Friday, January 30, 2009

இனிய உதயம் ஜனவரி 2009 நேர்காணல்

ழநி வட்டம், கீரனூரில் பிறந்தவர் ஜாகிர்ராஜா. 1995 முதல் தமிழ் சிறு பத்திரிகைச் சூழலில் தொடர்ந்து சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று பன்முக அடையாளத்துடன் இயங்கி வருகிறார். 'செம்பருத்தி பூத்த வீடு', 'பெருநகர குறிப்புகள்' ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் 'மீன்காரத் தெரு', 'கருத்த லெப்பை' என இரண்டு நாவல்களும் வெளியாகியுள்ளன. 'துருக்கித் தொப்பி' என்னும் அடுத்த நாவல் "அகல்' வெளியீடாக வரவுள்ளது. 'வடக்கே முறி அலிமா' குறுநாவலும் எழுதியுள் ளார். அடுத்து 'பித்னா பஜார்' என்கிற நாவலை எழுதி வருகிறார். சிறந்த நாவலுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில விருதை தொடர்ந்து இரண்டு முறையும், ஏலாதி இலக்கிய விருது, திருப்பூர் நகர கலை இலக்கியப் பரிசும் பெற்றவர்.

இஸ்லாமிய கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைத் துல்லியமாகச் சித்தரித்த இவருடைய 'மீன்காரத் தெரு', 'கருத்த லெப்பை' ஆகிய இரண்டு நாவல்களும் வெளிவந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் விமரிசனங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக 'கருத்த லெப்பை' நாவலின் நாயகன்- நபிகளாருக்கு உருவம் தர நினைத்து செயலில் இறங்குவதாகப் புனையப்பட்டிருப்பது இவரின் வெடிப்பைக் காட்டுகிறது.

இவரது சிறுகதைகள் பல மலையாளத்திலும், 'கருத்த லெப்பை' நாவல் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் இவரின் படைப்புகள் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள தோடு, எம்.பில்., பி.ஹெச்டி., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள் ளன. சென்னையில் இந்திய வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் இவர், மனைவி ராஜி, குழந்தைகள் ஆயிஷா முத்தமிழ், முகமது பாரதியுடன் தஞ்சாவூரில் வசித்து வருகிறார்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழுக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு அதிகம் உண்டு. ஆனால் நவீன யுகம் என்று வருகிறபோது, தமிழ் இஸ்லாம் வாழ்வை எழுத முன்வரும் படைப்பாளி களின் எண்ணிக்கை குறைவே. இதன் காரணம் என்ன?

"1885-களில் சித்தி லெப்பை மரைக்காயரால் எழுதப்பட்ட 'அசன்பே சரித்திரம்' தமிழின் முதல் ஏழு நாவல்களில் இரண்டாவது இடம் பிடிக்கிறது என்பது பழைய சங்கதி. 1870-களில் வந்த இப்ராகிம் சாகிப்பின் 'விக்கிரமாதித்யன் கதை' முதல் வரலாற்று நாவல் என்பதும் இதனுள் அடங்கும். ஆனால் சரியாக ஒன்றரை நூற்றாண்டுக்குமுன் 1858-ல் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்பவர் 'தாமிரப் பட்டணம்' என்றொரு நாவலை அரபுத் தமிழில் எழுதி இருக்கிறார். அரபுத் தமிழ் என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட- எழுதப் படிக்கத் தெரியாத இஸ்லாமியர் கையாண்ட வடிவம். இது தமிழகத்திலும் நடைமுறையில் இருந்ததை நானறிவேன். இன்று இவ்வடிவம் அழிந்து விட்டது. எனில், "பிரதாப முதலியார் சரித்திரம்' அல்ல; மாப்பிள்ளை லெப்பையின் '"தாமிரப் பட்டணம்'தான் தமிழின் முதல் நாவல் என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்! இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியரின் பங்களிப்பை மறைத்தழித்தது போலத்தான் இதுவும்.

நான் மதிக்கின்ற ஜெயமோகன் போன்றவர்கள் தங்களுடைய வலைப்பூவில் இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சய மில்லை என்று எழுதுவது வேதனை அளிக்கிறது. சிறுபான்மை யரில் கிறிஸ்துவர்களுடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியரின் இலக்கியப் பங்களிப்பு கணிசமான அளவு இருந்தே வருகிறது. ஆனால் அவர்களுடைய எழுத்துகளில் ஒரு தயக்கம் இருப்பதை நான் தயங் காமல் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு முன்னோடிகளாக இருப்ப வர்கள்கூட சமகால வாழ்க்கையை எழுதத் தயங்குகின்றனர். துணிந்து கருத்துகளை முன்வைப்பதில் அவர்களுக்குப் பெரும் ஒவ்வாமை இருக்கிறது. இதற்கு தீவிர மத அபிமானம் காரணமாயிருக்கிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் தங்களுடைய மனதில் பட்டதை, ஜாதி சமயம் கடந்து எழுதத் துணிவுள்ளவர்களாகவும், அதே நேரத்தில் உலகில் எந்த இனமும் திட்டமிட்டு ஒடுக்கப்படுமானால் அதை எதிர்க்கிறவர்களாகவும் இருக்க வேண்டுமென விரும்பு கிறேன். இஸ்லாமியர்களிடம் கல்வியை விடவும் கலையை விடவும் வணிகம் பெரியது என்கிற எண்ணம் வலுப்பெற்றிருக்கிறது. இதில் மாற்றம் வேண்டும்.''

இஸ்லாமியப் பெண்கள் எழுத வருவதும், துணிந்து தம் வாழ்வைப் பதிவு செய்யவும் சாத்தியமிருக்கிறதா?

"1938-ல் சித்தி ஜுனைதா பேகம் 'காதலா கடமையா' என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதற்கு உ.வே.சா. மதிப்புரை எழுதியிருக்கிறார். அப்போதே ஜுனைதா பேகம் ஒரு முழுநேர எழுத்தாளர். இந்திய விடுதலைக்கு முந்தைய நிலை இது. ஜுனைதாவுக்குக் கிடைத்த சுதந்திரம் ஏன் மற்ற பெண்களுக்கு மறுக்கப்பட்டது?

'கற்புக் கடம்பூண்ட இத்தெய்வமல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண்டிலமால்'

என்று இளங்கோ மெச்சிய கண்ணகியைப் போலவே பெண்கள் இருக்க வேண்டுமென்று தமிழ்ச் சமூகம் விரும்பியிருக்கிறது. இதில் இஸ்லாம் ஒருபடி அதிகம் ஏறி, பெண்களை வீட்டினுள் முடக்கிவைக்கும் 'கோஷா'வைப் பிரயோகித்திருக்கிறது. பெண்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொண்டிருக்க வேண்டும். ஆண்களுக்குத் தாள் பணிந்து நடக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள். பெண்ணின் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. தங்களுக் கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்து கொள்வதில் சுதந்திரம் வழங்கப்படவில்லை. 1970 வரை தமிழக முஸ்லிம் பெண்களின் நிலை இதுதான். பெண்கள் அந்த காலகட்டத்தில் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்கப்படவில்லை. இந்த நிலையில் யார் எழுத வருவார்?

சல்மா எழுத வந்ததற்குப் பின்னணியில் மனுஷ்யபுத்திரன் இருந்திருக்கிறார். இஸ்லாம் சமூகத்தில் இப்படி எத்தனை ஆண்களால் ஒரு பெண் எழுதுவதற்கு ஆதர்சமாக இருந்துவிட முடியும்? சல்மாவைத் தொடர்ந்து எத்தனை பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள்? எனக்குத் தெரிய எவருமில்லை. இதற்கு வாசிப்பு வறட்சியைக் காரணமாகச் சொல்லலாம். மதரீதியிலான சஞ்சிகை கள் மட்டுமே அவர்களுடைய வாசிப்பு எல்லைக்குள் உலவுகின்றன. அவற்றில் மட்டுமே எழுத அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ் சிறு பத்திரிகைகள் இஸ்லாமிய வீடுகளின் கதவுகளைத் தட்ட வேண்டும். இன்றைக்கு இஸ்லாமியப் பெண்களின் அடிப்படைத் தேவைகள் கல்வியும் உலக அறிவும்தான்.''

மேலும் படிக்க - நக்கீரன் இணையதளத்தில்...

Thursday, January 29, 2009

நன்றி - எஸ். ராமகிருஷ்ணன்.காம்

சிறந்த பத்து தமிழ் புத்தகங்கள் : எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் 2008 விருப்பப் பட்டியல்

1) கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர் ராஜா
2) எரியும் பனிக்காடு - டேனியல்
3) சொல்லில் அடங்காத இசை - இசைக்கட்டுரைகள் - ஷாஜி
4) நார்மன் பெத்யூன் வாழ்க்கை வரலாறு.
5) மார்த்தாஹரி - நாகரத்தினம் கிருஷ்ணனா
6) துங்கபத்திரை- பாவண்ணன்
7) நாடற்றவனின் குறிப்புகள் - கவிதைதொகுப்பு. இளங்கோ
8) நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை - பவா. செல்லத்துரை.
9) சூரனைத்தேடும் ஊர் - ஜனகப்ரியா
10) காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - வி. ராமமூர்த்தி

Thursday, January 22, 2009

துருக்கித் தொப்பி - நாஞ்சில் நாடன் முன்னுரை

துருக்கித் தொப்பி - நாஞ்சில் நாடன் முன்னுரை ( தமிழினி கலை இதழ் - ஜனவரி 2009 இதழில் வெளிவந்தது)

Wednesday, January 21, 2009

ஆழி இதழில் வெளிவந்த நேர்காணல்

ஆழி - 2009 பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்த நேர்காணல்.