நீயும் குழந்தைகளும் என்றென்றைக்கும் என்னுடையவர்கள் மட்டும் தானென்று நான்நம்பவில்லை. இதுபோன்ற துர்விதி என்னை வேட்டையாடுமென்றால் நாளை உங்களை ரட்சிப்பதற்கான எனது கடைசி தந்திரமும் தவறிப்போகும் பட்சத்தில் உனக்கு விருப்பமில்லை என்றாலும் உனது இதயம் வேறு ஒருவனுடைய சூடு தேடிச் செல்லும். அவன் பரிசாய்த் தருகின்ற இனிப்புப் பலகாரங்களிலும் விளையாட்டுச் சாதனங்களிலும் நமது குழந்தைகள் சந்தோஷத்தில் மூழ்கிப் போவார்கள்.
பிறகு... பிறகு... அர்த்தமற்ற இந்த வாழ்க்கையின் வெள்ளரித் தோட்டத்தில் நான் வெறும் சோளக் கொல்லை பொம்மைதான்.ÕÕ
-பவித்ரன் தீக்குன்னி (மலையாளம்)
தமிழும் மலையாளமும், சகோதர மொழிகள் என நாம் கூறிவந்தாலும், திராவிட மொழி இனங்களில் மலையாளத்துக்கென்று சில தனித்த பண்புகள் உள்ளன. மிகப் பழமை வாய்ந்த இலக்கண நூலான தொல்காப்பியத்தின் இலக்கண விதிகளுக்கேற்ற சொல்லாட்சிகள் மிகுதியாக மலையாளத்தில் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன. எண்ணற்ற திராவிட சொற்களை தமிழர்களாகிய நாம் நிகண்டுவின் துணை கொண்டுதான் பொருள் உணர முடிகிறது. ஆனால் மலையாளத்தில் அவை Ôவழக்குச் சொற்களாகவேÕ நீடிக்கக் காணலாம். மூல திராவிட மொழியிலிருந்து பிரிந்த மலையாளத்தில் செந்தமிழும், சமஸ்கிருதமும், இரண்டறக் கலந்திருக்கின்றன. இப்படி கலப்பான மொழியைக் கொண்டு ஒரு இலக்கிய நடையை உருவாக்கி அதற்கு Ôமணிப்பிரவாளம்Õ என்றும் பெயரிட்டனர். முன்பு நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் சிலர் மணிப்பிரவாள நடையில் எழுதினார்கள். அதற்கு தனித்தமிழ்வாதிகளின் எதிர்ப்பும் விமர்சனமும் தீவிரமாக இருந்தது. ஆனால் மலையாளத்திலும், சமஸ்கிருதத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அந்த Ôபிரவாள நடையில்Õ ஒரு கிறக்கம் உண்டு. எழுதத் தொடங்கிய புதிதில் மணிப்பிரவாள நடையில் எழுதமுயன்று வாங்கிக்கட்டிக் கொண்ட அனுபவம் எனக்கிருக்கிறது.
பவித்ரன் தீக்குன்னியை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும்போது இந்தப் பீடிகைகள் தேவையற்றவை என்றே தோன்றுகிறது. ஏனெனில் இலக்கியப் பாரம்பரியப் பெருமிதமோ, வம்சாவழிக் கசடுகளோ, இவர் மேல் பதிந்து கிடக்கக் காணோம். வாழ்க்கை இவர் மேல் நிர்ப்பந்தித்த கொடூரங்கள் யாவற்றையும் எதிர்கொண்டு இன்றுவரை அவரால் எப்படி ஒரு கவிஞனாக தன்னுடைய இருப்பை அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதில் தான் தீக்குன்னியின் சாகசம் வெளிப்படுகிறது.
ஆம்! நிச்சயமாக இது ஒரு சாகசம்தான்! சில மாதங்களின் முன்னர் நான் பவா செல்லத்துரையின் ஒரு கட்டுரைத் தொகுப்பை வாசிக்கையில் மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு குறித்த அவரின் பதிவு ஒன்று எனக்கு மிகுந்த மனசஞ்சலத்தை அளித்தது. இன்றைக்கு தீக்குன்னியை வாசிக்கும்போது, அந்த சஞ்சலம் பலநூறு மடங்குகளானதாக உணர்கிறேன். எனினும் சுள்ளிக்காடும், தீக்குன்னியும் இரு வேறு துருவங்கள். இருவருக்குமான வாழ்க்கை இடர்பாடுகள் வேறு வேறுவிதமானவை.
ஒரு படைப்புக் கலைஞன் வறுமையை எதிர்கொள்வது இலக்கியத்திற்கு புதிய செய்தி இல்லைதான். தமிழில் பாரதியும், புதுமைப்பித்தனும் பெரும் முன்னுதாரணங்கள். இவர்கள் மட்டும் தானா என்றால் இல்லை. இவர்களுக்கு முன்னாலும், புலமைப் பாரம்பரியம் தரித்திர வயப்பட்டதாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் ÔÔசேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்ÕÕ என்று எழுதி வைத்தனர்.
நம்முடைய சமகால எழுத்தாளர்கள் இதைக் காட்டிலும் துன்ப துயரங்கள் படுகின்றனர். வாழ்க்கை இவர்களைப் பார்த்து பரிகசிப்பது பிறர் கண்களுக்குத் தெரிவதே இல்லை. தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் கலைஞர்களாக சபிக்கப்பட்டுவிட்டனர். சாபத்தை வரமாக்கிக் கொண்டு எவரிடத்தும் சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களாக தமிழின் உன்னதமான சிருஷ்டிகர்த்தாக்களில் பலரும் உள்ளடுங்கி ஒதுங்கி வாழும் அவலம் இன்றளவும் தொடர்கிறது.
மலையாளம் கலைஞனை மதிக்கத் தெரிந்த உலகம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். பவித்ரன் தீக்குன்னியின் அனுபவங்களை வாசிக்கும்போது அச்சமும், பீதியும் நம்மையும் அறியாமல் நம்மேல் வந்து கவிந்து கொள்கிறது. 1974ல் கோழிக்கோடு மாவட்டத்தில் தீக்குன்னி என்னுமிடத்தில் பிறந்த பவித்ரனின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி. தந்தை மனம் பிறழ்ந்தலைபவர். ஒரு பச்சையான அயலை மீனைக் கடித்துத் தின்று கொண்டிருந்த தன் தந்தையின் வாயிலிருந்து அந்த மீனின் செவிலும், குடலும், வெளியே தொங்கிக் கொண்டிருந்த காட்சியை எவ்வித அருவருப்பும் இல்லாமல் ÔÔஒரு மீன் வியாபாரி கவிதைகள் விற்கிறான்ÕÕ என்னும் தன்னுடைய முன்னுரையில் தீக்குன்னி குறிப்பிடுகிறார். தீக்குன்னிக்கும் கூட மீன் வியாபாரம்தான். உபரியாக லாட்டரி டிக்கெட் விற்பனையும் நடத்தும் இவர் தேர்தல் காலத்தில் கம்யூனிஸ்டு இயக்கத்துக்காக மைக்கைப் பிடித்துக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
சமீபமாக வாசிக்கின்ற கவிதைத் தொகுப்புகளி லெல்லாம் அபூர்வமான சில முன்னுரைகளைக் கவிஞர்கள் எழுதிவிடுகின்றனர். கவிதைகளைக் கடந்து அவை மனதை அசைத்துப் பார்த்துவிடுவது ஆச்சரியமாகவே இருக்கிறது. 79 பக்கங்களில் முடிந்துவிடும் இத்தொகுப்பில் பவித்ரன் தீக்குன்னி 22 பக்கங்களைத் தன்னுடைய முன்னுரைக்காக மட்டுமே எடுத்துக் கொள்கிறார். அந்த முன்னுரையில் அவருடைய வாழ்க்கை அவலங்கள் அப்படியே அட்சரங்களாக குற்றுயிரும், குலையுயிருமாகச் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை வாசிக்கும்போது பவித்ரன் பட்ட பாட்டுக்கு முன்னால் நம் துன்பம் கொஞ்சம் என்றுதான் எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும்.
ÔÔஅம்மா ஒரு மோசமான பெண் என்று என்னிடம் யார்யாரோ சொன்னது உண்டு. அப்போதெல்லாம் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்றாலும் நான் ஐந்து வயது முதலே அம்மாவை வெறுக்கத் தொடங்கி விட்டேன். வெறுப்பு அதிகமானபோதெல்லாம் யாருடைய கண்களிலும் படாமல் எங்கெல்லாமோ அலைந்து திரிந்தேன். ஆனாலும் ஓயாமல் அடித்துப் பொழிகின்ற ஒரு ஆடி மாத மழையைப் போல அம்மா இன்னும் என் மனசுக்குள் இருக்கிறாள்ÕÕ என்று அவர் எழுதும்போது அம்மா பிள்ளை பாசம் குறித்து வலிந்து வலிந்து எழுதப்படுகின்ற நம் எழுத்துக்கள் எல்லாமும், பஸ்பமாகி விடுவதைப் போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவ்விடத்தில் எனக்கு தி.ஜானகிராமனின் Ôஅம்மா வந்தாள்Õ நாவலின் அப்பு நியாபகத்திற்கு வரவே செய்தான். அப்புவிற்கேனும் சுழித்துக்கொண்டோடும் காவிரியின் படித்துறையில் அமர்ந்து அழ வாய்த்தது.
ஒரு ஓணம் பண்டிகை நாளில் கடன் தொல்லை தாளமாட்டாமல் திருச்சூர் ரயில்நிலைய தண்டவாளத்தில் படுத்து தீக்குன்னி தன் மனைவி மக்களுடன் தற்கொலைக்கு முயற்சித்த அந்த கசப்பான பக்கங்களை உங்களிடம் விவரித்துச் சொல்ல எனக்கு மன தைரியம் போதவில்லை. ஆதலால் இம்மட்டிலும் அதை முடித்துக்கொள்கிறேன்.
ஒரு பட்டினி நாளில் தன் மகளை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு கோயில் வாசலில் பிச்சை எடுக்கப்போகிறான் கவிஞன். Ôகவிஞன்Õ Ôகவிஞன்Õ என்று தன்னைக் கூவிக்கொண்டாலும் பிச்சை விழவில்லையே? மகளை நன்றாகக் கிள்ளிவிட்டு வலியால் அவள் வாய்விட்டுக் கதறி அழுதவுடன் தான் கொஞ்சம் போல மனிதமனம் இரங்குகிறது. சில சில்லறை நாணயங்கள் சிதறி விழுகின்றன. அதில்தான் அன்றைக்கு உணவு.
மலையாளிகள் ஏன் இத்தனை அப்பட்டமாக எழுதுகின்றனர்? அவர்களுக்கு ஏன் ஒளிவு மறைவாகப் பூசிமெழுகி எழுதத் தெரியவில்லை? என்.டி.ராஜ்குமார் ஏன் இதைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க வேண்டும்? இப்படியெல்லாம் எனக்கு கேட்கத் தோன்றுகிறது.
அலையடங்கிய கடலின் அவஸ்தையோடு தான் நாங்கள் இருக்கிறோம். கவிதைகளுக்குள் அதே அவஸ்தைதான் தோன்றுகிறது. நெஞ்சுக்குள் அடங்கிக் கிடக்கும் தீயைப் போல
என்று பவித்ரன் எழுதுகிறார்; மகத்தான கவிதையன்றும் நான் எழுதியதில்லை என்று சொல்லிக் கொண்டே.
வழிநெடுகத் தொடரும் வாதைகளோடும், Ôகிறுக்கனுக்க மகன்Õ என்னும் அடைமொழியோடும், தீக்குன்னி நடந்தாலும் கவிதைகள் எழுதுவதை மட்டும் நிறுத்தவில்லை. தனக்கான ஒரே Ôபாதுகாப்பு வளையம்Õ என்று அவர் கவிதைகள் எழுதுவதைத் தான் குறிப்பிடுகிறார். இந்த நெஞ்சுரம்தானே தேவை ஒரு கலைஞனுக்கு?
கவிதைகளை எளிமைப்படுத்தி விட்டார் என்றும் தன் வரலாறைக் கவிதையாக முன் வைக்கிறார் என்றும், கவிதைக்கான இறுக்கத்தைத் தரக்கூடிய சமஸ்கிருத எல்லைகளைத் தவிர்த்துவிட்டார் என்றும் இவர்மேல் ஒருபாடு குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் வழியே இதுகாறும் மலையாளக் கவிதைகளின் சுயம் என்னவாக இருந்தது என நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இவர்தான் இப்போதைக்கு மலையாளக் கவிதைகளின் ரட்சகன் என்று நம்மால் தீர்ப்பளித்துக் கொள்ள முடியும்.
பவித்ரனின் இந்த நீண்ட முன்னுரை, அவருடைய தொகுப்புக்கு பலவீனமா, பலமா என்று சொல்லத் தெரியாமல் தத்தளிக்கிறேன். முன்னுரையைப் படித்துவிட்டு கவிதைகளை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையை முதல் முதலாக இத்தொகுப்பில் தான் அடைந்தேன். பிறகு என்னை நானே தேற்றிக் கொண்டு மீண்டும் மீண்டும் கவிதைகளை வாசித்தேன். குற்றியாடி பேருந்து நிலையத்து வேசிகள் சுண்ணாம்பு தேய்த்து வெற்றிலையிட்டு சிவப்பாக்கிக் கொண்ட உதடுகளுடன் என்னை முத்தமிடத் துரத்திக் கொண்டே வருகிறார்கள். முல்லைப் பூவும் வியர்ப்பும் கலந்த விசித்திர மணத்திலிருந்து கண்ணீரின் மொழியில் ஒவ்வொரு வேசியும் ஒவ்வொரு கதை சொல்லத் துவங்குகிறாள்.
**
அழுவதற்கு கண்ணீர் கூட இல்லாத
மனைவியின் கைகளில்
இளம் சூடுள்ள இதயத்தைக்
கொடுத்து விட்டு
நான் அந்த கிணறை நோக்கி நடக்கின்றேன்
மீன் குட்டையை கழுவுவதற்கு
**
செவிள் களைந்து துண்டுகளாக்கி
கீறி மிளகு தேய்த்து எண்ணெயிலிட்டு
பேராசையோடு அவளென்னை
எவ்வளவு சீக்கிரம்
அகப்பையிலெடுக்கிறாள்.
**
ஒவ்வொரு வேசியின் நெஞ்சுக்குள்ளும்
வயது முதிர்ந்தவர்களின் மகா சமுத்திரங்கள்
அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
கண்களில் தோல்விகளின் சவக்கல்லறைகள்
மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது.
உதட்டிலும் நெற்றியிலும் வாழ்க்கையின்
கறைபடிந்திருக்கின்றது
அவற்றின் மேல் எதுவும் அறியாமல் நாங்கள்
முத்தமிட்டு திமிர்பிடித்து அலைகின்றோம்.
**
இவையெல்லாம் தீக்குன்னி கவிதைகளின் சில தெறிப்புகள். பவித்ரன் தீக்குன்னியின் கவிதைகளில் வாழ்க்கையைத் தவிர வேறெதுவும் இல்லை. அது சரி... வாழ்க்கையைத் தவிர்த்து வேறென்ன வேண்டும் கவிதை எழுத?
எழுத்துப்பிழைகள் வஞ்சகமின்றி விரவிக்கிடக்கும் தொகுப்பு இது. இப்படி ஒரு படைப்புக்கு முன்னால் இது மாதிரி குறைகளெல்லாம் சாதாரணமானவைகள் தான். என்.டி.ஆர். இதை அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார் என்று சொல்வது மிக்க அலங்காரமான வார்த்தையாகிவிடும். பவித்ரனின் அசாதாரணமான வலிகளை தன்னுடையதாகவே பாவிக்க முடிந்த ஒருவரால் மட்டுமே செய்ய முடிந்த காரியம்இது.
ÔÔதான் ஒரு நல்ல கவிஞனான பிறகும் ஜீவிதம் என்பது நெஞ்சிலும் இலக்கிய அரசியல் என்பது புறமுதுகிலும் குத்திக் குத்தி எப்போதுமே இவரை புண்படுத்திக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் இங்கிருந்துதான் இவரது கவிதையே ஆரம்பமாகிறதுÕÕ என ஒரு சில வரிகளில் சுட்டி விடும் ராஜ்குமாருக்குள் பவித்ரன் தீக்குன்னி ஒரு பச்சை அயிலைமீனாக செவிலும், குடலுமாக இறங்கி வெகுநாட்களாகியிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment