Saturday, March 10, 2012

ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் நடத்திய பாராட்டு விழாவின் சில காட்சிகள்

கடந்த இரண்டு மாதங்களில் முன்னர் ஒரு நாள் என் நண்பர் தஞ்சை இனியன் என்னை போனில் தொடர்பு கொண்டு ‘‘தஞ்சையில் நடக்கவுள்ள 3வது புத்தக கண்காட்சி நாள் ஒன்றில் உங்களுக்கு பாராட்டு விழா. ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் ஏற்பாடு’’ என்று சொன்னார். உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்ததைப் போல ‘நான் என்ன எழுதுகிறேன் என்றே என் தஞ்சை நண்பர்களுக்குத் தெரியாது.’ இது தான் உண்மையும்கூட. மேலும் தஞ்சையின் இளம் வணிகர்கள் குழுமியுள்ள ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூருக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அதில் அங்கம் வகிக்கின்ற இரா. செழியன் உள்ளிட்ட நண்பர்களை எனக்கு நீண்ட நாள் பரிச்சயம் உண்டு அவ்வளவுதான். மேலும் வசிக்கின்ற ஊரில் பாராட்டு விழா என்றால் கொஞ்சம் அசூயை தான்.


ஆனால் இனியனோ விடாப்பிடியாக இருந்து விழாவை நடத்திவிட்டார். முக்கியமாக என்னைக் குறித்து (என் படைப்புகளை குறித்துதான்) பேச வேண்டியவர்களை தேர்ந்துக் கொள்ள எனக்கு சுதந்திரமும் வழங்கினார்.
விழாவன்று மாலை பெசன்ட் இல்லத்தில் பெரிய பேனர் எல்லாம் வைத்திருந்தனர். பெசன்ட் இல்லம் எங்களுக்கு தாய் வீடுமாதிரி. இன்றளவும் தஞ்சையில் நடக்கக்கூடிய இலக்கிய விழாக்களுக்கு குறைந்த கட்டணத்துடன் இடமளிக்கக்கூடிய அரங்கம் அது.

என்னுடைய முதல் புத்தக வெளியீட்டு விழாவும் இங்கே தான் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது. தஞ்சை புத்தக காட்சியில் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனாலும் புத்தகங்கள் விற்றன. பாரதி புத்தகாலயத்தில் எனது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கணிசமான அளவு பிரதிகள் விற்றிருந்தன.

விழா அன்று மாலை ‘ஆதாமின்ட மகன் அபு’ மலையாள திரைப்படத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட கிளை சார்பாக களம் திரைப்பட இயக்கம் திரையிட்டது. பார்வையாளர்கள் பொறுமையாக இருந்து அந்தப் படத்தைப் பார்த்தனர்.ரோட்டரி களம் சார்பாக எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கி பொன்னாடை போர்த்தப்பட்டது. பல மேடைகள் பார்த்திருந்தாலும் அன்றைக்கு ஏனோ சற்று கூச்சமாகவே உணர்ந்தேன்.
என்னைப் பாராட்டிப் பேச தமுஎகச மாநில தலைவரும், தமிழின் மிக முக்கியமான சிறுகதையாளரும், எனது அண்ணனுமான ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் வந்திருந்தார்கள். முன்னாள் அமைச்சர் இலக்கிய காவலர் சி.நா.மீ உபயதுல்லா, மகாராஜா ரெடிமேட் ஆசிப் அலி, யோகம் ரியல் எஸ்டேட் இரா. செழியன், என்.எஸ்.பி. விஜயகுமார், இலக்கிய நண்பர்கள் என் துணைவி, குழந்தைகள் உறவினர்கள் கீரனூரில் இருந்து என் பாலிய சினேகிதன் கூடலிங்கம் மற்றும் குடும்பத்தினர் செ.இராசன் (களப்பிரன்) பிம்பம் சாகுல், தமுஎகச தோழர்கள் புலியூர் முருகேசன் கவிஞர் நா. விச்வநாதன், முத்தமிழ் விரும்பி மணிச்சுடர் குப்பு வீரமணி, தஞ்சை அனார்கலி, இறை தாசன் என்று வந்திருந்தவர்களால் அரங்கம் நிரம்பியிருந்தது.


தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளரும், விமர்சகருமான கோவை எஸ். பாலச்சந்திரன், எழுத்தாளர் எஸ். அர்ஷியா, ஆகியோர் வந்திருந்து தங்களுடைய மிகச் சிறந்த உரைகளை பதிவு செய்தனர்.
என்னுடைய குருநாதர் தஞ்சை ப்ரகாஷ் அவர்களின் துணைவியார் மங்கையர்கரசி அவர்கள் வந்து எனக்கு பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தியது மனநெகிழ்வை தந்தது. அண்ணன் ச.த. தனது உரையில் மதச்சார்பற்ற தன்மையில் நின்று என் படைப்புக் குரல் ஒலிப்பதையும் மீன் குகை வாசுகி நாவலில் பெண் கதா பாத்திரங்கள் பிரதானமாக எழுந்து நிற்பதையும் குறிப்பிட்டார். அர்ஷியா எனது எல்லா நாவல்களையும் தொட்டு அதிலுள்ள சிறப்பம்சங்களை பேசினார். பாலச்சந்திரன் தனது உரையில் உலக எழுத்தாளர்கள் பலரையும் மேற்கோள் காட்டினார். அவருடைய பரந்த வாசிப்பு வழியே என் எழுத்துக்களின் முக்கிய கூறுகளை பார்வையாளர்களுக்கு எடுத்து விளம்பினார். இம்மூவருமே என்னுடைய எல்லா எழுத்துக்களையும் வாசித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் வழங்கிய விருதுக்கு பெயர் ‘சாதனை இளைஞர்.’ ஐந்து நாவல்களும் ஐம்பதுக்கும் அதிகமான சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளதை சாதனை என்று வியக்கின்ற நேரத்தில் ‘உறங்குவதற்கு முன் நான் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது’ என்கிற புகழ் பெற்ற வாசகம்ஒரு கணம் என் மனதில் வந்து போனது.