Thursday, January 13, 2011

தேய்பிறை இரவுகளின் கதை - கீரனூர் ஜாகிர் ராஜாவின் ’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம் - இளங்கோ கிருஷ்ணன்

எதார்த்தவாத நாவல்கள் ஒரு பார்வை

தமிழில் நாவல் என்ற கலைவடிவம் தோன்றி ஒன்றேகால் நூற்றாண்டுகள் கடந்து விட்டதாக நாம் பேசிக் கொண்டாலும் நாவல் என்பது குறித்து பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வரையறைகளின்படி பார்க்கும் போது க.நா.சுவினுடைய ’பொய்த்தேவு’ நாவலையே நாம் தமிழின் முதல் செவ்வியல் நாவல் எனக் கொள்ளமுடியும். இது நடந்தது 1940களுக்குப்பிறகு இந்த காலகட்டமானது மேற்கில் நவீன நாவல்களின் காலமாக மாறத் துவங்கியிருந்த காலம் ஆகும். சுமார் 200 ஆண்டுகாலம் நாவல் வடிவத்தில் இயங்கி தன்னியல்பாக நவீன நாவல்களுக்குள் மேற்குலகம் சென்றிருந்த சூழலில்தான் நம்முடைய முதல் செவ்வியல் நாவல் எழுதப்பட்டது.உண்மையில் அதுவும் கூட ஒருவகை எதார்த்தவாத நாவல் என்றே கொள்ளமுடியும்.

செவ்வியல் நாவல் என்பதும் எதார்த்தவாத நாவல் என்பதும் வேறு வேறு அல்ல என்பதைப்போன்ற கருத்தியல் ஒன்று தமிழ்ச்சூழலில் உண்டு. ஒரு மேலோட்டமான பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் இரண்டும் வேறு வேறே. எவ்வாறு நவீன நாவல் என்பது செவ்வியல் நாவலில் இருந்து பிரிந்து போன கலைவடிவமோ அப்படியே எதார்த்தவாத நாவல் என்பதும் செவ்வியல் நாவலில் இருந்து மலர்ந்த ஒரு வடிவமே. வடிவமைப்பிலும் மொழிதலிலும் எதார்த்தவாத நாவல்களுக்கும் செவ்வியல் நாவல்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஆனால் ஆன்மாவில் இரண்டும் வேறுபட்டன.ஒரு செவ்வியல் நாவல் என்பதன் இயங்குதளமானது ஒப்பீட்டளவில் எதார்த்தவாத நாவலை விடவும் விரிந்தது. உலக அளவில் மிக பரந்துபட்ட செவ்வியல் நாவல் வடிவங்களை உருவாகியதில் ரஷ்ய இலக்கியக்கங்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. டால்ஸ்டாய்,தாஸ்தாயெவ்ஸ்கி, தாமஸ் மன், விக்டர் ஹீயூகோ போன்ற பெயர்களை நாம் இன்றளவும் பேசக்காரணம் அவர்கள் படைப்புகளில் இயங்கும் செவ்வியல்வாத பண்பே. அவர்கள் நாவல் என்பதை ஒட்டுமொத்த வாழ்வினுடைய சாரம் என்பதாக பார்த்தார்கள். தங்கள் படைப்புகளின் வழியாக வாழ்வை மொத்தமாக அள்ள முயன்றவர்கள் செவ்வியல் நாவல்காரகள் எனலாம். மாறாக எதார்த்தவாத நாவல்களோ அந்த எல்லையிலிருந்து சற்று குறுகியதாகவே இருந்தது. குறிப்பாக ரஷ்ய எதார்த்தவாத நாவல்கள்.மார்க்சிய அழகியல் என்ற கோட்பாடு பின் நாட்களில் எதார்த்தவாத நாவல்களின் எல்லையை மேலும் சுருக்கி நாவல் என்பது மார்க்சியக்கோட்பாடுகளை கதைக்களனில் நிறுத்தி நிகழும் எல்லா விஷயங்களுக்கும் வர்க்க சாயல் பூச முயன்றது. இந்த வகை நாவல்களானது செவ்வியல் நாவல்களிலிருந்து மேலும் சுருங்கிய எல்லைகளைக் கொண்டதாகவே இருந்தது.

நாவல் வரலாறு என்பது மொழிக்கு மொழி வேறானதே என்பதை சொல்லத்தேவை இல்லை. ஆனால் பொதுவாக இந்திய மொழிகளின் துவக்ககால நாவல்களுக்கு ரஷ்ய நாவல்கள் பெரும் ஆதர்சமாக இருந்தன.க.நா.சு வைத் தவிர துவக்ககால தமிழ் நாவலாசிரியர்கள் ரஷ்ய நாவல்களின் தாக்கம் கொண்டவர்களே. குறிப்பாக ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றவர்களைச் சொல்லலாம். இந்த போக்கானது தமிழில் நாவல் என்ற வடிவத்தை எதார்த்தவாத நாவல் என்ற வடிவமாக ஊன்றச் செய்தது.இவ்வாறாக செவ்வியல் நாவல் என்ற வடிவத்தில் போதிய பரிச்சயம் நிகழாமலேயே நாம் எதார்த்தவாத நாவல்களை எழுதத் துவங்கினோம்.அதுவும் குறிப்பாக ரஷ்ய வகை எதார்த்தவாத நாவல்களை எழுதத்துவங்கினோம். எதார்த்தவாத நாவல்கள் ஒரு மொழியில் தொடர்ந்து வினையாற்றும் போது ஏற்படுகிற முக்கியமான விளைவுகளில் ஒன்று. அவைகள் அம்மொழியின் நாட்டார் கலை வடிவங்களில் இருந்து தனக்கான சாரத்தை எடுத்து கொள்கிற முறைமை ஆகும். தமிழில் அது கதை சொல்லி மரபை கிரகித்துக் கொண்டது முக்கியமான அம்சம் எனலாம். கி.ராஜநராயணன், சண்முக சுந்தரம்,பூமணி, நாஞ்சில் நாடன் முதல் இமையம், அ.முத்துலிங்கம், மேலாண்மை பொன்னுச்சாமி, ஜாகிர்ராஜா வரை எண்ணற்ற உதாரணங்கள் இதற்கு உண்டு.மேற்குறிப்பிட்ட பட்டியல் முழுமையானது அல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை.

முன்னர் சொன்னது போல் செவ்வியல் நாவல் மரபு ஆழமாக ஊன்றாமல் எதார்த்தவாத நாவல்களுக்குள் நாம் ஈடுபட்டதென்பது சில சிக்கல்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து எதார்த்தவாத நாவல்களிலிருந்து நவீன நாவல்களை நாம் உருவாக்க முற்பட்டது சூழலை மேலும் சிக்கலாக்கியது.அவற்றில் பிரதானமானது என்னவெனில் எதார்த்தவாத நாவல்காரகள் எளிய கதை சொல்லிகளாக குறுகிக் கொண்டதுதான். இந்த நூலின் முன்னுரையில் எதார்த்தவாத நாவல்கள் என்றாலே நவீன நாவல்காரகளுக்கு இளக்காரம்தான் என்பதைப் போன்ற சொற்களை நாஞ்சில் நாடன் எழுதுவதற்கு இதுவே காரணம்.

நவீன நாவல்காரன் நாட்டார் மரபோடோ, எதார்த்தவாத மரபோடோ எந்த தொடர்பும் அற்றவன். அவன் செவ்வியல் நாவல்களின் வடிவப்போதாமை மற்றும் கருத்தியல் போதாமைகளின் வழி தனக்கான அழகியலை உருவாக்கிக் கொண்டவன் என்பதை போன்ற சூழல் ஒன்று நிகழ்ந்ததுவே இப்படி ஒரு உரையாடலுக்கான காரணம் என நாம் அவதானிக்கலாம். மேலும் கதைசொல்லி என்பவன் எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் அல்ல என்பதை போன்ற கருத்தியல் ஒன்றும் நமது சூழலில் நிலவுகிறது. இதற்கும் இந்த அடிப்படைக் கோளாறே காரணம் என நாம் கருத வேண்டியிருக்கிறது. நவீன நாவலின் பிதாமகன்கள் எனக் கருதப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், மிலரோட் பாவிச், ஓரான் பாமுக் போன்றவர்கள் தங்களை ஒரு கதை சொல்லி எனக் கூறிக் கொள்வதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.பின் நவீன காலத்தின் செல்வாக்கு மிக்க கருத்தியல்களில் ஒன்று வேர்களை தேடிப்போதல் என்பதாகும். மேலும் நவீன கால கருத்தியல்களை மறுப்பது என்பதும் அதன் பண்புகளில் ஒன்று. அந்த வகையில் நம் சமகாலத்திய நாவலாசிரியன் ஒருவன் தன்னை கதைசொல்லி எனக் கூறிக்கொள்வதில் எந்த ஆச்சர்யமும் கிடையாதுதான். ஆனால் எழுத்தாளனையும் கதைசொல்லியையும் சமமாக பாவிக்கும் பண்பு ஒன்று மேற்கூறியவர்களிடம் காணப்படுவதையும் நாம் கவனிக்கவேண்டும். இந்த எழுத்தாளன் என்பவன் செவ்வியல் நாவலாசிரியனின் தொகுத்துக்கூறும் பண்பை பெற்றிருப்பவன். ஆனால் எதையும் நிறுவி விட முயலாத பின் நவீன மனம் உடையவன். நம்முடைய சமகால எழுத்தாளர்களிடம் அரிதாக காணப்படும் இந்த பண்பே இந்த பரஸ்பர பிளவுக்குக் காரணமாக இருக்க கூடும்.

துருக்கித் தொப்பி

ஒரு விமர்சகனின் வேலை நாவலின் கதைச்சுருக்கத்தைச் சொல்வதல்ல உண்மையில் நாவல் என்பதும் வெறும் கதை மட்டுமல்ல. துருக்கித் தொப்பி எல்லா அசாதாரண நாவல்களையும் போலவே சீரழிவைப் பேசும் நாவல்.வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் துயரமான கதை. கே.பி.ஷே என்ற துருக்கித் தொப்பிக்காரர் குடும்பம் ஒன்று எப்படி வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்கி வக்கற்றுப் போனது என்பதைப் பேசும் கதை. கே.பி.ஷே குடும்பம் என்கிற ஒரு குறியீட்டின் வழியாக எண்ணற்ற நவீன இஸ்லாமிய குடும்ப வாழ்வை, இன்னும் சொல்லப்போனால் தமிழ் வாழ்வை அவர்களின் உணர்வுகளைப் பேசும் நாவல். மிகவும் கட்டுக்கோப்போடும் ரசனையோடும் வலியோடும் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். இறுதியில் நிறமிழந்து போன துருக்கித் தொப்பி ஒன்று வேம்பின் கிளைகளில் ஆடும் சித்திரத்தை நாவலாசிரியர் நம் கண்முன் விரித்துக் காட்டும் போது நாம் மனம் பொங்கி போகிறோம். கனத்த மனதுடன் நாம் நன்றாக வாழ்ந்த காலத்தின் நாஸ்டால்ஜியாவுக்குள் மூழ்குகிறோம். கே.பி.ஷேவின் மனைவியான பட்டாமாளுக்கு தான் எட்டுக்கல் பதிச்ச வீட்டுக்காரி என்பதிலும் ஆட்டுக்கறி சாப்பிடும் மேலான இனம் என்பதிலும் பெருமை அதிகம். தன் மருமகள் மேற்கு தெருவை சார்ந்தவளென்றும் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் என்றும் இளக்காரம் பேசுகிறாள்.நாவல் முழுவதும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மிக நுட்பமாக பதிவு செய்யப்படுகிறது. தன் மருமகள் அயலான் ஒருவனோடு தன் வீட்டிற்குள் பேசிக்கொண்டிருப்பதைக் கூட அனர்த்தமாகவே பார்க்கிறாள் பட்டம்மாள். உண்மையில் பட்டாமாள் இந்த சமூகத்தின் சராசரி மனிதர்களில் ஒருத்தி என்று பார்க்கும் போது இச்சமூகம் பெண் உடல் மீதான கண்காணிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம்முடைய பண்பாடு கலாச்சாரம் என்பதெல்லாம் பெண் உடலை மையமாக வைத்தல்லவா வரையறுக்கப்பட்டிருக்கிறது! மருமகள் பேரனுக்குப் பால் கொடுப்பதை மறைந்து நின்று பார்க்கும் கே.பி.ஷே, தன்னை விட இளைய ரகமத்துல்லாவை யாருமற்ற போது முத்தமிடும் மல்லிகா, குளிக்கும்,உடைமாற்றும் தாயை ரசிக்கும் ரகமத்துல்லா, கணவன் ஊரில் இல்லை எனத் தெரிந்து கொண்டு நூர்ஜகானிடம் பேச்சு வளர்க்கும் ரூபன், அதை அனுமதிக்கும் நூர்ஜகான். என காமம் பற்றிய நுட்பமான காட்சிப்படுத்தல்கள் நாவல் முழுதும் உள்ளது. இது குறித்து இன்னும் கூட விரிவாக ஜாகிர் எழுதியிருக்கலாம் என்று படுகிறது. ரகமத்துல்லாவின் வழியாக குழந்தைகளின் உளவியல் அழகாகப் பதிவாகிறது. தன் தாய் தன் மீது அன்பு செலுத்தாமல் போனதற்கு தன் தம்பிதான் காரணம் என நினைத்து ஒரு செங்கல்லை தம்பியென பாவித்து வன்மம் வளர்ப்பது. அந்த தம்பி காணாமல் போய்விட்ட போது தன் மீது சந்தேகப்படும் அம்மாவை நினைத்து மனம் வெம்புவது என ரகமத்துல்லாவின் உணர்வுகள் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், குடும்ப வன்முறை, பாலியல் சிக்கல்கள், குழந்தைகளின் உளவியல், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை நுட்பமான மானுட உணர்வுகளின் வழியாக மிகுந்த வலியோடு பேசுகிறார் ஜாகிர் ராஜா. இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டார மொழி இந்நாவலின் ஆகப்பெரிய பலம் எனலாம். நாவலோடு சேர்ந்து தமிழகத்தின் அரசியல் வரலாறு பேசப்படுகிறது. சுதந்திர காலம் துவங்கி தி.மு.க அதிகாரத்தை கைப்பற்றுவது வரையான அக்கட்சியின் வளர்ச்சி முகமும் தீவிர தி.மு.க காரனான அத்தாவுல்லா குடும்பம் நன்றாக வாழ்வதில் துவங்கி பிழைப்பு தேடி அவன் எங்கோ போவது வரை அவன் குடும்பத்தின் இறங்கு முகமும். எதிர் முரண்களாக கட்டமைந்து எதையோ உணர்த்த முயல்கின்றன. இதில் காட்டப்படும் உலகம் தமிழ்ச் சூழலுக்கு மிகவும் புதிது. இதில் சொல்லப்படும் தகவல்கள் வெகுமக்கள் நம்பிக்கைகள், பழமொழிகள்,சொலவடைகள் போன்றவைகள் தமிழ் இலக்கிய உலகம் இது வரை அறியாதது. அன்னமுகம்மதுவ பழிக்காதடா எனச் சொல்வது,பிறைபார்த்ததும் மனதுக்கு பிடித்தமானவரை பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை, மாட்டுக்கறியை பெரியாட்டுக் கறி என்பது போன்றவற்றை உதரணமாக சொல்லலாம். ‘Novel is an art of data’ என மார்க்வெஸ் சொல்வதை இங்கு நான் நினைத்துக் கொள்கிறேன். அப்படிப் பார்க்கும் போது எண்ணற்ற நுட்பமான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கும் ஒரு சமூக ஆவணம் என நாம் இந்த நாவலை தாராளமாகச் சொல்ல முடியும்.

துருக்கித் தொப்பி எனும் நாவல- ஓர் உரையாடல்

இந்த நாவல் மூன்று விதங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கதைசொல்லி கதையைச் சொல்வது போலவும் எழுத்தாளன் விவரிப்பது போலவும் கதாபாத்திரங்கள் தங்கள் மன உணர்வுகளைப் பேசுவது போலவுமாக மூன்று முனைகளில் இக்கதைகளின் சம்பவங்கள் மாறி மாறி கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டமைப்பு நாவலுக்கு ஒரு சரளத்தன்மையை வழங்கியிருக்கிறது. எந்த ஒரு முறை வாசிப்பில் தொய்வு ஏற்படுத்த துவங்குகிறதோ அந்த முறை கைவிடப்பட்டு வேறொரு முறை கையாளப்படுவதன் மூலம் நாவல் தன்னை வேகமாக முன்னகர்த்திக் கொண்டே போகிறது. தன் முன்னுரையில் நாஞ்சில் நாடன் ஜாகிர் ஏன் இவ்வளவு சுருக்கமாக எழுதுகிறார் என ஆதங்கப்பட்டிருப்பதோடு எனக்கும் உடன்பாடு உண்டு.என்னுடைய இரண்டாம் வாசிப்பில் மிக விரிவாக எழுத வேண்டிய இடங்களை கூட சுருக்கமாக எழுதுகிறாரே என ஆதங்கத்தோடேயே வாசித்தேன்.ஒவ்வொரு கலைவடிவத்திலும் உள்ள அடிப்படையான சிக்கல் என்பது அதில் மெளனத்தை எங்கு ஒளித்து வைப்பது என்பதுதான். இசையில் ஒவ்வொரு துடிப்புக்கும் அதாவது ஒவ்வொரு பல்ஸக்கும் இடையில் அதன் மெளனம் உள்ளது. கவிதையில் மெளனம் என்பது சொற்களின் இடையில் உள்ளது.சிறுகதையில் கதை முடிந்ததும் உள்ளது. உண்மையில் நவீன சிறுகதைகளில் மெளனம் சொற்களின் இடையேயும் உள்ளது.அப்படிப்பார்க்கும் போது நாவல்களில் மெளனம் இரண்டு அத்தியாங்களுக்கான இடைவெளியில் அல்லது இரண்டு சம்பவத்துணுக்குகளுக்கான இடைவெளியில் உள்ளது எனலாம்.மெளனத்தைக் கட்டமைப்பதிலும் காலத்தை தரிசனப்படுத்துவதிலும் வெற்றியடைந்த நாவல்களே மிகச்சிற்ந்த நாவல்களாக உள்ளன.

துருக்கித் தொப்பி நாவலின் பலவீனமான பகுதி ஏதாவது இருக்குமானால் அது மெளனத்தை கட்டமைப்பதில் ஏற்பட்டிருக்கும் சிறு சரிவே ஆகும். ஏற்கனவே சொல்லி விட்டதை மீண்டும் சொல்வதை போன்ற நினைவுதரும் சொற்றொடர்கள். போதிய இடைவெளியின்றியும், அளவுக்கதிகமான இடைவெளிகளோடும் கோர்க்கப்பட்டிருக்கும் சம்பவக் கோர்வைகள் போன்றவை ஒரு தேர்ந்த வாசகனுக்கு சலிப்பு தருபவை. ஆனால் கதையைச்சில இடங்களில் முன்னுக்குப் பின்னாக மாற்றி மாற்றி சொல்வதன் மூலம் தான் சொல்லவந்த காலத்தை மிகச் சரியாக தரிசனப்படுத்தி நாவலின் மையமான உணர்ச்சியை வாசக மனதில் அழுத்தமாக பதிய வைத்ததன் மூலம் நாவல் வெறும் சம்பவக் கோர்வையாக மாறிப்போகிற ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பியிருக்கிறது எனலாம்.

ஜாகிர்ராஜா எனும் கதைசொல்லி

கி.ராஜநாராயணனை ஒரு கதைசொல்லி எனச் சொல்ல நமக்கு எந்த தயக்கமும் கிடையாது. அதுபோலவே சுந்தரராமசாமியை ஒரு எழுத்தாளர் என்று நாம் துணிந்து கூறலாம். ஆனால் ஜாகிர்ராஜாவை கதைசொல்லி என்றோ எழுத்தாளர் என்றோ எளிய சட்டகங்களுக்குள் அடக்கி விட முடியாது.இது அவரின் மிக முக்கியமான பலம் மற்றும் பலவீனம் எனலாம்.உண்மையில் ஜாகிருக்கும் முந்தைய தலைமுறையை சேர்ந்த எதார்த்தவாத நாவலாசிரியர்கள் பலருக்கும் இந்த எடுகோள் பொருந்தும். ஆனால் எந்த ஒரு நாவலாசிரியனுக்குள்ளும் கதைசொல்லி, எழுத்தாளன் என்கிற இரண்டு ஆளுமைகளில் யாரேனும் ஒருவரே அழுத்தம் பெற்று இருக்க முடியும்.அப்படிப் பார்க்கும் போது ஜாகிரை நாம் கதைசொல்லி என்றே கொள்ளமுடியும். துருக்கி தொப்பி நாவலை விடவும் முதலிரண்டு நாவல்களை பார்த்தால் இது உண்மை எனப்புரியும். ஆனால் அப்படியான எளிய தர்க்கப்படுத்தல்களுக்கெல்லாம் அடங்காத வீச்சு அவரின் எழுத்துகளுக்கு உண்டு என்பதற்கு துருக்கி தொப்பி நாவலே சாட்சி. இந்த நாவலில் எழுத்தாளனும் கதைசொல்லியும் நுட்பமாக இணைந்தும் முரண்பட்டும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டும் ஒரு அழகான நாவலை உருவாக்கிகாட்டியிருக்கிறார்கள். இந்த நாவலின் முன்னுரையில் இந்த நாவல் என்னுடைய முதல் இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டது என அவர் கூறுவதற்கு வடிவமைப்பில் செய்திருக்கும் இந்த மாற்றமே காரணம்.

ஜாகிர் ராஜா கதை சொல்லும் போது நாம் அந்த சொல்லலின் அழகில் மயங்கி அதை பின் தொடர்கிறோம். ஒரு கதை சொல்லிக்கு சொல்லப்படுவதின் முக்கியத்தை போலவே சொல்லும் முறையும் முக்கியமானது அல்லவா.எட்டுகல் பதிச்ச வீட்டின் அத்தாவுல்லா நூர்ஜஹான் திருமணம் பற்றி சொல்லும் விதமே மிக சிறந்த உதாரணம். அவ்வளவு ரசித்து ஒரு கதையை சொல்லிச்செல்ல சொல்லின் ருசியறிந்த ஒரு மனதாலேயே முடியும்.ஆனால் அவரின் முதலிரண்டு நாவல்களோடு ஒப்பிடும் போது இதில் ஜாகிர் என்கிற கதை சொல்லியை அல்லது அவரது ஆளுமையை சற்று குறைவாகவே காண நேர்கிறது. உண்மையில் இதை நான் ஒரு சரிவாக பார்க்கவில்லை மாறாக மிக சரியான ஒரு ஆரோக்கியமான பயணமாகவே பார்க்கிறேன். ஒரு கதை சொல்லியாக இருந்து கொண்டு ஜாகிர்ராஜாவின் அளவிற்கு எழுத்தாள ஆளுமையை வளர்த்துக் கொண்டவர்கள் நாஞ்சில் நாடன், இமையம் போன்ற ஒரு சிலரே. ஜாகிர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்வேன்.

ஜாகிர்ராஜா எனும் ஓர் எழுத்தாளன

மேற்கின் நாவல் ரசனை மரபில் ஒரு நாவல் எப்படி துவங்கப்படுகிறது அல்லது எப்படி முடிகிறது என்பதை சிலாகித்துப் பேசும் வழக்கம் உண்டு. மகிழ்ச்சியான குடும்பங்களின் கதை ஒன்று போலவே இருக்கும். ஆனால் மகிழ்ச்சியற்ற குடும்பங்களின் கதை ஒவ்வொன்றும் வேறு வேறு எனத் துவங்கும் அன்னாகரினீனாவின் துவக்கமும், நாளை மற்றுமொரு நாளே என முடியும் கான் வித் தி விண்ட் நாவலின் முடிவும். காலங்களில் அதுவே மிகச்சிறந்ததாக இருந்தது, காலங்களில் அதுவே மோசமாக இருந்தது என துவங்கும் டேல் ஆப் டூ சிட்டிஸ் நாவலின் துவக்கமும் ரசனை மரபை சேர்ந்த விமர்சகர்களால் இன்றும் கொண்டாடப்படுவது.

நல்ல முறையில் துவங்கப்பட்ட ஒரு நாவலானது வாசகனை காந்தம் போல் உள் இழுக்கும் தன்மை கொண்டது. நல்ல முறையில் ஒரு நாவலை துவங்குவதற்கு ஒரு நாவலாசிரியன் வெறும் கதை சொல்லியாய் இருந்தால் போதாது அவன் ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும்.

எட்டுகல் பதிச்ச வீட்டுக்கு குட்டி லெவை மகள் நூர்ஜஹான் பேகம் வாக்கப்பட்டு வந்த நாளில் தலைவாசலில் நின்றிருந்த வேம்புகள் இரண்டும் பூப்பூக்கத் துவங்கியிருந்தன’ என கச்சிதமாக, அழகாக துவங்குகிறது இந்நாவல். முதல் அத்தியாயத்தின் முதல் வரியில் பூப்பூக்க துவங்கிய அந்த வேப்பமரத்தில் ஒன்று இறுதி அத்தியாயத்தில் உதிரும் இலை கூட்டிப்பெருக்க மாட்டாமல் வெட்டி எறியப்படுகிறது. இந்த இரண்டு காட்சிகளும் நாவலின் மையத்திற்கு அழகான குறியீடாக மாறுகின்றன. அது போலவே நாவலின் துவக்கப்பகுதியில் கம்பீரமாக தொப்பி மாட்டியில் காட்டப்படும் துருக்கித்தொப்பி இறுதி பகுதியில் நிறம் வெளுத்து நைந்து இளைய வேம்பின் கிளைகளில் ஆடிக்கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. இது போன்ற அம்சங்களே ஜாகிரை ஒரு தேர்ந்த எழுத்தாளராக மாற்றுகிறது. தான் உணர்ந்த சமூகம் சார்ந்த சிக்கல்களை, உறவுச்சிக்கல்களை வலிந்து திணிப்பதாகத் தெரியாமல் கதையின் போக்கில் நிகழ்வுகளின் போக்கில் வாசகனாக வந்தடையும்படி செய்திருப்பது இன்னொரு உதாரணம்.

ஜாகிர்ராஜா எனும் ஆளுமை

எழுத்தின் எந்த வடிவத்தச் சேர்ந்த கலைஞனாக இருந்தாலும் ஒரு ஆளுமையாக அவன் மலர வேண்டும். ஆளுமையாக மலர்தல் என்பது இலக்கிய பொதுப்புத்தியால் அங்கீகரிக்கப்பட்ட படைப்புகளை தொடர்ந்து வழங்குதல் அல்ல. அது, ஒரு கலைஞன் தனது தொடர்ந்த தேடல்கள் வழியாக வாழ்வு பற்றிய தனது அவதானங்கள், தரிசனங்கள், தர்க்கங்கள் ஆகியவற்றை தன் மொழிக்குள் கொண்டுவருவதன் மூலம் அம் மொழியின் ஒட்டு மொத்த மானுட அறிவை மேம்படுத்துவது அல்லது விரிவுபடுத்துவது ஆகும்.

ஜாகிர்ராஜாவிடம் ஒரு ஆளுமைக்கான எல்லா பண்புகளும் உண்டு. இப்படிச் சொல்வதால் அவர் அனைத்தையும் சாதித்துவிட்டார் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் முன்பே சொன்னது போல எழுத்தாளனையும் கதை சொல்லியையும் சரியான விகிதத்தில் இணைக்கிற ஆளுமைத்திறன் அவரிடம் உண்டு. தொப்பம்பட்டி புளியம்பட்டித் தங்கமணலில் முளைத்த வேகவைத்த சுவைமிக்க பிஞ்சுக் கத்திரிக்காயும் நீலகிரிப் பனியில் தோண்டியெடுத்த உருளைக்கிழங்கும் சண்முக நதித்தீரத்தில் சொந்த தோப்பில் பறித்த நாட்டு மாங்காயும் மனுஷாளின் உயரத்துக்கு போட்டியாக வளர்ந்த சதைப்பற்றுள்ள முருங்கைகளுடன் குறும்பாட்டுக் கறியும் மசாலாக் குழுமமும் இணைத்துச் செய்கிற ஊர்குழம்பென்றால் அத்தனை இஷ்டம் பட்டமாளுக்கு என்ற வரிகளில் மேற்சொன்ன அந்த சரியான சேர்மானத்தை நாம் பார்க்கலாம். இந்த அசாதாரண சேர்மானமே மார்க்வெஸ் எனும் கலைஞனைத் தந்தது. பாமுக் எனும் ரஸவாதியைத் தந்தது. உலகின் மிகச்சிறந்த கதைசொல்லி என பாவிச்சை பெருமையடையச் செய்தது.

இறுதியாக சொல்வதெனில், சில போதாமைகள் இருந்தாலும் துருக்கித் தொப்பி ஒரு நல்ல நாவல். அதை விட முக்கியமான விஷயம் ஜாகிர்ராஜா துருக்கி தொப்பியை விட மிகச்சிறந்த நாவல்களை எல்லாம் எழுதும் அளவுக்கு ஆளுமை நிறைந்தவர். இதற்கு இவரது முதலிரண்டு நாவல்களுக்கும் இந்த நாவலுக்கும் உள்ள வித்தியாசமே சாட்சி.


3 comments:

  1. அன்புள்ள ஜாகீர் ராஜா சிறந்த விருதை பெற்றிருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்ந்த்துக்கள் உங்கள் படைப்புகளில் மீன்காரத்தெரு வாசித்திருக்கிறேன். நல்ல நாவல். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete