Tuesday, March 3, 2009

பிரகாசமான விழா

ஒரு வழியாகப் பிரகாஷ் கருத்தரங்கத்தை நடத்தி முடித்துவிட்டோம். ஒன்றரை மாத உழைப்பு. பிரபஞ்சன், நான், பாக்கியம் சங்கர், சைதை ஜெ கூட்டணியில் தமுஎச பேனரில் நிகழ்த்தி முடிக்கப்பட்ட முதல் கூட்டம். எல்லோருமே வியந்து பாராட்டிவிட்டனர். அழைப்பிதழில் 5 மணி என்றிருந்ததால் அமைச்சர் SNM அண்ணன் முன்னதாகவே வந்து முன் வரிசையில் உட்கார்ந்துவிட்டார். அரங்கில் அப்போது அவ்வளவாகக் கூட்டம் இல்லை. எங்களுக்குப் பதற்றம். ஆனால் அமைச்சரோ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். நான் காத்திருக்கிறேன் என்றார் பெருந்தன்மையாக. ஒரு வழியாக 6.15க்குத் தொடங்கி சைதை ஜெ. வரவேற்புரைத்தார். இலங்கைப் தமிழினப் படுகொலைக்கும் கிருத்திகா, சுகந்தி சுப்பிரமணியம் மறைவுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு நான் இந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசத் தொடங்கினேன்.

கொத்துக்கொத்தாகக் கூட்டம் சேர ஆரம்பித்தது. அடுத்து எழுத்தாளர் பிரபஞ்சன் 10 நிமிடம் துவக்கவுரை ஆற்றினார். மங்கையர்க்கரசி அம்மாவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அமைச்சருக்கும் ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதனுக்கும் கௌரவம் செய்யப்பட்டது. பாக்கியம் சங்கர், பிரகாஷின் கதைகளைப் பற்றிப் பேசினார். இயக்குனர் மகேந்திரன் பெற்றுக்கொள்ள, அமைச்சர் SNM நான் தொகுத்து ஆழி வெளியிட்ட 'தஞ்சைப் பிரகாஷ் படைப்புலகம்' நூலை வெளியிட்டார். சுகன், நா. விச்வநாதன், இளம்பிறை, தஞ்சாவூர் கவிராயர், சௌத் விஷன் பாலாஜி, சுந்தர் ஜி, அமைச்சர் SNM, இயக்குனர் மகேந்திரன் எல்லோரும் பேசிவிட்டனர். நட்சத்திரன், புத்தகன், மானா. பாஸ்கரன், ஆரூர் தமிழ்நாடன், கிருஷாங்கினி, மணிச்சுடர் என்று பிரகாஷ் உடன் பந்தப்பட்ட பலரும் அரங்கில் இருந்தனர். ஆனால் இவர்கள் எவரையும் பேச வைக்க முடியவில்லை. காரணம் நேரப் பற்றாக்குரை. 8 மணிக்குமேல் கடந்துவிட்டது.

இனி வர மாட்டார் என்று நம்பிக்கை இழந்த நேரத்தில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தன் வழக்கமானப் புன்னகையுடன் அவைக்குள் நுழைந்தார். நிழ்ச்சியில் சாமிநாதனுடன் உட்கார்ந்து அவ்வபோது விசில்களைக் கிளப்பிக்கொண்டிருந்த வா.மு.கோமு திடீரெனக் காணாமல் போய்விட எஸ்.ராவைப் பேச அழைத்தேன்.தாமதமான வருகைக்கு வருத்தம் தெரிவித்துவிட்டுத் தன் உரையைத் தொடங்கினார். சுமார் 20 நிமிடங்கள் அவரும் கோணங்கியும் தஞ்சைக்குச் சென்று பிரகாஷைச் சந்தித்தது, அவருடைய இயல்பு, அவருடைய எழுத்து, கரமுண்டார் வூடு நாவல் இவைகளைக் குறித்துச் செறிவான உரையை நிகழ்த்தினார். இன்னும் அரை மணி நேரம் எஸ். ரா. பேசியிருக்கலாம் என்று தோன்றியது. பார்வையாளர்களும் ஆர்வமாகவே இருந்தனர். ஆனால் அவருடைய உரை ஒரு முக்கியப் பதிவு. தமிழ்ச் சூழலில் பிரகாஷைப் பெரிதாகப் பொருட்படுத்தாதப் போக்குக்கு எஸ்.ரா.வின் உரை ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே நான் உணர்ந்தேன். எஸ்.ரா. அமர்ந்த பிறகு கோமுவைக் கூப்பிட்டேன். அவனுடைய மேடைக் கூச்சத்தைப் போக்க என்ன செய்யலாம் என்றுதான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். பலருக்கும் விழா திருப்தியைத் தந்திருக்கிறது என்று முகம் படித்ததில் தெரிந்தது. அமைச்சர் கடைசிவரை அமர்ந்து நன்றியுரை எல்லாம் கேட்டுவிட்டுத்தான் சென்றார். பிரகாஷ் மீது அவர் வைத்திருக்கும் பற்றைப் பார்த்து நாங்கள் அதிசயித்தோம். இனி இந்தக் கூட்டம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதென்று கூர்ந்து அவதானிக்க வேண்டும்.

No comments:

Post a Comment