Wednesday, March 27, 2013

பயனற்ற கண்ணீர்எழுதவந்த எல்லோரும் கவிதையிலிருந்துதான் எழுத்து  வாழ்க்கையைத் துவக்குகிறோமாயிருக்கும். அது சிறு டைரிக்கிறுக்கலாகவே இருந்தாலும் எழுத வேண்டும் எனும் முதல் உந்துதலை எழுதுகிறவனுக்குத் தருவது கவிதைதான். தயக்கம், குழப்பம், மயக்கம் எல்லாமும் கொண்ட தொடக்ககால எழுத்தாளனைக் கவிதாமோகினி தான் கரம்பற்றி அணைத்து பயம் தெளிவித்து அழைத்து வருகிறாள். பதின்வயது மனம் எப்போதும் அதன் அலைபாயும் குணாம்சங்களுடன் மொழியின் மீதும் மெல்லிய மோகமுற்றுத் தவிக்கிறது. கொஞ்சம் காதல் கொஞ்சம் சமூகக் கோபங்கள், லட்சிய தாகம், எல்லா வேகங்களும் கலந்த கலவைதான் அவன். இவ்வுலகின் மீதான முதல்பதிவை, அல்லது முதல் விமர்சனத்தை கவிதையாகத்தான் அவனால் உருவாக்க முடிகிறது. அது கவிதையா  இல்லையா என்பது குறித்து யாரும் அபிப்ராயம் கூற முடியாது. கூறினாலும் அதைக்குறித்து அவனுக்கு லட்சியமில்லை.
 எழுத்தின் பக்கமே அண்டாத சாதாரண மனிதனும் கவிதை என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறான். அதிகபட்சமாக அதன் வாசகனாகவும் அவனே இருக்கிறான். இப்படிப்பட்ட அந்தரங்க எழுத்துக்காரர்கள் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றனர். அவர்களுக்குப் பிரசுரம், பத்திரிகை, பதிப்பு, வாசகர்கள் என்னும் பிரச்சனைகளில்லை.  
 பாரதி பெருங்கொண்ட தைரியத்துடன் Ôஎமக்குத் தொழில் கவிதைÕ என்று முழங்கினான். எல்லோராலும் இப்படிச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் கவிதை வடிவம் எல்லோருக்கும் இலகுவாக வசப்படுவதில்லை. கவிதை எழுத இலக்கணப் பயிற்சி அவசியமாக இருந்தது அந்தக் காலத்தில்! எப்போதும் மரபுக் கவிதைக்கு இலக்கணப் பயிற்சி தேவைதான். கற்பனையே ஆனாலும் கடவுள் எழுதிய கவிதையிலேயே குற்றம் கண்டு பிடித்த பெரும் புலமைப் பரம்பரை நம்முடையது. Ôசொல்லில் குற்றமா அல்லது பொருளில் குற்றமாÕ என்று கேட்க, Ôசொல்லிற் குற்றமில்லை இருப்பினுமது மன்னிக்கப்படலாம், பொருளில்தான் குற்றம்Õ என கீரன் கூற ஏற்பட்ட அமளிதுமளிகளுக்கிடையில்  மன்னன் பதற்றத்துடன் எழுந்து கேட்டுக் கொள்வான் ÔÔபுலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்ÕÕ 
கவிதை குறித்த மோதல்கள் காலம் தோறும் நடைபெறுகின்றன தான். இலக்கியத்தில் சர்ச்சைகள் தான் சுவாரஸ்யம். சர்ச்சைகளில்லாது போனால் இலக்கிய உலகம் ஸ்தம்பித்துப் போய்விடும். ஆனால் தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாக எழும் சர்ச்சைகளில் இல்லை எவ்வித சுவாரஸ்யமும். தமிழின் முக்கியக் கவியாகக் கருதப்படும் பிரமிளின் கவிதைகளை முன் வைத்து வெங்கட்சாமிநாதனுக்கும் தமிழவனுக்கும் ஒருகாலத்தில் யுத்தம் நடந்தது. பிரமிளின் பல புகழ்பெற்ற படிமங்களை மாயக் கோவ்ஸ்கி, டி.எஸ்.எலியட், பாப்லோ நெரூடாவின் பாதிப்புகள் என்றார் தமிழவன். Ôஇரவினுள் புதைந்து முடங்கிக் கிடக்கும் நிழல்கள்Õ என்னும் பிரமிளின் வரி மாயக்கோவ்ஸ்கியின் விமீஸீ ணீக்ஷீமீ ஷ்மீபீரீமீபீ றீவீளீமீ sலீணீபீஷீஷ்s, கண்ணாடிப் பாலை மீது நடுக்கம் பிறக்கிறதுÕ பாப்லோ நெருடாவின் ஜிலீமீக்ஷீமீ ணீக்ஷீமீ னீவீக்ஷீக்ஷீஷீக்ஷீs tலீமீஹ் னீust லீணீஸ்மீ ஷ்மீஜீt யீஷீக்ஷீ sலீணீனீமீ ணீஸீபீ யீக்ஷீவீரீலீt,  இழந்த படிமங்களைக் கணக்கில் வைÕ எலியட்டின் ணீ லீமீணீஜீ ஷீயீ தீக்ஷீஷீளீமீஸீ வீனீணீரீமீs என்று ஒப்பிட்டுச் சொன்னார் தமிழவன். ஆனாலும் பிரமிள் இன்றளவும் தமிழின் முக்கியக் கவியாகவே மதிக்கப்படுகிறார்.
1970-80களில் பல கல்லூரி மாணவர்களுக்கு மனப்பாடமாக இருந்த மு.மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் தொகுப்பை வாசித்து ÔÔஇவர் இதுவரை கவிதைகளே எழுதவில்லை. இனி எப்போதாவது எழுதலாம். இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் குடியரசுத் தலைவர் ஆகலாம் என்கிற மாதிரிÕÕ என்று காட்டமாக விமர்சித்தார் வெங்கட்சாமிநாதன். கண்ணீர்ப் பூக்களின் அடுத்த பதிப்பில் மு.மேத்தா வெ.சா.வின் இந்த விமர்சனத்தையும் சேர்த்துக் கொண்டார். இது ஒரு எதிர்வினையாகவும் அமைந்தது. தஞ்சாவூர் பெரியகோவில் புல்வெளி இலக்கிய சந்திப்புகளில் அப்போதுதான் எழுதி ஈரம் உலர்வதற்கு முன் வாசிக்கப்பட்ட சில புதிய நண்பர்களின் கவிதைகளை “திணீறீறீs றிஷீமீtக்ஷீஹ்”  என்று சொல்லி ப்ரகாஷ் மட்டையடியாக நிராகரித்ததைக் கண்டு நான் பதறிப் போயிருக்கிறேன்.
ஒரு படைப்புக்கான விமர்சனம், எதிர்வினை, மறுவினை இவை எல்லாம் இலக்கிய உலகில் சகஜம். நன்றாக இல்லை என்று சொல்லி விடுவார்களோ என அஞ்சி ஒரு எழுத்தாளன் படைக்காமல் நிறுத்திவிடுவதில்லை.
 புதுக்கவிதை இயக்கம் வலுப்பெற்ற பிறகு மரபிலக்கணம் குறித்து கவலைப்படாமல் எவர் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்கிற நிலை உண்டானது. இதைப் பயன்படுத்திக்கொண்டு நிறைய குப்பைகள் சேர்ந்தன, உண்மைதான். ஆனால் புதுக்கவிதையை உரிய இடத்திற்கு உயர்த்தியவர்களுக்கு மரபுப் பரிச்சயமுமிருந்தது. ந.பிச்சமூர்த்திக்கு மரபு தெரியாது என்று சொல்லமுடியாது. வானம்பாடிகளில் பலரும் தமிழை முறையாகக் கற்றவர்கள்தான். கல்யாண்ஜி, கலாப்ரியாவும், விக்ரமாதித்யனும் அப்படித்தான். அது அவர்களுக்கு கூடுதல் பலமாக இருந்தது. ஆனால் மரபுப் பரிச்சயமிருந்துதான் புதுக்கவிதை எழுதவேண்டும் என்கிற நிலை இல்லை. புதுக்கவிதை நவீன கவிதையாகப் பரிணாமம் அடைந்தபிறகு எழுதிய பலருக்கும் மரபு தெரிந்திருக்கவில்லை. அப்படியரு அவசியமுமில்லை. ஆனால் மரபுக் கவிதையைப் போல நிறையக் கவிதைகளை, அதன் வரிகளை ஞாபகத்தில் வைத்திருக்க முடிவதில்லை. நவீன கவிதையின் ஓசையைத் துறந்த தன்மைதான் இதற்கு காரணம். இது தான் நவீன கவிதையின் சுயம்
***
சிவகாமியின் Ôபயனற்ற கண்ணீர்Õ கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இந்தத் தலைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. கண்ணீருக்கான பயன் இருக்க வேண்டும். பயனற்ற கண்ணீரால் எதுவும் நேர்ந்துவிடப் போவதில்லை என்று உணர்த்துவதைப் போன்ற தலைப்பு. சிவகாமி ஒரு பெண் என்பதாலும் என்னை அதிகம் யோசிக்க வைத்த தலைப்பு. பெண்களின் ஆயுதமே கண்ணீர்தான் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. லௌகீஹ வாழ்க்கையை முன்வைத்து உதிர்க்கப்பட்ட சம்பிரதாயமான வார்த்தை அது. மட்டுமல்ல, ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து தோன்றும் பல்வேறு சொல்லாடல்களில் இதுவும் ஒன்றுதான்.
 முக்கியமாக சிவகாமி இந்தத் தொகுப்பின் மூலமாகப் பேச வருவது சமகாலப் பெண்கவிஞர்கள் எழுதிச் செல்லும் உடலரசியல் அல்ல. அரசியல்!
சிவகாமியின் கவிதைகளைக் காட்டிலும் அவர் எழுதியிருக்கின்ற முன்னுரை மிக முக்கியமானது. இதனால் அவருடைய கவிதைகளைக் குறைத்து மதிப்பிடுவதாக நீங்கள் கருதக்கூடாது. அண்மையில் பெண்கவிகள் எழுதிய எந்தத் தொகுப்பிலும் இப்படி ஒரு அர்த்தச் செறிவுள்ள முன்னுரையை நான் வாசிக்கவில்லை. உதாரணத்துக்கு இரண்டு பத்திகளைச் சொல்ல முடியும்.
1.   ÔÔபார்ப்பன எதிர்ப்பு தமிழில் சரியாக விளங்கிக் கொள்ளப்பட்ட அளவு சாதி ஒழிப்பு விளங்கிக் கொள்ளப்படவில்லையெனில் இதில் மொழியின் குறைபாடு என்ன? பூர்வ பௌத்தர்கள் என்றறியப்பட்ட தலித் மக்கள் இந்து ஒடுக்குமுறைக்கெதிராக தங்களை இந்துக்கள் அல்ல என்று அறிவித்துக் கொண்டது போல, சாதியத்தை வேரறுக்கத் தமிழரில்லை என அறிவித்துக் கொள்ள இயலுமா? இந்தக் கேள்வியில் மொழிக்கான  அத்தனை முக்கியத்துவமும் சரிந்து தரைமட்டம் ஆகி, ஆவியாகிக் கரைவதைப் பார்க்கையில் மொழியின் போதாமை கையறு நிலைக்கு என்னைக் கொண்டு செல்கிறதுÕÕ
2. ÔÔஉரை நடையில் எளிதாக விரித்து எழுதுகின்ற விஷயங்களை இடமற்ற கவிதைச் சிமிழுக்குள் அடைக்க பொருத்தமான வார்த்தைகளைத் தேடி அலைகின்றேன். எத்தனை குறைவானது எனது அகராதி என்பதை திரும்பத் திரும்ப முன்னுக்கு வந்து நிற்கின்ற சில சொற்கள் மூலம் அறிகின்றேன். பிறகுதான் புலப்படுகின்றது அவை சொற்களல்ல. திரும்ப அசைபோட்டு உருவாக்கி வைத்துள்ள உணர்வுகளென...ÕÕ
சிவகாமி எனக்குப் புனைவெழுத்தின் வழியே நாவலாசிரியராகத்தான் முதலில் அறிமுகம். எனது வாசிப்பனுபவத்தின் வாயிலாக அவருடைய Ôபழையனகழிதலும்Õ நாவல் அவரைக் குறித்த வலுவான சித்திரத்தை என்னுள் வார்த்து வைத்திருந்தது. கௌரி என்கிற பெண்ணிற்கும் காத்தமுத்து என்கிற தந்தைக்கும் இடையிலான நேசம், பின்பு முரணாகி கண்ணெதிரில் காத்தமுத்துவின் நாயகன் பிம்பம் கலைந்து போவதை கலாபூர்வமாகச் சித்தரித்திருப்பார் சிவகாமி. அதிகமும் சுயவிமர்சனம் செய்துகொண்டு எழுதப்பட்ட தலித் படைப்பாக இதை நான் இன்றைக்கும் மதிக்கிறேன். குறுக்குவெட்டு, ஆனந்தாயி உள்ளிட்ட அவருடைய பிற புதினங்களும் இதே மதிப்பீட்டில் வைத்துப் பார்க்கத்தக்கனவே.சிவகாமியின் முதல் கவிதைத் தொகுப்பு என் வாசிப்புக்கு கிடைக்கவில்லை. எனவே பயனற்ற கண்ணீரே நான் வாசித்த அவருடைய முதல் தொகுப்பு.
ÔÔஅரசியலை அழகின் மேன்மை குறையாது மக்கள் முன்பு நீதியின் கூண்டில் நிறுத்திடும் ஆசை மேலிடுகிறது. அரசியலைக் கவிதையிலிருந்து நீக்கம் செய்தல் தாழி உடைத்து வெண்ணெய் வழிப்பது போலிருக்கிறதுÕÕ
என முன்னுரையில் எழுதிச் செல்லும் சிவகாமி அவ்வழி நின்றே 66 கவிதைகளையும் படைத்துள்ளார். ஒவ்வொரு கவிதையையும் அதனதன் அரசியல் அழகியலோடு விரிவாகப் பேச வேண்டும். அதற்கு இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்கும் என்று  நம்புகிறேன்.
 Ôசிறுமிகளின் சடலங்களில் கருணைÕ என்கிற தலைப்பில் அவர் எழுதியுள்ள கவிதையின் கடைசி வரிகளை மட்டும் பெரும் மனப்பதற்றத்துடன் இங்கே முன் வைக்கிறேன்.
 முட்புதர்களில் ஒளித்து வைக்கப்பட்டு
 வல்லுறவு கறைகளுடன் கிடந்த
 பூக்களின் கடைவாய்ப் பற்களில்
 முழுதும் தின்று முடிக்காத
 பாதி சாக்லேட்டைப் பார்க்கும்போது
 கதறி அழுகிறது கருணை
 அதன் நேரம் குறைக்கப்பட்டதென்று.
***
நண்பரின் கவிதைகளுக்கு முன்னுரை எழுதுவது சுகானுபவம். மதிப்புரை தருவது கடினம். வே.பாபு சேலத்துக்காரர். தக்கை என்னும் இலக்கிய அமைப்பையும் அதே பெயரில் இதழையும் நடத்தி வருகிறார். சேலம் மாவட்ட தமுஎகசவிலும் பாபு ஒரு முக்கியஸ்தர். டிராவல்ஸ் ஒன்றின் நிறுவனர். விருந்தோம்பலில் சிறந்தவர். அதிர்ந்து பேசமாட்டார் அத்திபூத்தாற்போல கவிதைகள் எழுதுவார். அதுவும் ரத்தினச் சுருக்கமாக, ஆனால் கவிதையாக.
 38 வயதாகும் பாபு ஒரு பிரம்மச்சாரி. திருமணம் செய்து கொள்ளாதவர். அப்படி ஒரு எண்ணமும் இல்லாதவர். எங்கள் முந்தைய சந்திப்பிலும் இதை அவர் உறுதிப்படுத்தினார். கவிதை சரியா, பழுதா என்பதைச் சொல்.  இதை எல்லாம் இங்கே ஏன் எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் எழுதித்தான் ஆக வேண்டும். பாபுவின் கவிதைகளை வாசிக்கையில் uஸீபீமீக்ஷீ நீuக்ஷீக்ஷீமீஸீt ஆக ஓடிக் கொண்டிருக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் இந்த பிரம்மச்சர்யத்துக்கும் தொடர்பிருப்பதாகவே நான் கருதுகிறேன். இது என்னுடைய ஒருவரி விமர்சனம்.
Ôமதுக்குவளை மலர்Õ என்று அவர் வைத்திருக்கிற தலைப்பே விநோதம். குவளை மலர்களை மட்டுமறிந்தவர்களுக்கு இது சற்றுக் குழப்பம். பாபுவின் தொகுப்பே மொத்தத்தில் ஒரு விநோத ரஸ மஞ்சரிதான். இப்போது பாபு பதிப்பாளராகவும் அவதாரமெடுத்திருக்கிறார். சூல்ச்சிக்கணும் பாபே! (கவனமாக இருங்கள் பாபு) அவர் பதிப்பித்த 3 புத்தகங்களுக்கும் சென்ற மாதம் சென்னையில் வைத்து ஒரு விமர்சனக் கூட்டம் நடந்தது. பாபுவின் கவிதைகளைக் குறித்து விமர்சனக் கட்டுரை வாசித்த ஒருவர் பாபுவின் தமுஎச, இடதுசாரி இயக்கத் தொடர்பு குறித்து சற்றுக் கிண்டல் தொனிக்கப் பேசினார். ஏற்புரையின்போது பாபு பதில் சொன்னார். அதுவும் அத்தனை சாந்தமாக, புன்னகையுடன் ஆனால் அழுத்தமாக ÔÔநீங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் நான் எப்போதும் கம்யூனிஸ்ட்தான். தமுஎகச தான்ÕÕ சபாஷ் பாபு! இடதுசாரிகளைக் கிண்டலிப்பது தமிழ்நாட்டில் இப்போது ஒரு ஃபேஷன். இது அவர்களையே கிண்டல் செய்துகொள்வது தானன்றி வேறென்ன?
தொகுப்பெங்கும் அம்மு என்கிற பெண் வெற்றிலையின் மத்தியில் ஓடும் நரம்பு மாதிரி நெடுகப் பரந்திருக்கிறாள். பாபுவின் சுவாசப்பை அந்தப் பெண்ணின் கக்கத்திலிருக்கிறது. கவிதையின் தொடக்க வரிகளை பாபு அனாயசமாக எழுதிச்செல்லும் முடிப்பில் எப்போதும் ஒரு அதிர்வைத் தந்துவிடுவதில் குறியாக இருக்கிறார்.
ஒரு சின்னஞ்சிறு பூ என் மதுக்கோப்பையினுள் வந்து விழுகிறது அது அம்முதான்... மதுவோடு இலையைக் குடிப்பவன் பிறகு கிளையை மரத்தை குடிக்கிறான் இறுதியாக ஒரு வனத்தை... இலட்சத்தில் ஒருவனுக்குத்தான் அபூர்வ மலர் கிடைக்கிறது அது உதிரும் தறுவாயில்... ஒருநொடி இறந்தவனின் கண்கள் திறந்து மூடுகின்றன... அதிர்விலிருந்து மீளாதொரு நிலையில் கண்டேன் வண்ணத்துப் பூச்சியின் உடலை எறும்புகள் இழுத்துச் செல்வதை.. ஒரு கணம் ஒளி மிகுந்ததாய் மாறி சட்டென மூழ்குகிறது கனத்த இருளுக்குள் வீடு... பறவைகளில்லா கூண்டுகள் மிக அழகானவை..
இவ்வாறு வெவ்வேறு கவிதைகளின் முடிப்பு வரிகளை எழுதும் இவர் ஓரிடத்தில் எழுதுகிறார் ÔÔமுடிவுகளைப் பற்றி இருவருக்குமே தெரியும். நம் பிரச்சனைகளெல்லாம் ஆரம்ப வரிகளைப் பற்றித்தான்.ÕÕ
 நான் மீண்டும் மீண்டும் வாசித்தபோது கண்டடைந்தது இவருள் இயங்கும் ஒருவித உளவியல் கூறுகளுள்ள கவிதா மனோபாவத்தைத் தான். மனுஷ்யபுத்திரனின் தொடக்ககாலக் கவிதை மனம் பாபுவிற்குள் இயங்குகிறது என்றும்கூட சொல்வேன். இதை அவர் வளர்த்தெடுக்க வேண்டுமென்பது என் ஆசை. ஆனால் அவரை இன்றைக்கு எழுதுகின்ற எல்லா இளைஞர்களுடனும் ஒப்பிட்டுவிட முடியாது. தன்னுடைய மேதைமை குறித்த பெரிய எதிர்பார்ப்புகளில்லாத மனிதன். தோன்றும்போது எழுதி, தானே பல நாட்கள் அதை அசைபோட்டு ரசித்து, வாய்க்குமானால் வாசகனுக்கும் பாவிக்கத் தரும் ஒருமாதிரியான பரபரப்பில்லாத தன்மை.. சித்தன் போக்கு!
 கொண்டாட்டங்களையும், குமுறல்களையும் உலர்ந்த வரிகளால் எழுதுகிறார் பாபு. ÔÔநீ சொல்லியபடி வரைந்தபடி இல்லை பறவைகள் நேரில் பார்த்தபோது பறவைகளாக இருந்தன பறவைகள்ÕÕ என்பன போன்ற குறுங்கவிதைகள் வெறுமனே ஆரவாரமின்றி நம்மை நோக்கிப் பாய்ந்து வந்து கணநேரத்தில் வேறொரு அர்த்ததளத்திற்கு கொண்டு போய் நிறுத்துகின்றன. இது ஆகாச ராட்டினப் பெட்டியின் மேலிருந்து விருட்டென அந்தரத்தில் பரவுகின்ற உணர்வைத் தந்துவிடுகிறது.  
சிலவற்றைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகையில் இப்படிச் சொல்வது நியாயம்தான் என்றும் தோன்றுகிறது. முழுக்கவும் தானே விரும்பி வழி நடத்தும் ஒற்றையடிப் பாதையிலேயே நகர்வதால் சமூகப் பிரச்சனைகளைக் கையாளும்போது கவிஞன் நிராயுதபாணியாக நிற்கிறான், இதுபோன்ற தொகுப்புகளில் இப்படி நிகழும்தான், தவிர்க்க முடியாது.
***
கூப்பு ரோட்லே
கையில கெடாய்த்தும்
இருளனெ வெலாக்கி
தூக்கி பெணாங்கி மெதிச்சான்
எச்சாவோ நிந்த
காண்ரீட்டுகாரனே--
ராஜா
இப்படித்தான் புதிராகத் துவங்குகிறது லட்சுமணனின் Ôஒடியன்Õ கவிதைத் தொகுப்பு. கூப்பு ரோடு -- காட்டில் வெட்டிய மரங்களை எடுத்துப்போக வனத்துறைபோடும் சாலை, கெடாய்த்தும் கிடைத்தும்,  வெலாக்கி -- விலக்கி, பெணாங்கி- - சபித்து, எச்சாவோ நிந்த -- எங்கேயோ நின்ற, ராஜா - -யானை இவ்வாறு கவிதையை வாசிக்கிற பலருக்குப் பிடிபடாமலிருக்கிற இருளர் மொழிக்கு அந்தந்தப் பக்கத்திலேயே மெனக்கெட்டு விளக்கங்களையும் தருகிறார் லட்சுமணன்.
ÔÔஎனக்கு அறிமுகமான இருளர் பழங்குடி மக்கள் பற்றிய கவிதைகளை அவர்கள் மொழியான இருளர் மொழியிலேயே எழுதியிருப்பது வாசகனை சித்திரவதைப்படுத்தும் நோக்கத்திலல்ல, அவர்களிடம் கேட்டதை, கேட்டபடி, எழுத்து வடிவம் இல்லாத அவர்கள் மொழியிலேயே கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்பதாலும் தான்ÕÕ என்று முன்னுரையில் நியாயப்படுத்தும் லட்சுமணனுக்கு இதைச் செய்யவேண்டிய நிர்பந்தம் என்ன? அவரே அதற்கான பதிலையும் தருகிறார். ÔÔபழங்குடி மக்களுக்கென்று மொழிகள் இருக்கின்றன. அவை நமது தமிழ் போலவே அன்பையும், கோபத்தையும், வெறுப்பையும், நேசத்தையும் வன்மையுடன் வெளிப்படுத்தும் ஆற்றலும், ஆழமும் கொண்டவை. அம்மொழிகளை தமிழக மக்கள் அறிமுகம் செய்துகொள்வது அந்த மண்ணையும் மலைகளையும் வெறும் கேளிக்கை இடங்களாக பார்க்காமலிருக்க உதவும்ÕÕ
இக்கவிதைகளுக்கு அணிந்துரை எழுதியிருக்கின்ற நண்பர் Ôசோளகர் தொட்டிÕ நாவலாசிரியர் ச.பாலமுருகன் கோவன் பதி என்றழைக்கப்பட்ட கோயமுத்தூரின் பூர்வீக வரலாற்றுடன், மலைகள் சூழ்ந்த அந்த வனப் பகுதியை ஆண்ட இருளர் பழங்குடிகளின் வரலாற்றையும், லட்சுமணணின் கவிதைகளில் பதிவாகியுள்ள அம்மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கின்ற தொன்மங்களையும் குறிப்பிடுகிறார். முயல்கள் குடியிருப்புகளுக்கு அருகில் வந்து புல்கடிப்பதும், சகுனாகுருவி கத்துவதும், செம்போத்து குறுக்கே போவதும், பாம்புகளைக் காண்பதும் அம்மக்களுக்கு துர்சகுனங்கள். பெருமாட்டி குருவி கத்துவது, இருள்கவியும் நேரத்தில் வாசலில் வந்து கிளிகத்துவது நற்சகுனங்கள். இப்படி இப்படி நிறைய.
 கோவமூப்பன் இருளர் மக்களின் தலைவன், அவனே கோவை வனப்பகுதியைக் கட்டி ஆண்டவன். ஒரு கட்டத்தில் சோழ மன்னனின் நாடு பிடிக்கும் ஆசைக்கு பலியாக நேர்கிறது. கோவமூப்பன். பழங்குடி அரசு வீழ்கிறது. பூர்வகுடிகள் வனங்களடர்ந்த மலைகளின் மேல் விரட்டப்பட்டனர். இவர்களுக்குத் துணையாக பழங்குடித் தெய்வம் மட்டுமே நின்றது... இந்தக் கதையைச் சொல்லும்   நண்பர் பாலமுருகனிடம் நான் கோருவது.... இதை ஒரு நாவலாக எழுதுங்கள் பாலா!
லட்சுமணன் இத்தொகுப்பை காடு, நகரம் என இரண்டாகப் பிரிக்கிறார். காடுதான் வாசகனுக்குப் பெரும் புதிராகவும், புதராகவும், பார்க்கப் பார்க்கத் தீராத விருட்சங்களுடனும், நடக்க நடக்க முடிவுறாத மர்மப் பாதையாகவும், கேட்க கேட்க சங்கீதமாகிற மொழி வளத்துடனும் உள்ளது. பழங்குடி இருளர் மக்களின் மொழியைக் கூர்ந்து கவனிக்கையில் அதில் தமிழும், பிற திராவிட மொழிகளின் கலப்பும், மலை மக்களுக்கேயுரிய குறியீட்டுச் சொற்களும் விரவிக் கிடப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அவர்களின் அதீத நம்பிக்கைகளை பகுத்தறிவுக் கண்ணாடியணிந்து ஒவ்வாதவையென இன்றைக்கு நாம் மதிப்பீடு செய்தாலும் ஒரு காலத்தில் நம் மூதாதையர்களும் இப்படித்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்னும் யதார்த்தத்தையும் உணர¢ந்து கொள்ள முடியும்.
சுள்ளி எடுத்தா அடிக்கே
காட்டுக்குள்ளே போனா புடிக்கே
தேனெடுத்தா பாதி கேக்கே
தானிக்காய் பொரித்தா பாக்கே
எல்லாமே நிம்த்துதுங்கே
எனக்கொன்றும் பெரிய வித்தியாசப்படவில்லை இம்மொழி, இதன் தொனி, இக்கவிதைகள் உணர்த்தும் அரசியல். பாஷை புரியவில்லையென எவரும் சொன்னால் அது வெறும் பாசாங்கு.
 தமிழ் இலக்கியச்சூழலில் எப்போதாவது இப்படிப்பட்ட அபூர்வங்கள் நிகழ்கின்றன. நமக்கு வெகு தொலைவிலிருந்து பரிச்சயமற்ற ஒரு உலகைக் கண்டு இலக்கியமாக்குவது ஆகச்சிறந்த பணி. லட்சுமணனும் பாலமுருகனும் நமக்குக் கிடைத்த பெரும் பேறுகள்.
 கடைசியாக ஒரு வார்த்தை. ஒடியன் என்றால் தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி என்று பொருளாம். மார்க்குவேஸையே எதிர்கொள்ளும் மாந்திரீக யதார்த்தங்கள் நம் வனங்களிலும் மலைகளிலும் உறைந்து கிடக்கின்றன. உருக்கிப் புட்டியில் தர நமக்கு லட்சுமணன்கள்தான் வேண்டும்.
• பயனற்ற கண்ணீர் 
   சிவகாமி | உயிர்மை, சென்னை
• மதுக்குவளை மலர்
  வே. பாபு | தக்கை, சேலம்
• ஓடியன்

No comments:

Post a Comment