Monday, January 9, 2012

சித்தி ஜூனைதா பேகம் (1917-1998)

இன்னுமொரு ஐந்தாண்டுகளில் சித்தி ஜுனைதா பேகம் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் நூற்றாண்டு தொடங்குகிறது என்று நான் இப்போது சொல்லுவேனேயானால் நூற்றாண்டு விழாக்களைத் தாராளமாகச் சளைக்காமல் வெகு விமர்சையுடன் கொண்டாடிப் பழக்கப்பட்ட நம் தமிழ்ச்சமூகம் என்மேல் வியப்பானதொரு பார்வையை வீசக்கூடும். அவ்வை, ஆண்டாள் தொடங்கி இன்றைக்குப் பெரும் வீச்சுடன் உடலரசியலை எழுதிச் செல்லும் பெண் படைப்பாளிகள் வரை ஒரு பிரும்மாண்டமான பட்டியலொன்று கண்முன் விரிந்திருப்பினும், பெண் எழுதுவது ஏனோ நம்மவர்க்கு வியப்பளிக்கக் கூடிய சங்கதியாகவே இருக்கிறது.

காலகாலமாகப் பெண்களை அகப்பையும் கையுமாக அடுக்களைக்குள் அடக்கி வைத்த ஆணாதிக்க மனோபாவத்தையுமே கூட நான் மேலே குறிப்பிட்ட வியப்புக்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம். என்னதான் கலை இலக்கியமும், பெண் விடுதலையும் பேசிக் களித்தாலும் பெண்ணை நாம் ஒரு எல்லைக்கோடு வரைக்கும்தான் அனுமதிக்கின்ற மன விசாலத்தைப் பெற்றிருக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்களை வேசைத்தனம் செய்பவர்கள் என்று நாக்கூசாமல் சொல்வதற்கு நம்முடைய ஆன்மீகவாதிகளை அனுமதித்திருக்கிறோம். கற்பு உள்ளிட்ட கலாச்சாரப் பண்பாட்டு வெளியில் பெண் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இஸ்லாம் மதம் ஒருபடி மேலேபோய் கோஷா, பர்தா, தலாக் என்று விதம் விதமாய்ப் பெண்களை முடக்கி வைப்பதில் நியாயம் கற்பிக்கிறது. சமுதாயக் காவலர்கள் இல்லையென்று மறுப்பர். இஸ்லாம் சமூகப் பெண்கள் வாழையடி வாழையாய் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்பட்டவர்களாகவே மாறிப்போய் மனம் மெய் மொழியால் தம்மை அடங்கிச் செல்பவர்களாகவும், அடிபணிந் தவர்களாகவுமே உணர்ந்திருக் கின்றனர்.
இந்த வாழ்வு அந்தச் சமூகப் பெண்களுக்கான முழுமையான வாழ்வாகாது என்பதை ஒரு சிலர் உணர்ந்திருக்கக்கூடும், ஆனால் மௌனம் தான் இப்போதைக்கு எதிர்வினை. இஸ்லாம் சமூகத்தில் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்படுவதிலிருந்து இந்தத் திட்டமிட்ட வன்முறையானது தொடங்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட இரண்டு மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைக்கு வாழ்க்கையை எதிர்கொள்வதில் எத்தனை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எழுத மனம் கூசுகின்றது.

எல்லோரும் குறிப்பிடுவதுபோல ஒரு மூடுண்ட சமூகமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் அம்மக்கள் ஒருவித மறைமுகமான பெருமிதம் கொண்டிருக்கின்றனரோ என்னும் சந்தேகமும் கூடவே எழுகிறது.
அத்தி பூத்தாற்போலவே அங்கிருந்து பெண்கள் எழுத வருகின்றனர். அவர்களும் மதம் வலியுறுத்துகின்ற அறக்கோட்பாடுகளுக்கு உட்பட்ட பேனாக்களோடும், மனநிலையுடனுமே வருகின்றனர். இவை அறிவுத்தளத்தில் என்ன விளைச்சலைத் தந்துவிடப் போகிறது? தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இஸ்லாம் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாகத் தோப்பில் முஹம்மது மீரான் தொடங்கி குறைந்தது ஐந்தாறு ஆளுமைகளை உடனடியாக நம்மால் அடையாளங் காட்ட முடியும். ஆனால் நானறிந்தவரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன்வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு?

இது குறித்து விவாதிக்காமல் பெண்ணெழுத்தின் அடர்த்தி குறித்து சிலாகிப்பதில் பொருளில்லை என்றே கருதுகிறேன். தலித் சமூகம் சார்ந்து எழுத வல்ல பெண் பிரதிநிதிகள் உள்ளனர். பெண்களுக்கான சகல பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்ப இன்றைக்கு அவரவர் தரப்பில் பிரதிநிதித்துவங்களுக்குக் குறைவில்லாத நிலையில், பெண்கள் அறிவு சார்ந்த தளத்தில் இயங்குவதற்குக் கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் விதிக்கின்ற ஓரிடத்திலிருந்து போதுமான அளவு பதிவுகள் இல்லாமல் பெண் எழுத்து எவ்வாறு பூரணத்துவம் பெறும்? இஸ்லாம் சமூகத்துப் பெண்களை எழுதவிடாமல் தடுக்கின்ற கரங்கள் எவை? இதற்கு மாற்றாக நாம் என்ன எதிர்வினை நிகழ்த்தப் போகிறோம் என்கிற கேள்வியை இக்கட்டுரையின் வாயிலாக உங்களிடம் முன்வைக்கிறேன்.

பெண் எழுதுவதா என்று பிற்போக்குத் தனத்துடன் கேள்வி எழும்பத் தோதான இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், ஒரு தமிழ் முஸ்லிம் பெண் துணிச்சலாக எழுத வந்தது ஆச்சரியகரமானது. சித்தி ஜுனைதா பேகம் 1917ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகூரில் பிறந்தவர். தந்தை ஷரீப் பெய்க் ஒரு பன்மொழி அறிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும் அறியப்பட்டவர்.

நாகூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்த அறிஞர் சி.என். அண்ணாதுரையின் முன்னிலையில் தைப்பொங் கலைக் குறித்து கவிதை மொழியில் பேசி அவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். மற்றொரு சகோதரரான முஜீன் பெய்க் ஒரு பத்திரிகை ஆசிரியர். காரைக்காலிலிருந்து ‘பால்யன்’ என்றொரு இதழைப் பதிப்பித்து பல்லாண்டுகள் நடத்தியிருக்கிறார். இவ்வாறு ஒரு இலக்கியப் பின்புலத்துடன் சித்தி ஜுனைதா பேகம் இயங்கி வந்ததையும், முனவ்வர் பெய்க் அவர் எழுதுவதற்கு உந்துதலாக இருந்தவர் என்பதையும் கவிஞர் நாகூர் ரூமியின் மூலமாக நாம் அறிகிறோம். ரூமிக்கு ஜுனைதா பேகம் உறவு முறையில் பெரியம்மா. ஆச்சிமா என்று அவரை ரூமி அன்புடன் விளிக்கிறார்.
‘கன்னித் தமிழுக்கு இனிமை சேர்த்த
கவிஞர்களைத் தந்த நாகூராம்....’

என்கிற வரிகளுள்ள காயல்பட்டினம் ஷேக்முகம்மது பாடிய இனிமையான பாடலைக் கேட்டிருக்கிறேன். நாகூருக்கு அப்படிப்பட்ட தனிச் சிறப்பு உண்டு. இஸ்லாம் சமூகத்தின் எண்ணற்ற புலவர்களையும் அறிஞர்களையும் வளர்த்தெடுத்த பூமி அது. நாகூரில் அடக்கம் பெற்றுள்ள சாகுல்ஹமீது வலியுல்லா நபிமுகம்மதுவின் வம்சாவழியைச் சேர்ந்தவர், மெய்ஞானச் சிறப்புள்ளவர் என்பது யாவரும் அறிந்த செய்தி. சாகுல்ஹமீது ஆண்டகையின் பிறந்தநாளை முன்னிட்டு நாகூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பிற சமயத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் மற்றொரு எழுத்தாளரான ஆபிதீன் நாகூரைச் சேர்ந்தவர். தமிழில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதாவின் பூர்வீகமும் நாகூர்தான். இவற்றைச் சித்தி ஜுனைதாவின் பிறப்பிடம் குறித்த கூடுதல் தகவல்களாகக் கொள்ளலாம்.

ஜுனைதா பேகத்தின் கல்வி குறித்து நாம் அவதானிக்கையில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்ள வேண்டியுள்ளது. மற்றெல்லா இஸ்லாமியப் பெண்களையும் போலவே ஜுனைதாவும் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்புவரை ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு கிடைத்தால் போதுமானது என்று சமூகம் தீர்மானித்திருக்கிறது. எட்டு வயதுக்குமேல் ஒரு பெண் கல்விச்சாலைக்குச் செல்வது தடுக்கப்பட்டதற்கான பின்னணியை நாம் உளவியல் ரீதியாக அணுகினால், பெண்ணின் ஒழுக்கம் சார்ந்து பெற்றோர் கொள்ளும் அச்சமும், திருமணம் முடிந்து கணவனைப் பராமரிக்கப் போகின்ற பெண்ணுக்குக் கல்வி அவசியமில்லை என்கிற பிற்போக்கு எண்ணமுமே காரணமாக இருக்கமுடியும். இத்தனைக்கும் ஜுனைதாவின் தகப்பனார் கல்வியின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்தவர்.

மூன்றாம் வகுப்பு என்னும் ஆகக்குறைந்த கல்வித் தகுதியுடன் மட்டுமே 1930களில் ஒரு முஸ்லீம் பெண் புதினங்களும் கட்டுரைகளும் எழுதி, குறிப்பிடத்தக்க ஆளுமையாக உருவெடுத்ததற்குப் ‘பரம்பரை வித்து’ தான் காரணம். காலகாலமாகத் தொடர்ந்து ஊறிக் கொண்டிருந்த இலக்கிய மற்றும் ஆன்மீக வித்து அது என்கிறார் நாகூர் ரூமி. மேலும் பாவினங்களில் வண்ணம் அதிகமாகப் பாடிக் குவித்த வண்ணக்களஞ்சியப் புலவரின் பரம்பரை என்று தன்னை ஜுனைதா பேகம் கருதியதும் காரணமாக இருக்கலாம்.

வாழ்ந்த காலத்தில் சமூகத்தால் புதுமைப் பெண்ணாகக் கருதப்பட்ட அவருக்குப் பால்ய விவாகம்தான் வாய்த்திருக்கிறது. பன்னிரண்டு வயதில் பகீர்மாலிமார் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் பகீர் அவர் கற்பனை செய்து வைத்திருந்த மாதிரியான கணவரல்ல என்று தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியதாகவே அறிகிறோம். பன்னிரண்டு வயதில் திருமணம் நடைபெற்று, நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, பதினாறு வயதில் விதவைப் பட்டம் சுமந்த வாழ்வு சித்தி ஜுனைதா பேகத்தினுடையது.

இன்றைக்குப் பெண்ணின் திருமண வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 வயதை அடையும்போதுதான் ஒரு பெண் மன, உடல்ரீதியான வளர்ச்சியும் கர்ப்பத்தைத் தாங்குகின்ற சக்தியும் பெறுகிறாள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 1930களில் மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பின்னும் இஸ்லாமியப் பெண்ணின் திருமண வயது 18க்கும் கீழேயே இருக்கிறது. அவள் பூப்பெய்திய நாளிலிருந்தே மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கி, பதினாறே வயதிற்குள் முதல் குழந்தையைப் பெற்று முப்பது வயதுக்குள் பாட்டியாகி முதுமையை இளமையில் வரவேற்கும் அவலம் சபிக்கப்பட்டிருக்கிறது. அவளுடைய அறைக்குள் வெளிக்காற்று நுழைவதற்கான சாத்தியதைகளே இல்லை. உள்ளேறும் பத்திரிகைகள் எல்லாமும் இஸ்லாமிய அறநெறிக் கோட்பாடுகளை வலியுறுத்துவனவே. சிறுபத்திரிகைகள், நவீன இலக்கியம், மாற்றுசினிமா இத்யாதிகளை அவளறியாள்.

முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் சித்தி ஜுனைதா பேகம் தன் பிள்ளைகள் உயர்கல்வி (11ஆவது வகுப்பு வரை) பெறுவதற்காக நாகூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்கிறார். தனக்குக் கிடைக்காத கல்வியை, தன் பெண் பிள்ளைகள் பெற வேண்டுமென அவர் தீர்மானித்ததை முஸ்லீம் சமூகம் பின்பற்றியிருப்பின், மூடுண்ட சமூகம் என்னும் விமர்சனத்தை எளிதாகத் தவிர்த்திருக்க முடியும்.

சித்தி ஜுனைதா பேகம் தனது கணவர் இறந்த பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கியிருக்கிறார். கணவனில்லாத வேதனையையும், தனிமையையும் அவர் தனது எழுத்தால் நிராகரித்தார் அல்லது கடந்து சென்றார் என்றும் கொள்ளலாம். பதினாறு வயதில் ஒருத்தி கைம்பெண்ணானது நினைத்துப் பார்க்கவும் கொடுமையான விஷயம். இதை சித்தி அடைந்திருக்கிறார். ஆனால் விதவையென வீட்டினொரு மூலைக்குள் முடங்காது துணிச்சலாக எழுத்துலகில் பிரவேசித்ததுதான் அவரை அக்காலப் பெண்களில் தனித்து மாறுபடுத்திக் காட்டுகிறது.

ஜுனைதா பேகத்திற்கு அந்தக் காலத்திலேயே டைரி எழுதுகின்ற பழக்கம் இருந்திருக்கிறது. இன்றைக்கு யோசித்தாலும் எத்தனை இஸ்லாமியப் பெண்கள் டைரி எழுதும் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிட முடியும். டைரியில் தனது மனதைத் தினந்தோறும் பதிவு செய்பவர்கள் இந்தச் சமூகத்துடன் ஏதோ ஒரு விதத்தில் மனந்திறந்து உரையாடத் தயாராக இருக்கிறார்கள் என்பது உளவியல் பகுப்பாய்வு. ஜுனைதா, தான் சமூகத்துடன் பேச விரும்பியதை டைரிக் குறிப்புகளாகவும் கட்டுரை, புதினங்களாகவும் எழுதி வைத்தார். அவர் எழுதத் தொடங்கியதும் எடுத்த எடுப்பில் நாவலுக்குத் தாவிவிட்டதும் ஒரு பேராச்சரியந்தான்.

இலக்கிய வடிவங்களில் நாவல் மிக முக்கியமானது. கவிதைகளும், கதைகளும் தராத வாழ்க்கையின் பக்கங்களை நாவல் தந்து நிற்கிறது. மையக் கதையும் அதன் விரிவும், அங்கிருந்து பிரிகின்ற கிளைக் கதைகளும் குவியலான கதாமாந்தர்களும், தத்துவ தரிசனமும் ஒற்றைத் தன்மையற்ற பன்முகத்தின் பிரதிபலிப்பும் நாவலை சாதாரணத் தன்மையிலிருந்து அசாதாரணத்திற்கு நகர்த்துகிறது. பேரனுபவத்தைத் தருகிற பேரிலக்கிய வடிவம் நாவல். ஆனால் ஜுனைதா பேகம் நாவல் வடிவத்தைக் கையாண்டிருக்கிற விதத்தில் நமக்குச் சில மாற்று அபிப்பிராயங்கள் இருக்கிறது. எனினும் விவாதிக்கும் அளவு அதில் பிரச்சனைகள் இல்லை. 1930களில் தமிழில் நாவல் வடிவம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை தான். அதே கால கட்டத்தில் ஆங்கில மொழிப் பரிச்சயமுள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களில் சிலர் ஒன்றுகூடி, ஆங்கில இலக்கியங்களைத் தீவிர வாசிப்பிற்குள்ளாக்கி தமிழ்ச் சிறுகதையில் வடிவப் பரீட்சார்த்தம் செய்து பார்க்கின்றனர். குறிப்பாகப் பி.எஸ்.இராமைய்யா பொறுப்பேற்று நடத்திய மணிக்கொடி இதழில் இது நிகழ்கிறது. மணிக்கொடியின் சிறுகதையாளர்கள் எவரும் நாவல் எழுதுவதில் அப்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, வெளியுலகத் தொடர்புகளற்று வீட்டிலிருந்தவாறே ஆர்வ மேலீட்டால் எழுதத் தொடங்கிய ஜுனைதா பேகம் இந்த அளவிற்கு இயங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘‘நான் என் எழுத்துலக நுழைவிற்கு
எனக்கு முன் மாதிரியாக
யாரையும் பின்பற்றவில்லை. எனது
சிறுகதை, நவீனம்
எல்லாம் இயல்பாக எனக்கமைந்த சொந்த
நடை என்றே
நினைக்கிறேன். நான் முதன் முதலில் எழுதிய நெடுங்கதை காதலா? கடமையா?
என்பது. இந்த நவீனத்தை நான்
எழுத எந்தக் காரணமும் எனக்கில்லை. நான் எழுத வேண்டும் என்ற எனது சொந்த அவாதான்’’
என்பதாக 1999இல் வெளிவந்த ‘முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்கு’ அவரளித்த நேர்காணலில் குறிப்பிடுவதிலிருந்து அவர் தன் எழுத்துக்கு எவரையும் ஆதர்சமாகக் கொள்ளவில்லை என்பதும் புலனாகிறது.
சித்தி ஜுனைதா பேகம் தான் எழுதிய நாவலை நெடுங்கதை என்றே குறிப்பிடுகிறார். ஆயினும் தமிழில் நாவல் எழுதிய முதல் முஸ்லீம் பெண் என்னும் சிறப்பு அவரை இயல்பாகவே வந்தடைகிறது. மட்டுமல்ல; நாவல் எழுதிய முதல் தமிழ்ப் பெண்கள் இருவரில் ஒருவராக அவர் இருக்கக்கூடும். மற்றொருவர் ‘தாஸிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் நாவலை எழுதிய மூவலூர் இராமாமிருதம் அம்மாள்.
‘‘பெரியோர் தம் உயர்ந்த நூல்கள்
சிலவற்றை யான் படித்தபொழுது உரைநடையில்
ஒரு சிறு புதுக்கதை எழுத வேண்டும் என்னும்
விருப்பம் என்னை வெகுநாளாகத் தூண்டியது. யான் பத்திரிகைகட்குக் கட்டுரைகள் அடிக்கடி வரைந்து அனுப்பியதைக் கண்ட
என் பெற்றோர், உறவினர், என் சினேகிதிகள் அனைவருமே அங்ஙனமே யான் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று பெரிதும் விரும்பினர். அன்னார்தம் விருப்பத்தையும் எமது விழைவையும் நிறைவேற்றுவான் வேண்டி இச்சிறு புத்தகத்தை வெளியிடுகிறேன்’’ என்று ஜுனைதா எழுதுவதிலிருந்தும், மேலும் ‘‘நச்சுடை நாகங்கள் சிலவற்றைத் தன் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர்தம் தூற்றுதலுக்கு அஞ்சிப் பத்திரிகைகளுக்குப் பெயர்போடாது கட்டுரைகள் அனுப்புமாறு என்னைத் தூண்டியவரும்...’’ என்று எழுதும் போதும் அவர் எழுத நேர்ந்த பின்னணியும் எழுதியதால் ஊரார் வெளிப்படுத்திய எதிர்ப்பும், அது போன்ற எதிர்ப்புகளைத் தொடர்ந்து பெயர் போடாது எழுதி வந்ததும் தெரியவருகிறது.

‘‘நாவல் வெளிவந்த பிறகு கூட்டம் கூட்டமாக வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்கள் தெருப் பள்ளித் தெரு வீட்டுக்கு வந்து ஆச்சிமாவைப் பார்க்க வந்தார்களாம். சும்மா அல்ல; ஒரு கெட்டுப் போன நல்ல குடும்பத்துப் பெண்ணை விசாரிக்க வருவது போல’’

இந்தத் தகவலை என்னிடம் ஆச்சிமாவே நேரடிப் பேச்சில் இதே வார்த்தைகளில் சொன்னது. அம்மாவும் இதை உறுதிப்படுத்தினார்கள். ஒரு முஸ்லிம் பெண்! நாவல் எழுதுவதா? அதுவும் ‘காதல்’ என்ற சொல்லுடன்! எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?’’ என்று நாகூர் ரூமி விவரிப்பதிலிருந்து ஜுனைதா பேகம் தன் எழுத்துக்காக எதிர்கொண்ட இன்னல்களை மேலும் அவதானிக்கலாம்.
‘‘இந்த எனது சிறு நவீனத்திற்கு ‘தாருல் இஸ்லாம்Õ ஆசிரியரும், நபிகள் நாயக மாண்பினை எழுதிய பெரியாருமான பா. தாவுத்ஷா சாகிபு அவர்களிடம் ஒரு மதிப்புரை கேட்டோம். ‘இது ஒரு பெரிய திறமையா? இதற்கு ஒரு மதிப்புரை தேவையா?’ என்று ஏளனமாகப் பேசியதாக என் சகோதரர் உசேன் முனவ்வர் பே சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் மகாமகோபாத்யாய தக்ஷிணாய கலாநிதி டாக்டர் உ..வே. சாமிநாதையர் அவர்கள் என்னை ஏத்திப் போற்றி ஒரு மதிப்புரை வழங்கினார்கள்’’.

தனது சமூகத்தைச் சார்ந்த அறிவுலக வாதிகளாலேயே அவர் புறக்கணிப்பிற்கும் ஏளனத்துக்கும் உள்ளானதை மேற்கண்ட நிகழ்விலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எந்த இதழாசிரியரால் மதிப்புரை தராமல் மறுக்கப்பட்டாரோ அதே தாருல் இஸ்லாம் இதழில் 1995இல் ‘முஸ்லிம் பெண்களும் விவாக விலக்கும்‘ என்றொரு கட்டுரையை சித்தி ஜுனைதா பேகம் எழுதியுள்ளார். இதன் மூலமாகக் காலமாறுதலையும் படைப்பாளியின் போராட்டக் குணத்தையும் வெகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

‘‘சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய காதலா? கடமையா? என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது....’’

இது டாக்டர் உ.வே.சா. 1938இல் சித்தி ஜுனைதா பேகத்தின் நாவலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. ஊர் ஊராகச் சுற்றியலைந்து, ஓலைச்சுவடிகளைச் சேகரித்து எண்ணற்ற தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த உ.வே.சா.வின் முன்னுரையைப் பெற்றதும் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டதும் ஜுனைதா பேகத்தின் எழுத்து வாழ்க்கைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். மட்டுமல்ல; தமிழ்ச்சிறுகதையின் ஒரு குறியீடாக மாறிவிட்ட புதுமைப்பித்தன் ‘‘முஸ்லீம் பெண்டிர் எழுத முன்வருவதை நாம் வரவேற்கிறோம்’’ என்று ஜுனைதா பேகத்தின் நாவல் குறித்து அபிப்ராயம் தெரிவித்திருப்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.

என் வாழ்வின் குறிக்கோளே எழுதுவதும் படிப்பதும்தான் என்று குறிப்பிடும் ஜுனைதா பேகத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் வளமான பயிற்சி இருந்திருக்கிறது. திருக்குறள், நாலடியார் நளவெண்பா, மணிமேகலை, சிலப்பதிகாரம், மாணிக்கவாசகர், திருமூலர், பாரதி பாடல்கள் வரை அவர் ஊன்றிக் கற்றிருப்பதற்கான வெளிப்பாடுகள் உள்ளன. இதுவரைக்குமான இஸ்லாமியப் பெண்கள் எவருக்கும் இம்மாதிரியான சுதந்திரம் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரைக்கும் இலக்கிய நூல்கள் யாவும் தீண்டத்தகாத பிரதிகளே. “இடமும் இருப்பும் ஒரு மனிதனின் குணாம்சத்தைத் தீர்மானிக்கின்றது’’ என்று முன்பு எங்கோ ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பேன். சித்தி ஜுனைதா பேகத்தின் சூழல் அவருக்குப் பலவிதங்களில் துணை புரிந்திருக்கிறது. பிறந்து வளர்ந்த ஊரும், பெற்றோரும், வாசிப்பிற்கான சுதந்திரமும் ஜுனைதாவைப் படைப்பாளியாக மலர்த்தியிருக்கிறது. இது அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்துவிடாது.

‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான். “படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’’ என்று படத்தின் கதாநாயகன் அந்தத் திரைப்படத்தைப் பற்றி கருத்துரைத்ததாகச் சொல்வார் உண்டு. பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் _ அதுவே அந்த திரைக் கலைஞர் அரசியலில் தனித்து இயங்குவதற்கான அடித்தளம் அமைத்துத் தந்தது என்றெல்லாம் கூட அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலா? கடமையா? நாவலில், மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத் தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன. பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில், ஒரு பெண்ணாக இருந்து அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற இரவீந்தர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் ஜுனைதாபேகம் இது விஷயத்தில் மௌனம் காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிராக நீடிக்கிறது.

‘சித்தி ஜுனைதா பேகம் _ பன்னூலாசிரியை’ என்று தனது வீட்டின் முகப்பில் பெயர்ப்பலகை மாட்டி வைத்துக்கொண்டு இயங்கியிருப்பவரை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியங்கொள்ள முடிகிறது. கருத்துக்களை முன்வைப்பதில் அவருக்கு எவ்வித மனத்தடையும் இருந்ததாகத் தெரியவில்லை. 1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கிவிட்ட காலகட்டத்தில் சித்தி தாம் எழுதிய காதலா? கடமையா? நாவலில், “தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய் நாட்டை மீட்பதற்காக உடல் பொருள் ஆவியைத் தத்தஞ் செய்து பெரியாரைப் பின்பற்றுவேன்’’ என்று எழுதியிருப்பது இவரது தமிழினப் பற்றைக் காட்டுகிறது _ என்று கம்பம் சாகுல் அமீது என்பார் ‘இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்கிற தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு மத அடிப்படைவாதிகளால் புறக்கணிக்கப்படும் தர்கா நேர்ச்சைகளைப் பற்றிச் சித்தி ஜுனைதா பேகம் ‘‘நாகூர் கந்தூரி இதோ கதவைத் தட்டுகிறது பக்தி, நம்பிக்கை, வேடிக்கை இது மாதிரி பல்வேறு காரணங்களுக்காக நாகூரைத் தேடிக் கூட்டங் கூட்டமாக மக்கள் இதோ வரமுயன்று கொண்டிருக்கின்றார்கள். ஊரே கோலாகலமாகத் திருவிழாக் கோலம் பூணுகின்றது.’’ என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். மற்றொரு இடத்தில் ‘‘இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப்பட்டிருப்பினும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக் கடைந்திருக்கவும், மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன? தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதிவிடுதலே அறிவையளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ?’’ என்று கேட்கிறார். அவர் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ள புரட்சிகரக் கருத்துகளில் சிலவற்றையேனும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ள கட்டாயம் உள்ளது என்றே நான் கருதுகிறேன்.

பெண்கள் தமக்குப் பிடித்தவரையே மணஞ் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கின்றது. ஒத்த நலனும், ஒத்த குணமும், ஒத்த பண்பும் அமையாத இருவரை ஆடுமாடுகளைப் பிணைப்பதைப் போல் பிணைத்து விடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது.

இஸ்லாமியப் பெண் தன் கணவனின் பெயரோடு தன்னை இணைத்துக் கொள்ளத் தேவையில்லை. ஜபீரா, ஷேக் பரீதை மணந்து கொண்டால் ஜபீராதான். அவள் மிஸஸ். ஷேக் பரீதாக மாறிவிடுவதில்லை. ஒரு முஸ்லிம் பெண் தன்னில் தானே ஒளி வீசுகின்றாள். அவள் பெயருக்கு அவளே உரிமை பெற்றவள்.
- இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிக்கின்றது எனக் கூறி உலகை ஏமாற்றப் புகுவது அறியாமை. ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வதே அறம். பல பெண்களை ஒருவன் மணக்கலாம் என்னும் கட்டுக்கள் நீக்கப்படல் நியாயம்.
- இஸ்லாமியப் பெண்கள் பொம்மைகளல்ல.

- பெண்கள் சினிமா பார்த்தால் ஆகுமா என்றால் ஆகும் என்றுதான் நான் கூறுவேன். ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியுமன்று. ஆணுக்கு ஆகும் என்றால் பெண்ணுக்கு ஆகும் என்பதுதான் என் கருத்து.
தமிழகத்து முஸ்லீம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியே போல, எழுதியும் பேசியும் வாழ்ந்தும் காட்டிய சித்தி ஜுனைதா பேகம் தனது 82ஆவது வயதில் 19.3.1998 அன்று மரணமடைந்தார். மரிப்பதற்கு முன்பு வரை அவர் எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருந்தார் என்றறிகிறோம். இலக்கியப் பணியில் அவர் ஒருபோதும் சலிப்புற்றதில்லை என்றே
அவரைக் குறித்து எழுதியுள்ள பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

பெண் கல்வி, பெண் விடுதலை என்றெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காலகட்டத்தில், இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த சித்தி ஜுனைதா பேகம் ஒரு எதிர்க்குரலாக வரலாற்றில் பதிவாகியுள்ளார். ஆனால் அவரைக் குறித்த இலக்கியப் பதிவுகள் சொற்பமே. நாகூர் ரூமியின் முயற்சியில் காதலா? கடமையா? நூல் வெளிவந்தது ஒரு முக்கியப்பணி. எனினும் சித்தி ஜுனைதாவின் பிற எழுத்துக்கள் பதிவாகியதாகத் தெரியவில்லை. அதற்கான அவசியமும் தேவையும் உள்ளது என்றே நம்புகிறோம்.

நானறிந்தவரை அ. வெண்ணிலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆபிதீனின் வலைப்பதிவில் ஜுனைதா இடம் பெற்றிருக்கிறார். தமிழ் இலக்கியச் சூழலில் இனியேனும் அவரைக் குறித்த உரையாடல்களைத் துவக்கலாம். மேதைமைகள் எல்லாக் காலங்களிலும் தோன்றிவிடுவதில்லை. அதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் தீவிர இலக்கியத்திற்கு வர வேண்டும். இலக்கியத்துள் அவர்கள் பிரவேசிக்கையில் அவர்களைச் சுற்றியுள்ள எல்லாத் தடைகளும் நீங்கிவிடும் என்றொரு நம்பிக்கை என்னுள் எப்போதும் நீடிக்கிறது. சித்தி ஜுனைதா பேகம் இஸ்லாமியப் பெண்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய ஆளுமை என்று மீண்டுமொருமுறை அழுத்தம் கொடுக்கிறேன்.

சித்தி ஜுனைதா பேகத்தின் பிற படைப்புகள்
1. செண்பகவல்லி தேவி (அ) தென்னாடு போந்த அப்பாஸிய குலத் தோன்றல் _வரலாற்று நாவல்.
2. மகிழம்பூ _ நாவல்
3. இஸ்லாமும் பெண்களும் _ கட்டுரைத் தொகுப்பு
4. மலை நாட்டு மன்னன் __ தொடர்கதை.
5. ஹலிமா (அ) கற்பின் மாண்பு
6. பெண் உள்ளம்
7. திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு
8. காஜா ஹஸன் பசரீ: முஸ்லீம் பெருமக்கள் வரலாறு
துணைநூற்பட்டியல்
காதலா? கடமையா?, ஸ்நேகா, 20032 comments:

  1. கீரனூர் ராஜா அவர்களே! "சித்தி ஜுனைதா பேகம்" பற்றிய உங்கள் பதிவு அருமை. "மாண்டெவை " கொண்டுவந்த "நிழல் " போன்ற அமைப்புகள் அம்மையாருடைய படப்புகளைக் கொண்டுவந்தால் மிகச்சரியாக இருக்கும்.முயற்சியுங்கள்! ---காஸ்யபன்.

    ReplyDelete
  2. மேதைமைகள் எல்லாக் காலங்களிலும் தோன்றிவிடுவதில்லை. அதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

    ReplyDelete