Wednesday, November 26, 2008

நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி இவர்களுடன்


விருது நகர் மாவட்ட தமுஎச சார்பில் சாத்தூரில் 'நாவல் கருத்தரங்கம்' ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, நான் நால்வரும் உரையாற்றினோம். 'நானும் கதைகளும்' என்னும் தலைப்பில் நான் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தைக் குரானில் வரும் மாந்த்ரீக யதார்த்த விஷயங்களு‌டன் இணைத்து ஒரு கட்டுரையாகவே எழுதி வாசித்தேன். விழா தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும் எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், கோணங்கி இவர்களுடன் நீண்ட நேரம் உரையாட சந்தர்ப்பம் வாய்த்தது. சாத்தூர் தோழர்கள் மணிமாறன், லட்சுமி காந்தன் இருவரும் நாங்கள் புறப்படும் போது சாத்தூர் நாட்டுப் பலகாரங்களைப் பொதிந்து தந்து வழியனுப்பி வைத்தனர். 2008-ல் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் சாத்தூர் அனுபவம் நாட்டுப் பலகாரங்களின் சுவையைப் போலவே இனிமையாக இருந்தது.

Thursday, November 13, 2008

'கருத்த லெப்பை' க்கு விருது


நாகை மாவட்ட தமுஎச 6வது மாநாடும் 2007-ஆம் ஆண்டுக்கான மாநில இலக்கியப் பரிசளிப்பு விழாவும் ஏ.ஜே.சி பள்ளி அரங்கில் 18.10.2008 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கடந்த ஆண்டு 'மீன்காரத் தெரு' நாவலுக்காக தமுஎச விருது பெற்றேன். தொடர்ந்து இந்த ஆண்டும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் பெற்றோர் பெருமாயி - குப்பணன் நினைவு மாநில விருது 'கருத்த லெப்பை' நாவலுக்காக எனக்குக் கிடைத்தது. என்னுடன் யூமா வாசுகி, தமிழ்முருகன், வே. பெருமாள்சாமி, ஹரிகிருஷ்ணன் ஆகியோரும் வெவ்வேறு துறை பங்களிப்புக்காக விருது பெற்றனர். நாகை சட்டமன்ற உறுப்பினர் வி. மாரிமுத்து, எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் கலந்துகொண்டனர். கவிஞர் சு. வெங்கடேசன் தலைமையிலான தேர்வுக்குழு 'கருத்த லெப்பை'யைத் தேர்வு செய்தது. போடி மாலன் கருத்த லெப்பை நாவல் குறித்து சிறப்பான உரை ஒன்றை வாசித்தார்.