Sunday, March 22, 2009

தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணம் - ச. தமிழ்செல்வன்


துருக்கித் தொப்பி, கீரனூர் ஜாகிர் ராஜா
வெளியீடு : அகல் பதிப்பகம், சென்னை பக். ரூ. 80

மீன்காரத்தெருவையும் கருத்தலெப்பையையும் தமிழுக்குத்தந்த ஜாகீர்ராஜாவின் மூன்றாவது நாவல் இது.எப்போதும் இஸ்லாமிய சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பக்கம் நின்று இதுவரை யாரும் பேசாத சந்தேகத்துக்கிடமற்ற குரலில் கூர்மையான விமர்சனப் பார்வையோடு கதை சொல்பவர் ஜாகீர்ராஜா.மூடுண்ட சமூகம் என்றும் தீவிரவாதிகளின் சமூகம் என்றும் உலகெங்கும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுவரும் இஸ்லாமிய சமூக வாழ்வை தோப்பில் முகம்மது மீரான், மீரான் மைதீன், ஹெச்.ஜி.ரசூல் போன்ற படைப்பாளிகள் ஏற்கனவே நம் சமூகத்துக்குத் திறந்து வைத்தார்கள்.

அவ்வறிமுகத்தின் மீது நின்று நாம் ஜாகீர்ராஜா காட்டும் ஒரு புதிய உலகத்துக்குள் நுழைகிறோம்.இது இஸ்லாமிய சமூகத்தின் உள் முரண்பாடுகளையும் இஸ்லாத்தின் மீதான சில ஆரோக்கியமான விமர்சனங் களையும் உள்ளடக்கிய உயிருள்ள படைப்பாக மலர்கிறது.

எட்டுக்கல் பதிச்ச வீட்டின் தலைவர் கேபிஷெமனைவி பட்டம்மாளின் மகன் அத்தாவுல்லாவின் மனைவியாக நூர்ஜகான் அடியெடுத்து வைப்பதில் நாவல் துவங்குகிறது.பொன்னாலான தேகம்போல மினுங்கும் பேரழகியான அவள் மீது பட்டம்மாளே ஆசை கொள்கிறாள்.அப்பேர்ப்பட்ட நூர்ஜகான் அம்மை விளையாடி தன் அழகையிழந்து குணமே மாறி தான் பெற்ற மகனுக்கே ‘வில்லி’யாகப் பின்னர் மாறுகிறாள்.என்ன அற்புதமான பாத்திரப்படைப்பு நூர்ஜகான்! தமிழுக்கு முற்றிலும் புதிய ஒரு மனுஷியைக் கூட்டிக்கொண்டு வந்து நிறுத்திவிட்டார் ஜாகிர்ராஜா.

கல்யாணமான சில நாட்களில் ஒரு ராத்திரி யில் கணவன் தான் கல்கத்தாவுக்கு வேலைக்குப் போகப்போவதை அவள் எதிர்பாராத அத்தருணத்தில் சொல்ல அப்ப நான் என்று கேட்கையில் “நீ இங்கதே இருக்கணும்.நீயுமா எங்கூட வரமுடியும்” என்று சாதாரணமாகக் கேட்டு அவளைக் கேலி செய்து சிரிக்கிறான். இருட்டில் மௌனத்தில் அதை உள்வாங்கும் நூர்ஜகானின் மனநிலை நம்மை அதிர வைக்கிறது. ஆயிரமாயிரம் இஸ்லாமியச் சகோதரிகளின் இத்தகைய தனிவாழ்வு குறித்தான பெரும் சோகம் அந்த மௌனத் திலிருந்து கிளம்பி நம்மைத்தாக்குகிறது.

சென்னையில் சினிமா எடுக்கும் ஆசையில் சொத்தையெல்லம் தொலைத்துவிட்டு ஒரு துருக்கித் தொப்பியோடு ஊர் வந்து சேரும் மர்லின் மன்றோ அரை நிர்வாணப் படத்தை வைத்து கரசேவை செய்யும் கேபிஷெ. அதே போல திமுக அனுதாபியாக கட்சி வேலையை பெரும் போதையுடன் செய்து இருப்பைக் காலி செய்யும் மகன் அத்தாவுல்லா. அவனுடைய உழைப்பை முன்வைத்து தன் அரசியல் அந்தஸ்தை உயர்த்திகொள்ளும் தென்னாடு ஓட்டல் அதிபர் டி.எஸ்.சங்கரலிங்கம், எபவும் தண்ணி, குறத்தி வீடு என மிதக்கும் குட்டி லெவைஎன ஆண்களின் உலகம் இவ்விதமாக இயங்க பெண்களே குடும்பங்களை நடத்திச் செல்கிறார்கள்.

திமுக திராவிடநாடு கோரிக்கையைக் கை விட்ட சேதி கேட்டுத் துடித்துப்போய் ஓடிவரும் அத்தவுல்லா மற்ற மூத்த திமுக உள்ளூர் பிரமுகர்கள் அதுபற்றிக் கவலைப்படாமல் சீட்டாடிகொண்டிருகிறார்கள். எட்டுக்கல் பதிச்ச வீட்டுக்கதையாக இருந்தாலும் கூடவே பின்புலமாக சமூக அரசியல் நிகழ்வுகள் வந்துகொண்டே இருக்கிறது சிறப்பு.மாடியிலிருந்து இறங்கி அத்தாவுல்லா வரும்போது டி.எஸ்.சங்கர லிங்கத்தின் மகள் திராவிடமணி கீழே விழுந்து காயம்படுகிறாள்.

திராவிடமணியின் அழுகைச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது என்று அந்த அத்தியாயம் முடிவது நல்ல குறியீடு. திமுகவின் உட்கூடற்ற அரசியல் சத்தமேயில்லாமல் இந்நாவலில் தோலுறிந்து நிற்பது ரசமான விமர்சனம்.

அம்மை வார்த்த உடம்போடு படுத்துக்கிடக்கும் நூர்ஜகானிடமிருந்து கைக்குழந்தையை வீட்டார் பிரிப்பதும் அவள் எம் புள்ளெ எம்புள்ளெ என்று தேடி ஆடைபற்றிய கவனம்கூட இல்லாமல் தெருவில் ஓடுவதும் நம் மனங்களைப் பதறச்செய்யும் காட்சி யாகும்.தமிழ் இலக்கியத்துக்கு இக்காட்சியின் மூலம் புதிய பரிமாணத்தை ஜாகீர்ராஜா வழங்கியுள்ளார்.

நாகூர் ஆண்டவர் தர்காவில் அப்பாஸின் நினைவுகள் தாக்கி நுர்ஜகான் அழுவதும் குட்டி லெவை அவளைத் தேற்றுவதுமான அகாட்சி காவியம் தான் எனில் அவனுக்காக அவள் அழுத செய்தி கேட்டு அப்பாஸ் கதறுவதும் நூர்ஜகன் உட்கார்ந்து அழுத அந்த ஆட்டங்கல்லைத் தலையில் தூக்கிகொண்டு போக அப்பாஸ் ஆசைபடும் இடம் மகாகாவியமாகும்.

இளையவன் பிறந்தபிறகு பெற்றதாயினால் புறக்கணிக்கப்படும் ரகமத்துல்லா சர்ச்சில் யேசுவைச் சந்தித்து உரையாடுவதாக வரும் காட்சியில் கேட்பான் “நீங்கள் உங்கள் தாய் மீது பெரிய அளவில் மரியாதையுள்ளவரில்லையா? ஏனெனில் உங்களின் மீதொரு சகோதரன் சுமத்தப்படவில்லை” எத்தனை துயர்மிகுந்த பால்யம் அவனுக்கு. எல்லா மனிதர்களுமே அவரவர் அழகுகளோடும் குரூரங்களோடும் நாவலில் வாழ்கிறார்கள். அதுதான் கலையின் வெற்றி. தொப்பியைக் கழற்றி வந்தனம் செய்து இந்நாவலை தமிழ்ச்சமூகம் வரவேற்க வேண்டும்.

No comments:

Post a Comment