(கீரனூர் ஜாகிர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா நாவலை முன்வைத்து...)
யமுனாநதிக்கரையில் காண்டவ வனத்தில் வாழ்ந்த நாகர்களை யாராளும் வெல்லமுடியாது. அவர்கள் அந்த காட்டை சூரையாட யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அது அவர்கள் வாழ்விடம் மட்டுமல்ல தாய்மடியும் கூட. அவர்கள் இருக்கும் வரை அந்த இடத்தில் எந்த விதமான புதிய நகரத்தையும் நிர்மாணிக்க முடியாது என்று அறிந்த பாண்டவர்கள் அவர்களை கூண்டோடு அழிக்க முடிவு செய்தனர். அவர்கள் யாவரும் வெளிவராத நாளில் அந்த வனத்தைச் சுற்றி நெருப்பிட்டனர். கானகம் பற்றி பெருநெருப்பு சூழ்ந்து வெப்பம் கூடியதும் மழைபெய்யத் துவங்கியது. மழை நீர் நெருப்பை அனைக்காமல் இருக்க யமுனாநதிக்கரை ஓரங்களிலிருந்து அர்சுனனும், கிருஷ்னனும் அம்புகளால் மழையை திசை திருப்பினர். பற்றி எரிந்த பெரு நெருப்பில் கானகம் வெந்து தனிந்தது. அதில் தப்பி அபயம் கேட்ட ஒரே உயிர் மயன் என்ற மனிதன் மட்டுமே. கடுமையான தீக்கயங்களுடன் அர்சுனன் அமைத்த தீவிழாப்பாதையின் வழியே தப்பினான். தப்பியவனுக்கு இது இயல்பாய் எழுந்த தீ அல்ல. கானகத்தை அழிக்க மூட்டப்பட்டது. அதுவும் திட்டமிட்டு பாண்டவர்களால் மூட்டப்பட்டதென புரிந்தது.
தன் இனவாசிகளுக்கும் தன் வாழிடமான வனத்திற்கும் ஏற்பட்ட அழிவிற்கு பழி தீர்த்துக்கொள்ள, பாண்டவ வம்சத்தை அழிக்க தன்னால் தீ மூட்ட முடியும் என மயன் நம்பினான். வடிவ சாஸ்த்திரத்தையும் சிற்ப மரபையும் கற்றிருந்த மயன் என்ற மாய தச்சன் பாண்டவர்கள் அனுமதியுடன் அவர்களுக்கு பரிசளிக்க நுட்பத்துடன் சூட்சுமங்களை இழைத்து மணிமண்டப மாளிகையை உருவாக்கினான். எரிந்து தனிந்த காண்டவ வனத்தில்தான் அந்த மாளிகை உருபெற்றது. உண்மை போல தெரியும் பொய்களும் பொயாய் தோன்றும் உண்மைகளும். முடிவது போல் தெரியும் பாதை முடியாத சுழலாய் தொடர்வதும் என இயற்கையையும் புனைவையும் கொண்டு அவன் கட்டிய அந்த மாளிகையில்தான் துரியோதனன் விழுந்தான். பொய்தோற்றத்தில் அவன் தவறி விழுந்ததை பார்த்து பாஞ்சாலி சிரித்தாள். அதன் பிறகுதான் அவர்களுக்குள் ஆயிரமாயிரமாய் அழிவுகள் ஆரம்பமானது.
மயனின் காண்டவ வனங்களாக இன்றைக்கு பெண்கள் காட்சி தருகின்றனர். தொலைகாட்சிகளில், பத்திரிக்கைகளில், சமூக பழக்கவழக்கங்களில் பெண்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் சூறையாடப்படுகின்றனர். நடந்ததை உணர்ந்து அவர்கள் தப்பிக்கும் வழிகள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற அம்புகளால் அழிக்கப்படுகிறது. குடும்பம் என்பது அர்சுனன் அமைத்த தீவிழாப்பாதை போல் பாதுகாப்பு அளித்தாலும் அங்கும் அவளின் நிலை இரண்டாம் பட்சம்தான். ஆழிசூழ் உலகில் மனித சமூகம் இப்படி பல காண்டவ வனங்களை அழித்துக்கொண்டே இருக்கிறது. தனது இச்சையின் தீரா பசிக்கு முதல் பலியாக பெண்களை கேட்கும் ஆண்கள் சமூகத்திற்கு எதிராக புனைவின் வழியே எழுந்து நிற்பவள்தான் அலிமா. வடக்கேமுறி அலிமா?
இதிகாச புனைவைப்போல நிகழ்கால நடப்பை புனைவாய் உருகொண்டு வடக்கேமுறி அலிமா என்ற இந்த நாவல் எழுந்து நிற்கிறது. கீரனூர் ஜாகிர்ராஜா அலிமா என்ற பாத்திரத்தின் மூலம் ஆண்கள் அழித்து துடைத்து எரிந்த பல காண்டவ வனங்களின் மாய தச்சனாக அலிமாவை எழுந்து நிற்க வைக்கிறார். பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சி.ஐ.டி ஆபீஸர், வாழ்ந்து கெட்டவள், காதலானால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எயிட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்தரீகம் செய்பவள், சினிமா வாய்ப்புத் தேடி சோரம் போனவள் என இந்த நாவலில் அலிமாவை அறிமுகம் செய்கிறார். பாவம் நாவலாசிரியருக்கு அவளைப்பற்றி முழுமையாய் தெரியவில்லை. அவள் மயனின் மாளிகையைப் போல புரிந்துக்கொள்ள முடியாதவள். படைப்பாளியின் படைப்பை மீறி அவள் எழுந்து நிற்கிறாள். அவள் சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், நாவல் ஆசிரியர், ஒரு கடைநிலை ஊழியனின் துன்பம் புரிந்தவள், மனிதர்களின் ஆழம் புரிந்தவள், திமிரி எழுபவள், தண்ணீரைப் போல விழும் இடங்களில் ஒன்றுபவள், மின்னலைப் போல அதிர்ச்சியளிப்பவள், ஒரு பெண்ணில் உள்ள ஆண் தண்மையை உணர்ந்தவள்
இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இந்த நாவலில் காலவரிசையில் தொடர் பயணம் இருக்காது. புட்டைப் பிசைகையில் அலிமாவின் கைகள் காலத்தைப் புரட்டிப் போடுவது போல நாவல் கலைந்து பயணிக்கும். ஒரு நாடோடியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் தொகுப்பு இந்த நாவல். அவள் கால்கள் நடக்கும் திசைகளில் எதிர்படும் கழிப்பறைகளில் அவளது வாழ்க்கையை பதிந்துச்செல்கிறாள். 3800 கழிப்பறைகளில் அவள் எழுதியதை "என்டெ யாத்ரா" என்ற சுயசரிதை கோழிக்கோடன் என்ற பதிபாளரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுயசரிதையின் பலபகுதிகளும் அதில் இல்லாத அவளது வாழ்வும் ஊடாடி இந்த நாவல் பயணிக்கிறது. பெண்கள் படும் துயரங்களை அதன் பல பரிமாணங்களை இப்படி ஒரே பாத்திரத்தை வைத்து இதுவரை யாரும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. அப்படி சொல்ல அலிமா என்ற பாத்திரம் மிகவும் காத்திரமாய் படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாவலை படித்து முடிக்கின்றவரை அவள் குறித்த ஒரு பிம்பத்திற்கு வரமுடியாது. படித்து முடித்த பின்னரும்தான். அதனால்தான் அவள் காண்டவ வனத்தின் மாளிகையாய் காட்சியளிக்கிறாள்.
"உன்னை மனநலக் காப்பக உரிமையாளரின் புத்திரி என்று அறிந்துகொள்ள அரைமணி நேரம் போதுமானதாயிருந்தது. அந்த காப்பகத்தில் அடைப்பட்டிருந்த ஸ்திரீகளில் உனக்கு மட்டுமளிக்கப்பட்ட ஒரு சில மௌனம் அரும்பிய சௌகரியங்களுக்குள் நெளிந்து கொண்டிருந்தது அந்த விலாசம்" என அவள் கடிதம் எழுதுகிறால் எனில் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்பட அவள் எவ்வுளவு நுட்பமானவள் என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா என்ன? இயலாமையின் பிம்பமாய் காட்சியளிக்கும் பெண்கள் மீதான வன்முறைகள் தினமும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. பல பெண்கள் இவைகளை எதிர்த்துத் தங்கள் வாழ்வின் ரூபத்தில் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பெண்களின் எதிர்வினைகள் கலவரமாக, அடங்கதா தன்மையென, மோசமான செயலாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சித்தரிப்புகள் பெரும்பாலும் ஆண்களின் கண்ணோட்டத்தில் தீர்மாணிக்கப்படுவதாகும். இந்த நாவல் அலிமாவின் உருவில் சமூக பொதுவெளியை நோக்கி நிறைய கேள்விகளை எழுப்புகிறது.
"அவள் புறப்பட்டிருந்தாள். அவள் உமிழ்ந்து செல்லும் புகை அந்தரத்தில் சுவடுகளைப் போல பதிந்து மறைந்தது". இப்படி வாசகனை வசீகரிக்கும் உவமைகள் நிறைந்து கிடக்கும் இந்த நாவல் படிக்கின்ற வாசகர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். சைடு, அப்பர், லோயர், முன், பின் நவீனத்துவவாதிகளை நைய்யப்புடைக்கும் எழுத்துப்பாங்கு இது. நையாண்டியாய் பல விஷயங்களை கேள்விக்குள்ளாக்குகிறார் ஜாகிர்ராஜா. விருதுகளின் அரசியலை முட்டைச் சிம்னி விருது, கட்டஞ்சாயா விருது, ஏத்தன் பழம் விருது என அலிமாவின் மூலம் பகடி செய்கிறார். நாவலின் இடையில் நாவல் எழுத்தாலுனுக்கும் படிக்கும் வாசகனுக்கும் இடையில் ஒரு விவாதம் நடக்கிறது. மொத்த கதையையும் அலிமாவின் பெரியப்பா வனத்தில் குட்டி ஹபீபல்லா அவளின் பிறப்புக்கு முன்பே எழுதியது போல ஒரு திருப்பமும் உள்ளது.
"அக்கம்மா இதைகுறித்து நீ பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். இந்த லோகத்தில் நிர்கதியான விளிம்புநிலைப் பெண்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ அங்கெல்லாம் ஆண்கள் சுதந்திரமாக நடத்துகின்ற காரியங்கள் தானே இவை?" என அலிமா தனது மனநலக் காப்பக நட்புக்கு எழுதும் கடித்தத்தில் வினா எழுப்புகிறாள். இந்த நாவல் முழுவதும் இந்த கேள்வியின் எதிர்ப்புகுரலாய் அலிமா அலைந்து திரிகிறாள். அவள் கபுறுகளின் மீது அதாவது இஸ்லாமிய கல்லரைகள் மீது பால்ய வயதில் நடத்திய விசாரனையின் தொடர்ச்சி இது.
144 ஆம் பக்கத்தில் நாவல் முற்று பெருகிறது. அல்லது முற்றுபெறாமல் தொடர்கிறது. எப்படி என உங்களால்தான் தீர்மாணிக்கமுடியும். வடக்கேமுறி அலிமாவை சந்திக்காமல் அது சாத்தியமல்ல! படித்து தீர்மாணியுங்களேன்.
நன்றி: மானுட விடுதலை...
No comments:
Post a Comment