Thursday, March 28, 2013

பஷீராக மாறுவது சுலபமில்லை


பேப்பூர் சுல்தான்  என்றழைக்கப்படும் வைக்கம் முகம்மது பஷீருக்கு 2013 ஜனவரி 21ம் தேதி 105-வது வயது பிறக்கிறது. இதை அறிந்த கணத்தில்  என் மன வாகனம் சற்றும் தாமதிக்காமல் கள்ளிக்கோட்டைக்குப் புறப்பட்டுவிட்டது.
கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) நமக்குப் புதிதில்லை. மிகவும் பரிச்சயப்பட்ட பூமிதான். எனவே அங்கிருந்து பேப்பூருக்குச் செல்வது அத்தனை சிரமமான காரியமாகப்படவில்லை. நான் சென்ற நேரம் பஷீர் பாட்டன் மும்முரமான உரையாடலில் இருந்திருக்க வேண்டும். அவருடைய வீட்டிலிருந்து அலையலையாக மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், பாட்டாளிகள், மாணவர்கள், வியாபாரிகள், பைத்தியக்காரர்கள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் மற்றும் திருடர்கள்... தினுசு தினுசான பலதரப்பட்ட முகங்கள். வெளியேறிய அந்த முகங்களில் உரையாடலின் திருப்தி மட்டும் நிரந்தரமாக வழிந்து கொண்டிருந்தது. அது எனக்கு முக்கியமாகப்பட்டது.
 ஒரு பூனையாகவோ, அணிலாகவோ, தாய்க்கோழிக்குப் பின்னே அலைகின்ற குஞ்சுகளில் ஒன்றாகவோ, ஆட்டுக்குட்டியாகவோ குருவியாகவோ எந்த வடிவெடுத்து பஷீரின் வீட்டுக்குள் நுழையலாமென நான் யோசிக்கிறேன். ஏனெனில் பஷீரின்  வீட்டிற்குள் நுழைய மனிதர்களைக் காட்டிலும் ஏனைய நலிந்த   ஜீவராசிகளுக்கே  அதிகம் உரிமையுண்டு. பஷீரின் உரையாடலும் அவற்றோடுதான் மிக இணக்கமாக இருக்கும்.
முதலில் ஒரு ஆட்டுக்குட்டியாக நுழைந்து அவர் கண்ணெதிரில் வளர்ந்து நிற்கும் செடிகொடிகளை மேய்கிறேன். மங்குஸ்தான் மர நிழலில் சாய்வு நாற்காலியிலிருந்தவாறு  ஏதோ வாசித்துக் கொண்டிருந்த அவர் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு மெல்லிய முறுவலுடன் மீண்டும் வாசிப்பைத் தொடர்கிறார். என்னை அவர் விரட்டுவாரானால் ÔÔசுல்த்தானே நான்தான் உங்கள் பாத்துமாவின் ஆடுÕÕ என்று கத்திவிட தீர்மானித்திருந்தேன். இப்போது பூனையாக உருமாறி அவருடைய சாய்வு நாற்காலியின் மேல் தாவிச் செல்கிறேன். கையிலிருந்த புகைந்த பீடியை அணைத்துவிட்டு என்னை மென்மையாக வருடித் தருகிறார். ஒருவேளை அவர் அந்த வருடலைத் தவிர்த்திருப்பாரானால் ÔÔநான்தான் உங்கள் மாந்திரீகப் பூனைÕÕ என்று குழைந்திருப்பேன். மெலிந்து தளர்ந்த அவருடைய  கைகளின்  ஸ்பரிசத்தில்  சிலிர்த்துப்போய் அவர் எதிரில் மனித உருவமெடுத்து அமர்கிறேன். ப்பா..Ôஎன்ன கதை விடுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? இன்னுமா பஷீர் உயிரோடிருக்கிறார்Õ என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஏற்கனவே சொல்லிவிட்டேன். நான் பயணித்தது மன வாகனம் என்று. ஆகவே  நண்பர்களே, நம்முடைய பஷீர் எப்போதும் ஜீவித்திருக்கிறார். அவருக்கு மரணமே இல்லை.  எளிய மலையாளிகளின் சுவாசத்தில் அவர் விரும்பி அருந்துகின்ற சுலைமானி என்னும் கருப்புத் தேநீராக நிரந்தரமாகக் கலந்திருக்கிறார்.

கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழை வேறெந்த மலையாள எழுத்தாளரும் இவ்வளவு தூரம் ஆக்கிரமித்ததில்லை. அனேகமாக 90சதவீதம் பஷீர் தமிழ்ப்படுத்தப்பட்டிருப்பார் என நினைக்கிறேன். வைக்கம் முகம்மது பஷீர் என்கிற பெயரைக் கண்டால் அது யாருடைய  மொழிபெயர்ப்பாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்,  தமிழ் வாசகர்கள் அவரை செல்லமாகக் கைகளில் ஏந்திக் கொள்வார்கள். பஷீர் என்கிற மேதைமைக்கு, அவருடைய கதாபாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் நம்மில் உண்டு. ஆயினும் பஷீரின் படைப்புகளை எவ்வளவு தூரம் இவர்கள் உள்வாங்கியிருப்பார்கள் என்கிற சந்தேகம் எனக்கு எப்போதுமே இருக்கிறது.  சரி, பஷீர் என்கிற மகத்தான கதாபாத்திரத்தை, தனிமனித சொரூபத்தை மட்டும் எத்தனைபேர் புரிந்திருக்கக்கூடும்? அது எத்தனை சுலபமான காரியமாக இருப்பினும் கூட. ÔÔபடைப்பைப் பார், படைப்பாளியைப் பார்க்காதேÕÕ என்றல்லவா நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே பார்க்க பஷீர் என்ன ஆணழகனா? சினிமா நட்சத்திரமா?
நிர்வாணம் என்று சொல்லிவிட முடியாத அளவிற்கு ஒரு சிறிய வேட்டியை மட்டும் இடுப்பில் செருகிக்கொண்டு திரிந்த அந்தக் கிழத்திற்குத்தான் தனது வாசகிகளின் கடிதங்களை ÔÔகாதல் கடிதங்கள்ÕÕ என்று சொல்ல ஆண்மை இருந்தது. சபைகளில் உரையைத் தொடங்கும் முன் அவர் கடவுளிடம் வேண்டுவது ÔÔபெண்களுக்கு அதிகம் அழகு கிடைக்க வேண்டுகிறேன். ஆண்களுக்கு இப்போது இருக்கும் அழகெல்லாம் போதும்ÕÕ ஏ அப்பா! என்ன ஒரு கிண்டல்?
 இந்த சந்தர்ப்பத்தில் பஷீரை நான் வேறொரு கோணத்தில் அறிமுகப்படுத்தி நினைக்கிறேன். அவருடைய படைப்புகளைத் தாண்டிய படு சுவாரஸ்யமான குணசித்திரம் அது.
அது எந்த இந்திய எழுத்தாளருக்கும் வாய்க்காதது. வித்தியாசமென்றால் அது எளிமையிலும் சிறந்த பேரெளிமையிலிருந்து உருவாகுவது. கரணமடித்தாலும் நமக்கெல்லாம் வாய்க்காதது. எழுத்தாளன் என்கிற இருமாப்புடன் நெஞ்சுயர்த்தி மீசை முறுக்கி உரத்த குரலில் கூவி இன்னும் கூடாத தமாஷ்களெல்லாம் செய்து கொண்டிருப்பவர்கள்தானே நாம்?
 பஷீர் தோற்றத்தில் மிக சாதாரணம்தான். பிரமாதம் என்று சொல்லத் தக்கவையாவும் அவருடைய விசேஷமான வெளிப்பாடுகள்தாம். அதிலும் அவருடைய அந்த நகைச்சுவையுணர்வு உலகபிரசித்தம். கலைஞர்களுக்கே உரித்தான மனப்பிறழ்வும் இயல்பாகவே சேர்ந்து கொண்டதால் அவ்வெளிப்பாடுகள் எல்லாமும் மிகையற்ற யதார்த்தம் சொட்டுபவை.
எப்படிப்பட்ட எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு தைரியமிருந்ததில்லை. என்னவென்று கேளுங்கள். பஷீரைக் காண வருகிறவர்களை அவர் ஆசீர்வதிப்பதுண்டாம். ஆண்களானால் கையுயர்த்தி ÔÔலோகா ஸமஸ்தர் ஸ¨தினோ பவந்துÕÕ பெண்களானால் ÔÔதீர்க்க சுமங்கலிபவÕÕ திருடர்களானால் ÔÔசுக திருடல்ÕÕ
 
பஷீரைக் குறித்த இந்த நூலை எழுதிய எம்.என். காரச்சேரியிடம் பஷீர் ஒருமுறை சொல்லியிருக்கிறார்,
ÔÔமுகமது நபி தன் மகள் பாத்திமா, மருமகன் அலியுடன் என்னைப் பார்க்க வந்தார்ÕÕ
இது கேட்டுத் திடுக்கிட்டுப்போன காரச்சேரி Ôநபி வந்ததற்கு ஏதேனும் ஆதாரமுண்டாÕ என கேட்கிறார். உடனே பஷீர் தன் அருகில் இருந்த இரண்டு செடிகளை காண்பிக்கிறார். ஒரு செடியில் அழகான சிவப்பு நிற மலர் மலர்ந்திருக்கிறது. மற்றொரு செடி வாடிக் கருகி நிற்கிறது.
ÔÔபூ மலர்ந்த செடி நபி நட்டது. வாடிய செடி அவருடைய மருமகன் அலி நட்டதுÕÕ
பஷீர் சொன்ன இந்த வார்த்தைகளில் தான் எத்தனை உள்ளர்த்தம் பொதிந்திருக்கிறது? இதை நீங்கள் யோசிக்க வேண்டுமானால் கண்டிப்பாக ஒரு இடைவெளி விடுகிறேன்.
  
அலாதியானதொரு இசைப்பிரியர் பஷீர். இசையில் ஆழ்ந்து கிறங்கிப்போன அனேக சம்பவங்கள் அவர் வாழ்க்கையில்  நிறைந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளரான அவர் அதிகமும் பாதுகாத்து வைத்திருந்தவை புத்தகங்கள் அல்ல.  ஒரு பழைய கிராமஃபோனும், ஏராளமான இசைத்தட்டுகளும்தான். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்த பஷீர் இசைக் கச்சேரிகளில் முன் வரிசையில் அமர்ந்து தலையாட்டிக் கொண்டிருந்ததை காரச்சேரி வியந்து எழுதுகிறார். இசையை வெறுக்கிற அல்லது புறக்கணிக்கிற இஸ்லாம் சமூகத்தில் பிறந்த பஷீர் இசையில் தோய்ந்து, உச்சக்கட்டமாக சொன்ன வார்த்தைகள்
ÔÔஇசைதான் இறைவன்ÕÕ
1985-களில் ஷா பானு பிரச்சனை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருந்த நேரத்தில் பஷீர் ÔÔஇப்படியெல்லாம்  தலாக் கொடுப்பவன்களின்  ஆண் இயந்திரத்தை வெட்டித் தோளில் தொங்கவிட வேண்டும்ÕÕ என்று விமர்சித்திருக்கிறார்.
பஷீருக்கு Ôபத்வாÕ கொடுக்கிற துணிச்சல், கடைசிவரை கேரளத்தில் எவருக்கும் இருந்ததில்லை. சீரழிவின் எழுத்தாளன், செக்ஸ் ரைட்டர் என்று வேண்டுமானால் விருப்பத்துக்குத் திட்டித்தீர்த்திருக்கிறார்கள்.
   
பஷீரின்  இயற்பெயர் கொச்சு முகம்மது. வைக்கம் முகம்மது பஷீர் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராக அரசியல் கட்டுரைகள் எழுதியபோது சூட்டிக் கொண்ட புனைப் பெயர். பஷீரின் அரசியல் ஈடுபாடுகள் நாம் அதிகம் அறிந்திராத பக்கங்கள். பதினாறு வயதுகளில் பஷீருக்கு காதல் மோகமும் அரசியல் தாகமும் சேர்ந்தே வந்திருக்கிறது. தந்தை பெரியார் ஈடுபட்ட வைக்கம் போராட்டம் தான் அவரைக் கவர்ந்த முதல் அரசியல் நிகழ்வு.
1925-ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்திற்கு வந்த மகாத்மா காந்தியின் வலது தோள்பட்டையை பஷீர் தொட்டதுதான் அவருடைய வாழ்க்கைச் சரிதத்தில் மிக முக்கியமான சம்பவமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு மனித சமூகத்திற்கு கிடைத்த நிகரற்ற நறுமணமாகவும் கேட்கக்  கிடைத்த  ஜீவனுள்ள இசையாகவும் காந்தியை அவர் வர்ணித்திருக்கிறார். பின்னாட்களில் காந்தியின் செயல்பாடுகளில் அவர் முரண்பட்டதும் உண்டு. உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்குபெற்றதற்காக கோழிக்கோட்டிலும்  ÔÔபாக்கியம் கெட்ட என் நாடுÕÕ என்ற கட்டுரை எழுதியதற்காக பிரிட்டிஷாரால் தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகாலம் திருவனந்தபுரத்திலும்  சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.
பஷீருக்குள் ஒரு கம்யூனிஸ இதயம் எப்போதுமே இயங்கி வந்திருக்கிறது. 1937ல் பஷீர் எழுதிய  Ôகாரல்மார்க்ஸ்Õ என்கிற சிறந்த கட்டுரை உலகெங்கிலுமுள்ள  ஏழைப்பாட்டாளி  வர்க்கத்தின் மீது மார்க்ஸ் கொண்டிருந்த  பேரன்பையும், பரிவையும் அந்த மாமனிதனின் உன்னத செயல்பாடுகளையும் மலையாளிகளுக்கு அடையாளப்படுத்திய ஆவணமாகும். கே.சி.ஜார்ஜ், கே.தாமோதரன், கோவிந்தன் நாயர் உள்ளிட்ட கேரளத்து இடதுசாரித் தலைவர்களுடன் பஷீர் இணக்கமும் நெருக்கமும் கொண்டிருந்தார். பகத்சிங்கைத்  தன் ரோல்மாடலாக, ஆதர்ஷ புருஷராகவே கருதிய பஷீர், மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்த்துக் கொண்டு வானரசேனை என்றொரு தீவிர  அமைப்பையும் உருவாக்கி அரைக்கால் டிராயரும் முறுக்கிய மீசையுடன் தொப்பியும் ஷ§வுமணிந்து பகத்சிங்கின் நகலாகவே நடமாடிய காலங்கள் இருந்திருக்கின்றன. இவ்வாறான ஆர்வக்கோளாறான மனநிலைகளிலிருந்து தான் பஷீர் மகோன்னதமான மனிதராக, கலைஞனாக உருமாறியிருக்கிறார்.
கூலித்தொழிலாளியாக, குறி சொல்பவனாக, ஓட்டல் சர்வராக, மருந்து அரைப்பவனாக, பிட்டராக, மந்திரவாதி ஒருவனின் கையாளாக, டியூஷன் மாஸ்டராக, விற்பனைப் பிரதிநிதியாக, பத்திரிகையில் புரூப் பார்ப்பவராக, பரதேசியாக, இந்து துறவிகளில் ஒருவராக, சூஃபியாக ....அப்பப்பா வாழ்க்கை என்னும் மேடையில் பஷீர் தரித்த வேடங்கள் கணக்கிலடங்காதவை.  எனவே அவர் படைத்த கதாபாத்திரங்களதிகமும் பாவப்பட்ட விளிம்புநிலைப் பிரஜைகளாகவே இருந்ததில் நாம் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை.
சிறந்த வாசகராக நான் மதிக்கும் என் நண்பர் ஒருவர் ஒரு சந்திப்பின்போது என்னிடம் ÔÔஉங்கள் எழுத்து ஈர்த்த அளவுக்கு பஷீரின் எழுத்துக்கள் ஏனோ என்னை பெரிய அளவுக்கு ஈர்க்கவில்லைÕÕ என்று சொன்னார். எனக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது. பஷீர் காட்டும் உலகத்தைப் புரிந்துகொள்ள முதலில் பஷீராக நீங்கள் மாறவேண்டும். அது சுலபமல்ல.  தமிழ்வாசகர்கள் அவர்கள் நவீன இலக்கிய வாசகர்களானாலும் இங்குள்ள ஒருவித எழுத்து மாயைக்கு, சிக்கலான மொழிப் பிரயோகத்திற்கு பழகிப்போயிருக்கிறார்கள். பஷீரை மொழி பெயர்ப்பவர்கள்  பஷீரின் ஆன்மாவை மொழி பெயர்ப்பவர்கள் அல்லர். அவர் பிரயோகிக்கிற கொச்சை மலையாளமும், வழக்குச் சொற்களும் அகராதிகளுக்குள் நீச்சலடித்தால் அகப்படாதவை. அந்த வகையில் தமிழ் வாசகர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.
பஷீரின் கதை சொல்லும் பாங்கு இங்குள்ள அதி நவீனர்கள் சிலருக்கு எரிச்சலூட்டக்கூடும். அதிகமும் சுயசரிதைத் தன்மை கொண்ட Ôநான்Õ எழுத்து அவருடையது. ஒன்றுக்கு இரண்டு Ôநான்Õ போட்டால் நம்மவர்கள் கொதித்துப் போவார்கள். ஸ்டேட்மென்ட் என்றும் தட்டை என்றும் குற்றம் சுமத்துவார்கள்.
 புத்தூஸ், படுக்கூஸ், டுங்குடுதஞ்சி, பப்ளிமூஸ்குண்டி, பளுங்கூஸன், ஹ¨ந்தராப்பி, புஸ்ஸாட்டோ,  லுட்டாப்பி என்றெல்லாம் அவர் பயன்படுத்துகிற மலையாள முஸ்லிம் நாட்டார் வழக்கையும், ஆனவாரி பொன்குரிசு, ஒத்தக்கண்ணன் போக்கர், மண்டன் முத்தபா, தொரப்பான் அவரான் போன்ற அவருடைய கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஹீத்தினஹா லிட்டலித்தாப்போ என்று அவர் எழுதிய பாடலையும் கேட்டால் முகம் சுளிப்பார்கள்.
பஷீரின் நாவலொன்றில் நாயகன் துயரம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் பொருட்டு ஒரு ரயில் தண்டவாளத்தில் தலை வைக்கிறான். ரயில் அந்த தண்டவாளத்தில் ஓடாமல் பக்கத்து தண்டவாளத்தில் சீறிப் பாய்ந்து செல்கிறது. மற்றொரு கதையில் நாயகன் பேரழகியாக நினைக்கிற நாயகிக்கு காற்றுப்பிரிகிறது. நாயகனுக்கோ அவள் மீதுள்ள அபிமானம் உடைந்து சிதறுகிறது. கதையின் பெயரே பர்ர்ர்... இந்த இரண்டு விஷயங்களையுமே தமிழ் சினிமாக்காரர்கள் லபக்கியிருக்கிறார்கள்.
பஷீரின் வாழ்க்கையையும் ஒரு சுவையான திரைக்கதையாக்க முடியும். மலையாளிகள் ஏனோ இதை செய்யத்தவறியிருக்கிறார்கள்.
 இந்த நூலை மொழி பெயர்க்க சாகித்ய அகாடமி, தோப்பில் முஹம்மது மீரானை அழைத்தது மிகச் சிறந்த தேர்வு. ஏனெனில் தோப்பிலுக்குள் எப்போதும் பஷீர் உண்டு. அவரும் தன் பணியை மிக அனுபவித்துச் செய்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் மலையாள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துகிறார். இது மலையாளமறியாத தமிழ் வாசகர்களுக்கு மிரட்சியூட்டக்கூடும். மற்றொன்று பிரதி முழுக்கவுமே மெய்ப்புத் திருத்தம் செய்யப்படவில்லை பக்கத்துக்கு இருபது பிழைகள். சும்மா நோக்கத்துக்கு விரவிக்கிடக்கிறது. சாகித்ய அகாதமி போன்ற பொறுப்புள்ள  நிறுவனங்கள்  இதில் கவனம்  செலுத்தாதது ஆச்சரியமேற் படுத்துகிறது. இந்நூலிலுள்ள விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு என்னால் இருநூறு பக்கங்களுக்கு பஷீரைக் குறித்த ஒரு சுவாரசியமான உரையாடலைத் தரமுடியும். அது காரச்சேரியின், தோப்பிலின் வெற்றி!
இறுதியாக... எங்கள் வாப்பூப்பாவை, மூதாதையை, அத்தாவுக்கு அத்தாவாகிய ராத்தாவை, தாத்தனைப் பாட்டனை, வாப்பாக்களையும் உம்மாக்களையும் முதன் முதலாக இலக்கியத்தில் பதிவு செய்த பிரம்மாவை, ச.த. பாணியில் சொல்வதானால் எங்கள் குலசாமியை ஒரு பெரிய சலாம் வைத்து வணங்குகிறேன்.

3 comments:

  1. மிகச்சிறந்த பதிவு !

    நன்றி,
    பிரவின் சி

    ReplyDelete
  2. வைக்கம் முகமது பஷீரின் அத்தனை புத்தகங்களையும் படித்தவன் என்ற ரீதியில் , மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இலக்கியம் பேசுபவர்கள் பஷிரை ஒரு முறை வாசித்தால் போதும் இலக்கியம் எது என்பது புரியும்
    அருமையான நடையில் பஷிரை அறிய தந்துள்ளிர்கள்

    அவரது முதல் காதலில் சொகராவோட அவர் நட்ட செம்பருத்தியை ஞாபகம் கொள்கிறேன்

    நன்றி

    ReplyDelete