Sunday, March 22, 2009

புத்திபேகம் தெரு 2வது சந்து - நன்றி செம்மலர் மார்ச் 2009

கலிஃபுல்லாஹ் சமீபமாகப் பெருங்குழப்பத்திலிருக்கிறான். யோசிப்பின் கணங்கள் அதிகரிக்க தலைவெப்பமாகி எந்தநேரத்திலும் கபாலம் சிதைவுறக் கூடுமென அஞ்சுகிறான். சாலையில் ஜனத்திரள் சூழ்ந்த வேளையிலோ, நீண்ட யாத்திரையின் போதோ, அங்காடியில் பொருட்கள் வாங்கும் பொழுதிலோ, இலக்கியச் சந்திப்பிலோ, மனைவியுடன் சம்போகம் வைத்துக் கொள்ளும் போதோ, குறைந்தபட்சம் அறிந்த யுவதி ஒருத்தியிடம் கதைத்துக் கொண்டிருக்கும் போதோ கூட இது நேர்ந்து விடுமென அஞ்சுகிறான். இதனால் பதற்றமாகி யாவற்றையும் ஒருவித ஈடுபாடின்றிச் செய்து முடிக்க நேர்கிறது கலிஃபுல்லாஹ்வுக்கு.

இந்தப் பிரச்சனை இவனுக்கு இரண்டு மாத காலமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அலுவலகப் பணிகளை எப்போதும் ஆர்வத்துடன் அணுகும் இவனுடைய போக்கில் சில நாட்களாக ஏற்பட்டுள்ள அலட்சியம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பெரிதும் வருத்தமடைந்துள்ளார். பல சமயங்களில் இவன் தனது அலுவலக மேஜையில் தலைகவிழ்த்து உறங்கிவிடுவதும், சக ஊழியர்கள் தட்டி எழுப்பும்போது கடுப்பாகி "புத்தி பேகத்தைப் பற்றி உங்களுக்கென்ன மசுரா தெரியும். வெறுமனே கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருக்கும் கபோதிகள் நீங்கள்" என்று இவன் ஏதேதோ உளறிக் கொட்டுவதும் சகஜமாகிவிட்டது. இவனின் ஏழ்மையும், அப்பா இல்லாத குடும்பத்தில் வயதான தாயையும், முதிர் கன்னியாகிவிட்ட தங்கை ஒருத்தியையும் தன்பொறுப்பில் வைத்துப் பராமரிக்கின்ற கடமை உணர்வையும் வைத்து இயல்பாகவே இவன் மேல் குவிந்துள்ள அனுதாப மோஸ்தர்தான் இவ்வகைக் களேபரங்களிலிருந்தெல்லாம் இவனைக் காப்பாற்றி வைக்கிறது.

கலிஃபுல்லாஹ் உறங்கும்போது பல நேரங்களில், 'புத்திபேகம் புத்திபேகம்' என்று உளறிக் கொட்டுவது இவனுடைய தாயார் நஸ்ரீன் ஜஹானின் காதில் புத்திபேதம்... புத்திபேதம்... என்று விழுந்து தொலைக்க, மகனுக்கு புத்திபேதலித்து விட்டதாகக் கருதி தொலைவிலுள்ள மனநல மருத்தவமனை சென்று திரும்பிய கதையும் நடந்து முடிந்திருக்கிறது.

புத்தகம் என்கிற பெயரில் கலிஃபுல்லாஹ் கண்ட கண்ட கசுமாலங்களையும் படித்துவிட்டு சதா மண்டையைச் சொறி சொறி என்று சொறிந்து தள்ள உச்சி மண்டையில் வழுக்கையும் விழத் தொடங்கியாயிற்று. இவன் மண்டையைச் சொறியத் தொடங்கினால் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு அவர்களும் தங்களின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றைச் சொறிந்து கொண்டேயிருப்பதும் வாடிக்கையாகிப்போன சமாச்சாரம்.

கலிஃபுல்லாஹ் அடர்த்திமிகு ரோமப் பாரம்பரியமுள்ளவனாதலால் இவனுடைய நீள நீளமான தலைமுடிகள் உதிர்ந்து மின் விசிறிகளின் ஓயாத சுழற்சியில் அங்குமிங்குமாக அலைபாய்ந்து இறுதியில் ஒவ்வொருவரின் மேஜையிலும் ஆடைகளிலும் படிந்து கொள்கிறது. சக ஊழியர் ஹரிகுமாரின் மனைவி, அவருடைய சட்டையை சலவை செய்ய எடுக்கையில் அதில் ஒட்டியிருந்த நீளமான முடியைக் கண்டு ஒரு பெண்ணின் கேசமென சந்தேகித்து ஆய்வுக்கு அனுப்பி உலுக்கி எடுத்துவிட்டாள். பிறகு ஹரி தன்னை குற்றமற்றவன் என நிரூபிக்க அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டியிருந்தது. ஊரில் நடந்த திருவிழாவில் பூக்குழி இறங்கி ஹரி பட்ட பாடு பெரும்பாடு.

பெருநகரம் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் கலிஃபுல்லாஹ், வடபழனியிலுள்ள பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்யும் தன் சஹ்ருதயனைக் காண வேண்டிப் புறப்பட்டான். உஷ்ணம் கண்களைப் பீழை தள்ளவைத்தும் வெயிலைப் பொருட்படுத்தாது இவன் ஆயிரம் விளக்கு மசூதிக்கருகில் வந்து வலப்புறம் திரும்பிய போது, புத்திபேகம் தெரு 2வது சந்து என்பதை சுவரெழுத்து வடிவில் கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் பொங்கிப் பிரவஹிக்க அப்படியே நின்று விட்டான். தன்னுள் பிரசன்னமாகிக் கெண்டிருக்கும் புத்திபேகமும் இந்த புத்திபேகமும் ஒன்றுதானா என்கிற குழப்பம் ஒரு கணம் எழுந்தடங்கியது. அடர்த்தியான மஞ்சள் வர்ணம் பூசி, அதன்மேல் கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்ட எழுத்துகளை இவன் அருகில் சென்று தடவிக் கொடுத்த போது எதிரில் ஒரு நாயின் வேகவேகமான நான்கு கால் பாய்ச்சலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நாய் அதன் வாயில் ஒரு பெரிய இறைச்சித் துண்டைக் கல்விக் கொண்டு ஓடியதும், செக்கச் சிவந்த சதைப் பிண்டத்தைக் கண்டு அது மாட்டிறைச்சி என்பதையும் அவனால் யூகிக்க முடிந்தது. நாயைச் சிலர் துரத்திக் கொண்டும் சென்றனர்.

சஹ்ருதயனைப் பார்க்க அடிக்கடி இந்த சந்தைக் கடக்க வேண்டியிருந்ததால் இந்த சந்தின் பெயர் அவனின் நனவிலி மனதில் அழுந்தப் பதிந்திருக்கிறது. அதுதான் புத்திபேகம் என்னும் கேரக்டர் ஆகி தன்னைத் தொடர்கிறது என்றெல்லாம் இவனால் யோசிக்க முடிந்தது. ஆனாலும், புத்திபேகம் இவனுள் பலவிதமான புனைவுகளை விதைத்தபடி இருந்ததுதான் வினோதமாயிருந்தது.

சம்ஷாத் பேகம், ஜரீனாபேகம், கதிஜாபேகம், ரஜியாபேகம், பௌஷியாபேகம், பாத்திமாபேகம், பேகம்-பேகம்-பேகம் என்று இவனறிந்து வைத்திருந்த முப்பத்தேழு பேகங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தான். புத்திபேகம் தனியே துருத்திக் கொண்டுதான் நின்றாள். உன் வரிசைக்குள் என்னை அடக்க முடியாது. நான் வித்தியாசமானவள் என்று புத்திபேகம் கொக்கரித்தாள். இவன் தனது பட்டியலைச் சுக்குநூறாய்க் கிழித்து காற்றில் பறக்கவிட்டான். தலைக்கு மேலே நூற்றி எட்டு பேகங்கள் பறந்து சிதறிக் கீழே விழுந்தனர். அந்தக் காலத்தில் நூற்றி எட்டு பேகங்கள் இருந்தனர் என்று சொல்லிக் கொண்டான்.

திடீரென பெட்டிக்குள் அடைபட்ட சிந்துபாத்தின் லைலாவைப் போல வாமன வடிவமெடுத்து புத்திபேகம் இவனின் உள்ளங்கையில் நின்று கொண்டிருக்கவும், அடையாளமறியும் பொருட்டு உற்றுப் பார்க்கையில் அது ஒரு கட்டெறும்பு என்றும் அவனால் கண்டறிய முடிந்தது. எறும்பாகி விடும் ஆற்றல் பெற்ற புத்திபேகம் நிச்சயமாகக் கூடுவிட்டுக் கூடு பாயும் கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருக்க வேண்டும். அல்லது மைவேலை தெரிந்த சூனியக் காரியாக, நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் இனத்தைச் சேர்ந்தவளாகவும் இருக்கக் கூடும் என்றெல்லாம் இவன் மனம் விரித்துப் பார்க்கத் தொடங்கிற்று. பிறகு அனிச்சையாக இவன் புத்திபேகம் தெருக்குள் நுழைந்து வெளியேறுதல் ஆகிப் போனது.

ஒருமுறை இரவு வெகுநேரம் கடந்துவிட்டது. வடபழனியில் பஸ் மாறி இவன் மலைச் சாலையில் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுத்தத்தில் இறங்கி மண்டையைச் சொறிந்து கொண்டே ராயப்பேட்டை செல்வதற்கு பதிலாக மெனக்கெட்டு நடந்து புத்திபேகம் தெரு சந்துக்கு முன்னால் நின்றான். மணி பனிரெண்டு கடந்திருந்ததால் விளக்குகள் அணைக்கப்பட்டு தெருவில் ஒருவித இருளும் அமைதியும் நிலவ இவன் அருகிலிருந்த புத்திபேகம் என்கிற சுவரெழுத்தைக் கையால் தடவிப் பார்த்தான். சுவருக்குள்ளிருந்து யாரோ அவனுடைய கையை இழுப்பது போலத் தோன்றவும் பதைப்புடன் கையை உறுவிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான். எத்தனையோ முறை பகலில் இந்தத் தெருவில் சுற்றிக்கிறங்கித் தெரிந்து கொள்ள முடியாததையா இந்த அர்த்த ராத்திரியில் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்றும் தோன்றியது. நிலத்தின் சுபாவமறியும் பொருட்டு மண்ணைக் கைகளில் அள்ளி முகர்ந்து பார்த்தான். மூத்திரக் கவுச்சியிருந்தது. அது மனித மூத்திரமாகவோ இறைச்சியைக் கவ்விச் சென்ற நாயினுடையதாகவோ இருக்கலாம் என்று நினைத்து கீழே போட்டு சுவரில் கையைத் துடைத்தான். மீண்டும் சுவருக்குள்ளிருந்து யாரோ கையை இழுக்கிற மாதிரி இருந்தது.

இரண்டல்ல மூன்று கடைகள் தாண்டி இடமும் வலமுமாய்க் கிளைபிரியும் குறுஞ்சந்துக்கள் கடந்து விளக்குக் கம்பம் தாண்டி வேகமாக நடந்தான். தன்னை யாரும் கவனிக்கவோ, பின் தொடரவோ செய்கிறார்களா என்று அடிக்கடி கவனிக்கிற பழக்கமுள்ள கலிஃபுல்லாஹ், இந்த நேரத்தில் அப்படித் திரும்பிப் பார்க்க அச்சப்பட்டான். பெஸ்ட் மாட்டிறைச்சிக் கடை அருகில் வந்து நின்று அந்த பெயர்ப் பலகையை உற்றுப் பார்த்தான். ஸ்லாட்டர் ஹவுஸிலிருந்து அறுபடும் மாடுகளின் மரண சங்கீதம் கேட்டு இவன் மனம் பதைத்தது. இறைச்சியைக் கவ்விச் சென்ற நாய், மாட்டிறைச்சிக் கடை வாசலில் தூங்காமல் விழித்துக் கிடந்தது. இவனைக் கண்டதும் உர்ர்ர் என்று அன்னியப்பட்டது. இவன் மிகுந்த அச்சமுடன் பணிவுடனும் "நான் உன்னுடைய எதிரியல்ல. ஒருமுறை நீ இறைச்சியைக் கவ்விக் கொண்டோடிய வேளை உன்னைச் சிலர் துரத்திக் கொண்டோடியது கண்டு மிக்க மனவேதனையுற்றேன். நீ பாவப்பட்ட ஜீவன். அது உனக்கான இரை. இந்த உலகில் எல்லா மனிதருக்கும் போலவே உனக்கும் ஒரு பங்கு உண்டு. அதை இந்த மானிடம் மறந்து விடுகிறது. நீ நன்றியுள்ள ஜீவன். என்னால் உனக்கு ஒரு தீங்கும் நேரப் போவதில்லை. என்னை நீ தாராளமாக நம்பலாம்" என்றெல்லாம் அந்த நாயுடன் உரையாடிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து மலைச் சாலை முனைக்கு வந்துவிட்டான். பிராய்லர் கோழி இறைச்சிக் கடைகள் நிறைந்திருந்த அம்மண்டலம் தந்த கெட்ட நெடியில் இவன் லயித்தான்.

புத்திபேகம் தெரு 2வது சந்தை மீண்டும் திரும்பிப் பார்க்கையில் மினுக்கும் ரோஸ் நிற பர்தாவுக்குள் பொதிந்திருந்த இளம்யுவதி ஒருத்தி, ஒரு சந்திலிருந்து மற்றொரு சந்தை மின்னலெனக் கடந்து சென்றாள். இவனுக்கு கோழிநெடியை மீறிய சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள, சத்யம் தியேட்டர் வழியே தன் இருப்பிடம் செல்லும் முடிவை துணிச்சலுடன் மாற்றிக் கொண்டான். வேகமாக அந்த யுவதி கடந்து சென்ற இடத்துக்கு வந்து பார்த்தான். அப்படி ஒரு தடயமுமில்லாமல் சந்து வெறிச்சோடியிருந்தது. ஒருவேளை வெறும் பிரம்மையோ அல்லது அவள்தான் புத்திபேகமோ என்றும் நினைத்தான். மின்னலைப் போலவே அவள் கடந்து சென்றாள். கண்டிப்பாக அவள் அசாதாரணமானவளாகவே இருக்கக் கூடும் என்றெண்ணிய வேளை காலம் குறித்து அவனுக்கு சிறு குழப்பம் ஏற்பட்டது. யாருமற்ற சந்தில் இந்த நடுநிசியில் அவள் இத்தனை துரிதமாகச் செல்லவொரு தேவையில்லை என்றும் தோன்றியது. சந்து முனை வரைக்கும் மீண்டும் நடந்து பார்த்தான். திடீரென எல்லா கதவுகளையும் திறந்து கொண்டு எண்ணற்ற ரோஸ்நிற பர்தா யுவதிகள் வெளிக்கிளம்பினர். இவன் திரும்பிப் பார்க்காமல் பீட்டர்ஸ் ரோடில் ஓடத் தொடங்கினான். அது இறைச்சியைக் கவ்விக் கொண்டோடிய நாயின் ஓட்டத்தை விடவும் துரிதமாயிருந்தது.

No comments:

Post a Comment