Monday, January 9, 2012

உதயசங்கர்: ரயில்நிலையக் கலைஞன்உதயசங்கரின் எழுத்துக்கள் என்னுள் இறங்கிப் பல வருஷங்கள் கழித்துதான் அவரை நேரில் நான் சந்தித்தது. எப்போதும்போல பெரிய கோவில் புல்வெளியில்தான் அவருடைய பெயரை முதலில் கேட்டறிந்ததும். நண்பர்களிடையே சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்த பேச்சு எழும்போது குறிப்பாகக் கரிசல் எழுத்துக்களைப் பற்றிய சம்பாஷனைகளில் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, பா.செயப்பிரகாசம், பூமணி,
ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி ஆகிய பெயர்களுடன் தவறாமல் இடம் பெறும் பெயராக உதயசங்கருமிருந்தது.
கோவில்பட்டி குறிப்பிடத்தக்க இலக்கிய மையமாக விளங்கியது, அப்போது நானறியாத செய்தி. தஞ்சாவூர்தான், தமிழுக்குப் பெரிய இலக்கிய பிதாமகர்களைத் தந்திருப்பதாக ஒரு பிரம்மை இருந்தது. கி.ரா.வையும், தமிழ்ச்செல்வனையும், கோணங்கியின் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்களையும் படித்த பிறகு கரிசல் இலக்கியத்தின் மேல் என் கவனம் திரும்பியது. எப்போதும் வெயில் கொளுத்தியபடி இருக்கும் கந்தக பூமியும், பிழைப்புக்கு தீப்பெட்டி ஆபீஸ்களை நம்பிய பெண்மணிகளும், குழந்தைகளும் வறட்சியும், வறுமையிலும் அன்பை ஒருவருக்கொருவர் நேர்ந்து பரிமாறிக் கொள்ளுகிற அழகும் அடடா... தமிழிலக்கியத்தின் இன்னொரு அசலான பக்கத்தை இதுவரை பார்க்கத் தவறியிருக்கிறோமே என்னும் பதைபதைப்பை என்னுள் ஏற்படுத்திய எழுத்து கரிசல் எழுத்து.
நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி, சுழித்துக் கொண்டோடிய காவிரிக்கரை எழுத்து கூதிர்காலக் காற்றின் சுகானுபவமென்றால், கரிசல் எழுத்துக்கு அதற்கு நேர்மாறான உறைப்பான, சுளீரென்று தவறுக்குத் தண்டனையாய்ப் பெறும் தீச்சூட்டின் தன்மை உண்டு. கரிசல் இலக்கியம் காட்டும் அழகியல் தமிழர்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ரத்தமும் சதையுமாகப் பின்னிப் பிணைந்தது. அதேபோன்று புதுமைப்பித்தனுக்கு நிகரான ஆளுமையாக
கு.அழகிரிசாமியை என் வாசிப்பனுபவத்தினூடாகக் கண்டதும் சற்றுப் பிறகுதான். வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தரிசனம் தருவதில்லை. தந்தால் மாறுபட்ட ரசனைகளுக்கு வாய்ப்பில்லாமலே போய்விடும். அபூர்வமான அனுபவங்கள் எதுவும் ஆரம்பத்திலேயே நமக்கு வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தால் அபூர்வம் என்று அதற்குப் பெயரில்லை.
உதயசங்கரை ஒரு ரயில் பயணத்தின்போதுதான் முதன் முதலாக சந்தித்தேன். பாரதி புத்தகாலயம் மேலாளர் தோழர் நாகராஜனுடன் நானும் 2010 திருவனந்தபுரம் புத்தகக் காட்சிக்குச் பயணமானபோது வழியில் கோவில்பட்டி சந்திப்பில் ஏறி எங்களுடன் உதயசங்கர் இணைந்து கொண்டார். அன்று முதல் அவர் என் சஹிருதயனாகிவிட்டார் என்றும் கூறலாம். உதயசங்கர் ‘ரயில் மனிதன்’ என்றொரு பிம்பம் என்னுள் இருந்தது. அதற்கான காரணங்களும்தான். ரயில்வேயில் வேலை செய்யும் அவர் தற்போது குமாரபுரம் ஸ்டேஷனில் பணியைத் தொடர்கிறார். மாமேதை கு. அழகிரிசாமியின் கதைக் களம் அது. ‘‘சின்ன ஸ்டேஷன். அங்கே ரயில்கள் நிற்காமல் கடந்து செல்ல, விசேஷமாய் ஏதோ ஒரு ரயில் மட்டும் நிற்கும்’’ குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் குறித்து இப்படி நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உதயசங்கரை நேரில் பார்த்தபிறகு ‘ரயில்வே அதிகாரிகளுக்கான கருப்புக் கோட்டு வெள்ளைச் சீருடையில்’ அவரைக் கற்பனை செய்து பார்த்தாலும் அவ்வளவாகப் பொருந்தவில்லை.
ஒடிசலான தேகமும், வெள்ளந்தியான சிரிப்புமாய் அவரைப் பார்க்கிற எவரும் ஒரு நெருக்கத்தை உணர்வர். கண்ணாடிக்குள்ளிருந்து தெறிக்காமல் அமுங்கிப் புன்னகைக்கும் சிவந்த வெளிச்சமான கண்கள். அந்தரங்கமாய் அவருடன் உரையாடக் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் (பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நடத்திய வரலாறும் புனைவும் - மூன்று நாள் கருத்தரங்கில் நானும் அண்ணன் ச. தமிழ்ச் செல்வன், தோழர்கள் சு.வெங்கடேசன், பிரளயன், மணிமாறனுடன் உதயசங்கருடன் பேசிக் கழித்த சில இரவுகள்) அவருடைய அங்கதம் ததும்புகிற உரையாடல் கேட்டுக் களித்திருக்கிறேன். உண்மையில் மணிமாறனுடனும் உதயசங்கருடனும் ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் பழகிய நெருக்கத்தைக் கொஞ்சம் நாட்களில் உணர்ந்தேன். அது என்ன மாயமோ தெரியவில்லை.
இலக்கியத்தில் நான் அகரம் எழுதிப் பழகத் தொடங்கிய காலத்திலிருந்து உதயசங்கர் கதைகள் எழுதி வருகிறார். இலக்கிய உலகம் ஏன் இப்படி ஒரு நல்ல கலைஞனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறது என்று நான் பல இரவுகள் சிந்தித்திருக்கிறேன். முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகத் தீவிரமாய் இயங்கி வந்திருக்கிற இந்த எழுத்தாளனின் வீட்டுக் கதவுகளை விருதுகள் தேடி வந்து தட்டியிருக்க வேண்டாமா? நாம் வாசித்தவரை ஒவ்வொரு கதையிலும் தேர்ந்த கலைப் படைப்பிற்கேயுரிய வடிவமைதியும், மொழியும் இயைந்திருக்கின்றதே? ஒரு முற்போக்கு அமைப்பிலிருந்து செயல்பட்டவாறு பிரச்சாரமும் பேருணர்ச்சியும் தவிர்த்த கதைகளைத்தானே இவர் முன்வைக்கிறார்? பிறகு ஏன் உதயசங்கரைக் கொண்டாடத் தயக்கம்? இப்படியான கேள்விகள் எனக்கு மட்டுமல்ல அவரை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் வந்துதான் தீர வேண்டும். வராவிடில் அவருடைய இலக்கிய நேர்மை குறித்து நான் சந்தேகிப்பேன்.
உதயசங்கர் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். வரிசையில் நிற்கையில் முண்டியடித்துக் கொண்டு முன் செல்லும் வழக்கமில்லாதவர். எங்கும் எதிலும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பவர். இவை இன்றைய பரபரப்பான இலக்கியச் சூழலுக்குப் பொருந்தி வருமா, தெரியவில்லை. ஒரு முறை நான் நவீனத் தமிழ் எழுத்துக்களில் புதுமைப் பித்தனிலிருந்து இன்றைய தலைமுறை வரைக்குமுள்ளவர்கள் எழுதிய காதல் கதைகளைத் தொகுக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். ‘‘நான் எழுதிய கதைகள்கூட இருக்கிறது ஜாகிர்’’ என்று அவர் எனக்குச் சொல்லவேயில்லை. நானாகத் தேடி ‘பால்ய சினேகிதி’ கதையைத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவருடைய கதை ஒன்றை நான் என்னுடைய ‘காஃபிர்களின் கதைகள்’ தொகுப்பிலேயே சேர்த்திருக்க வேண்டும். தவறிப்போனது.
அப்படி ஒரு தொகுப்பைச் செய்கிறேன் என்பதும் அவர் முன்பே அறிந்தது தான். இப்படிப்பட்டவர் ஒரு சந்திப்பில் ‘‘என்னுடைய தேர்ந்தெடுத்த கதைகள் சிலவற்றை பாரதி புத்தகாலயத்திற்காக தொகுத்துக் கொடுங்கள் ஜாகிர்’’ என்று கேட்டபோது, லேசான தயக்கத்துடன் சம்மதித்தேன். அந்தத் தயக்கத்துக்கும் அவர் படைப்பின் மீதான என் அபிப்ராயத்துக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. அவருடைய படைப்புலகில் மீண்டும் பிரவேசிக்க இதை ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்திக் கொண்டேன். அவருடைய நாற்பத்தெட்டுக் கதைகளிலிருந்து இருபத்திரண்டு கதைகளை என் ரசனை அடிப்படையில் தேர்வு செய்தேன். ‘‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’’ என்கிற பொருத்தமான தலைப்பைத் தீர்மானம் செய்துகொண்டு முன்னுரையாக என்ன எழுதலாம் என யோசித்தபோது தவறியும் அதில் அவருடைய கதைகளைப் பற்றி அதிகம் சொல்லிவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இப்படி ஒரு முன்னுரை எழுத வாய்த்தது. கதை வரிசையையும் முன் பின்னாக மாற்றிக் கலைத்துப் போட்டு அடுக்கியிருக்கிறேன்.
இந்த 22 கதைகளில் எது ஒன்றையும் வாசகன் புறக்கணித்து விட முடியாது. ‘நான் தேர்ந்தெடுத்தவையாக்கும்’ என்கிற அழுத்தம் தந்து இதைச் சொல்லவில்லை. உதயசங்கர் கதைகளின் இயல்பும் அதுதான். புறக்கணிக்க முடியாத எழுத்து. கரிசல் இலக்கியத்துக்கேயுரிய சில கதைகளுடன் இன்றைக்கு எழுதிவரும் தீவிரமான படைப்பாளிகளைக் கடந்து செல்லும் நவீன அம்சம் சரிவரப் பொருந்திய கதைகளுமாக இத்தொகுப்பு உருவாகியிருக்கிறது.
உதயசங்கர் கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை குணாம்சங்களை எள்ளலுடன் விமர்சிக்கின்றன. கலையின் உன்னதமறிந்த டேனியல் பெரிய நாயகம் கடைசியில் மகனிடம் ‘இதெல்லாம் நமக்கு வேண்டாம்‘ என்று புத்திமதி சொல்கிறார். இப்படித்தான் நிறைய அப்பாமார்கள் இருந்திருக்கிறார்கள். மகன்களும் தலையசைத்துக் கலை மீதான காதலை உதறித் தள்ளியிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் என்கிறது பொதுப்புத்தி. இதை மீறி வந்தவர்கள் கலைஞர்களாகியிருக்கின்றனர். இதுவும்கூட யதார்த்தமில்லையா?
சக மனிதனிடம் கொள்ளும் அவநம்பிக்கையை மட்டுமே வேறொரு கதையில் உள்ளடக்கமாய் வைக்கிறார் உதயசங்கர். குடும்ப அமைப்பின் வன்முறைகளை அங்கதத்துடனும், பொட்டிலறைந்தாற்போன்றும் பல பாணிகளில் எழுதிப் பார்த்திருக்கிறார். இளம் பருவத்தின் ரம்மியங்கள், அபிலாஷைகள் இவரது படைப்புகளில் அதே த்வனியுடன் பதிவாகத் தவறவில்லை.
வெயில், மறதியின் புதைசேறு, சோமையாவின் பாட்டு போன்ற கதைகள் அவருடைய படைப்பெழுச்சியின் உன்னத விளைச்சல் என்றே கூறலாம். உதயசங்கர் கதைகளில் பெயிண்டர் பிள்ளை, ஆவுடையப்ப பிள்ளை என்று நிறையப் பிள்ளைமார்கள் வருகிறார்கள். அவர்களின் கதாபாத்திரச் சித்தரிப்பும் அபாரமாக இருக்கிறது. இந்த இடத்தில் நான் ஜாதி குறித்துப் பேசவரவில்லை. உதயசங்கரும் அப்படிப்பட்டவரில்லை. தான் சார்ந்திருக்கும் அல்லது அவ்வாறு கருதப்படும் சமூகத்தை உள்வாங்கிக் கொண்டு படைப்பில் வெளிப்படுத்துவது பாவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு படைப்பாளியின் கடமை இதுவாகவே இருக்க முடியும். எந்த வாழ்க்கைப் பின்னணியிலிருந்து ஒருவனுக்கு இயங்க வாய்த்திருக்கிறதோ அந்த வாழ்க்கையைப் படைப்புகளில் பிரதிபலிப்பது அவனுடைய சமூகத்தைக் குறித்த விமர்சனங்களை அவன் செய்வதாகவே பொருள் கொள்ள முடியும். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், தோப்பில் முஹம்மது மீரான் இன்னும் பலரும் இதையே செய்தனர்.
குறுநாவல்கள் எழுதியிருக்கின்ற உதயசங்கரை நாவல் எழுதச் சொல்லி அவரை சந்திக்கின்ற நேரங்களிலெல்லாம் வற்புறுத்துகிறேன். அவருடைய உத்தியோகம் சார்ந்த ரயில்வே துறையின் பின்னணியில் ஒரு நாவலை எழுதிவிட வேண்டுமெனும் முனைப்பிலிருப்பதாகவும் விரைவில் அது நிறைவேறும் என்றும் என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். பார்ப்போம். ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’ கதையை அவர் விரித்திருந்தால் முக்கியமான நாவலாக அது மாறியிருக்கும். அதே போன்று, ‘ஒரு விளக்கும் இரண்டு கண்களும்’ கதைக்கும் ஒரு சர்வதேசியத் தன்மை உண்டு. அக்கதையின் ஓரிடத்தில் கீழ்க்கண்ட விவரணையை அவர் எழுதியிருப்பார்.
‘‘1947-ம் ஆண்டில் சர்சிரில் ராட்கிளிஃப் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோடுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத இந்த பருத்த ஆங்கிலேய வழக்கறிஞர், தான் வரையும் கோடு இந்திய நிலப்பரப்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர முடியாதவராக இருந்தார். அவரது பென்சில் கூறுபோட்டது நிலப்பரப்பை மட்டுமல்ல என்பதை மிகமிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டார். அப்போது யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை’’
இந்த வரிகளைப் படித்தபோது என்னையுமறியாமல் மனம் கலங்கிப் போனது. சதத்ஹஸன் மன்ட்டோவின் கதைகளில் வெளிப்படும் தேசப் பிரிவினையின் துயரார்ந்த அதே வெளிப்பாடாக இதை நான் உணர்ந்தேன். இப்படியெல்லாம் எழுத உதயசங்கரைவிட்டால் தமிழில் ஆள் கிடையாது. தேசப்பிரிவினை நடந்து முடிந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அது தரும் வலியும் ரணமும் நம்மைப் பற்றித் தொடர்கிறது. மிக எளிதாக, வெற்றிலைக் காம்பைக் கிள்ளி எறிவதுபோல நடந்தது, இரண்டு தேசிய இனத்தின் பிரதான பிரச்சனையாக உருவெடுத்து இன்றைக்கும் வேதாளம்போல் நின்று நம் மக்களின் நிம்மதியைக் குலைக்கிறது. எல்லோரும் மறந்துவிட்ட விஷயத்தை எழுதிப் பார்க்க இப்படி ஒருவர் இருக்கத்தான் செய்வார்.
உதயசங்கரைக் குறித்துச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் சம்பிரதாயமான முன்னுரையை அந்தச் சம்பிரதாயத்துக்குள்ளிருந்து எவ்வாறு விடுவிப்பது என்பதே எனது நோக்கமாக இருந்து ஓரளவு தப்பித்தும் இருக்கிறேன் என்று மனம் சமாதானம் கொள்கிறது. உதயசங்கர் என்னும் என் முன்னோடிக் கலைஞனை, நண்பனை, காலம் தான் கௌரவிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கிறேன்.
-கீரனூர் ஜாகிர்ராஜா

1 comment:

  1. உதயசங்கர் நம் இதயசங்கர்_ஜோ

    ReplyDelete