் பற்றிப் பல கதைகள் நிலவி வந்தன. சில நண்பர்கள் அந்த பீப்பாயின் குறுகிய கழுத்திற்குள் நெருங்கிப் பார்த்து, அதன் உருவத்தைப் பற்றிய கதையை அளந்தார்கள். நான் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு கற்களைப் போட்டுவிட்டு ஓடுவேன். ஒருதடவைகூட அதன் உள்ளே இருக்கும் பூதத்தின் உருவத்தைப் பார்த்ததில்லை. நிலவொளியில் வெட்ட வெளியில் ஒண்ணுக்கிருக்கும்போது அப்பூதம் பற்றிய பல்வேறு கற்பனைகள் எழும். அதன் உருவத்தைக் கண்டுவிட்ட சக வீர நண்பர்கள் மீது பொறாமையும், என் மீது எரிச்சலும் வரும். ‘சின்ன புள்ளைங்க ஆசையா வாட்சும் மோதிரமு செஞ்சு தரக் கேட்டாக்க, நீ சைத்தானச் செய்யச் சொன்னவனாச்சேடா’ என்கிற ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்படுகிறது கருத்த லெப்பையின் கதாபாத்திரம். ராதிம்மா நாயகத்தின் கம்பீரத்தைச் சொல்லுமிடங்களில் கற்பனையில் அலையும் கருத்த லெப்பை தானாக ஒரு உருவத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவ்வுருவத்தை களிமண் சிலையாக்குகிறான் கருத்த லெப்பை.

கருத்த லெப்பையின் அக்கா ருக்கையா வயது அதிகமுள்ள, சாத்தான் வாசம் செய்யும் வீட்டிலிருக்கும் பதருதீனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். பதருதீன் சரியாவான் என நினைக்கும் ருக்கையாவின் வாழ்க்கை நிர்மூலமாகிறது. தன்னை அடைய நினைக்கும், பதருதீனின் அண்ணன் ஈசாக்கைப் புறந்தள்ளிவிட்டு, மனநிலை சரியில்லாத கனவோடு வெளியேறுகிறாள் ருக்கையா.

அஹம்மது கனி, எந்த ராவுத்தர் ஒரு லெப்பைக்கு ஓட்டு போட்டது என்று தீவிரமாக ஆராய்கிறார். பன்னிரண்டு வயதுப்பையன் அன்சாரியை முழுக்கப் பார்த்து முறுக்கேறிப்போகிறார். நூர்லெப்பைக்கு நெஞ்சுவலி வரும்போது பழிவாங்குகிறார்.

கருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் கதை, அதன் வழியாக பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறது. கருத்த லெப்பையின் உலகம் விசித்திரமானது. அவன் சிறு வயதுமுதலே சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல வளர்கிறான். உண்மையில் அவன் சரியானவனாக இருந்தாலும், அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கற்பனைகள் எல்லாமே அவனுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிரானவையாக இருக்கின்றன. லெப்பைகளுக்கு சரியான மரியாதையும் சம உரிமையும் தராத ராவுத்தர்களையும், ராவுத்தர்களுக்கு இணங்கிப்போகும் லெப்பைகளையும் கேள்வி கேட்கிறான். நாயகத்தின் உருவத்தை உருவாக்குகிறான். பாவாவுடன் சேர்ந்து கஞ்சா உண்கிறான். போர்ட்டரால் ஓரின வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறான். உருவம் செய்த விஷயம் வெளியில் தெரிய கல்லெறி பட்டு உயிரை விடுகிறான். கருத்த லெப்பையின் கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாத்திற்குரியவை. ‘மீன்காரத் தெரு’ நாவலில் ஜாகிர் ராஜா முன்வைத்த லெப்பை-ராவுத்தர் விஷயங்கள் இந்நாவலிலும் முக்கியத்துவம் கொள்கின்றன. அதோடு, ஓரினப் புணர்ச்சி, வயதான ஆண் ஒரு சிறுவன் மேல் கொள்ளும் ஓரின ஆசை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜாகிர் ராஜா.

இரண்டு விஷயங்களில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, லெப்பைகளின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்கிறது. ஏற்கெனவே ‘மீன்காரத் தெரு’ நாவலில் லெப்பைகள் பற்றி எழுதிவிட்டாலும், அவற்றில் சொல்லப்படாத விஷயங்களை எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா. இரண்டாவது, உருவம் பற்றிய சிறுவனின் ஆசை விபரீதமாகப் போகும் விஷயத்தை பிரசார தொனியின்றி சொன்னது. உருவத்தை நினைத்தது மார்க்க ரீதியாகத் தவறு என்பதால் கருத்தலெப்பை இறந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்துவிடுகிறோம். ஜாகிர் ராஜாவும் கருத்தலெப்பைக்கு அதே முடிவையே தருகிறார். இதன்மூலம் நாவலை சமநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.

மிகச் சிறிய விவரணைகளில் கதாபாத்திரங்களை நிறுவிவிடுவதில் ஜாகிர் ராஜாவின் திறமை வெளிப்படுகிறது. சாத்தான் உருவத்தில் மிட்டாய் செய்யச் சொல்லிக் கருத்த லெப்பை கேட்கும்போது, கருத்த லெப்பையின் ஒட்டுமொத்த உருவம் அங்கே கிடைத்துவிடுகிறது. ராதிம்மா நாயகத்தைப் பற்றிய விவரணைகளைச் சொல்லத் தொடங்கும்போது, இரண்டே வரிகளில் கருத்த லெப்பையின் உருவ ஆசையை விவரித்துவிடுகிறார். நாவலின் மையம் மிக அழகாக வெளிப்படும் அத்தியாயம் அது. ஈசாக் ருக்கியாவை அடைய நினைத்து, அவள் தன் கணவன் பதருதீனோடு வெளியேறும் காட்சியும் சில வரிகளில் முடிந்துவிடுகிறது. தன்னைவிட்டுவிட்டு வேறொருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் தன் கணவன் இறந்ததும், அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் முஸ்லிம் பெண்; அவன் இறந்ததும் அவனோடு தொடுப்பு வைத்திருக்கும் பெண் தன் முலையை அறுத்து கதறும் காட்சி என இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருந்தாலும், அவற்றின் மூலம் இரண்டு பெண்களின் இருப்பையும் கவனப்படுத்துகிறார். இப்படி நாவல் அழகு கொள்ளும் இடங்கள் ஏராளம்.

சில அழகழகான விவரணைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. பாவாவும் சோமனும் பேசிக்கொள்ளும் காட்சிகள், அம்மா முறுக்கு பிழியும் அழகிற்கு கருத்த லெப்பை நினைக்கும் உவமைகள், ருக்கையா பதருதீனுக்கு உணவு ஊட்டும்போது கொள்ளும் தாய்மையின் பரவசம் என கவித்துவம் கொள்ளும் வரிகளை நாவல் முழுதும் எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா.

‘மீன்காரத் தெரு’ நாவலில் தென்பட்ட அதே குறைகளே இங்கும் சொல்லப்படவேண்டியதாகிறது. அதிகமான பக்கங்களில் எழுதப்படவேண்டிய நாவல், 74 பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய குறை. இதனால் மிகப்பெரிய ஆளுமைகளாக உருவம் பெறவேண்டிய கதாபாத்திரங்கள் சட்டெனத் தோன்றி, சட்டென மறைகின்றன. கருத்த லெப்பை நாயகத்துக்கான உருவத் தேடலில் ஆர்வம் கொள்ளும் முகாந்திரங்கள் சரியாக விளக்கப்படவில்லை. மிக அழகாக ராதியம்மா சொல்லும்போது கற்பனை செய்தாலும், அக்கற்பனை அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இல்லை. ஒரு சிறுவனின் இயல்பு அது என்றால், அது எப்படி உருவம் செய்யும் அளவிற்கு தீவிரம் பெறுகிறது என்பதைப் பற்றிய செய்திகள் இல்லை.

அஹம்மது கனி, பாவா, மாமு, சின்னப்பேச்சி, அபுபக்கர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள், எண்ணெய் கலந்த நீரில் தோன்றி மறையும் வர்ணங்கள் போலத் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களே அவர்களை நாம் நினைத்துக்கொள்ள வைக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் விளக்கியிருந்தால், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் வளர்ந்து, மிகச்சிறப்பான நாவல் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும். இதை அதிக ஆர்வத்திலும் அவசரத்திலும் ஜாகிர் ராஜா செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

லெப்பைகளின் வாழ்க்கையில் புரையோடிப்போயிருக்கும் சில முக்கியமான விவாதத்திற்குரிய விஷயங்களை இந்நாவல் முன்வைக்கிறது என்கிற வகையில் இது முக்கியமான பதிவாகிறது. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்கிற நிலையில், அதற்கான திறப்புகள் உள்ள நிலையில் அவை சரியாகப் பயன்படுத்தப்படாததால் ஏமாற்றத்தையும் தருகிறது. அதே வேளையில், ஜாகிர் ராஜாவின் பயணத்தில் மிகச்சிறந்த நாவலொன்று வரும் நாள் அதிகமில்லை என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது. நன்றி: http://nizhalkal.blogspot.com

1 comment:

  1. கருத்தலெப்பை என்ற பெயர் ஏனோ வயது முதிர்ந்த பெரியவரின் பிம்பத்தையே எனக்குக் காட்டுகிறது. நாவலைப் படித்த பிறகும் அந்தப் பிம்பம் மாறவேயில்லை. ஆயினும் எனக்கு நாவல் பிடித்திருந்தது. ஏன் தான் ஜாகிர் பக்கங்களை சுருக்கிவிடுகிறாரோ தெரியவில்லை?

    ReplyDelete