Wednesday, December 24, 2008

கருத்த லெப்பை - அருவத்தின் உருவம் - ஹரன் பிரசன்னா


கருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.

சிறுவயதில் நாங்கள் சேரன்மகாதேவியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு குறுக்கு வழியுண்டு. அந்த வழியில், கேஸ் சிலிண்டரின் வடிவத்தில் கல்லாலான ஒரு பீப்பாய் நின்றுகொண்டிருக்கும். அதன் குறுகிய கழுத்தில் கற்களைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் நண்பர்கள். அதனுள்ளே ஒரு பூதம் காத்திருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். அதன் உருவம் பற்றிப் பல கதைகள் நிலவி வந்தன. சில நண்பர்கள் அந்த பீப்பாயின் குறுகிய கழுத்திற்குள் நெருங்கிப் பார்த்து, அதன் உருவத்தைப் பற்றிய கதையை அளந்தார்கள். நான் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு கற்களைப் போட்டுவிட்டு ஓடுவேன். ஒருதடவைகூட அதன் உள்ளே இருக்கும் பூதத்தின் உருவத்தைப் பார்த்ததில்லை. நிலவொளியில் வெட்ட வெளியில் ஒண்ணுக்கிருக்கும்போது அப்பூதம் பற்றிய பல்வேறு கற்பனைகள் எழும். அதன் உருவத்தைக் கண்டுவிட்ட சக வீர நண்பர்கள் மீது பொறாமையும், என் மீது எரிச்சலும் வரும். ‘சின்ன புள்ளைங்க ஆசையா வாட்சும் மோதிரமு செஞ்சு தரக் கேட்டாக்க, நீ சைத்தானச் செய்யச் சொன்னவனாச்சேடா’ என்கிற ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்படுகிறது கருத்த லெப்பையின் கதாபாத்திரம். ராதிம்மா நாயகத்தின் கம்பீரத்தைச் சொல்லுமிடங்களில் கற்பனையில் அலையும் கருத்த லெப்பை தானாக ஒரு உருவத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவ்வுருவத்தை களிமண் சிலையாக்குகிறான் கருத்த லெப்பை.

கருத்த லெப்பையின் அக்கா ருக்கையா வயது அதிகமுள்ள, சாத்தான் வாசம் செய்யும் வீட்டிலிருக்கும் பதருதீனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். பதருதீன் சரியாவான் என நினைக்கும் ருக்கையாவின் வாழ்க்கை நிர்மூலமாகிறது. தன்னை அடைய நினைக்கும், பதருதீனின் அண்ணன் ஈசாக்கைப் புறந்தள்ளிவிட்டு, மனநிலை சரியில்லாத கனவோடு வெளியேறுகிறாள் ருக்கையா.

அஹம்மது கனி, எந்த ராவுத்தர் ஒரு லெப்பைக்கு ஓட்டு போட்டது என்று தீவிரமாக ஆராய்கிறார். பன்னிரண்டு வயதுப்பையன் அன்சாரியை முழுக்கப் பார்த்து முறுக்கேறிப்போகிறார். நூர்லெப்பைக்கு நெஞ்சுவலி வரும்போது பழிவாங்குகிறார்.

கருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் கதை, அதன் வழியாக பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறது. கருத்த லெப்பையின் உலகம் விசித்திரமானது. அவன் சிறு வயதுமுதலே சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல வளர்கிறான். உண்மையில் அவன் சரியானவனாக இருந்தாலும், அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கற்பனைகள் எல்லாமே அவனுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிரானவையாக இருக்கின்றன. லெப்பைகளுக்கு சரியான மரியாதையும் சம உரிமையும் தராத ராவுத்தர்களையும், ராவுத்தர்களுக்கு இணங்கிப்போகும் லெப்பைகளையும் கேள்வி கேட்கிறான். நாயகத்தின் உருவத்தை உருவாக்குகிறான். பாவாவுடன் சேர்ந்து கஞ்சா உண்கிறான். போர்ட்டரால் ஓரின வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறான். உருவம் செய்த விஷயம் வெளியில் தெரிய கல்லெறி பட்டு உயிரை விடுகிறான். கருத்த லெப்பையின் கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாத்திற்குரியவை. ‘மீன்காரத் தெரு’ நாவலில் ஜாகிர் ராஜா முன்வைத்த லெப்பை-ராவுத்தர் விஷயங்கள் இந்நாவலிலும் முக்கியத்துவம் கொள்கின்றன. அதோடு, ஓரினப் புணர்ச்சி, வயதான ஆண் ஒரு சிறுவன் மேல் கொள்ளும் ஓரின ஆசை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜாகிர் ராஜா.

இரண்டு விஷயங்களில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, லெப்பைகளின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்கிறது. ஏற்கெனவே ‘மீன்காரத் தெரு’ நாவலில் லெப்பைகள் பற்றி எழுதிவிட்டாலும், அவற்றில் சொல்லப்படாத விஷயங்களை எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா. இரண்டாவது, உருவம் பற்றிய சிறுவனின் ஆசை விபரீதமாகப் போகும் விஷயத்தை பிரசார தொனியின்றி சொன்னது. உருவத்தை நினைத்தது மார்க்க ரீதியாகத் தவறு என்பதால் கருத்தலெப்பை இறந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்துவிடுகிறோம். ஜாகிர் ராஜாவும் கருத்தலெப்பைக்கு அதே முடிவையே தருகிறார். இதன்மூலம் நாவலை சமநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.

மிகச் சிறிய விவரணைகளில் கதாபாத்திரங்களை நிறுவிவிடுவதில் ஜாகிர் ராஜாவின் திறமை வெளிப்படுகிறது. சாத்தான் உருவத்தில் மிட்டாய் செய்யச் சொல்லிக் கருத்த லெப்பை கேட்கும்போது, கருத்த லெப்பையின் ஒட்டுமொத்த உருவம் அங்கே கிடைத்துவிடுகிறது. ராதிம்மா நாயகத்தைப் பற்றிய விவரணைகளைச் சொல்லத் தொடங்கும்போது, இரண்டே வரிகளில் கருத்த லெப்பையின் உருவ ஆசையை விவரித்துவிடுகிறார். நாவலின் மையம் மிக அழகாக வெளிப்படும் அத்தியாயம் அது. ஈசாக் ருக்கியாவை அடைய நினைத்து, அவள் தன் கணவன் பதருதீனோடு வெளியேறும் காட்சியும் சில வரிகளில் முடிந்துவிடுகிறது. தன்னைவிட்டுவிட்டு வேறொருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் தன் கணவன் இறந்ததும், அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் முஸ்லிம் பெண்; அவன் இறந்ததும் அவனோடு தொடுப்பு வைத்திருக்கும் பெண் தன் முலையை அறுத்து கதறும் காட்சி என இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருந்தாலும், அவற்றின் மூலம் இரண்டு பெண்களின் இருப்பையும் கவனப்படுத்துகிறார். இப்படி நாவல் அழகு கொள்ளும் இடங்கள் ஏராளம்.

சில அழகழகான விவரணைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. பாவாவும் சோமனும் பேசிக்கொள்ளும் காட்சிகள், அம்மா முறுக்கு பிழியும் அழகிற்கு கருத்த லெப்பை நினைக்கும் உவமைகள், ருக்கையா பதருதீனுக்கு உணவு ஊட்டும்போது கொள்ளும் தாய்மையின் பரவசம் என கவித்துவம் கொள்ளும் வரிகளை நாவல் முழுதும் எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா.

‘மீன்காரத் தெரு’ நாவலில் தென்பட்ட அதே குறைகளே இங்கும் சொல்லப்படவேண்டியதாகிறது. அதிகமான பக்கங்களில் எழுதப்படவேண்டிய நாவல், 74 பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய குறை. இதனால் மிகப்பெரிய ஆளுமைகளாக உருவம் பெறவேண்டிய கதாபாத்திரங்கள் சட்டெனத் தோன்றி, சட்டென மறைகின்றன. கருத்த லெப்பை நாயகத்துக்கான உருவத் தேடலில் ஆர்வம் கொள்ளும் முகாந்திரங்கள் சரியாக விளக்கப்படவில்லை. மிக அழகாக ராதியம்மா சொல்லும்போது கற்பனை செய்தாலும், அக்கற்பனை அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இல்லை. ஒரு சிறுவனின் இயல்பு அது என்றால், அது எப்படி உருவம் செய்யும் அளவிற்கு தீவிரம் பெறுகிறது என்பதைப் பற்றிய செய்திகள் இல்லை.

அஹம்மது கனி, பாவா, மாமு, சின்னப்பேச்சி, அபுபக்கர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள், எண்ணெய் கலந்த நீரில் தோன்றி மறையும் வர்ணங்கள் போலத் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களே அவர்களை நாம் நினைத்துக்கொள்ள வைக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் விளக்கியிருந்தால், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் வளர்ந்து, மிகச்சிறப்பான நாவல் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும். இதை அதிக ஆர்வத்திலும் அவசரத்திலும் ஜாகிர் ராஜா செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

லெப்பைகளின் வாழ்க்கையில் புரையோடிப்போயிருக்கும் சில முக்கியமான விவாதத்திற்குரிய விஷயங்களை இந்நாவல் முன்வைக்கிறது என்கிற வகையில் இது முக்கியமான பதிவாகிறது. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்கிற நிலையில், அதற்கான திறப்புகள் உள்ள நிலையில் அவை சரியாகப் பயன்படுத்தப்படாததால் ஏமாற்றத்தையும் தருகிறது. அதே வேளையில், ஜாகிர் ராஜாவின் பயணத்தில் மிகச்சிறந்த நாவலொன்று வரும் நாள் அதிகமில்லை என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது. நன்றி: http://nizhalkal.blogspot.com

Friday, December 19, 2008

மறைபொருள் - குறும்படம்

'மீன்காரத் தெரு' நாவலுக்கு ஈரோடு மாவட்ட தமுஎச மாநாட்டில் 18.08.2007 அன்று சிறந்த நாவலுக்கான 'பெருமாயி குப்பண்ணன்' விருது கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கு அதிகாலையே நானும் ராஜியும் குழந்தைகளும் தஞ்சை நண்பர்கள் செல்வா, சசிகுமார், செந்தில் ஆகியோரும் புறப்பட்டுச் சென்றோம். அந்தப் பயணம் இனிமையான அனுபவமாக இருந்தது. பேருந்து குளித்தலை அருகே சென்றபோது வாழைப்பழம், வெள்ளரிக்காய்கள் வாங்கி சுவைத்துக்கொண்டே இலக்கியம் தவிர்த்த வளவளவென்ற உரையாடல்கள் - நகைச்சுவைத் துணுக்குகள் வழியெங்கும் சிதறிக் கொண்டிருந்தன. நீண்ட பயணம்தான். நண்பர்கள் உடனிருந்ததால் அயர்ச்சியைத் தணித்துக்கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சியை ஈரோடு மாவட்டத் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். என்னுடன் இரா.நடராசன், அ. மார்க்ஸ், புதிய ஜீவா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. மார்க்ஸ் விழாவுக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக ஓடைதுரையரசன் விருது பெற்றுக்கொண்டார். அப்போது ஈரோடு மாவட்ட ஆட்சித் உதயசந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தார். பொதுச் செயலாளர் ச. தமிழ்செல்வன், கவிஞர் ஆதவன் தீட்சண்யா கலந்துகொண்டனர்.

கீரனூரிலிருந்து கூடலிங்கமும் முருகேசும் வந்திருந்தனர். மகிழ்ச்சியாக இருந்தது. விழா தொடங்கும்முன் பல குறும்படங்கள் திரையிட்டனர். அவற்றுள் பொன். சுதா இயக்கிய 'மறைபொருள்' என்னை பாதித்தது. வசனம் எதுவுமில்லாத அந்த ஐந்து நிமிடக் குறும்படம் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான ஒரு குரலை மௌனமாகப் பதிவு செய்ததால் பார்வையாளர்களைக் கவர்ந்தது. பல நிமிடங்கள் கைத்தட்டலைப் பெற்றது. குறும்படம் காட்சி ஊடகத்தின் குறைவான கால அளவைக் கோருகிறது. ஆனால் பெரிய தாக்கத்தைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துகிறது. 'மறைபொருள்' ஒரு செய்தியை எப்படிக் கலை வடிவமாக்குவது என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. பொன்.சுதாவுக்கு என் வாழ்த்துகள்.

Monday, December 15, 2008

ஏலாதி இலக்கிய விருது

15.08.2008 அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் தக்கலையில் நடைபெற்ற விழாவில் 'மீன்காரத் தெரு' நாவலுக்கு ஏலாதி விருது வழங்கப்பட்டது. கவிஞர் இன்குலாப் இவ்விருதை எனக்கு வழங்கினார். என்னுடன் எழுத்தாளர் பெருமாள் முருகனும் 'கங்கணம்' நாவலுக்காக விருது பெற்றார். கவிஞர் HG ரசூல், ஹாமீம் முஸ்தபா, நட.சிவகுமார் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதே நிகழ்ச்சியில் ரசூல் மீதான ஊர் விலக்க, மத விலக்க நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எழுத்தாளர்கள் பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்


04.04.2008 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'கருத்த லெப்பை' நாவலைத் துணைவேந்தர் சி. சுப்பிரமணியம் வெளியிட கவிஞர் ஆதவன் தீட்சண்யா பெற்றுக்கொண்டார். துணைவேந்தருடன் உரையாடும்போது கீரனூரை நினைவு கூர்ந்தார். அவருக்கு சொந்த ஊர் அரவாக் குறிச்சி.

சாகித்ய அகாதமி கருத்தரங்கம்


திருப்பூரில் சாகித்ய அகாதமி நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியது மறக்க முடியாத அனுபவம். சா. கந்தசாமி, சிற்பி பாலசுப்பிரமணியம், புவியரசு, சுப்ரபாரதி மணியன், 'கற்றது தமிழ்' இயக்குனர் ராம், இளங்கோவன் மற்றும் பல இலக்கிய நண்பர்களை இந்த நிகழ்வில் சந்திக்க வாய்த்தது.

செம்பருத்தி பூத்த வீடு - நூல் வெளியீட்டு விழா


அனன்யா பதிப்பகம் சார்பாக என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 'செம்பருத்தி பூத்த வீடு' தஞ்சாவூர் - பெசன்ட் இல்லத்தில் 22.5.2005 அன்று மாலை சட்டமன்ற உறுப்பினர் சி. நா. மி. உபயதுல்லா (தற்போதைய தமிழக வணிக வரித்துறை அமைச்சர்) முன்னிலையில் வெளியிடப்பட்டது. விழாவில் எழுத்தாளர்கள் யூமா வாசுகி, களந்தை பீர் முகமது, பொ. வேல்சாமி மற்றும் திரளான எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். எழுத்துலக வாழ்க்கையில் என்னுடைய அடுத்த கட்டப் பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது.

Saturday, December 6, 2008

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் " ஓடும்நதி " படைப்புலகம் - கீரனூர் ஜாகிர்ராஜா

தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை தரிசிக்க வைக்கின்றன. சமகாலப் படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாக எழுத தமிழ்ப் புதினப் பாதையை žராக்கித் தந்துள்ளனர்.

சுப்ரபாரதிமணியன் திருப்பூரை வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 1970-களில் சுகாதாரமான பூமியாக இருந்த திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் துளிக்கத் தொடங்கியபோது அடித்தள மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. ஒன்றிரண்டாகப் பெருகிய கம்பெனிகள் ஒரு கட்டத்தில் திகைப்புக்குரிய அளவில் வளர்ச்சியுற்று நகரத்தையே வசப்படுத்திவிட்டன. விவசாயம் அழிந்தது. விளைநிலங்கள் வணிக வளாகங்களாயின. நொய்யலாறு கழிவுகளின் பிறப்பிடமாயிற்று. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் இணைந்தனர். இடநெருக்கடி, குடிநீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசுகள் அதிகரித்தன. திருப்பூர் நகரம் திக்கித் திணறிற்று. கம்பெனிகளோ சிப்டுகளை அதிகப்படுத்தின. தாலி கிடைத்துவிடுமெனும் நம்பிக்கையில் பனியன் கம்பெனியின் கொட்டடிகளில் இளம்பெண்கள் சுமங்கலித்திட்டம் என்ற வருடாந்திர ஒப்பந்தங்களின் பெயரில் அடிமைப்பட்டனர். சமூக அக்கறையாளர்கள், தன்னார்வலர்கள், இலக்கியவாதிகள் இதன்மேல் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். சுப்ரபாரதிமணியன் இவர்களுக்கிடையில் தன் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரின் " தேநீர் இடைவேளை " என்னும் நாவல் திருப்பூர் நகரத்தின் பிரச்சனகளையும், கோவை மாவட்டத்தின் தொழிற்சங்க வரலாறையும் வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்த படைப்பு. அந்நாவல் முழுவதும் கடிதங்களே இடம் பெற்றிருந்தன. " ஓடும்நதி" என்னும் இந்நாவலிலும் கடித உத்தியை பயன்படுத்தி நாவலின் ஒரு பகுதியை நகர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.

செல்வன்- செல்லம்மிணி இருவரின் நட்பு கடிதங்களின் வழியே விரிகிறது. செல்லம்மிணி தன் தந்தையுடன் கொங்குமண்டலத்தின் உள்ளொடுங்கிய கவுண்டர் இனத்தின் ஆதிக்கப் போக்குமிக்கதொரு கிராமத்தில் வசிக்கிறாள். தண்­ர் பிரச்சனை, காமுகர்களின் வெறியாட்டம் இவர்களை கம்பெனிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. பவர்லூம் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் செல்லம்மிணி. தலைக்கு குளித்த ஜந்தாம் நாள் அயர்ந்துறங்கும் வேளையில் பழைய பாத்திரக்காரனால் பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மீண்டும் கம்பெனி வேலைக்கு செல்கையில் செல்வனை சந்திக்கிறாள். கம்பெனியில் சொக்கன் என்பவனுடன் நெருங்கிப் பழகி செகந்திராபாதுக்கு அவனுடன் சென்று மூன்று மாதகாலம் சேர்ந்து வாழ்கிறாள். சொக்கன் பிரிகிறான். அப்பாவின் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு சித்தப்பாவிடம் அடைக்கலமாகிறாள். சித்தப்பா சிறிது காலம் அவளுக்கு ஆதரவளித்து மீண்டும் அவளை அவளின் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கால் சூம்பிய ரங்கண்ணனிடம் செல்லம்மிணியை சேர்ப்பித்துவிட்டு அவரும் மரணிக்கிறார். தன்னை சிதைத்த பாத்திரக்காரனை அவள் மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவன் அவளை மீண்டும் žண்டுகிறான். குழப்பத்தினூடாக உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறாள். கல்வியறிவில்லாத பலருக்கு கடிதம் எழுதிக்கொடுத்து மனநிறைவடைகிறாள். இதற்கிடையில் நாகாலாந்திலிருந்து திரும்பும் செல்வன் மல்லிகா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரில் தமிழ்வழிக்கல்விப் பாடசாலை தொடங்கி நடத்துகிறான்.

இந்த நெடுங்கதையினூடாக மேரி என்னும் பாவப்பட்டவளின் கிளைக்கதையும், செகந்திராபாத் ஜுலியின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றது. செல்லம்மிணி என்னும் குணசித்திரத்தின் வாயிலாக அல்லலுறும் பெண்ணின் ஆன்மாவை வாசகர்களுக்கு தரிசிக்கத் தருகிறார் சுப்ரபாரதிமணியன். நம் தேசத்து புறக்கணிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தப் பிம்பம்தான் செல்லம்மிணி. வல்லரசு ஆகப்போகும் தருணத்திலும் ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் செல்லம்மிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதும் வன்முறைக்குள்ளாகின்றனர் என்பதும் கசப்பான நிஜமாகி நம்மை கலவரப்படுத்துகின்றது.

சுப்ரபாரதிமணியனின் முந்தைய படைப்புகளிலிருந்தும் " ஓடும்நதி "மாறுபட்டு வேறுவேறு திசைகளில் பரவிப் பாய்ந்து செல்கிறது. பல நேரங்களில் ஒரு தேசாந்திரியின் பயணக்குறிப்புகளைப் போலவும் சில நேரங்களில் ஒரு துயர நாடகத்தைப் போன்றும் பிறிதொரு சமயத்தில் ஒரு பேரிலக்கியத்தின் நுண்ணிய கூறுகளுடனும் "ஓடும்நதி"கண்ணாமூச்சி காட்டுகிறது. கதைச் சம்பவங்கள் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் என ஸ்தலங்கள் மாறி நிகழ்ந்து ஓய்கின்றன. நாகாலாந்த், கவுஹாத்தி, அசாம் மலைப்பகுதி நிலக்காட்சிகள், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆசிரியரால் அவதானிப்புக்குள்ளாகியுள்ளன.

காட்டெருமையை வேட்டையாடி அதன் தலையைக் கொய்து வருபவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுதல், புராதன கட்டிடமொன்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கி விரும்புகிறவர்களுடன் தங்கு தடையற்ற பாலுறவு கொள்ளுதல், மரணைத்தவரின் உடலைப் புடைக்காமல் எரியும் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு அது வெந்து வடியும் நிணத்தை உடம்பில் பூசிக்கொள்வது என்று மலைவாழ் மக்களின் வினோத சடங்குகள் நம்பிக்கைகள் நாவலாசிரியரால் நுட்பமாக விவரிக்கப்படும் பொழுது அதிர்வும் பீதியுமான வாசக அனுபவத்துக்குள்ளாக முடிகிறது. " ஓடும்நதி " சுப்ரபாரதிமணியனின் பெரும் பயணத்துக்கான வெள்ளோட்டம்.

ஒடும் நதி (நாவல்)

சுப்ரபாரதிமணியன்

விலை-150/- வெளியீடு: அம்ருதா

பக்கம் - 336. எண்.5. 5வது தெரு,

எஸ்.எஸ்.அவென்யூ, சக்தி நகர்,போரூர்,

சென்னை-11

பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும் - கீரனூர் ஜாகிர்ராஜா

இஸ்லாமிய இலக்கியத்துக்கு இருண்டகாலம் ஒன்று இருந்தது. ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் 'குடும்ப' பத்திரிகை முஸ்லிம் சிறுகதை ஒன்றை சமய நல்லிணக்கப் பெருமிதத்துடன் வெளியிடும். வறுமையில் உழலும் குடும்பத்தில் பெருநாளுக்குப் புத்தாடை உடுத்தமுடியாத சிறுவனின் ஏக்கம் அதில் மிகை உணர்வுகளுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அடுத்த ரம்ஜானுக்கும் இதே போன்ற ஒரு கதையை ஒரு சிறுமியை மையப்படுத்தி மற்றொரு எழுத்தாளர் எழுதியிருப்பார். கோஷா என்னும் பெயரில் பெண்களைப் 'பொத்தி'வளர்த்தது, கல்வி மறுத்து நாகரீகத்தின் வாசனை நுகரவிடாது அறியாமைப் பேரிருளில் தள்ளி காலங்காலமாக வதைத்ததைப் போல இலக்கியத்திலும் சமூகத்தின் அசலான வாழ்க்கை பதிவுபெற்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்திருக்கிறது அடிப்படைவாதக் கூட்டம்.

ஒரு காலகட்டம்வரை தொப்பி, தாடி, கைலி, பிரியாணி இவற்றைத்தவிர இஸ்லாம் குறித்த எந்தத் தகவலும் இங்கே மாற்றுமத நண்பர்களுக்குத் தெரியாது; கிறிஸ்தவத்துக்கு அடுத்தபடியாக உலகளாவிய அளவில் வேரூன்றிய ஒரு சமயம்; அறிவியல் மற்றும் பகுத்தறிவின் நுட்பமான கூறுகளையும் அறத்தின் துல்லியமான சாரங்களையும் இயல்பாக உள்வாங்கிக்கொண்டு மேலெழுந்த ஒரு மார்க்கம் மக்களின் ஏனைய பிரிவினருக்கு இன்னதென்று விளங்கிக்கொள்ள முடியாத ஒரு புதிராக இருந்திருக்கிறது நெடுங்காலமாக. தமிழில் குரான் பெயர்க்கப்பட 1960 வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

இலக்கியத்தில் இறுக்கத்தைக் கட்டி எழுப்புவது பெரும்பான்மைப் படைப்பாளிகளின் உத்தி. எப்போதும் ஒரு படைப்பென்பது துயரத்தைப் பகிர்ந்துகொள்வதாலேயே வாசகனின் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடிக்கிறது. பேரிலக்கியங்கள் சோகத்தையே அடிநாதமாகக் கொண்டெழுகின்றன. பின்நவீனத்துவம் அறிமுகமாகும்வரை இந்நிலை நீடித்தது. பின்நவீனத்துவப் படைப்புகள் பெரும் வீச்சுடன் எழுந்த காலகட்டத்தில் இறுக்கத்தை உடைத்து பிரதியை திசை திருப்பிவிடும் கலகம் நிகழ்ந்தது. பின்நவீனத்துவம் இந்தியப் படைப்புகளில் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும் இறுக்கம் தளர்ந்துவிடவில்லை. காரணம் நமது படைப்புகள் எதார்த்தத்தைவிட்டு விலகத் துணியவில்லை. எதார்த்தம் செத்துவிட்டதாக உலகெங்கும் குரலெழும்பியபோதும் இந்திய சாஹித்யங்கள் எதார்த்தத்தின் வழியாகவே புனையப்பட்டன.

சிறுகதை இலக்கணத்தைச் சற்றும் பொருட்படுத்தாத ஆபிதீனின் கதைகள் முரண் அழகுடன் அடர்த்தியாகப் பலவிதமான சம்பவங்களைப் பின்னிப் பின்னி ஒரு நாட்டுப்புறக் கதைசொல்லியின் பாவனைகளுடன் வாசகனிடம் உரையாடுகின்றன. கலவையான அனுபவப் பின்னணிகள் கொண்ட ஆபிதீனின் மனஉலகம் சூழல் உருவாக்கும் நெருக்கடிகளையும் மானுட வாழ்வின் கசப்புகளையும் சகமனிதர்களின் வக்கிரங்களையும் பொருளாதார நிமித்தம் வேற்றுமண்ணில் காட்டரபிகளுடன் போராடும் துயரார்ந்த நிலைகளையும் தாண்டி, அழுது ஓய்ந்து மனம் தேறி, மெல்ல மெல்ல உருமாற்றம் கொள்கிறது. ஆபிதீனிலிருந்து வெளிப்படும் அங்கதம் கோமாளிக் கூச்சல் அல்ல. சிதறுண்ட மனநிலையின் வெளிப்பாடுகள் அவை. இந்த அனுபவங்களை அவர் இறுக்கமாகப் படைப்பில் இறக்கி வைத்திருந்தால் நாம் ஆச்சரியம் கொள்ளவோ அதிசயிக்கவோ வாய்ப்பிருந்திருக்காது.

மீஜானில் தொடங்கி நாங்கோரி என்ற உறுப்பினர் வரை பதிமூன்று கதைகளிலும் ஆபிதீன் வாசகர்களுடன் நீண்டநேரம் உரையாடுகிறார். கீழத்தஞ்சை மாவட்ட முஸ்லிம் மக்களின் வட்டார வழக்கு வரிக்கு வரி, தெறித்துவிழும் உரையாடல்களின் வழியே நாகூருக்கென்று தனித்திருக்கும் சங்கேதமொழி, சம்பாத்தியத்துக்காகக் குடும்பத்தை விட்டு சஃபர் என்ற பெரும் பேயிடம் தலைமுறை தலைமுறையாக மாட்டிக்கொண்டு போராடும் சாபம், கஃபில்களின் முதலாளித்துவம், உறவுகளின் வாஞ்சை, வக்கிரம், இலக்கியவாதியாக எதிர்கொள்ளும் சிக்கல்கள் அனைத்தும் பதிவாகியுள்ள கதைகள்.

கறாரான விமர்சகர்கள் இவற்றை சிறுகதைகளல்ல என்று நிராகரிக்கப் பெரிதும் வாய்ப்புள்ளது. ஆனால் விமர்சகர்களை நிராகரித்து வாசிப்பின் உன்னதத்தை அடைய விரும்பும் வாசகர்கள் உயிர்த்தலத்தின் எல்லாக் கதைகளிலும் வாழ்வனுபவங்களைப் புதிய கோணத்தில் தரிசிக்க முடியும்.

வரிக்கு வரி ஆபிதீனிடம் பொங்கி வழியும் அங்கதம்; கதைகளைத் தட்டையாக நகர்த்தாமல் வேறுவேறு சூழலுக்குள் கொண்டு செல்லும் போக்கு இதோ முடிந்துவிடுமென்று எதிர்பார்த்து நீண்டு செல்லும் அடர்த்தி, ஊர் விஷயங்களைத் தொட்டுக்கொண்டே உலகளாவிய சமாசாரங்களைத் தீண்டும் பாய்ச்சல், தனக்குத் தோதான மொழிநடை என்று நிறைய குறிப்பிட்டுச்சொல்ல இருக்கிறது.

இத்தொகுப்பில் பிரதானமாகச் சொல்லவேண்டிய பிறிதொரு அம்சம், பதிமூன்று கதைகளும் பதிமூன்று அத்தியாயங்களாகி பிரதி நாவலாகிவிட்டது போன்ற நிலையாகும். ஆபிதீனிடம் ஒரு நாவலாசிரியனுக்குரிய எதையும் விரித்துக்கூறும் தன்மை இயல்பாக அமைந்துள்ளது. நானா போன்ற பாத்திரப் படைப்புகள் வழியே அவர் பெரும் கதையாடலை நிகழ்த்த வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. மலேஷியா நாட்டின் முன்னால் பிரதமர் மஹாதிர் முஹம்மதுக்கும் எனக்கும் தகராறு ஒண்ணும் கிடையாது என்று கதையைத் தொடங்கவும் இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள் போன்ற பகடிவகைக் கதை படைக்கவும் புனிதங்கள் யாவற்றையும் பெரும் கொண்ட தைரியத்துடன் எள்ளி நகையாடவும் இவரால் முடிந்திருக்கிறது.

இஸ்லாமியக் கதைகள் மிகப்பெரும் தேக்க நிலையைத் தாண்டியுள்ள வேளையில் ஆபிதீன் அடுத்தகட்டப் பயணத்துக்கு ஆயத்தமாகவுள்ள படைப்பாளியாக களத்தில் நிற்கிறார். வரவேற்போம்.

(உயிர்த்தலம், ஆபிதீன், எனி இந்தியன் பதிப்பகம், விலை: 130.00 ரூபாய், # 102, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், 57, தெற்கு உஸ்மான் சாலை, சென்னை - 600 017, தொலைபேசி: 24329283.)

ஜூலை 2008 'வார்த்தை' இதழில் வெளியான புத்தக விமர்சனம்.

மீன்காரத்தெரு - ஜெயமோகன்

தமிழில் இஸ்லாமியப்பின்னணி கொண்ட இலக்கியங்கள் அவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு. இஸ்லாமிய வாழ்க்கையை தமிழில் எழுதியவர்களில் முதன்மையான படைப்பாளி ‘தோப்பில் முகமது மீரான்’தான். மீரானின் படைப்புகளில் அவர் முன்னோடியாகக் கொண்ட மலையாள எழுத்தாளர்களான யு.ஏ.காதர், வி.ஏ.ஏ.அஸீஸ், வைக்கம் முகமது பஷீர், என்.பி.முகம்மத், புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆகியோரின் பாதிப்பு உண்டு.மீரானின் ஒருகடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம்,சாய்வுநாற்காலி, கூனன் தோப்பு ஆகிய நாவல்கள் அனைத்துமே முக்கியமானவை.

குமரிமாவட்டத்தைச் சேர்ந்த மீரான் மைதீன் [ஓதி எறியபப்ட்ட முட்டைகள் ] குறிப்பிடத்தக்க கதைகளை எழுதியிருக்கிறார். களந்தை பீர்முகமது கவனத்துக்குரிய படைப்பாளி. சமீபத்தில் வந்த சல்மாவின் ‘இரண்டாம் சாமங்களின்கதை’ பரவலான வாசிப்பினைப் பெற்றது. பிரபலஇதழ்சார் எழுத்தில் கருணாமணாளன்,ஜெ.எம்.சாலி ஆகியோர் இஸ்லாமியப் பின்னணியுடன் எழுதியிருக்கிறார்கள்.

ஆயினும் தமிழ்நாட்டு இஸ்லாமிய வாழ்க்கை இன்னமும் இலக்கியவட்டத்திற்கு வெளியிலேயே உள்ளது என்பதுதான் உண்மை. இஸ்லாமிய சமூகம் பொதுவாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தொழிலிலும் வணிகத்திலும் கவனம்செலுத்துவதாக இருப்பது ஒரு காரணம். இன்னொன்று, ஒரு உண்மையான படைப்பாளி தன் படைப்பூக்கத்துடன் செயல்படுகையில் மரபான அமைப்புகளை சீண்டுகிறான்,எரிச்சலூட்டுகிறான், மறுசிந்தனைகளைக் கோருகிறான். இறுக்கமான இஸ்லாமிய சமூகத்தில் இன்று அதற்கு அளிக்க வேண்டிய விலை மிக அதிகம். மரபுகளை தூக்கிப்பிடிக்கும் பேச்சாளார்களே கலாச்சாரக்குரல்களாக முன்னிறுத்தப்படுவார்கள்.

இந்நிலையில் தமிழக இஸ்லாமிய சமூகத்தின் அகம் குறித்து எழுதப்படும் படைப்புகளுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவ்வகையில் கவனத்துக்குரிய ஆக்கம் கீரனூர் ஜாகீர்ராஜா எழுதிய ‘மீன்காரத்தெரு’. ஜாகீர்ராஜா இதுவரை சில சிறுகதைகளே எழுதியிருக்கிறார். மிகுந்த பொருளியல்நெருக்கடி கொண்ட வாழ்க்கைச்சூழலில் இருந்துகொண்டு இலக்கியம் கோரும் உழைப்பை கொடுக்க முடியாது போனவர் அவர் என்று அறிந்துகொண்டேன். இது அவரது முதல் நாவல்.

கடல்சார்ந்த நாவல் அல்ல இது. மீன்காரத்தெருவில் வாழ்பவர்கள் ஒரு புராதன ஏரியில் மீன்பிடித்துவாழும் அடித்தட்டு இஸ்லாமியர்கள். பிறவியிலேயே தாழ்ச்சி கற்பிக்கப்பட்ட மனிதர்கள். ‘மீன்காரன்’ ‘மீன்காரி’ என்பது வசைக்குநிகராகவே கையாளப்படுகிறது. அவர்கள் வாழும் தெரு அழுக்கும் வறுமையும் வன்முறையும் வாழும் ஒரு கழிவிடம்போலிருக்கிறது. அவர்களைப் பொருளியல்ரீதியாகவும் பாலியல்ரீதியாவும் மதரீதியாவும் சுரண்டிவாழ்பவர்களின் இடம் பங்களாத்தெரு. இந்நாவல் இவ்விருத்தெருக்களுக்கு இடையேயான முரண்பாட்டின் கதை.

தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகில் சொல்லப்பட்டுவரும் கதை, வழக்கமான பிரச்சினைகள். ஆனால் இந்நாவல் முக்கியமானதாக ஆவது இதில் உள்ள சித்தரிப்புகளில் கைகூடியுள்ள நுண்ணிய அகமன வெளிப்பாடுகளினால்தான். மீன்காரத்தெருவின் சண்டியரான நைனாவின் குணச்சித்திரம் ஓர் உதாரணம். அவனுடைய இலக்கற்ற வன்முறையையும் மரபுமீறல்களையும் மிகையில்லாத துல்லியத்துடன் ஆசிரியர் காட்டுகிறார். அது சுரண்டலுக்கும் அவமதிப்புக்கு எதிரான அவனுடைய கலகம்தான். ஆனால் அது அவனுக்கே தெரியாது, நேரடியான கட்டற்ற வன்முறையாகவே அது வெளிபப்டுகிறது. நைனாவின் மீறல்களில் இருந்துகொண்டே இருக்கும் திமிர் இந்நாவலின் முக்கியமான அம்சம்

அடித்தட்டுப் பெண்களின் அக ஓட்டங்களை இயல்பாகத் தொடர்ந்துசெல்ல ஆசிரியரால் இயன்றிருக்கிறது.ஆமினாவின் உள்ளார்ந்த கனவுகள், தொட்டதுமே கூசிச்சுருங்கும் சுயமரியாதை, ஆனால் அதையும் மீறி அவளுக்குள் ஊறும் உலகஆசை அவளை முதலாளியின் மகனை நோக்கி மெல்ல மெல்ல ஈர்ப்பது ஆகியவற்றை சிறந்த புனைவுக்குரிய நுட்பத்துடன் வாசித்து விரித்தெடுக்க இயலும்.

நாவலெங்கும் வறுமை உருவாக்கும் கொடூரமான மனநிலையின் சித்திரங்களைக் கண்டுசெல்ல முடிகிறது.காலந்தோறும் ஒடுக்கப்பட்ட மகக்ள் படிப்படியாக உணரும் சுய இழிவிலிருந்து உருவாகும் கசப்புமிக்கச் சிரிப்பும் பகடியும் பல இடங்களில் வெளிப்படுகிறது. ”பங்களாத்தெருவுக்குப் போனாலும் போவமேயொழிய பலசாதிகிட்டே போவ மாட்டம்ல?” என்ற குரலில் வெளிப்படுவது என்ன உணர்வென்றே சொல்ல முடிவதில்லை.” குடியானவண்ட்டே போறதுக்கு இஸ்லாமானவண்டே போகலாம்” என்ற பதில் குரலிலும் அந்த புரிந்துகொள்ளமுடியாத ஒன்று உள்ளூர உருள்கிறது.

இந்நாவலை இப்போது முழுமையான ஒரு படைப்பாகக் கொள்ள முடியாது. இது உதிரிச்சித்தரிப்புகளின் தொகுப்பு போல உள்ளது. சித்தரிப்புகளும் முன்னுக்குப்பின்னாக மாற்றப்பட்டுள்ளன. தெருவையும் அங்குள்ள வாழ்க்கையையும் முழுமையாகச் சித்தரிக்க இந்த பக்க அளவு கொஞ்சம்கூட போதாது. எண்பத்தைந்து பக்கமே உள்ள நாவல் இது. ஆசிரியரே சொல்வதுபோல இந்நாவல் கோரிய உழைபபினை அளிக்க அவரால் இயலவில்லை.

ஆனால் இருவகையில் இது முக்கியமானது. பொதுப்புத்திக்குத் தட்டுப்படும் சித்திரங்களை அழுத்தமாகக் கிழித்து உண்மையான உள்சித்திரங்களை அளிக்கும் நேர்மையும் தீவிரமும் கொண்ட ஆக்கம் இது. ”நல்ல தண்ணிக்கு பள்ளிக்குடத்து கொளத்துலதானலே போகணும். இங்கிட்டு பூசணிக்கா லெவ்வ கெணத்திலயோ தொண்டுவா கெணத்திலெயோ நம்மள தண்ணி எடுக்க விடமாட்டேங்கிறாங்க..” ”ஏல நாம தொட்டா தீட்டாயிடுமா?” — என்ற குரல் முதல்முறையாகப் பதிவாகும் ஆக்கம் இது.

உரையாடல்களில் நுண்ணிய இடைவெளிகள் வழியாக காமம் என்ற ஆதியுணர்வின் சில புதிய தடங்களை தொட்டுச்செல்ல முடிந்திருப்பது இந்நாவலின் முக்கியமான கலைவெற்றி.

ஜாகீர்ராஜா இதேநாவலை இன்னும் விரிவாக எழுத வாய்ப்பிருக்கிறது.அப்போது இது தமிழின் முக்கியமான கலைப்படைப்புகளில் ஒன்றாக இருக்கும்

மீன்காரத்தெரு. நாவல். கீரனூர் ஜாகீர் ராஜா. மருதாபதிப்பகம். சென்னை.

கொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம் - ஹெச்.ஜி.ரசூல்

காட்சி 1

ஏழாம் நூற்றாண்டில் அரபு மண்ணில் நிகழ்ந்தது.

அந்த உருவங்கள் சிலைகள் என்றழைக்கப்பட்டன.

பதூயீன்கள்,குறைசிகள்,ஹுதைல்,ஸிமிட்டிக்,பழங்குடிகளின் நம்பிக்கைகள் அதில் பொதிந்து கிடந்தன. மழையை பெய்விக்குமென ஒரு உருவம்,நற்பலனைதருமென பிறிதொரு உருவம்,வளமையைப் பெறுமென ஒரு உருவம்,சக்திக்கு பிறிதொரு உருவம் ஹோபல்,மனாத்,லாத்,உஜ்ஜாஉருவங்களாக ,சிலைகளாக காட்சியளித்தன..

தொலைதூர அரூப கடவுள் தத்துவத்தின் மீது கலகம் செய்து மனித உயிர்ப்பின் ரூபம் கிறிஸ்துவிடம் உருவம் பெற்றது.தந்தையின் பிள்ளைகளாய் மனிதகுலத்தின் மாந்தர்கள் ஆயினர். தந்தைக் கடவுள் உருவம் பெற்றார்.

வணங்குவதற்கு மட்டுமே உருவங்களென்ற குறைத்தல்வாத கணிப்புகள் தீவிரமடைந்தன்.உருவத்தின் கலைநுட்பங்கள் இறையியலின் காலடியில் வீழந்து கிடந்தன.. கஅபதுல்லாவில் காட்சியளித்த உருவங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

ஒளியால் படைக்கப்பட்ட மலக்குகள் ,நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள் உருவமற்று அலைந்தன. மண்ணால் படைக்கப்பட்ட நம்பிக்கையின் முதல் மனிதன் ஆதத்திற்கு உருவம் உண்டு. என்ன உருவமென்பது மட்டும் புதிராக மிஞ்சுகிறது.

உருவமற்ற அல்லாவைச் சொன்ன நபிமார்களுக்கு உருவம் உண்டு.

காட்சி 2

அரபுமண்ணின் நஜ்துவில் முகமதுபின்சவுது ஆட்சியாளர்,வகாபிச இயக்கத்தின் முன்னோடி முகமது இப்னு அப்துல் வகாபின் வழிகாட்டுதலில் 1801ல் ஈராக்கின் கர்பலா மீது படையெடுத்து நபிமுகமதுவின் பேரன் இமாம் அலியின் புதல்வர் இமாம் ஹுசைனின் நினைவுச் சமாதி அடையாளங்களயும் அழித்தொழித்தனர்.1802ல்மக்காவின்மீது படையெடுத்து நபிமுகமதுவின் மகளான பாத்திமா நாயகத்தின் நினைவிடங்களயும் தரைமட்டமாக்கினர்.சமாதியில் தென்பட்ட உருவங்கள் நினைவின் தடங்களிலிருந்து துடைத்தெறியப்பட்டன. இமாம் ஹுசைனின் உருவம் எப்படி இருந்திருக்கும்? அன்னை பாத்திமாநாயகி உருவம் எப்படி இருந்திருக்கும்?

காட்சி 3

புத்தனின் உருவம் ஒளி பருந்தியது.போதி மரத்தடியில் மனதை சாந்தப்படுத்திய அந்த உருவம் துலக்கமாய் சிரித்தது.ஆப்கன் மண்ணின் தலிபான் ஆட்சியாளர்கள் பாமீனியனின் வரலாற்றூச் சின்னங்களை,புத்தனின் உருவங்களை உடைத்தனர்.

காட்சி 4

ஜாகிர்ராஜாவின் கதையாடலில் இடம்பெறும் கருத்தலெப்பை உருவங்களின் அழகுகளை நேசிப்பவன். இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள் உருவங்கள் விலக்கப்பட்டதாய் நிகழ்வதால் அதன்மீது தன் நுண்ணிய உரையாடல்களை செய்கிற மனோபாவம் வெளிப்படுகிறது. பால்ய காலத்தில் துவங்கிய விடைகாணமுடியாத கேள்விகள், முற்றுப் பெறாத வாக்கியங்கள் இவற்றில் நிறைய உண்டு.

நீளமான ஐந்தடிக் கொம்பின் நுனியில் ஜவ்வுமிட்டாய் உருண்டைப் பிடித்து ஊரை,தெருவை,சுற்றி வரும் மிட்டாய் அமீதுவிடம் உருவம் செய்த மிட்டாய் வாங்கி வீட்டிற்கு வரும் போது உருவமா செய்யிறத வாங்கிட்டு வாறியே உருவம் நமக்கு ஆகுமாடா என அம்மா கேட்ட கேள்விக்கு கருத்த லெப்பையின் பதில் நீயும் நானுங்கூட உருவம்தானம்மா..என்பதுதான்.

மிட்டாய் அமீதுவின் கைவண்ணம் விதவிதமான உருவங்களில் ஜவ்வுமிட்டாய்களை புனைந்து விற்கிறது.கடிகாரம்,மோதிரம்,பஸ் ,சைக்கிள்,பாம்பு,தேள் என பலவிதமான பொருட்கள்,வாகனங்கள்,பூச்சிகள்,விலங்குகள் குழந்தைகளை ருசி கூட்டி மகிழ வைக்கும். கருத்தலெப்பை இப்படியான பொழுதொன்றில் மிட்டாய் அமீதுவிடம் செய்யக் கேட்டது சைத்தானின் உருவம்.அதிர்ச்சியுற்ற மிட்டாய் அமீது கைதேர்ந்த கலைஞன் சைத்தானுக்கு உருவம் தர பிரயத்தனப்பட்டு கலைத்து குலைத்து கடைசியாக உருவாக்கிய சைத்தானின் உருவத்தைப் பார்த்து தானே பயந்து போனான்.

கருத்தலெப்பையின் அப்பாவைப் பெற்றவள் ராதியம்மா. வயது முதிர்ந்த அவள் தஸ்பீகுமணி உருட்டியவாறு தொழுகை வணக்கத்தை மேற்கொள்பவள். கருத்த லெப்பையின் சின்ன வயதில் பயப்படுகிற காலத்தில் ஓதி ஊதுவாள்.உடலோடு உறைந்து கிடந்த ஷைத்தான் பயந்து அலறி ஓடுவதை கைநீட்டி காண்பிப்பாள்.அவள் காட்டியதிசையில் இருட்டு மட்டுமே தெரிந்திருக்கிறது. ராதியம்மாவுடனான கருத்தலெப்பையின் உரையாடல் இஸ்லாமிய கலாச்சாரத்தின் அறியப்படாத நுணுக்கங்களை லெப்பைக்கு கற்று தந்திருக்கிறது.

கருத்த லெப்பையின் மிக முக்கிய உரையாடலில் ஒன்று கனவு பற்றியது.ராதியம்மாவிடம் கேட்ட ஒரு அதிசயிக்கத்தக்க கேள்வி நாயகம் ரசூலுல்லாவை கனவில் நீங்க பார்த்ததுண்டா என்பதுதான்.

ஆம் பார்த்திருக்கேன் என்ற ராதியம்மாவின் பதில் கருத்தலெப்பைக்கு அதிர்ச்சியூட்டுகிறது. எப்படி ராதியம்மா நாயகத்தை கனவுல பார்க்கமுடியும் என்பதற்கு ராதியம்மா மரபு வழிப்பட்ட நம்பிக்கையை பதிலாகத் தருகிறாள்.

குரான்ல முஜம்மில் சூராவை தினமும் இஷா தொழுகைக்கு அப்புறம் தொடர்ந்து ஓதிவரணும்.அப்புறம் நாயகத்தைப் புகழ்ந்து ஓதுற தாஜுஸ் ஸலவாத்தை ஓதணும் ஓதுனா நாயகத்தோட தரிசனம் கனவுல கிடைக்கும்.

நாயகம் எப்படி இருப்பாங்க என வினவிய குரலுக்கு ராதிம்மா நபிகள்நாயகத்தின் தோற்றம் பற்றி வர்ணனைகளை விளக்க விளக்க கண்களை இறுக மூடிக் கொண்ட கருத்த லெப்பையின் மனம் நாயகத்தை வரைந்து கொண்டிருந்தது. ராதியம்மாவிற்கு தெரியாத ரகசியம் அது.

விடிந்ததும் மனதில் தீட்டிய நபிகள் நாயகத்தின் உருவத்தை காகிதத்தில் பதிவு செய்து அமீதுவிடம் ஓடுகிறான் கருத்த லெப்பை. மாறுபட்ட மன உலகங்களின் விசித்திரமான பதிவு இது.

மிட்டாய் அமீது நுட்பம் பொருந்திய கலைஞன். பிறிதொருநாளில் கருத்தலெப்பையைப் பார்த்து பதட்டத்தோடு பேசுகிறான்

காக்கையும் குருவியும் செஞ்சு பொழக்கிற என்னப் போயி ஏதேதோ செய்ய சொல்லிட்டியே நீ வரஞ்சு தந்த படத்தைப் போலவே உருவம் செஞ்சாச்சு. ராவு படுத்தா தூக்கம் வரல்லடா கண்ணுக்கு முன்னாடி அந்த உருவம் வந்து நிக்குது.

மிட்டாய் அமீது கருத்தலெப்பையை அழைத்து தொறகுச்சியால் தோட்டத்து வீட்டை திறந்து அந்த களிமண்ணால் உருவாக்கிய சிலையை நெஞ்சம் படபடக்க காட்டுகிறான்.

ராதியம்மா சொல்லச் சொல்ல கருத்தலெப்பை வரைந்திருந்த நாயகத்தின் உருவம் அது.

அதிசயத்தோடும் ஆர்வத்தோடும் சிலைக்கு அருகில் கருத்த லெப்பை நெருங்கிவர திடீரென சிலைமீது மழைத்துளிகள் விழுகின்றன. கூடவே எங்கிருந்தோ பலதிக்குகளிலிருந்து வீசப்பட்ட கற்கள் அவன் மீது விழ விழ ரத்தம் பீறிட வீழ்கிறான். கொட்டும் மழையில் சிலை கரைந்து கொண்டிருக்கிறது.

மழையில் கரைந்த நபி முகமதுவின் உருவம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுக் கால இஸ்லாமிய வரலாற்றின் ஓவியம் சிற்பம்சார் கலாச்சார இழப்பின் குறியீடு. இது முஸ்லிம் மனோபாவத்தின் மறைக்கப்பட்ட அமுக்கப்பட்ட ஒன்றின் மீதான ஏக்கம்.

அதேநேரம் உச்சப்பட்ட காதலின் ஈடுபாட்டோடு நபிகள்நாயகத்தின் உருவத்தை வரைந்து உருவாக்கிய கலைஞனின் மீது தொடுக்கப்படும் வன்முறையாகவே பல திக்குகளிலிருந்தும் வீசப்பட்ட கற்கள் அர்த்தம் பெறுகின்றன. ஹஜ் சடங்குகளில் ஒன்றான ஷைத்தானின் மீது கல்லெறிதல் இங்கு மறுவடிவம் பெறுகிறது.வீசப்படும் கற்களின் விளைவாக நிகழ்ந்த மரணம் யதார்த்தத்தை புனைவாக மீள்பதிவு செய்கிறது.இஸ்லாத்தின் சமய அதிகார வரம்புகளை மீறும் கலைமனம் எதிர்கொள்ளும் மரணமே இது.

ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை நாவல் பிரதி இதைத் தாண்டி விளிம்புநிலை முஸ்லிம்களின் கலாச்சாரம் சார்ந்த பன்முக வாசிப்புக்கு சாத்தியமுள்ளதாகவே இருக்கிறது.

நாவல்: கருத்தலெப்பை

ஆசிரியர் : ஜாகிர்ராஜா

வெளியீடு:மருதா,அண்னாசாலை

குலசேகரபுரம்,சென்னை- 92

விலை:ரூ.40/பக்கங்கள்: 72