Wednesday, March 27, 2013

கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம்



ஊருக்கு உவக்காததைச் சொல்ல
ஒருவனுக்குத் தனிநரகம் உண்டென்றால்
அங்குதான் ஜீவிப்பேன் நான்...                                                                            
−க.நா.சு.

  மறைந்த எழுத்தாளர் க.நா.சு.வின் நூற்றாண்டு இது என்பதால் தமிழின் பெரும்பாலான சிறு பத்திரிகைகள் அவரைக்குறித்த கட்டுரைகளைக் கேட்டு எழுதி வாங்கி வெளியிட்டு ஓய்ந்திருக்கின்றன.  ஒரு எழுத்தாளரின்   நூற்றாண்டை இப்படி எல்லாம் விமர்சையாக கௌரவிக்க வேண்டும்தான். இயன்றால் இன்னும் அதிகமாகக் கொண்டாட வேண்டும்தான். க.நா.சு.வும் இந்தப் புகழுரைகளுக்குத் தகுதியானவரே. எனக்கும் கூட கா.ந.சு.வை எழுதவேண்டும் எனத் தோன்றியதில் ஒருவித நியாயம் இருக்கிறதுதான். ஓரளவு அவருடைய எழுத்துக்களை வாசித்தவனாக, அவருடைய இலக்கியப் பங்களிப்பைக் குறித்து அறிந்தவனாக, அவருடன் நீண்டகாலம் பழகி நிழல்போல் தொடர்ந்து சென்றதால் அவருடைய Ôவால்Õ என்று வர்ணிக்கப்பட்ட தஞ்சை ப்ரகாஷ் என்பவருடன் இருந்து, அவர் வாய்ஓயாமல் க.நா.சு.வைக் குறித்துப் பேசியதை எல்லாம் காதுகொடுத்துக் கேட்டவனாக இருந்ததால் நெருடல்கள் எதுவுமின்றி இதை எழுத முடிந்தது.
 எனது பிராயத்தில், கலை கலைக்காகவா, கலை மக்களுக்காகவா என்கிற இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு முன், நான் சிறிதுகாலம் கலை கலைக்காகவே என்கிற வீராப்புடனும், (எனக்குப் போதித்தவர்களின் பாதிப்புகளால்) பிறகு ÔÔகலை கலைக்காகவும், கலை மக்களுக்காகவும்ÕÕ  என நானே உருவாக்கிக் கொண்ட ஒருவித இரண்டும் கெட்டான் நிலைப்பாட்டுடனும், (இது Ôவிசித்ரன்Õ என்கிற பெயரில் ஆர்வக்கோளாறுடன் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியபோது, அதன் முகப்புக்கென நான் உருவாக்கிய ஸ்லோகம்.)  பிறகு தெளிந்து, கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதே என்னும் இறுதியான கொள்கைப்பிடிப்பிற்கும் வந்துசேர்ந்தவன். இம்மூன்று நிலைகளிலும் க.நா.சுவை என்னால் வேறுவேறு மாதிரியாக அணுகமுடிந்ததில்லை. என்பதுதான் ஆச்சரியம். அவர் எனக்கு எப்போதும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார். க.நா.சு.வை குறித்த உச்சபட்ச சிலாகிப்புகளையும், காட்டமான விமர்சனங்களையும், ஒருங்கே கேட்டு வளர்ந்தவனாக நான் இருந்திருக்கிறேன்.
க.நா.சு. விமர்சனமாக எதையும் அணுகவில்லை. அவர் சிக்ஷீவீtவீநீ  கிடையாது. தனது ஆழ்ந்த வாசிப்பின் வழியே ரசனை வெளிப்பாடாகத்தான் தன் கருத்துக்களை முன்வைத்தார் என்று இப்போது தமிழ்ச் சூழலில் எல்லோரும் பேசிக் கொள்கின்றோம். ஆனால் ப்ரகாஷ் எழுதுவதைப்போல் அவரை சிம்மசொப்பனமாகக் கருதியவர்கள் இங்கே இருக்கவே செய்தனர் என்பதும் உண்மைதான்.
ÔÔக.நா.சு.விற்கு கவிதை வராது. க.நா.சு.விற்கு விமர் சனம் தெரியாது. க.நா.சு. எழுதுவது இலக்கியம் அல்ல...  அது சரி... அந்த என் கவிதையைப் பற்றி க.நா.சு. என்ன சொல்லியிருக்கிறார்?ÕÕ இப்படித்தான் பலரும் அப்போது அவரை வெறுத்தபடி அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளத் துடித்தனர்.
 தனது எழுத்து வாழ்க்கையில்  அவர் விடாது கடைப்பிடித்த சில நல்லனவற்றை, இளம் எழுத்தாளர்கள் தங்களுக்கு சாதகமாக எவ்வாறெல்லாம் உள்வாங்கிக்கொள்ளலாம் என்பதுதான் இந்தத் தொடரில் நான் க.நா.சு.வைப் பேச வந்ததன் நோக்கம். நீயோ கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானது என்கிறாய். அவரோ அதற்கு மாறான பாதையில் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார். முரணாக இருக்கிறதே? இதில் என்ன நல்லது கெட்டது?ÕÕ என்றும் ஒரு சிலர் வாதிக்கலாம். இப்படித்தான் ஒருமுறை  ஒரு பெரிய எழுத்தாளரின் படைப்புகள்  குறித்து நான் வியந்து பேசப்போக, நண்பர் ஒருவர் வெகுண்டு ÔÔகழிப்பறைப் பீங்கானில் சோறுண்ண முடியாது தம்பிÕÕ என்று உக்கிரமான மறுமொழி தந்தார். எல்லோருடைய ரசனையும் ஒன்றுபோல இருப்பதில்லை, இருக்காது. எதிரியானாலும்  அவரிடமுள்ள நல்லவற்றை வியக்கத் தோன்றும். இது என் குணம்.
  க.நா.சு.வைக் குறித்து எழுத அவருடைய பிரதான சிஷ்யரான ப்ரகாஷ் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகாதமிக்காக எழுதிய Ôக.நா.சுப்ரமண்யம்Õ என்னும் புத்தகத்தையே தேர்ந்து கொண்டிருக்கிறேன். இது ஒரு வசதிக்காக, அவ்வளவுதான். இந்த புத்தகத்தில் ப்ரகாஷ் க.நா.சு.வைக் குறித்து பல பக்கங்களில் வியந்து வியந்து எழுதியிருக்கிறார்.  கூர்மையாக சீவப்பட்ட ஒரு பென்சில் முனையைக் கண்டால் கூட எத்தனை நறுவிசாக சீவியிருக்கிறான் பார்  என்று பாராட்டும் உள்ளம் ப்ரகாஷடையது. அதுவே க.நா.சு. ஆனால் கேட்கத் தேவையில்லை. தமிழில் இதுவரை க.நா.சு.வைக் குறித்து எழுதப்பட்டுள்ள பல்வேறு கட்டுரைகளில் பதிவுபெறாத சில பூடகமான, அந்தரங்கமான விஷயங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன்.
 க.நா.சு. வாழ்வில் நிகழ்ந்த பல ருசிகரமான சம்பவங்களை, அவருடைய இலக்கியப் பயணம் நெடுகப் பதித்த சுவடுகளை, வறுமையை, வைராக்கியத்தை, விடாமுயற்சியை ஒவ்வொன்றையும் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு ஒப்பிக்கிற மாணவன் போலல்லாது, ஒரு கதைசொல்லிக்குரிய தோரணையில், உணர்ச்சி மேலிட்டுக் குரல்கம்ம  சொல்லிச் செல்கிறார் ப்ரகாஷ். இப்படி வேறொருவரால் சொல்லிவிட முடியாது. அறிவின்வழி நின்றும், மொழியின் துணை கொண்டும், உணர்ச்சியற்றும், வறட்டுத் தொனியிலுமே  பிறரால்   இதை எழுதியிருக்கமுடியும்.  ப்ரகாஷ் இதை எழுதவில்லை, பேசியிருக்கிறார்.
 நம் எல்லோரையும் போலத்தான் பால்ய காலத்தில் நட்சத்திரங்கள் இறைந்து கிடக்கும் பின்னிரவுக் காலங்களில் ஜானுப்பாட்டியிடம் கதை கேட்பவராக க.நா.சு. வளர்ந்திருக்கிறார். கதைகேட்டு வளர்ந்தவர்களால்தான்   தங்களுக்கானதொரு கற்பனா லோகத்தையும் சிருஷ்டித்துக் கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
 ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ் பெற்று இலக்கியத்தின் கொடுமுடிகளை எட்டிவிட ஆசை கொண்டிருந்தவர்தான் அவருடைய அப்பா நாராயணசாமி அய்யர். எனவே ÔÔதமிழில் எழுதி நீ உருப்படாமல் போகாதே. ஆங்கிலமே உலகாளும் மொழி. ஆங்கிலத்தில் தான் உலக இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதுÕÕ என்று தன் பிள்ளைக்கு புத்திமதிகள் சொல்கிறார்.
 எல்லா எழுத்தாளர்களும் பிராயத்தில் தம் பெற்றோரிடம் ஏதோ ஒரு இடத்தில் முரண் பட்டவர்கள்தாம். ÔÔஎழுத்தாளர்கள் பெற்றோர் இட்ட பெயரைத் துறந்து புனைப் பெயர் சூட்டிக்கொள்வது ஏன் தெரியுமா? தங்கள் தனித்த ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்ளும் பொருட்டுதான்ÕÕ என்று எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் இதுகுறித்து சிந்தித்துள்ளேன். ஓரளவு இந்தக் கருத்தில் உடன்பட்டும்  இருக்கிறேன். ஆனால்  க.நா.சு., க.நா.சுப்ரமணியம் என தூய தமிழில் தன்னுடைய முழுப் பெயருடனும், பிறகு அதன் சுருக்கமான க.நா.சு. எனவும், பின்பு ஆங்கிலத்தில் எழுத நேர்ந்தபோதுகூட ரிணீ.ழிணீணீ.su.  என்றும் தான் எழுதி வந்திருக்கிறார். அதற்கு முன்புவரை கே.என். சுப்ரமணியம், கே.என்.எஸ்., என்று எழுதிக் கொண்டிருந்தவரை இப்படி மாற்றிக் காட்டியவர் Ôஅக்ரஹாரத்து அதிசயம்Õ வ.ரா.
 திருமணம் எல்லாம் நடந்து முடிந்திருந்த நிலையில் Ôஎழுதிப் பிழைப்பது; அதுவும் தமிழில்Õ என்று முடிவு செய்துகொண்ட க.நா.சு., தன் அப்பாவின் முன் சென்று நிற்கிறார். இருவருக்குமான உரையாடல் தொடங்குகிறது. 
என்ன?
சென்னைக்குப் போகிறேன்?
பொண்டாட்டி
அவளை பிறந்தாத்தில், சிதம்பரத்தில் விட்டு விட்டுப் போவேன்?
நான் சொன்னதைக் கேட்க மாட்டாயா?
தமிழில் எழுதப் போகிறேன்?
எழுதி சம்பாதிக்க முடியாது?
அதையும் பார்ப்போம்? 
 முடிவில் கையில் ஒரு டைப் ரைட்டர், கத்தைகத்தையாகக் காகிதங்கள், மொழிபெயர்ப்புகள் இவற்றோடு சென்னைக்கு ரயிலேறினார் க.நா.சு. ஆனால் க.நா.சு.வின் 76வது வயதில் தகழி சிவசங்கரன் பிள்ளை இவரை சந்தித்தபோது இப்போது எழுத்துக்கு எவ்வளவு ரூபாய் வாங்குகிறீர்ÕÕ என்று கேட்க, அவர் அளித்த பதில்  ÔÔஅய்ம்பது ரூபாய்!ÕÕ
   ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் சுயமாக எழுதுவது, 15 பக்கங்களேனும் தமிழுக்கு மொழிபெயர்ப்பது...  இது க.நா.சு. தனக்குத்தானே வரித்துக்கொண்ட விரதம். இதை வாழ்நாள் முழுக்க அவர் கடைப்பிடித்திருக்கிறார் என்பதுதான் அதிசயம். இளம் எழுத்தாளர்கள் அவருடைய இந்த உறுதியை  நடைமுறைப்படுத்திப் பார்ப்பதில், நஷ்டம் எதுவும் ஏற்படப் போவதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
 க.நா.சு.வின் பத்திரிகையாசிரியர் அவதாரமும் தோல்வியில்தான் முடிந்தது. அந்தக் காலத்தில் கு.ப.ரா. நடத்திய Ôகிராம ஊழியன்Õ, சாலிவாஹனின் ÔகலாமோஹினிÕ, எம்.வி. வெங்கட்ராமின் ÔதேனீÕ, சீத்தாராமனின் ÔசிவாஜிÕ ஆகிய இதழ்களுக்கு மத்தியில்,  தனது தீராத வறுமைக்கிடையில் க.நா.சு. துணிச்சலாகப் பத்திரிகை நடத்திப் பார்த்திருக்கிறார். ÔசூறாவளிÕ Ôசந்திரோதயம்Õ ஆகிய பெயர்களில் இதழ்களை நடத்தி பொருள் இழப்பைத்தான் சந்தித்துள்ளார். இது அப்போதைய  அவருடைய கஷ்ட  ஜீவிதத்திற்கு ஒவ்வாத காரியமே! ஆனாலும்,  இதழ் நடத்த வேண்டும் என ஆசைப்படாவிட்டால் இலக்கியவாதியாய் வாழ்ந்து என்ன புண்ணியம்? இதழ் நடத்தி காயம்பட்டு பின்னாட்களில் அந்த வீரத் தழும்புகளைத் தடவிப் பார்த்துக் கொள்வதில்தான் எத்தனை சுகம்? 
 தீவிரமான மொழிபெயர்ப்பாளரான க.நா.சு. தான் வியர்வை சிந்தி தமிழ்ப்படுத்தியதை எல்லாம் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு பதிப்பகமாக ஏறிஇறங்கித் திரிந்ததை வாசிக்கும்போது மனம் கனக்கிறது. ÔÔநான்கு திசைகளிலும் எதிர்ப்பு எனும் காலாக்னி.   காலூன்றி நிற்கும் பூமிக்கடியிலோ எரியும் தணல். நிரந்தரமான பணியின்மை. ஒழுங்கான  மாதச்  சம்பளமின்மை. கையில் முதலின்மை,  வானத்திலோ எரிக்கும் வறுமைச் சூரியன். இந்த ஷடாக்னியில் எரிந்து பொசுங்கியபடியே தன் குடும்பத்தைப் பற்றி பிரக்ஞையே இல்லாது நண்பர்கள் என்னும் எதிரிகளோடும் ஆதரவாளர்கள் என்னும்  அயோக்கியர்களோடும் க.நா.சு. வாழ்ந்து வந்தார்ÕÕ என்று ப்ரகாஷ் மேலும் எழுதுகிறார்.
  ÔÔநான் எழுதுவது விமர்சனமல்ல, எனக்கு விமர்சனத்தின் மேல் நம்பிக்கை இல்லைÕÕ என்று சொன்னவர்தான்  க.நா.சு.! அவர் எப்படி விமர்சகர் ஆக நேர்ந்தது?
   அவர் கம்யூனிச எதிரியாகப் பார்க்கப்பட்டாலும் தொ.மு.சி. ரகுநாதன் என்னும் ஒரு கம்யூனிஸ்ட் எழுதிய Ôஇலக்கிய  விமர்சனம்Õ என்னும் நூல்தான் முதன் முதலில் அவரை உலுக்கியிருக்கிறது. ÔÔதமிழில் வந்த முதல் அடிப்படை விமர்சன நூல்ÕÕ என்று க.நா.சு. அதைப் பாராட்டி எழுதுகிறார். அதற்குப் பிறகுதான் தனது பிரபலமான Ôவிமர்சனக் கலைÕ என்ற நூலையும் எழுதி முடிக்கிறார்.
  வ.விஜயபாஸ்கரன் நடத்திய  கம்யூனிச இதழான Ôசமரன்Õ அவரே நடத்திய இலக்கிய இதழான Ôசரஸ்வதிÕ ஆகியவற்றில் க.நா.சு. வின் கட்டுரைகள் விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளன. ÔÔமாற்றுக்கருத்தை மதிக்கிற மனப்பண்பு  இலக்கியப் பண்பாடு கம்யூனிஸ்டுகளிடம்தான்  உருவாகி இருந்ததுÕÕ என்று ப்ரகாஷ் இதைப்பற்றி எழுதுகிறார். 
Ôஇலக்கிய வட்டம்Õ அமைப்பின் மூலமாக Ôஎதற்காக எழுதுகிறேன்Õ, Ôஎன்ன படிக்கிறேன்Õ போன்ற தலைப்புக்களில் இலக்கியக் கூட்டங்களை ஆரோக்கியமான வழியிலே நிகழ்த்திக் காட்டியதும் அவருடைய பணிகளுள் குறிப்பிடத் தக்கது.
  ÔÔஎல்லாவற்றையும் ஒரே வெட்டில்  வெட்டி வீழ்த்தி,  தான் மட்டுமே அவதாரம் எடுத்திருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி, தமிழ் இலக்கியப் போக்கை சவுக்கடி கொண்டு வீசிச்சுழற்றி 1950களில் வெளிவந்த சுதேசமித்திரன் தீபாவளி மலரில் அவர் எழுதிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தாக்கம், தேக்கம், வீக்கம் என்ற மகத்தான கட்டுரை...ÕÕ என்று ப்ரகாஷ் ஓரிடத்தில் எழுதுவதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. ÔÔஎல்லாவற்றையும் ஒரேவெட்டில் வெட்டி வீழ்த்தி தான் மட்டுமே அவதாரம் எடுத்திருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி...ÕÕ
  தமிழில் சுமார் 20 நேரடி நாவல்களை க.நா.சு. எழுதியிருக்கிறார். ஒரு நாள், அசுரகணம், பொய்த்தேவு, கோதை சிரித்தாள், தாமஸ் வந்தார், அவதூதர், பித்தப்பூ போன்றவை நுட்பமான வாசகர்களின் தேடலுக்குக் கிடைத்தவை. பித்தப்பூ நாவலை ப்ரகாஷே தன் சொந்த செலவில் வழக்கமான பாணியில் அச்சுப் பிழைகளுடன் வெளியிட்டார்.
  இவற்றுள் எல்லாம் தலையாய பணி என்று நான் கருதுவது, நோபல்பரிசு பெற்ற நாவல்களாகத் தேடிப்பிடித்து க.நா.சு.  தமிழில் மொழிபெயர்த்துத் தந்ததுதான்.  இதை அவரைத்தவிர வேறெவரும் செய்ததில்லை. நிலவளம், மதகுரு, பாரபஸ், தாசியும்  தபசியும் போன்ற அயல்மொழி நாவல்கள் இப்பட்டியலில் அடங்கும். மயன் என்கிற தனது புனைப்பெயரில் க.நா.சு. எழுதிய கவிதைகள் Ôமயன் கவிதைகள்Õ எனப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
 அழகி, தெய்வஜனனம், மணிக்கூண்டு என அவருடைய சிறுகதைத் தொகுப்புகளும் அடுத்தடுத்து வெளிவந்திருக்கின்றன. பின்னாளில் இவை ÔÔக.நா.சு. கதைகள்ÕÕ என தொகுக்கப்பட்டுள்ளது.
  ÔÔபல கதைகள் கதைகளாகவே தோன்றாது. நிகழ்ச்சிகளாகவும்,செய்திகளாகவுமே தோற்ற மளிக்கும். அவைகளுக்கு ஒன்றுமில்லாதது போன்ற தோற்றமுண்டு. ஆனால் மிக ஆழமான முக்குளிப்பில்தான் இது தெள்ளத் தெளியவரும்?ÕÕ என்று அபிப்ராயம் எழுதும் ப்ரகாஷ் சில கதைகளைக் கோடிட்டுக்காட்டி அதன் உள்ளடக்கத்தைச் சிலவரிகளிலேயே கூறும்போது நமக்கும் முக்குளிக்கத்தான் தோன்றுகிறது.

க.நா.சு.வின் இலக்கியப் படைப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து ஒரு விமர்சன நூல் எழுதுவதும்கூட முக்கியமானதுதான்.
  புதிய நூல்கள் வெளிவந்தவுடன் அதை வெளியிட்ட பதிப்பகத்துக்கே சென்று, வாங்கிவந்து, விமர்சனமும் எழுதுவார் க.நா.சு. என்றறியும்போது, கிணற்றில் போட்ட கற்களாகத் தூங்கும்.. சமகாலத் தமிழ்நூல்களின் கையறு நிலையை நான் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.  பெருமூச்சொன்று வெளிவந்தது.
  ÔÔஅவர் எழுதிய பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் இன்னும் அச்சேறவில்லை.ÕÕ என்று ப்ரகாஷ் ஆதங்கப்பட்டிருக்கிறார். க.நா.சு.வின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டவுடன் இடதுசாரிப் பதிப்பகங்கள் நீங்கலாக பல பதிப்பகங்கள் ஏற்கெனவே வெளிவந்த அவருடைய பல நூல்களையும் ரொட்டியைத் திருப்பிப்போடுவதுபோல திருப்பிப் போட்டனவே தவிர, புதிய அச்சேறாத அவருடைய எழுத்துக்களைத் தேடிப் பயணிக்கவில்லை என்பது வேதனைக்குரிய சங்கதி. தமிழின் துர்ப்பாக்கியம் இதுதான். 
 க.நா.சு கடைசிவரை வெளிப்படையாகக் கம்யூனிச எதிர்ப்பைக்  காட்டியவர். இந்தப் புத்தகம் முழுக்க இது சாகித்ய அகாடமி வெளியீட்டிற்காக எழுதுவது என்பதையும் கடந்து ப்ரகாஷ§ம்  கம்யூனிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்கள் என்று பக்கத்துக்கு பக்கம் எழுதித் தள்ளியிருக்கிறார். க.நா.சு. மீது  நமக்கு முழுக்க விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதைப் பேசுவதற்கான இடம் இதுவல்ல.
 நான் ஏற்கெனவே  குறிப்பிட்டதைப் போல, இந்த இடத்தில் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றியுள்ள நல்லனவற்றை மட்டுமே  கருத்தில் கொள்வோம். 
  ÔÔஏறத்தாழ 40 ஆண்டுகள் அவருடன் பழகிய உங்களை, உங்கள் படைப்புகளை ஏன் க.நா.சு. பாராட்டவில்லை?ÕÕ என்று ஒரு சந்தர்ப்பத்தில் தஞ்சை ப்ரகாஷிடம் ஒரு எழுத்தாளர் கேட்க நேர்ந்தது. ப்ரகாஷ் அதற்கு  ÔÔஅப்படிப் பாராட்டும் விதமாக என் எழுத்தில் எந்தவிதமான சிறப்பையும் க.நா.சு. காணவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்ÕÕ என்று சொல்கிறார்.
 அவர்தான் க.நா.சு.!
 ***

க.நா.சுப்ரமண்யம்/ தஞ்சை ப்ரகாஷ்
சாகித்திய அக்காதெமி, சென்னை- 600 018.

பயனற்ற கண்ணீர்



எழுதவந்த எல்லோரும் கவிதையிலிருந்துதான் எழுத்து  வாழ்க்கையைத் துவக்குகிறோமாயிருக்கும். அது சிறு டைரிக்கிறுக்கலாகவே இருந்தாலும் எழுத வேண்டும் எனும் முதல் உந்துதலை எழுதுகிறவனுக்குத் தருவது கவிதைதான். தயக்கம், குழப்பம், மயக்கம் எல்லாமும் கொண்ட தொடக்ககால எழுத்தாளனைக் கவிதாமோகினி தான் கரம்பற்றி அணைத்து பயம் தெளிவித்து அழைத்து வருகிறாள். பதின்வயது மனம் எப்போதும் அதன் அலைபாயும் குணாம்சங்களுடன் மொழியின் மீதும் மெல்லிய மோகமுற்றுத் தவிக்கிறது. கொஞ்சம் காதல் கொஞ்சம் சமூகக் கோபங்கள், லட்சிய தாகம், எல்லா வேகங்களும் கலந்த கலவைதான் அவன். இவ்வுலகின் மீதான முதல்பதிவை, அல்லது முதல் விமர்சனத்தை கவிதையாகத்தான் அவனால் உருவாக்க முடிகிறது. அது கவிதையா  இல்லையா என்பது குறித்து யாரும் அபிப்ராயம் கூற முடியாது. கூறினாலும் அதைக்குறித்து அவனுக்கு லட்சியமில்லை.
 எழுத்தின் பக்கமே அண்டாத சாதாரண மனிதனும் கவிதை என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறான். அதிகபட்சமாக அதன் வாசகனாகவும் அவனே இருக்கிறான். இப்படிப்பட்ட அந்தரங்க எழுத்துக்காரர்கள் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றனர். அவர்களுக்குப் பிரசுரம், பத்திரிகை, பதிப்பு, வாசகர்கள் என்னும் பிரச்சனைகளில்லை.  
 பாரதி பெருங்கொண்ட தைரியத்துடன் Ôஎமக்குத் தொழில் கவிதைÕ என்று முழங்கினான். எல்லோராலும் இப்படிச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் கவிதை வடிவம் எல்லோருக்கும் இலகுவாக வசப்படுவதில்லை. கவிதை எழுத இலக்கணப் பயிற்சி அவசியமாக இருந்தது அந்தக் காலத்தில்! எப்போதும் மரபுக் கவிதைக்கு இலக்கணப் பயிற்சி தேவைதான். கற்பனையே ஆனாலும் கடவுள் எழுதிய கவிதையிலேயே குற்றம் கண்டு பிடித்த பெரும் புலமைப் பரம்பரை நம்முடையது. Ôசொல்லில் குற்றமா அல்லது பொருளில் குற்றமாÕ என்று கேட்க, Ôசொல்லிற் குற்றமில்லை இருப்பினுமது மன்னிக்கப்படலாம், பொருளில்தான் குற்றம்Õ என கீரன் கூற ஏற்பட்ட அமளிதுமளிகளுக்கிடையில்  மன்னன் பதற்றத்துடன் எழுந்து கேட்டுக் கொள்வான் ÔÔபுலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்ÕÕ 
கவிதை குறித்த மோதல்கள் காலம் தோறும் நடைபெறுகின்றன தான். இலக்கியத்தில் சர்ச்சைகள் தான் சுவாரஸ்யம். சர்ச்சைகளில்லாது போனால் இலக்கிய உலகம் ஸ்தம்பித்துப் போய்விடும். ஆனால் தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாக எழும் சர்ச்சைகளில் இல்லை எவ்வித சுவாரஸ்யமும். தமிழின் முக்கியக் கவியாகக் கருதப்படும் பிரமிளின் கவிதைகளை முன் வைத்து வெங்கட்சாமிநாதனுக்கும் தமிழவனுக்கும் ஒருகாலத்தில் யுத்தம் நடந்தது. பிரமிளின் பல புகழ்பெற்ற படிமங்களை மாயக் கோவ்ஸ்கி, டி.எஸ்.எலியட், பாப்லோ நெரூடாவின் பாதிப்புகள் என்றார் தமிழவன். Ôஇரவினுள் புதைந்து முடங்கிக் கிடக்கும் நிழல்கள்Õ என்னும் பிரமிளின் வரி மாயக்கோவ்ஸ்கியின் விமீஸீ ணீக்ஷீமீ ஷ்மீபீரீமீபீ றீவீளீமீ sலீணீபீஷீஷ்s, கண்ணாடிப் பாலை மீது நடுக்கம் பிறக்கிறதுÕ பாப்லோ நெருடாவின் ஜிலீமீக்ஷீமீ ணீக்ஷீமீ னீவீக்ஷீக்ஷீஷீக்ஷீs tலீமீஹ் னீust லீணீஸ்மீ ஷ்மீஜீt யீஷீக்ஷீ sலீணீனீமீ ணீஸீபீ யீக்ஷீவீரீலீt,  இழந்த படிமங்களைக் கணக்கில் வைÕ எலியட்டின் ணீ லீமீணீஜீ ஷீயீ தீக்ஷீஷீளீமீஸீ வீனீணீரீமீs என்று ஒப்பிட்டுச் சொன்னார் தமிழவன். ஆனாலும் பிரமிள் இன்றளவும் தமிழின் முக்கியக் கவியாகவே மதிக்கப்படுகிறார்.
1970-80களில் பல கல்லூரி மாணவர்களுக்கு மனப்பாடமாக இருந்த மு.மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் தொகுப்பை வாசித்து ÔÔஇவர் இதுவரை கவிதைகளே எழுதவில்லை. இனி எப்போதாவது எழுதலாம். இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் குடியரசுத் தலைவர் ஆகலாம் என்கிற மாதிரிÕÕ என்று காட்டமாக விமர்சித்தார் வெங்கட்சாமிநாதன். கண்ணீர்ப் பூக்களின் அடுத்த பதிப்பில் மு.மேத்தா வெ.சா.வின் இந்த விமர்சனத்தையும் சேர்த்துக் கொண்டார். இது ஒரு எதிர்வினையாகவும் அமைந்தது. தஞ்சாவூர் பெரியகோவில் புல்வெளி இலக்கிய சந்திப்புகளில் அப்போதுதான் எழுதி ஈரம் உலர்வதற்கு முன் வாசிக்கப்பட்ட சில புதிய நண்பர்களின் கவிதைகளை “திணீறீறீs றிஷீமீtக்ஷீஹ்”  என்று சொல்லி ப்ரகாஷ் மட்டையடியாக நிராகரித்ததைக் கண்டு நான் பதறிப் போயிருக்கிறேன்.
ஒரு படைப்புக்கான விமர்சனம், எதிர்வினை, மறுவினை இவை எல்லாம் இலக்கிய உலகில் சகஜம். நன்றாக இல்லை என்று சொல்லி விடுவார்களோ என அஞ்சி ஒரு எழுத்தாளன் படைக்காமல் நிறுத்திவிடுவதில்லை.
 புதுக்கவிதை இயக்கம் வலுப்பெற்ற பிறகு மரபிலக்கணம் குறித்து கவலைப்படாமல் எவர் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்கிற நிலை உண்டானது. இதைப் பயன்படுத்திக்கொண்டு நிறைய குப்பைகள் சேர்ந்தன, உண்மைதான். ஆனால் புதுக்கவிதையை உரிய இடத்திற்கு உயர்த்தியவர்களுக்கு மரபுப் பரிச்சயமுமிருந்தது. ந.பிச்சமூர்த்திக்கு மரபு தெரியாது என்று சொல்லமுடியாது. வானம்பாடிகளில் பலரும் தமிழை முறையாகக் கற்றவர்கள்தான். கல்யாண்ஜி, கலாப்ரியாவும், விக்ரமாதித்யனும் அப்படித்தான். அது அவர்களுக்கு கூடுதல் பலமாக இருந்தது. ஆனால் மரபுப் பரிச்சயமிருந்துதான் புதுக்கவிதை எழுதவேண்டும் என்கிற நிலை இல்லை. புதுக்கவிதை நவீன கவிதையாகப் பரிணாமம் அடைந்தபிறகு எழுதிய பலருக்கும் மரபு தெரிந்திருக்கவில்லை. அப்படியரு அவசியமுமில்லை. ஆனால் மரபுக் கவிதையைப் போல நிறையக் கவிதைகளை, அதன் வரிகளை ஞாபகத்தில் வைத்திருக்க முடிவதில்லை. நவீன கவிதையின் ஓசையைத் துறந்த தன்மைதான் இதற்கு காரணம். இது தான் நவீன கவிதையின் சுயம்
***
சிவகாமியின் Ôபயனற்ற கண்ணீர்Õ கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இந்தத் தலைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. கண்ணீருக்கான பயன் இருக்க வேண்டும். பயனற்ற கண்ணீரால் எதுவும் நேர்ந்துவிடப் போவதில்லை என்று உணர்த்துவதைப் போன்ற தலைப்பு. சிவகாமி ஒரு பெண் என்பதாலும் என்னை அதிகம் யோசிக்க வைத்த தலைப்பு. பெண்களின் ஆயுதமே கண்ணீர்தான் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. லௌகீஹ வாழ்க்கையை முன்வைத்து உதிர்க்கப்பட்ட சம்பிரதாயமான வார்த்தை அது. மட்டுமல்ல, ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து தோன்றும் பல்வேறு சொல்லாடல்களில் இதுவும் ஒன்றுதான்.
 முக்கியமாக சிவகாமி இந்தத் தொகுப்பின் மூலமாகப் பேச வருவது சமகாலப் பெண்கவிஞர்கள் எழுதிச் செல்லும் உடலரசியல் அல்ல. அரசியல்!
சிவகாமியின் கவிதைகளைக் காட்டிலும் அவர் எழுதியிருக்கின்ற முன்னுரை மிக முக்கியமானது. இதனால் அவருடைய கவிதைகளைக் குறைத்து மதிப்பிடுவதாக நீங்கள் கருதக்கூடாது. அண்மையில் பெண்கவிகள் எழுதிய எந்தத் தொகுப்பிலும் இப்படி ஒரு அர்த்தச் செறிவுள்ள முன்னுரையை நான் வாசிக்கவில்லை. உதாரணத்துக்கு இரண்டு பத்திகளைச் சொல்ல முடியும்.
1.   ÔÔபார்ப்பன எதிர்ப்பு தமிழில் சரியாக விளங்கிக் கொள்ளப்பட்ட அளவு சாதி ஒழிப்பு விளங்கிக் கொள்ளப்படவில்லையெனில் இதில் மொழியின் குறைபாடு என்ன? பூர்வ பௌத்தர்கள் என்றறியப்பட்ட தலித் மக்கள் இந்து ஒடுக்குமுறைக்கெதிராக தங்களை இந்துக்கள் அல்ல என்று அறிவித்துக் கொண்டது போல, சாதியத்தை வேரறுக்கத் தமிழரில்லை என அறிவித்துக் கொள்ள இயலுமா? இந்தக் கேள்வியில் மொழிக்கான  அத்தனை முக்கியத்துவமும் சரிந்து தரைமட்டம் ஆகி, ஆவியாகிக் கரைவதைப் பார்க்கையில் மொழியின் போதாமை கையறு நிலைக்கு என்னைக் கொண்டு செல்கிறதுÕÕ
2. ÔÔஉரை நடையில் எளிதாக விரித்து எழுதுகின்ற விஷயங்களை இடமற்ற கவிதைச் சிமிழுக்குள் அடைக்க பொருத்தமான வார்த்தைகளைத் தேடி அலைகின்றேன். எத்தனை குறைவானது எனது அகராதி என்பதை திரும்பத் திரும்ப முன்னுக்கு வந்து நிற்கின்ற சில சொற்கள் மூலம் அறிகின்றேன். பிறகுதான் புலப்படுகின்றது அவை சொற்களல்ல. திரும்ப அசைபோட்டு உருவாக்கி வைத்துள்ள உணர்வுகளென...ÕÕ
சிவகாமி எனக்குப் புனைவெழுத்தின் வழியே நாவலாசிரியராகத்தான் முதலில் அறிமுகம். எனது வாசிப்பனுபவத்தின் வாயிலாக அவருடைய Ôபழையனகழிதலும்Õ நாவல் அவரைக் குறித்த வலுவான சித்திரத்தை என்னுள் வார்த்து வைத்திருந்தது. கௌரி என்கிற பெண்ணிற்கும் காத்தமுத்து என்கிற தந்தைக்கும் இடையிலான நேசம், பின்பு முரணாகி கண்ணெதிரில் காத்தமுத்துவின் நாயகன் பிம்பம் கலைந்து போவதை கலாபூர்வமாகச் சித்தரித்திருப்பார் சிவகாமி. அதிகமும் சுயவிமர்சனம் செய்துகொண்டு எழுதப்பட்ட தலித் படைப்பாக இதை நான் இன்றைக்கும் மதிக்கிறேன். குறுக்குவெட்டு, ஆனந்தாயி உள்ளிட்ட அவருடைய பிற புதினங்களும் இதே மதிப்பீட்டில் வைத்துப் பார்க்கத்தக்கனவே.சிவகாமியின் முதல் கவிதைத் தொகுப்பு என் வாசிப்புக்கு கிடைக்கவில்லை. எனவே பயனற்ற கண்ணீரே நான் வாசித்த அவருடைய முதல் தொகுப்பு.
ÔÔஅரசியலை அழகின் மேன்மை குறையாது மக்கள் முன்பு நீதியின் கூண்டில் நிறுத்திடும் ஆசை மேலிடுகிறது. அரசியலைக் கவிதையிலிருந்து நீக்கம் செய்தல் தாழி உடைத்து வெண்ணெய் வழிப்பது போலிருக்கிறதுÕÕ
என முன்னுரையில் எழுதிச் செல்லும் சிவகாமி அவ்வழி நின்றே 66 கவிதைகளையும் படைத்துள்ளார். ஒவ்வொரு கவிதையையும் அதனதன் அரசியல் அழகியலோடு விரிவாகப் பேச வேண்டும். அதற்கு இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்கும் என்று  நம்புகிறேன்.
 Ôசிறுமிகளின் சடலங்களில் கருணைÕ என்கிற தலைப்பில் அவர் எழுதியுள்ள கவிதையின் கடைசி வரிகளை மட்டும் பெரும் மனப்பதற்றத்துடன் இங்கே முன் வைக்கிறேன்.
 முட்புதர்களில் ஒளித்து வைக்கப்பட்டு
 வல்லுறவு கறைகளுடன் கிடந்த
 பூக்களின் கடைவாய்ப் பற்களில்
 முழுதும் தின்று முடிக்காத
 பாதி சாக்லேட்டைப் பார்க்கும்போது
 கதறி அழுகிறது கருணை
 அதன் நேரம் குறைக்கப்பட்டதென்று.
***
நண்பரின் கவிதைகளுக்கு முன்னுரை எழுதுவது சுகானுபவம். மதிப்புரை தருவது கடினம். வே.பாபு சேலத்துக்காரர். தக்கை என்னும் இலக்கிய அமைப்பையும் அதே பெயரில் இதழையும் நடத்தி வருகிறார். சேலம் மாவட்ட தமுஎகசவிலும் பாபு ஒரு முக்கியஸ்தர். டிராவல்ஸ் ஒன்றின் நிறுவனர். விருந்தோம்பலில் சிறந்தவர். அதிர்ந்து பேசமாட்டார் அத்திபூத்தாற்போல கவிதைகள் எழுதுவார். அதுவும் ரத்தினச் சுருக்கமாக, ஆனால் கவிதையாக.
 38 வயதாகும் பாபு ஒரு பிரம்மச்சாரி. திருமணம் செய்து கொள்ளாதவர். அப்படி ஒரு எண்ணமும் இல்லாதவர். எங்கள் முந்தைய சந்திப்பிலும் இதை அவர் உறுதிப்படுத்தினார். கவிதை சரியா, பழுதா என்பதைச் சொல்.  இதை எல்லாம் இங்கே ஏன் எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் எழுதித்தான் ஆக வேண்டும். பாபுவின் கவிதைகளை வாசிக்கையில் uஸீபீமீக்ஷீ நீuக்ஷீக்ஷீமீஸீt ஆக ஓடிக் கொண்டிருக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் இந்த பிரம்மச்சர்யத்துக்கும் தொடர்பிருப்பதாகவே நான் கருதுகிறேன். இது என்னுடைய ஒருவரி விமர்சனம்.
Ôமதுக்குவளை மலர்Õ என்று அவர் வைத்திருக்கிற தலைப்பே விநோதம். குவளை மலர்களை மட்டுமறிந்தவர்களுக்கு இது சற்றுக் குழப்பம். பாபுவின் தொகுப்பே மொத்தத்தில் ஒரு விநோத ரஸ மஞ்சரிதான். இப்போது பாபு பதிப்பாளராகவும் அவதாரமெடுத்திருக்கிறார். சூல்ச்சிக்கணும் பாபே! (கவனமாக இருங்கள் பாபு) அவர் பதிப்பித்த 3 புத்தகங்களுக்கும் சென்ற மாதம் சென்னையில் வைத்து ஒரு விமர்சனக் கூட்டம் நடந்தது. பாபுவின் கவிதைகளைக் குறித்து விமர்சனக் கட்டுரை வாசித்த ஒருவர் பாபுவின் தமுஎச, இடதுசாரி இயக்கத் தொடர்பு குறித்து சற்றுக் கிண்டல் தொனிக்கப் பேசினார். ஏற்புரையின்போது பாபு பதில் சொன்னார். அதுவும் அத்தனை சாந்தமாக, புன்னகையுடன் ஆனால் அழுத்தமாக ÔÔநீங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் நான் எப்போதும் கம்யூனிஸ்ட்தான். தமுஎகச தான்ÕÕ சபாஷ் பாபு! இடதுசாரிகளைக் கிண்டலிப்பது தமிழ்நாட்டில் இப்போது ஒரு ஃபேஷன். இது அவர்களையே கிண்டல் செய்துகொள்வது தானன்றி வேறென்ன?
தொகுப்பெங்கும் அம்மு என்கிற பெண் வெற்றிலையின் மத்தியில் ஓடும் நரம்பு மாதிரி நெடுகப் பரந்திருக்கிறாள். பாபுவின் சுவாசப்பை அந்தப் பெண்ணின் கக்கத்திலிருக்கிறது. கவிதையின் தொடக்க வரிகளை பாபு அனாயசமாக எழுதிச்செல்லும் முடிப்பில் எப்போதும் ஒரு அதிர்வைத் தந்துவிடுவதில் குறியாக இருக்கிறார்.
ஒரு சின்னஞ்சிறு பூ என் மதுக்கோப்பையினுள் வந்து விழுகிறது அது அம்முதான்... மதுவோடு இலையைக் குடிப்பவன் பிறகு கிளையை மரத்தை குடிக்கிறான் இறுதியாக ஒரு வனத்தை... இலட்சத்தில் ஒருவனுக்குத்தான் அபூர்வ மலர் கிடைக்கிறது அது உதிரும் தறுவாயில்... ஒருநொடி இறந்தவனின் கண்கள் திறந்து மூடுகின்றன... அதிர்விலிருந்து மீளாதொரு நிலையில் கண்டேன் வண்ணத்துப் பூச்சியின் உடலை எறும்புகள் இழுத்துச் செல்வதை.. ஒரு கணம் ஒளி மிகுந்ததாய் மாறி சட்டென மூழ்குகிறது கனத்த இருளுக்குள் வீடு... பறவைகளில்லா கூண்டுகள் மிக அழகானவை..
இவ்வாறு வெவ்வேறு கவிதைகளின் முடிப்பு வரிகளை எழுதும் இவர் ஓரிடத்தில் எழுதுகிறார் ÔÔமுடிவுகளைப் பற்றி இருவருக்குமே தெரியும். நம் பிரச்சனைகளெல்லாம் ஆரம்ப வரிகளைப் பற்றித்தான்.ÕÕ
 நான் மீண்டும் மீண்டும் வாசித்தபோது கண்டடைந்தது இவருள் இயங்கும் ஒருவித உளவியல் கூறுகளுள்ள கவிதா மனோபாவத்தைத் தான். மனுஷ்யபுத்திரனின் தொடக்ககாலக் கவிதை மனம் பாபுவிற்குள் இயங்குகிறது என்றும்கூட சொல்வேன். இதை அவர் வளர்த்தெடுக்க வேண்டுமென்பது என் ஆசை. ஆனால் அவரை இன்றைக்கு எழுதுகின்ற எல்லா இளைஞர்களுடனும் ஒப்பிட்டுவிட முடியாது. தன்னுடைய மேதைமை குறித்த பெரிய எதிர்பார்ப்புகளில்லாத மனிதன். தோன்றும்போது எழுதி, தானே பல நாட்கள் அதை அசைபோட்டு ரசித்து, வாய்க்குமானால் வாசகனுக்கும் பாவிக்கத் தரும் ஒருமாதிரியான பரபரப்பில்லாத தன்மை.. சித்தன் போக்கு!
 கொண்டாட்டங்களையும், குமுறல்களையும் உலர்ந்த வரிகளால் எழுதுகிறார் பாபு. ÔÔநீ சொல்லியபடி வரைந்தபடி இல்லை பறவைகள் நேரில் பார்த்தபோது பறவைகளாக இருந்தன பறவைகள்ÕÕ என்பன போன்ற குறுங்கவிதைகள் வெறுமனே ஆரவாரமின்றி நம்மை நோக்கிப் பாய்ந்து வந்து கணநேரத்தில் வேறொரு அர்த்ததளத்திற்கு கொண்டு போய் நிறுத்துகின்றன. இது ஆகாச ராட்டினப் பெட்டியின் மேலிருந்து விருட்டென அந்தரத்தில் பரவுகின்ற உணர்வைத் தந்துவிடுகிறது.  
சிலவற்றைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகையில் இப்படிச் சொல்வது நியாயம்தான் என்றும் தோன்றுகிறது. முழுக்கவும் தானே விரும்பி வழி நடத்தும் ஒற்றையடிப் பாதையிலேயே நகர்வதால் சமூகப் பிரச்சனைகளைக் கையாளும்போது கவிஞன் நிராயுதபாணியாக நிற்கிறான், இதுபோன்ற தொகுப்புகளில் இப்படி நிகழும்தான், தவிர்க்க முடியாது.
***
கூப்பு ரோட்லே
கையில கெடாய்த்தும்
இருளனெ வெலாக்கி
தூக்கி பெணாங்கி மெதிச்சான்
எச்சாவோ நிந்த
காண்ரீட்டுகாரனே--
ராஜா
இப்படித்தான் புதிராகத் துவங்குகிறது லட்சுமணனின் Ôஒடியன்Õ கவிதைத் தொகுப்பு. கூப்பு ரோடு -- காட்டில் வெட்டிய மரங்களை எடுத்துப்போக வனத்துறைபோடும் சாலை, கெடாய்த்தும் கிடைத்தும்,  வெலாக்கி -- விலக்கி, பெணாங்கி- - சபித்து, எச்சாவோ நிந்த -- எங்கேயோ நின்ற, ராஜா - -யானை இவ்வாறு கவிதையை வாசிக்கிற பலருக்குப் பிடிபடாமலிருக்கிற இருளர் மொழிக்கு அந்தந்தப் பக்கத்திலேயே மெனக்கெட்டு விளக்கங்களையும் தருகிறார் லட்சுமணன்.
ÔÔஎனக்கு அறிமுகமான இருளர் பழங்குடி மக்கள் பற்றிய கவிதைகளை அவர்கள் மொழியான இருளர் மொழியிலேயே எழுதியிருப்பது வாசகனை சித்திரவதைப்படுத்தும் நோக்கத்திலல்ல, அவர்களிடம் கேட்டதை, கேட்டபடி, எழுத்து வடிவம் இல்லாத அவர்கள் மொழியிலேயே கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்பதாலும் தான்ÕÕ என்று முன்னுரையில் நியாயப்படுத்தும் லட்சுமணனுக்கு இதைச் செய்யவேண்டிய நிர்பந்தம் என்ன? அவரே அதற்கான பதிலையும் தருகிறார். ÔÔபழங்குடி மக்களுக்கென்று மொழிகள் இருக்கின்றன. அவை நமது தமிழ் போலவே அன்பையும், கோபத்தையும், வெறுப்பையும், நேசத்தையும் வன்மையுடன் வெளிப்படுத்தும் ஆற்றலும், ஆழமும் கொண்டவை. அம்மொழிகளை தமிழக மக்கள் அறிமுகம் செய்துகொள்வது அந்த மண்ணையும் மலைகளையும் வெறும் கேளிக்கை இடங்களாக பார்க்காமலிருக்க உதவும்ÕÕ
இக்கவிதைகளுக்கு அணிந்துரை எழுதியிருக்கின்ற நண்பர் Ôசோளகர் தொட்டிÕ நாவலாசிரியர் ச.பாலமுருகன் கோவன் பதி என்றழைக்கப்பட்ட கோயமுத்தூரின் பூர்வீக வரலாற்றுடன், மலைகள் சூழ்ந்த அந்த வனப் பகுதியை ஆண்ட இருளர் பழங்குடிகளின் வரலாற்றையும், லட்சுமணணின் கவிதைகளில் பதிவாகியுள்ள அம்மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கின்ற தொன்மங்களையும் குறிப்பிடுகிறார். முயல்கள் குடியிருப்புகளுக்கு அருகில் வந்து புல்கடிப்பதும், சகுனாகுருவி கத்துவதும், செம்போத்து குறுக்கே போவதும், பாம்புகளைக் காண்பதும் அம்மக்களுக்கு துர்சகுனங்கள். பெருமாட்டி குருவி கத்துவது, இருள்கவியும் நேரத்தில் வாசலில் வந்து கிளிகத்துவது நற்சகுனங்கள். இப்படி இப்படி நிறைய.
 கோவமூப்பன் இருளர் மக்களின் தலைவன், அவனே கோவை வனப்பகுதியைக் கட்டி ஆண்டவன். ஒரு கட்டத்தில் சோழ மன்னனின் நாடு பிடிக்கும் ஆசைக்கு பலியாக நேர்கிறது. கோவமூப்பன். பழங்குடி அரசு வீழ்கிறது. பூர்வகுடிகள் வனங்களடர்ந்த மலைகளின் மேல் விரட்டப்பட்டனர். இவர்களுக்குத் துணையாக பழங்குடித் தெய்வம் மட்டுமே நின்றது... இந்தக் கதையைச் சொல்லும்   நண்பர் பாலமுருகனிடம் நான் கோருவது.... இதை ஒரு நாவலாக எழுதுங்கள் பாலா!
லட்சுமணன் இத்தொகுப்பை காடு, நகரம் என இரண்டாகப் பிரிக்கிறார். காடுதான் வாசகனுக்குப் பெரும் புதிராகவும், புதராகவும், பார்க்கப் பார்க்கத் தீராத விருட்சங்களுடனும், நடக்க நடக்க முடிவுறாத மர்மப் பாதையாகவும், கேட்க கேட்க சங்கீதமாகிற மொழி வளத்துடனும் உள்ளது. பழங்குடி இருளர் மக்களின் மொழியைக் கூர்ந்து கவனிக்கையில் அதில் தமிழும், பிற திராவிட மொழிகளின் கலப்பும், மலை மக்களுக்கேயுரிய குறியீட்டுச் சொற்களும் விரவிக் கிடப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அவர்களின் அதீத நம்பிக்கைகளை பகுத்தறிவுக் கண்ணாடியணிந்து ஒவ்வாதவையென இன்றைக்கு நாம் மதிப்பீடு செய்தாலும் ஒரு காலத்தில் நம் மூதாதையர்களும் இப்படித்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்னும் யதார்த்தத்தையும் உணர¢ந்து கொள்ள முடியும்.
சுள்ளி எடுத்தா அடிக்கே
காட்டுக்குள்ளே போனா புடிக்கே
தேனெடுத்தா பாதி கேக்கே
தானிக்காய் பொரித்தா பாக்கே
எல்லாமே நிம்த்துதுங்கே
எனக்கொன்றும் பெரிய வித்தியாசப்படவில்லை இம்மொழி, இதன் தொனி, இக்கவிதைகள் உணர்த்தும் அரசியல். பாஷை புரியவில்லையென எவரும் சொன்னால் அது வெறும் பாசாங்கு.
 தமிழ் இலக்கியச்சூழலில் எப்போதாவது இப்படிப்பட்ட அபூர்வங்கள் நிகழ்கின்றன. நமக்கு வெகு தொலைவிலிருந்து பரிச்சயமற்ற ஒரு உலகைக் கண்டு இலக்கியமாக்குவது ஆகச்சிறந்த பணி. லட்சுமணனும் பாலமுருகனும் நமக்குக் கிடைத்த பெரும் பேறுகள்.
 கடைசியாக ஒரு வார்த்தை. ஒடியன் என்றால் தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி என்று பொருளாம். மார்க்குவேஸையே எதிர்கொள்ளும் மாந்திரீக யதார்த்தங்கள் நம் வனங்களிலும் மலைகளிலும் உறைந்து கிடக்கின்றன. உருக்கிப் புட்டியில் தர நமக்கு லட்சுமணன்கள்தான் வேண்டும்.
• பயனற்ற கண்ணீர் 
   சிவகாமி | உயிர்மை, சென்னை
• மதுக்குவளை மலர்
  வே. பாபு | தக்கை, சேலம்
• ஓடியன்

விட்டல்ராவும் பழைய புத்தகக் கடைகளும்


     தொண்ணூறுகளின் தொடக்கத்தில், தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்தில் நான் அசோகமித்திரனுடன் இணைத்து விட்டல்ராவையும்  வாசித்துக் கொண்டிருந்தேன். சென்னைப் பெருநகர வாழ்க்கையை எழுதிப் பார்த்த கைகளுள் விட்டல்ராவிற்கு ஒரு பிரதான பங்கிருக்கிறது. என்னுடைய வாசக அவதானிப்பில் அசோகமித்திரனின் நிழலாக நான் விட்டல்ராவைக் கருதுவதுண்டு.
ஒரு காலத்தில் சக பயணியாக கூடவே வந்து, இன்றைக்கு பல்வேறு காரணங்களால் எழுத்தைத் துறந்து வாழ்கின்ற தஞ்சாவூர் நண்பர் இளங்கோ, எனக்கு விட்டல்ராவின் கதைகள் குறித்த ஈர்ப்பை ஏற்படுத்தினார். இளங்கோவைப் போலவே நட்சத்ரன், கவிஜீவன், புத்தகன் என தஞ்சாவூரிலிருந்து மிக நுட்பமான கதை சொல்லிகளாக அடையாளம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பட்டாளமே ஏதேதோ காரணங்களால் எழுதுவதை நிறுத்திக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது. இதில் புத்தகன் என்கிற சிங்காரவேலு, சமீபத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போனார். இவர்கள் எல்லோரும் சுபமங்களா காலத்திலிருந்து எழுதிக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விட்டல்ராவைப் பேச வந்த இடத்தில் தஞ்சாவூர் நண்பர்களைக் குறித்தும் மெல்லிய கோடிட்டுக் காட்ட வாய்த்தது ஆறுதலாக இருக்கிறது.
Ôவாழ்வின் சில உன்னதங்கள்Õ என்று விட்டல்ராவ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கி கீக்ஷீவீtமீக்ஷீs லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் விமீனீஷீவீக்ஷீ என்று அதைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் விட்டல்ராவின் படைப்புகளைக் குறித்த விமர்சனங்களோ மதிப்புரைகளோ அதில் கிடையாது. முழுக்கவும் அவர் பழைய புத்தகக்கடைகளில் விலைக்கு வாங்கிய புத்தகங்களைக் குறித்த விவரணங்கள்!  பழைய புத்தகக் கடையில் வாங்கியது என்றாலும், அனைத்தும் தரமான பாதுகாக்கத்தக்க புத்தகங்கள். எல்லாம் தேடித் தேடிக் கண்டெடுத்த பொக்கிஷங்கள்! இதன்மூலம் ராவ் பழைய புத்தகக் கடைகள் குறித்த வரலாறு ஒன்றை எழுதியிருக்கிறார். அப்படித்தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. பழைய புத்தகங்களை விற்பவர்கள், ஒரு புதினத்தில் இடம் பெறும் கதா பாத்திரங்களைப் போல இந்நூலில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களுடைய உள்ளிட்ட குணாதிசயங்கள் எளிமையான வாழ்க்கை, அகந்தை, சிடுசிடுப்பு, பேரன்பு, அழுக்கும் தூசியும் படிந்த இருப்பிடங்கள் என எல்லாவற்றையும் புத்தக அறிமுகங்களுக்கு ஊடாக ராவ் சுவாரஸ்யமாக விவரித்துச் செல்கிறார்.
ஒரு காலத்துச் சென்னையில் பிரசிதித்தி பெற்றிருந்த மூர் மார்க்கெட்டில் அவர் சந்தித்த நாயக்கர், முதலியார், ஐரே, மௌண்ட்ரோடு தர்காவுக்கு வெளியில் மரத்தடியில் கடை பரப்பியிருந்த அப்துல்கரீம், சேலம் நடேச ஆச்சாரி, ஆழ்வார்பேட்டை மூர்த்தி, லஸ்கார்னர் முருகேசன், ஆழ்வார், எல்.ஐ.சி.கட்டடத்தை அடுத்த நடைபாதைக் கடை ஊமையன், நங்கநல்லூர் எத்திராஜு... இப்படி விதம் விதமான பழைய புத்தக வியாபாரிகளை, விட்டல்ராவ் இந்த நூலில் தனக்கே உரித்த மொழியில் அறிமுகப்படுத்துகிறார்.
மூர்மார்க்கெட் முதலியாரிடமிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்புகள் 12 புத்தகங்கள், கோர்தான்ஹார்னர் எழுதிய
திஷீக்ஷீ ஹ்ஷீu tலீமீ கீணீக்ஷீ வீs ஷீஸ்மீக்ஷீ போன்ற முக்கியமான புத்தகங்களை அவர் வாங்கியிருக்கிறார். இதில் திஷீக்ஷீ ஹ்ஷீu tலீமீ கீணீக்ஷீ வீs ஷீஸ்மீக்ஷீ நூலை எழுதிய கோர்தான்ஹார்னர் இரண்டாம் உலகப்போர்க் கைதி. அது ஒரு யுத்த சேதி சித்திரக் குறிப்பு. யுத்த அனுபவங்களுடன், கைதி முகாம் நாட்களையும் இணைத்து மிகச் சிறந்த கோட்டோவியங்கள் மற்றும் நீர் வண்ண ஓவியங்களுடன் படைக்கப்பட்டுள்ள அழகியல் அம்சம் நிறைந்த நூல் என்று அதைக் குறிப்பிடும் ராவ் அந்த ஓவியங்களையும் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெறச் செய்திருக்கிறார். கவசமோட்டார் தாக்குதல், ஜெர்மானிய ஒற்றன், இத்தாலிய அதிகாரி மற்றும் போர்க்காட்சிகள் என உண்மையில் அந்த ஓவியங்கள் நமக்கு பிரம்மிப்பூட்டுகின்றன. விட்டல்ராவ் ஒரு சிறந்த ஓவியர் என்பதும் நாமறிந்த செய்தி.
நேருவின் சுயசரிதை, தி டிராயிங்ஸ் ஆஃப் லியனார்டோ டா வின்சி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட Ôஇராமனுக்கு ஒன்பது மணிநேரம்Õ (ழிவீஸீமீ லீஷீuக்ஷீs tஷீ ஸிணீனீணீ) மாப்பசான் கதைகள், கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் முதல் நாவல்,  டிரேசி டைகர், மை நேம் இஸ் ஆரம் போன்ற புத்தகங்களையும், கோலியர்ஸ்,  தி சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட், லைஃப், ஆப்ஜர், என்கவுன்ட்டர், இம்பிரின்ட், தி சண்டே டைம்ஸ், தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா போன்ற இதழ்களையும் ராவ் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியிருக்கிறார்.
நம்முடைய எழுத்தாளர்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளைக் குறித்த அனுபவங்களை எழுதுவதில்லை. பிரபஞ்சன் திருவல்லிக்கேணி நடைபாதை புத்தகக் கடைகளைக் குறித்து எழுதியிருக்கிறார். சிலர் போகிற போக்கில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். ராவ் அந்த அனுபவங்களை ஒரு நூல் முழுக்க எழுதிப் பார்த்திருக்கிறார். அவருடைய வாசிப்பின் ருசி வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கசிந்திருக்கிறது.
Ôமூர்மார்க்கெட் எரிந்து முடிந்ததுÕ என்கிற பத்தாவது அத்தியாயம் சென்னையின் ஒரு கால கட்டத்து வரலாற்று சோகத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது.
ÔÔஎது சங்கமேஸ்வர ஐயரின் புத்தகக் கடை இருந்த இடம்? எது நாயக்கர் கடையிருந்த இடம்? என்றெல்லாம் அடையாளம் சட்டென்று கண்டு கொள்ள முடியாதபடி எல்லாம் கரி, எல்லாம் கருப்பாய்... ஓவென்று வானத்தைப் பார்த்துக் கத்திக் கதறித் தத்தித் தரிகடம், தத்தரிகிடம், தத்தரிகிடம் தித்தோம்....ÕÕ
என்று ராவ் எழுதும்போது மனம் வலிக்கிறது.
 விட்டல்ராவின் இந்த புத்தகம் தமிழி¢ல் ஒரு புதிய முயற்சி என்று கூறுமிடத்து, எனக்கும் பழைய புத்தக வியாபாரிகளுக்குமான உறவை ஒற்றை வார்த்தையில் சொல்லப் போனால் அது... ஏழாம் பொருத்தம்! அவர்கள் மௌனிகள், கர்விகள், ஒரு தங்கச் சுரங்கத்தை கட்டி மேய்ப்பதான பாவனை அவர்களே அறியாமல் அவர்களிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நான் பலமுறை யோசித்து வியந்திருக்கிறேன். ஒரு போதும் சண்டை சச்சரவு இல்லாமல் எங்களுக்கு பேரம் நிகழ்ந்ததில்லை. Ôபேரம் இல்லாமல் பழைய புத்தகம் வாங்குவது எனக்கு அனாச்சாரம்Õ என்கிறார் ஓரிடத்தில் ராவ். வெளியீட்டு விழா முடிந்த ஒரு சில மணி நேரங்களில் பழைய புத்தகக் கடைகளுக்கு வந்து சேர்ந்த புத்தம் புதிய சூடு தணியாத புத்தகங்களை எல்லாம், பார்த்து நான் மிரண்ட சம்பவங்கள் உண்டு. இது குறித்து இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. மறுபடியும் பேசுவோம்.
***
  சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள சில நூல்களைச் சமீபத்தில் வாசித்து முடித்தேன். யாழ்ப்பாணப் புகையிலை,  பாகிஸ்தான் போகும் ரயில், தென் காமரூபத்தின் கதை இப்படிச் சில. இந்த வரிசையில் நிர்மலா மோகன் தொகுத்த Ôதமிழ்ச் சித்தர் இலக்கியம்Õ என்னை வெகுவாக ஈர்த்தது. சித்தர் பாடல்களை உதிரியாகப் பல நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த எனக்கு, பதினெண் சித்தர்களின் முக்கியப் பாடல்கள் ஒரே நூலில்  இருக்கக் கண்டதும் மகிழ்ச்சி! சித்தர்கள் மீதான வியப்பும் பிடிப்பும் எனக்குச் சிறுவயது முதலே இருந்து வந்திருக்கிறது. போகர் என்னும் சித்தன் வாழ்ந்த தென்பழனி மலைக்கருகில் பிறந்ததால் எனக்கு இந்த சித்தர்பித்து பிடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனது பிராயத்தில் எங்கள் ஊரில் நோய் கண்டால் சித்தவைத்தியம் செய்வது மிகப் பிரபலம். இன்றைக்கும் பழனியிலுள்ள மலையப்பசாமி வைத்தியசாலை உள்ளிட்ட சில நிறுவனங்களால் சித்த வைத்தியம் பாவிக்கப்படுகிறது.
சித்தர்கள் அழியாத உடலும் சாகாத நிலையும் பெற்றவர்கள் என்பதெல்லாம் சற்று மிகையெனப்பட்டாலும் அவர்கள் பற்றற்றவர்கள்; வெயில், மழை, காடு, மேடு என எதைக் குறித்தும் கவலை கொள்ளாமல் தன் வழியே பயணித்தவர்கள், மெய்ஞானிகள் என்பதில் எவருக்கும் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. திருமூலர், சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், அழுகணிச் சித்தர், கொங்கண நாயனார், சட்டைமுனி, திருவள்ளுவர், அகத்தியர், சுப்பிரமணியர், வால்மீகி, இராமத்தேவர், கருவூரார் என பதினெட்டுச் சித்தர்களின் முக்கியமான பாடல்களையும் வாழ்வையும் இந்த நூல் நமக்கு விளம்புகிறது.
Ôசித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்Õ என்கிறார் மாணிக்க வாசகர். இதில் Ôஅத்தன்Õ என்கிற பிரயோகத்திற்கு தலைவன், தலைமை தாங்குபவர் என்னும் பொருள் உண்டு. அத்தனைத்தான் அத்தாவாக்கி, தமிழ் முஸ்லிம்கள் அப்பா என்னும் சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். மாணிக்கவாசகர் மட்டுமல்ல நம்முடைய மகாகவி பாரதியும் தன்னைச் சித்தனாகக் கருதியதுண்டு.
ÔÔஎனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்ÕÕ
என்று அவர் பாடியிருக்கிறார்.
சித்தர்களை வைதீகத்திற்கு ஆதரவாளர்களாகச் சித்தரிக்கும் முயற்சிகள் தமிழ்ச் சூழலில் நடந்திருக்கிறது. ஆசைகளைத் துறக்க வலியுறுத்தும் பாடல்களை உதாரணங்காட்டி அவநம்பிக்கைவாதிகளாக்கிப் பார்த்தவர்கள் உண்டு.
நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணென்று
சொல்லுமந்திரம்  ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோÕÕ
என்று சித்தர் சிவவாக்கியர் வலுவாகக்கேட்கிறார்.
ÔÔஆலயத்துள் நின்ற ஆறு சமயத்தோரும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்ÕÕ
 என்கிறார் திருமூலர். எனவே கலாநிதி கைலாசபதி கூறியதைப்போல சித்தர்களைக் கலகக்காரர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ளலாம். மக்களிடம் படிந்திருக்கிற குறைகளைக் களைவது மட்டுமன்று; ஜாதி மதங்களை நோக்கியும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தவர்கள் சித்தர்கள்.
பறச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
என்கிற சித்தர் சிவவாக்கியர் குரலில் சாதிய சனாதனத்தை ஏற்றத்தாழ்வுகளை வன்மையாகச் சாடும் தொனி பொதிந்திருக்கிறது.
  இஸ்லாம் சமூகத்திலும் சித்தர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் சூஃபிகள் என்றழைக்கப்படுகின்றனர். குணங்குடி மஸ்தான், தக்கலை பீர்முகமது அப்பா போன்ற ஆண் சித்தர்களுடன், தென்காசி ரசூல்பீவி, ஆசியாம்மா உள்ளிட்ட பெண் சித்தர்களும் அங்கே இருந்ததுண்டு. சித்தர் உலகம் ஆழமானது. தத்துவார்த்தச் சுழலில் நம்மை சிக்க வைத்து, சித்தம் தெளியவைப்பது.
***
நட்பு, காதல், அரசியல், கலை இலக்கியம் என எல்லா வெளிகளிலும் நண்பர்களில் சிலர் தங்களின் சுயசாதி அடையாளத்தை தருணம் பார்த்து வெளிப்படுத்திக் கொள்வது, அதற்காக பெருமிதப்படுவது போன்ற அநாகரீகச் செயல்களில் ஈடுபடுவதை பல சந்தர்ப்பங்களில் கண்டு நான் அருவருப்படைந்திருக்கிறேன். எங்கெல்லாம் திறமை புறக்கணிப்புக்குள்ளாகி அவ்விடத்தை பிரிதொன்று வலிய அபகரித்துக் கொள்கிறதோ, அங்கே சாதி, மதம், பணம் இவற்றில் ஏதோ ஒன்று தம் பங்கை செவ்வனே செய்திருக்கிறது என சாமானியனும் புரிந்து கொண்டிருக்கும் காலமிது. ஆனால் இதற்கான எதிர்வினை எதுவுமற்று எல்லாவற்றிற்கும் சமரசமாகிக் கொள்ளும் ஒருவித மழுங்கைத் தனத்திற்கு நம்மை ஒப்படைத்து விட்டு ‘ஙே’ என்று நிற்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைச் சுற்றிப் படிந்துள்ள சாதியின் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாமல் வெறுமனே கோஷம் எழுப்பிக் கொண்டிருப்பதில் நான் அவநம்பிக்கை கொள்கிறேன். திரைப்படங்கள், தெருக்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களின் பெயர்களில் சாதியை நீக்க முடிந்தது மட்டுமே இந்த முதுகெலும்பற்ற அரசுகளின் உச்சபட்ச சாதனையாக இருந்திருக்கிறது. ஆனால் காலகாலமாக நம் உள்ளத்தில் படிந்துள்ள சாதிக் கசடை எந்த உத்தரவின் மூலமாக அகற்றப்போகிறோம்? பேராசிரியர். நா. வானமாமலை எழுதிப் பல பதிப்புகள் கண்ட Ôதமிழ்நாட்டில் சாதிசமத்துவப் போராட்டக் கருத்துக்கள்Õ என்றொரு புத்தகம் வாசித்தபோது  எனக்கு இது போன்ற அபிப்ராயங்கள் எழுந்தன.
 இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருந்த எல்லா சாதிகளைச் சேர்ந்த செல்வந்தர்களும் தத்தமது சாதியைப் பிரதானப்படுத்த ஆளுக்கொரு நூல் எழுதுவிக்கிற பணியில் இறங்கியிருக்கிறார்கள். 1901ல் வெளியான வருணசிந்தாமணி வேளாளர் சமூகத்துப் பெருமைகளைப் பேசுகிறது. வேளாளர் சைவ சமயத்தவர் என்பதால் அவர்கள் பிராமணரைவிட மேலானவர்கள் என்று நிரூபிக்க இந்நூலாசிரியர் வேதங்களையும் பழந்தமிழ் நூல்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். 1904ல் கிராமணிகள் தங்கள் சாதியை உயர்த்திக் கொள்ள க்ஷத்திரியகுல விளக்கம் என்றொரு நூலை வெளியிட்டிருக்கிறார்கள். க்ஷத்திரியரான ஜனகனிடமிருந்து தான் பிராமணர்கள் பிரம்மஞானம் என்கிற அறிவைப் பெற்றனராம். எனவே க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்கு குரு முறையாவார்கள் என்று அந்த நூல் கூறுகிறது. 1937ல் வெளிவந்த Ôநாடார் மன்னரும் நாயக்கர் மன்னரும்Õ என்னும் மற்றொரு நூல் நாடார் சாதிப் பெருமைகளை வியந்தோதுகிறது.
பஞ்ச திராவிட முதல்வன்
பரம்பரை பாண்டிய நாடன்
கல்விச் சங்கமுடையவன்
காசு முத்திரை விடுத்தவன்
சப்தகன்னி புத்திரன்
தமிழைக் குறுமுனிக் குரைத்தவன்
இது அந்த நூலில் காணப்படும் நாடார் மகாஜனங்களைக் குறித்த குலப் பெருமைப் பாடல்.
1909ல் வெளியான பரவர் புராணம் பரதவர்களின் உயர்வைப் பாடுகிறது. சந்திர வம்சத்தில் தோன்றிய அர்ச்சுனன் பரதகுலமன்னரின் மகள் சித்திராங்கதையை மணந்து பாண்டியவம்சம் தோன்றியது போன்ற இதிகாச நிகழ்வுகளைப் புனைந்து அவற்றுடன் தம் சாதியைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் போக்கு இந்நூலில் வெளிப்படுகிறது. கார்காத்தார் சாதி உயர்வைப் பேசும் Ôகிளை வளப்ப மாலைÕ என்கிற நூலும் இதே காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
இந்நூல்களின் ஓங்கி ஒலிப்பது ஒற்றைக்குரல்தான். அதாவது பிராமணர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை இந்நூலாசிரியர்கள் அனைவரும் மறுக்கின்றனர். ஆனால் வருணாசிரமப் பிரிவுகளை இவர்களில் எவரும் எதிர்க்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. வருணாசிரமத்தில் தங்கள் சாதிகளுக்கு அளிக்கப்பட்ட தாழ்ந்த நிலைகளைத்தான் இவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று பேராசிரியர் நா.வா. தெளிவாகத் தனது ஆய்வுரையில் வெளிப்படுத்துகிறார். 48 பக்கங்களே கொண்ட இந்த சிறிய புத்தகம் தமிழ்நாட்டில் சாதிகள் கட்டமைக்கப்பட்ட விதத்தை ஒருவித தீவிரத் தன்மையுடன் பேசுகிறது.
இதை வாசிப்பதும் பிறகு விவாதிப்பதும் கூட சாதியத்துக்கு எதிரான ஒரு முக்கிய செயல்பாடுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

• வாழ்வின் சில உன்னதங்கள்
நர்மதா பதிப்பகம், சென்னை- \- -17
• தமிழ்ச் சித்தர் இலக்கியம்
சாகித்திய அகாதெமி, புதுடெல்லி.
• தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்
பாரதி புத்தகாலயம், சென்னை-- \ 18


Wednesday, September 12, 2012

முடிந்ததை போல முடியாத ஒரு சூட்சமத்தை புதைத்த புனைவு



        (கீரனூர் ஜாகிர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா நாவலை முன்வைத்து...)

    யமுனாநதிக்கரையில் காண்டவ வனத்தில் வாழ்ந்த நாகர்களை யாராளும் வெல்லமுடியாது. அவர்கள் அந்த காட்டை சூரையாட யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அது அவர்கள் வாழ்விடம் மட்டுமல்ல தாய்மடியும் கூட. அவர்கள் இருக்கும் வரை அந்த இடத்தில் எந்த விதமான புதிய நகரத்தையும் நிர்மாணிக்க முடியாது என்று அறிந்த பாண்டவர்கள் அவர்களை கூண்டோடு அழிக்க முடிவு செய்தனர். அவர்கள் யாவரும் வெளிவராத நாளில் அந்த வனத்தைச் சுற்றி நெருப்பிட்டனர். கானகம் பற்றி பெருநெருப்பு சூழ்ந்து வெப்பம் கூடியதும் மழைபெய்யத் துவங்கியது. மழை நீர் நெருப்பை அனைக்காமல் இருக்க யமுனாநதிக்கரை ஓரங்களிலிருந்து அர்சுனனும், கிருஷ்னனும் அம்புகளால் மழையை திசை திருப்பினர். பற்றி எரிந்த பெரு நெருப்பில் கானகம் வெந்து தனிந்தது. அதில் தப்பி அபயம் கேட்ட ஒரே உயிர் மயன் என்ற மனிதன் மட்டுமே. கடுமையான தீக்கயங்களுடன் அர்சுனன் அமைத்த தீவிழாப்பாதையின் வழியே தப்பினான். தப்பியவனுக்கு  இது இயல்பாய் எழுந்த தீ அல்ல. கானகத்தை அழிக்க மூட்டப்பட்டது. அதுவும் திட்டமிட்டு பாண்டவர்களால் மூட்டப்பட்டதென புரிந்தது. 
    தன் இனவாசிகளுக்கும் தன் வாழிடமான வனத்திற்கும் ஏற்பட்ட அழிவிற்கு பழி தீர்த்துக்கொள்ள, பாண்டவ வம்சத்தை அழிக்க தன்னால் தீ மூட்ட முடியும் என மயன் நம்பினான். வடிவ சாஸ்த்திரத்தையும் சிற்ப மரபையும் கற்றிருந்த மயன் என்ற மாய தச்சன் பாண்டவர்கள் அனுமதியுடன் அவர்களுக்கு பரிசளிக்க நுட்பத்துடன் சூட்சுமங்களை இழைத்து மணிமண்டப மாளிகையை உருவாக்கினான். எரிந்து தனிந்த காண்டவ வனத்தில்தான் அந்த மாளிகை உருபெற்றது. உண்மை போல தெரியும் பொய்களும் பொயாய் தோன்றும் உண்மைகளும். முடிவது போல் தெரியும் பாதை முடியாத சுழலாய் தொடர்வதும் என இயற்கையையும் புனைவையும் கொண்டு அவன் கட்டிய அந்த மாளிகையில்தான் துரியோதனன் விழுந்தான். பொய்தோற்றத்தில் அவன் தவறி விழுந்ததை பார்த்து பாஞ்சாலி சிரித்தாள். அதன் பிறகுதான் அவர்களுக்குள் ஆயிரமாயிரமாய் அழிவுகள் ஆரம்பமானது. 
        மயனின் காண்டவ வனங்களாக இன்றைக்கு பெண்கள் காட்சி தருகின்றனர். தொலைகாட்சிகளில், பத்திரிக்கைகளில், சமூக பழக்கவழக்கங்களில் பெண்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் சூறையாடப்படுகின்றனர். நடந்ததை உணர்ந்து அவர்கள் தப்பிக்கும் வழிகள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற அம்புகளால் அழிக்கப்படுகிறது. குடும்பம் என்பது அர்சுனன் அமைத்த தீவிழாப்பாதை போல் பாதுகாப்பு அளித்தாலும் அங்கும் அவளின் நிலை இரண்டாம் பட்சம்தான். ஆழிசூழ் உலகில் மனித சமூகம் இப்படி பல காண்டவ வனங்களை அழித்துக்கொண்டே இருக்கிறது. தனது இச்சையின் தீரா பசிக்கு முதல் பலியாக பெண்களை கேட்கும் ஆண்கள் சமூகத்திற்கு எதிராக புனைவின் வழியே எழுந்து நிற்பவள்தான் அலிமா. வடக்கேமுறி அலிமா?
    இதிகாச புனைவைப்போல நிகழ்கால நடப்பை புனைவாய் உருகொண்டு வடக்கேமுறி அலிமா என்ற இந்த நாவல் எழுந்து நிற்கிறது. கீரனூர் ஜாகிர்ராஜா அலிமா என்ற பாத்திரத்தின் மூலம் ஆண்கள் அழித்து துடைத்து எரிந்த பல காண்டவ வனங்களின் மாய தச்சனாக அலிமாவை எழுந்து நிற்க வைக்கிறார். பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சி.ஐ.டி ஆபீஸர், வாழ்ந்து கெட்டவள், காதலானால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எயிட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்தரீகம் செய்பவள், சினிமா வாய்ப்புத் தேடி சோரம் போனவள் என இந்த நாவலில் அலிமாவை அறிமுகம் செய்கிறார். பாவம் நாவலாசிரியருக்கு அவளைப்பற்றி முழுமையாய் தெரியவில்லை. அவள் மயனின் மாளிகையைப் போல புரிந்துக்கொள்ள முடியாதவள். படைப்பாளியின் படைப்பை மீறி அவள் எழுந்து நிற்கிறாள். அவள் சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், நாவல் ஆசிரியர், ஒரு கடைநிலை ஊழியனின் துன்பம் புரிந்தவள், மனிதர்களின் ஆழம் புரிந்தவள், திமிரி எழுபவள், தண்ணீரைப் போல விழும் இடங்களில் ஒன்றுபவள், மின்னலைப் போல அதிர்ச்சியளிப்பவள், ஒரு பெண்ணில் உள்ள ஆண் தண்மையை உணர்ந்தவள்
இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.    
    இந்த நாவலில் காலவரிசையில் தொடர் பயணம் இருக்காது. புட்டைப் பிசைகையில் அலிமாவின் கைகள் காலத்தைப் புரட்டிப் போடுவது போல நாவல் கலைந்து பயணிக்கும். ஒரு நாடோடியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் தொகுப்பு இந்த நாவல். அவள் கால்கள் நடக்கும் திசைகளில் எதிர்படும் கழிப்பறைகளில் அவளது வாழ்க்கையை பதிந்துச்செல்கிறாள். 3800 கழிப்பறைகளில் அவள் எழுதியதை "என்டெ யாத்ரா" என்ற சுயசரிதை கோழிக்கோடன் என்ற பதிபாளரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுயசரிதையின் பலபகுதிகளும் அதில் இல்லாத அவளது வாழ்வும் ஊடாடி இந்த நாவல் பயணிக்கிறது. பெண்கள் படும் துயரங்களை அதன் பல பரிமாணங்களை இப்படி ஒரே பாத்திரத்தை வைத்து இதுவரை யாரும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. அப்படி சொல்ல அலிமா என்ற பாத்திரம் மிகவும் காத்திரமாய் படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாவலை படித்து முடிக்கின்றவரை அவள் குறித்த ஒரு பிம்பத்திற்கு வரமுடியாது. படித்து முடித்த பின்னரும்தான். அதனால்தான் அவள் காண்டவ வனத்தின் மாளிகையாய் காட்சியளிக்கிறாள்.
    "உன்னை மனநலக் காப்பக உரிமையாளரின் புத்திரி என்று அறிந்துகொள்ள அரைமணி நேரம் போதுமானதாயிருந்தது. அந்த காப்பகத்தில்  அடைப்பட்டிருந்த ஸ்திரீகளில் உனக்கு மட்டுமளிக்கப்பட்ட ஒரு சில மௌனம் அரும்பிய சௌகரியங்களுக்குள் நெளிந்து கொண்டிருந்தது அந்த விலாசம்" என அவள் கடிதம் எழுதுகிறால் எனில் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்பட அவள் எவ்வுளவு நுட்பமானவள் என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா என்ன? இயலாமையின் பிம்பமாய் காட்சியளிக்கும் பெண்கள் மீதான வன்முறைகள் தினமும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. பல பெண்கள் இவைகளை எதிர்த்துத் தங்கள் வாழ்வின் ரூபத்தில் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பெண்களின் எதிர்வினைகள் கலவரமாக, அடங்கதா தன்மையென, மோசமான செயலாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சித்தரிப்புகள் பெரும்பாலும் ஆண்களின் கண்ணோட்டத்தில் தீர்மாணிக்கப்படுவதாகும். இந்த நாவல் அலிமாவின் உருவில் சமூக பொதுவெளியை நோக்கி நிறைய கேள்விகளை எழுப்புகிறது.
    "அவள் புறப்பட்டிருந்தாள். அவள் உமிழ்ந்து செல்லும் புகை அந்தரத்தில் சுவடுகளைப் போல பதிந்து மறைந்தது". இப்படி வாசகனை வசீகரிக்கும் உவமைகள் நிறைந்து கிடக்கும் இந்த நாவல் படிக்கின்ற வாசகர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். சைடு, அப்பர், லோயர், முன், பின் நவீனத்துவவாதிகளை நைய்யப்புடைக்கும் எழுத்துப்பாங்கு இது. நையாண்டியாய் பல விஷயங்களை கேள்விக்குள்ளாக்குகிறார் ஜாகிர்ராஜா. விருதுகளின் அரசியலை முட்டைச் சிம்னி விருது, கட்டஞ்சாயா விருது, ஏத்தன் பழம் விருது என அலிமாவின் மூலம் பகடி செய்கிறார். நாவலின் இடையில் நாவல் எழுத்தாலுனுக்கும் படிக்கும் வாசகனுக்கும் இடையில் ஒரு விவாதம் நடக்கிறது. மொத்த கதையையும் அலிமாவின் பெரியப்பா வனத்தில் குட்டி ஹபீபல்லா அவளின் பிறப்புக்கு முன்பே எழுதியது போல ஒரு திருப்பமும் உள்ளது.
    "அக்கம்மா இதைகுறித்து நீ பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். இந்த லோகத்தில் நிர்கதியான விளிம்புநிலைப் பெண்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ அங்கெல்லாம் ஆண்கள் சுதந்திரமாக நடத்துகின்ற காரியங்கள் தானே இவை?" என அலிமா தனது மனநலக் காப்பக நட்புக்கு எழுதும் கடித்தத்தில் வினா எழுப்புகிறாள். இந்த நாவல் முழுவதும் இந்த கேள்வியின் எதிர்ப்புகுரலாய் அலிமா அலைந்து திரிகிறாள். அவள் கபுறுகளின் மீது அதாவது இஸ்லாமிய கல்லரைகள் மீது பால்ய வயதில் நடத்திய விசாரனையின் தொடர்ச்சி இது. 
    144 ஆம் பக்கத்தில் நாவல் முற்று பெருகிறது. அல்லது முற்றுபெறாமல் தொடர்கிறது. எப்படி என உங்களால்தான் தீர்மாணிக்கமுடியும். வடக்கேமுறி அலிமாவை சந்திக்காமல் அது சாத்தியமல்ல! படித்து தீர்மாணியுங்களேன்.


நன்றி: மானுட விடுதலை...

Saturday, August 4, 2012

மிர்தாதின் புத்தகம் முதல் அன்னா தஸ்தயேவ்ஸ்கி வரை


நாங்கள் தஞ்சை ப்ரகாஷிடம் இலக்கியம் பயின்ற காலத்தில் கவிதையில் நான் என்கிற சொல் களையப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு நாள் அவர் நீண்ட சொற்பொழிவாற்றினார். எங்களுக்குப் பெரிய வியப்பைக் கொடுத்த உரையாக அப்போது  அது இருந்தது. மிகெய்ல் நைமியின் மிர்தாதின் புத்தகம் முதல் அத்தியாயத்தில் முடிந்தவரை நான் என்ற சொல்லைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற விதி நெடுங்காலமாக அந்த மடாலயத்தில் நிலவி வந்ததுÕÕ என்னும் வரிகள் இடம் பெற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டேன்.  அது ஒரு மடாலயம். மடாலயத்தின் மூத்தவரான சமாதம் தன்னுடைய சாதனைகளைப் பற்றி மிகவும் பெருமையடித்துக் கொள்கிறார். அப்போது, விலக்கப்பட்ட Ôநான்Õ என்கிற வார்த்தையைப் பலமுறை பிரயோகிக்கிறார். பிறகு, அதன் மீது விவாதம் நடைபெறுகிறது. யார் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியாத நிலை. ஆதித் தந்தை நோவா நான்  என்கிற வார்த்தையின் மேல் முதன் முதலாகத் தடை விதித்தார். இல்லை இல்லை முதல் மடாலயத் தோழர் சேமா தான் இதற்கு காரணம் என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள். சமாதம் இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க மிர்தாத்தால் முடியும் என்று ஏளனமாகக் கூறுகிறார். மடாலயத்தால் விதிக்கப்பட்ட ஏழாண்டு மௌனத்தைத் துறந்து மிர்தாத் பேசத் தொடங்குகிறார். ÔÔதுறவிகளே, Ôநான்Õ என்பதே படைப்பாற்றல் மிக்க சொல். எல்லாப் பொருள்களின் மூலாதாரமும் மையமும் நான் என்பதே என்று நீண்டு செல்கிறது மிர்தாதின் உரை. ஒரு கட்டத்தில் கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாளி. நான் என்பதே அவன் படைப்பு. அப்படியிருக்க அவன் ஏன் கடவுளைப் போல சமநிலையில் இல்லை என்றும் கேட்கிறார். இப்படியான புதிர்ச் சங்கிலிகளாக இந்நூலின் அத்தியாயங்கள் நீள்கின்றன. தத்துவங்களில் திளைக்கும் போது மனம் ஒரு அலாதியான நிலையை அடைகிறது. அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
‘‘If this rascal Would not have Written this book I would have written this’’ (இந்த அயோக்கியப் பயல் இதை எழுதியிருக்காவிட்டால் நான் எழுதியிருப்பேன்) என்கிறார் சென்ற நூற்றாண்டின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ஓஷோ ரஜனீஷ். Ôமிர்தாதின் புத்தகம்Õ அப்படி என்னதான் விசேஷங்கள் கொண்டது? படித்துப் பாருங்கள்....
* * *
சமீபமாகத் திரைப்படங்கள் குறித்து நிறையப் புத்தகங்கள் வந்து குவிகின்றன. எழுத்தாளர்களால் திரைப்படம் குறித்த தொடர்கள் சிறு பத்திரிகைகளில் நிறைய எழுதப்படுகின்றன. காட்சிப் பிழை, படப் பெட்டி என  மாற்று சினிமா குறித்த இதழ்களும் புதிது புதிதாய் வரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். இந்த வரிசையில், உலகத்திரைப்படங்களில் கனமான பாத்திரங்களை ஏந்தியிருக்கும் சிறுவர் சிறுமியரின் வாழ்வு, அக் கதாபாத்திரங்களின் அரசியல், அழகியல் மன ஓட்டங்கள் குறித்து கே.பாலமுருகன் எழுதிய தொடர் தீர்ந்து போகாத வெண்கட்டிகள் என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.
தாய்லாந்து, இந்தோனேசியா, ஹாங்காங், சீனா, பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா என உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட சிறுவர்களுக்கான படங்களைக் குறித்து அவர் எழுதியிருக்கிறார். அவற்றுள் பலவும் முக்கியமான திரைப் படங்கள். இந்தப் பட்டியலில் ஒரு தமிழ்ப் படமும், இந்திப் படமும்கூட இடம் பெற்றுள்ளது விசேஷமானது.
வீட்டை விட்டு விடுதிக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரு மாணவனின் ஏக்கங்களைப் பிரதிபலிக்கும்  DORM  என்ற தாய்லாந்து சினிமாவிலிருந்து இந்தக் கட்டுரை தொடக்கம் பெறுகிறது. இதுதான் நான் வீட்டை விட்டுப்போகும் முதல்நாள். இன்று தான் என் எல்லா சுதந்திரமும் பறிபோகும் முதல் நாளும் கூட என்று அந்தச் சிறுவனின் குரல் துயருடன் ஒலிப்பது நம் பள்ளி விடுதிகளில் அடைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் குரலை எதிரொலிக்கிற மாதிரியே இருக்கிறது.
Hikikanam  என்றொரு தாய்லாந்துப் படத்தைக் குறித்து பாலமுருகன் எழுதுகிறார். ஜப்பானிய சிறுவர்களை ஒரு கால கட்டத்தில் தொற்றியிருந்த வினோதப் பழக்கம் குறித்து இத்திரைப்படம்  நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பிவீளீவீளீணீஸீணீனீ என்று ஜப்பானிய அரசால் அழைக்கப்பட்ட இந்த சுயவதைக்காரர்கள் ஆண்டுக் கணக்கில் வீட்டுத் தனிமையிலிருந்தபடி பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் பிற மனிதர்களைச் சந்திக்காமல் தங்கள் காலத்தைக் கழிப்பார்களாம். ஒன்பது வருடத்திற்கு மேலாகக் கூட ஒரு சிறுவன் தனி அறைக்குள் அடைந்து கிடப்பான் என்கிற தகவல் நம்மை அதிர்வுக்குள்ளாக்குகிறது. இந்தத் திரைப்படம் குறித்து மேலதிகமாக எழுதிச் செல்லும் பாலமுருகன் இக்கட்டுரையின் முத்தாய்ப்பாக சில வரிகளைப் பதிவு செய்கிறார்.
Ôகுழந்தைகளின் அறைக்குள்ளிருந்து தனிமையின் சுவாசம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் வன்மையான மனநிலை சுவரில் கொடூரமாகக் கிறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் தெரிகிறது.Õ
இந்த வரிகளும் நம்மை அச்சுறுத்தவே செய்கின்றன. குழந்தைகளின் உளவியல் நுட்பமானது. நாம் குழந்தைகள் என நினைத்து அவர்களை அணுகுவதை அவர்கள் விரும்புவதே இல்லை. அவர்களுக்குத் தேவை அவர்களை அதிகாரத்தாலும், அளவான அன்பாலும் கட்டுப்படுத்தும் பெற்றோர்களல்ல. சமமாகப் பாவிக்கின்ற நண்பர்களே. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும் வரை நாம் குழந்தைகளின் உளவியலைக் கண்டுபிடிப்பது அரிது.
பாலமுருகன் ஒவ்வொரு படத்தின் கதைக்கும் தொடர்புள்ள தன்னுடைய வாழ்க்கை நிகழ்வொன்றையும் சேர்த்து நமக்கு வாசிக்கத் தருகிறார். அது நம்மை வேறு தளத்துக்கு நகர்த்திச் செல்கிறது. இந்தப் புத்தகம் இந்திய சினிமாக்கள் அடைய வேண்டிய மாற்றங்களை வலியுறுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது.
குழந்தைகளுக்கான மிகச்சிறந்த திரைப்படங்கள் இன்றைக்கு ஈராக், ஈரான், சீனா, இந்தோனேசியா நாடுகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா இந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது.
* * *
எழுத்தில் மிகுந்த ஆச்சாரத்தையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கிற நல்லவர்களுக்கு நான் என் புத்தகங்களை வாசிக்கத் தருவதில்லை என்றொரு கொள்கையை வைத்திருக்கிறேன். ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கிற ஒழுக்கம் என் புத்தகங்களில் கிடையாது. மீறி அவர்களாகத் தேடி வாசித்துவிட்டு என்னைக் குறித்த பிம்பங்களைக் கலைத்துக் கொள்வதில் எனக்கொன்றும் அபிப்ராயம் இல்லை. இந்த Ôஒழுக்க எழுத்தைÕ நான் வெறுக்கிறேன். வாழ்க்கை இவர்கள் நினைக்கிற மாதிரி ஒழுக்கச் சட்டகத்துக்குள்  அடங்கி இல்லை. ஒழுக்கவாதிகள் மட்டுமே எழுத வேண்டுமானால் இந்த உலகில் ஒரு நல்ல எழுத்தாளன்கூட இருக்க முடியாது. அதற்காக வலிந்தெழுதும் ஆபாசத்தை நான் ஒப்புக் கொள்ளவும் மாட்டேன். எழுத்து சுதந்திரமானது. அதற்குத் தடைகள் எதுவும் இருக்கக்கூடாது. இவ்வகையில் பெருமாள் முருகன் எழுதியுள்ள  கெட்டவார்த்தை பேசுவோம் நூலை நாம் வரவேற்க வேண்டியுள்ளது. பெருமாள் முருகன் இதை வலிந்து செய்யவில்லை. கட்டமைக்கப்பட்டுள்ள பொய்மைகளைத் தகர்க்க வேண்டுமெனும் நோக்கத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். கெட்ட வார்த்தைகளை வலிந்து பயன்படுத்திப் பிரபலம் பெறுவதோ, பாலியல் சார்ந்து எழுதி நிலைநிறுத்திக் கொள்வதோ எனக்கு அவசியமற்றவை என்று அவர் முன்னுரையில் பேசுகிறார். இது ஒரு ஆய்வு. சகமனிதர்களின் இயல்பான உரையாடல்களை, அவை வெளிப்படும் தருணங்களை, அதன் கொச்சை அழகை,  கவித்துவத்தை, தமிழ் இலக்கியங்களிலிருந்தும், நாட்டார் கதையாடல்கள், வாய்மொழி வழக்காறுகள், கூத்துகள் எனப் பல்வேறு வடிவங்களிலிருந்தும் வாசித்துப் பார்த்து  வெளிப்படுத்தியுள்ள ஆய்வு.
* * *
யோ.கர்ணன் சமீபமாகத் தனது கதைகளின் மூலமாக அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இளம் ஈழ எழுத்தாளர். ஏற்கெனவே இவருடைய தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சேகுவேரா இருந்த வீடு இரண்டாவது தொகுப்பு. பொதுவாக ஈழ எழுத்தாளர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் ஈழத் தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரம் ஜாதி வர்க்க ரீதியான பிரிவுகள், மோதல்கள் இவற்றைத் தம்படைப்புகளில் பிரதிபலிப்பவர்கள். இவர்கள் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இளைய தலைமுறையினர். விடுதலைப் போராட்டம் தீவிரத்தை அடைந்த யுத்தகளத்திலிருந்து நேரடி சாட்சியாகத் தம் படைப்புகளை முன் வைப்பவர்கள். யோ.கர்ணன் இரண்டாம் வகையைச் சார்ந்தவர். பெரும்போக்காகவுள்ள யுத்த சாட்சியத்திலிருந்தும் அவர் துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால் ஒரு முழுமையான யுத்த சாட்சியம் என்று வரும்போது அதன் தவிர்க்கப்படவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார்ÕÕ என்று நிலாந்தன் இவரைக் குறித்து அபிப்ராயப்படுகிறார்.
தொகுப்பிலுள்ள முதல் கதையான திரும்பி வந்தவனை வாசித்து முடித்ததும் யாரோ நம் முகத்திலறைகிற உணர்வேற்படுகிறது. யதார்த்தம் எப்போதுமே கசப்பாகவும் ஜீரணிக்க முடியாததாகவுமே இருக்கும் என்பதுபோல. எல்லாக் கதைகளுக்கும் ஈழப்போராட்டமும், இயக்கச் செயல்பாடுகளும்தான் களம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென இங்குள்ள தமிழ்மக்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் ஓரிடத்திலிருந்து கொண்டு விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத் தன்மையுடனும், நவீன கதைகளுக்கேயுரிய கூறுகளுடனும் கதை சொல்லும் கர்ணன் 13 கதைகளிலும் தன்னையும், தன் போராட்டத்தையும், தங்களது பெண்களையும், ஆண்களையும், தலைவர்களையும் சுய விமர்சனம் செய்து கொள்கிறார். எந்த இடத்திலும் தோற்றுப் போனோம் என்கிற கழிவிரக்கம் கொப்பளிக்கவில்லை. இதனாலேயே இவருடைய கதைகள் தனித்துவம் பெறுகின்றன.
* * *
தமிழ் நவீன இலக்கியவாதிகளால் அடிக்கடி நினைவு கூறப்படும் அயல் எழுத்தாளர்களில் தஸ்தயேவ்ஸ்கி முக்கியமானவர். அடுத்த கணத்தில் நிறைவேற இருந்த மரண தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்ட அதிர்ஷ்டசாலியாக அவர் இருந்தாலும், வாழ்வின் எல்லைவரை துயரங்களை எதிர்கொண்டு போராடிய கலைஞனாகவும் இருந்தார். எழுத்தாளர்கள் வலிய நிறுவிக்கொள்ளும் ஒழுக்க விதிகளைப் புறந்தள்ளி சூதாடியாக, வலிப்பு நோயாளியாக, தீராத கடனாளியாக வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த அவருடைய படைப்புலகிலிருந்து, குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள், இடியட், வெண்ணிற இரவுகள் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்புகள் வெளிவந்தன.
தஸ்தயேவ்ஸ்கியின் ஒரு புதிய நாவலைப் பிரதி எடுக்கும் நிமித்தமாகச்சென்ற இளம்பெண் அன்னா, தஸ்தயேவ்ஸ்கியின் அன்புக்கும், காதலுக்கும் பாத்திரமாகி அவருடைய இறுதிக்காலம் வரை வாழ்க்கைத் துணையாக இருக்கிற வாய்ப்பைப் பெறுகிறார். அன்னா தஸ்தயேவ்ஸ்கி எழுதிய நினைவுக்குறிப்புகள் என்னும் இந்நூல் தஸ்தயேவ்ஸ்கி ஒரு நாவலைச் சொல்லி அதை அன்னா பிரதி எடுத்துத் தருவது வரைக்குமான குறுகிய கால சம்பவங்களைக் கூறுவதாக இருப்பினும் தஸ்தயேவ்ஸ்கி என்கிற மகா கலைஞனது வாழ்க்கை நிகழ்வுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகவும் இது நமக்குப் புலனாகிறது.
மாபெரும் எழுத்து மேதைக்கும், இளம் பெண்ணுக்குமான அப்பழுக்கற்ற உறவைச் சித்தரிக்கின்ற குறுநாவலைப் போலவும் இதை வாசித்தெடுக்கலாம். யூமா.வாசுகியின் நேர்த்தியான மொழிபெயர்ப்பு இவ்வனுபவத்தை நமக்கு வழங்குகிறது.
“வலிப்பின் நேரத்தில் நான் சொர்க்கத்திலிருந்தேன். இந்த உலகத்தின் மற்ற அனைத்து இன்பங்களையும் தருகிறேனென்று சொன்னாலும் இந்த சொர்க்கத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறும் தஸ்தயேவ்ஸ்கியைத் தாக்கியது பரவச வலிப்பு நோய் என்று மருத்துவர் பி.இக்பால் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். தஸ்ததயேவ்ஸ்கி படைத்த வலிப்பு நோயுள்ள கதாபாத்திரங்களையும் அவர் அதில் பட்டியலிடுகிறார்.
“ஒரு கணம் மேலெழுந்து வந்த அதிருப்தி அத்துடன் இல்லாமற் போனது” என்று அன்னா குறிப்பிடுகிற ஒரு வரி நினைவுக்குறிப்புகளின் ஒன்பதாவது அத்தியாயத்தின் கடைசி பாராவில் வருகிறது. இந்த வரியை நான் நீண்ட நேரம்  அசைபோட்டுக் கொண்டிருந்தேன். அந்த அதிருப்தி மட்டும்  மேலெழுந்து தீவிரம் பெற்றிருந்தால் ஒருவேளை தஸ்தயேவ்ஸ்கியும் அன்னாவும் வாழ்க்கையில் இணைந்திருக்க வாய்ப்பில்லாமலேயே போயிருக்கும்.
தஸ்தயேவ்ஸ்கியின் காதல் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையை வாசிக்கையில் பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போனேன். “சில நேரம் தஸ்தயேவ்ஸ்கி அன்னாவின் உடைகளைக்கூடப் பணயம் வைத்துச் சூதாடுவார். ஆனால் சூதாட்டம் அவருக்கு எழுதுவதற்கான உட்தூண்டலாக இருப்பதால், அவள் ஒருபோதும் அதை எதிர்த்ததில்லை. தஸ்தயேவ்ஸ்கி அனைத்தைவிடவும் மேலாக அன்னாவை நேசித்திருந்தார். சில நேரங்களில் நாட்கணக்காகப் பட்டினி கிடக்க வேண்டி வரும்போது, அல்லது இருப்பிலிருந்த, அன்னாவின் கடைசி உடையையும் சூதாடித் தோற்கும்போது, ஒரு களங்கமற்ற சின்னஞ்சிறுவனைப்போல அவர் அவள் காலடியில் குமுறி அழுவார்”. 
எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் மனைவிகளும் ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டிய புத்தகமாக இந்த நினைவுக்குறிப்புகளை நான் உணர்கிறேன்.

Friday, April 13, 2012

கீரனூர் ஜாகிர்ராஜாவின் "பெருநகரக் குறிப்புகள்”

எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்று வெகு காலமாய் சொல்லிக்கொண்டே வருவதை மரபாகக் கொண்டிருந்தாலும் ஒரு எழுத்து என்பது நேர்மையான வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். ஒரு நல்ல மனிதனாக, நேயமுள்ள குடும்பத்திற்குப் பொறுப்பானவனாக இருந்து விட்டால் எழுத்து தேவையில்லை. அப்படி வாழ்ந்தால் போதுமானதே. இந்தப் போதாமையால்தான் அவரவர் சமூகத் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் எழுத்தைக் கைக்கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு படைப் பாளனுக்கும் நேர்கிறது. எனவேதான் எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்பதை சொல்லித்தீர வேண்டிய நிர்ப்பந்தம் நிகழ்கிறது. ஜாகிரைப் பொறுத்தளவில் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு துளியையும் கூர்ந்து கவனித்து அதைப் படைப்புக்குள் பதிவுசெய்து கொண்டே போவதை இத்தொகுப்பின் சிறுகதைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் காட்டுகிறது. வாழ்வதையே படைப்பாகக் காட்டி வாழ்கிறார்.
காய்ந்து கிடக்கிற நதியில் எல்லாமும் கிடக்கின்றன. அதுகுறித்து நதியிடம் எந்தவிதமான கருத்தோ கோபமோ ஆனந்தமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீர் நிறைந்து கரைமேவி ஓடுகையில் நதியின் அழகு சொல் லொண்ணா எண்ணக்குவியலை மனத்துள் விதைக்கிறது. சாதாரண மனிதன் குளிக்க இறங்கி ஆனந்தம் கொள் கிறான். நீச்சல் தெரிந்த குழந்தைகள் ஆசையில் அலுப்பு தீருமட்டும் நதியில் விளையாடி களைக்கின்றன களிப்பில். நீச்சல் தெரியாதவன் நதியைப் பார்க்கையில் பயத்துடன் எதிர்கொள்கிறான். கவிஞனுக்கு நதி ஆயிரம் சொல்லித் தருகிறது. பல்லாயிரம் படைப்புகளில் நதி நுரைத்துப் பொங்கி ஓடிக்கொண்டுதானிருக்கிறது. இப்படிப்பட்ட நதி காய்ந்து கிடக்கும் காலங்களில் பார்க்க வலி பொங்குகிறது. எல்லாமும் அதில் கொட்டப்படும் போது ஆத்திரம் வருகிறது. இதற்கும் நதி எதுவும் சொல்வதில்லை. இப்படித்தான் வாழ்க்கை எல்லோர் வாழ்விலும் நதியைப்போல வறண்டும் நிறைந்தும் கிடக்கிறது. வாழ்கிற நிலைப் பாட்டில்தான் எல்லாமும் சமன்படுகிறது.

அவரவர் தன்மைக்கேற்ப அல்லது அமைந்துவிடுகிற சூழலுக்கு ஏற்ப இந்த நிலைப்பாட்டை சமன் செய்கிற அல்லது சமன் செய்துவிட்டதான திருப்தியில் வாழ்க்கை முடிந்துபோகிறது. இங்கே இந்த நிலைப்பாட்டிற்காக காயங்களும் மகிழ்ச்சியும் உருவாக்கம் கொள்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் மதமும் இனமும் ஜாதியும் பேதங்களும் வேராக நிற்கின்றன. இது சாதாரண மனிதனை அவஸ்தைப்படுத்துகிறது. படைப் பாளனுக்குச் சவாலாக அமைகிறது. தன்னுடைய சமன்பாட் டிற்காகவும் தன்னைப்போன்றோரின் சமன்பாட்டிற்காகவும் இந்தச் சவாலை ஏற்கும் கட்டாயத்தை அவன் பிறந்து வளர்ந்த சமூகமே அவனுக்கு விதிக்கும்போது காயங்களால் தாக்கப்பட்டும் அவமானங்களால் உணர் வூட்டப்பட்டும் வலிகளின் வெப்பத்தில் உருகுகிறான். படைப்பாளனாகக் களத்தில் நிற்பவன் இவ்வெப்பத்தைப் படைப்புக்குள் பரப்பி அதை எல்லோருக்கு மான வலியாக உணர்த்தி நிற்கிறான். ஜாகிர்ராஜாவும் இப்படித்தான்.

எப்போதும் ஏராளமான காயங்களையும் உணர்வுச் சிதைவுகளையும் அவமானங்களையும் சந்தித்த வடு மாறாமல் தொடர்வதை மனம் கசிவோடு ஒவ்வொரு கதையிலும் உணர முடிகிறது. எனவே புனைகதையின் ஒரு முக்கியக் கூறாக இருக்கும் சிறுகதை புனையப்படும் கதை எனும் பொருண்மைக்கு அழுத்தமான பொருளாக வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புனைதல் எனும் நிலையில் "பெருநகரக் குறிப்புகள்” தொகுப்பை வாசித்து முடிக்கையில் மனம் நனைகிறது. ஒரு சமூகம் என்பது அதில் அடங்கியுள்ள மக்கள் கூட்டத்தை வைத்து அடையாளப்படுத்துவது அதன் பொருளாக அறியப்படுவது. எனவே அதன் பொறுப்பு என்பது பொதுமையானது, சமமானது, நலம் பயக்குவது என்பதைத் தாண்டி, காக்க வேண்டிய சமூகமே நசுக்கிச் சிதைப்பதைச் சிறுவயது முதல் கவனித்து அதை மறக்க முடியாமல் மன்னிக்கவும் தயாராக இல்லாமல் கடுமையாக விமர்சித்து ஒவ்வொரு கதையிலும் நெஞ்சு நிமிர்த்தும் ஜாகிர் எனும் படைப்பாளனின் தெளிவு அதிசயமானது, ஆச்சர்யமானது, பாராட்டுக்கு மிக உரியதும்கூட. ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் சொல்லும் விதமும் உணர்த்தும் விதமும் மொழிநடையும் எதார்த்தமும் அழிக்கமுடியாத அழுத்தம் கொண்டு லபக்கென்று விழுங்குவதுபோல வாசிக்கிற மனசுக்குள் போகிறது. இருப்பினும் சில கதைகளில் சிறுவயது நிகழ்வுகளில்கூட இடையிடையே இன்றைய வயது ஜாகிர்ராஜா கருத்துச் சொல்வது யதார்த்தம் மீறியது என்றாலும் அது பட்டுக் காய்த்துப்போன வடுவின் உறுத்தல் எனும் நிலையில் ஏற்றுக்கொள்ளவே தோன்றுகிறது.

இத்தொகுப்பு மட்டுமல்ல ஜாகிர்ராஜாவின் கதைகள் முழுக்கவே ஒரு சிறப்பான அம்சமாகப் பார்ப்பது அவற்றில் எந்தத் திணிப்பும் இல்லை. வலிகளுக்கான அறிவுரை மருந்தும் இல்லை. தனக்குத் தன்னுடைய பிறந்த சமூகம் விதித்ததை, அதனால் பட்ட இன்னல்களை சிறுவயது முதலே மனத்தில் அழிக்கமுடியாத காய பிம்பமாக உள் வாங்கிப் பின்பருவத்தில் படைப்பு மனமாக உருக்கொண்ட நிலையில் படைப்பில் அதனைக் கொட்டுகிறார். படிப்போர்க்கு நீதி சொல்வதல்ல இக்கதைகளின் நோக்கம். ஒரு சமூக வலியை காட்சிப்படுத்துவதில் இவை சிறப்புறுகின்றன. மேலும் சமூகத்தை எதிர்ப்பது அல்லது போர்க்கொடி உயர்த்துவதும் நோக்கமல்ல. ஆனால் தான் பட்ட வலியை தன் சாதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பட்ட அவமானங்களையும் படும் வேதனை களையும் மாற்றி சமூகம் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை உறுத்தலோடு உணர்த்துவது தன்னுடைய படைப்பு நோக்கமாக ஜாகிர் கொண்டிருக்கிறார் என்றே உணர முடிகிறது. இஸ்லாமியச் சமூகத்தின் சடங்குகளையும் மரபுகளையும் தேவைப்படும் சூழல்களில் கதைகளில் இயல்பாகச் சொல்லும் போக்கில் அவர் கொண்டிருக்கும் பற்றும் தெளிவுறத் தெரிகிறது. ஒரு தாய் அல்லது தந்தை தவறு செய்யும்போது அதை வயதில் குறைந்த மகன் சுட்டுவிரல் நீட்டிக் குற்றத்தை உணர்த்தும்போது அதைத் தாங்கிக்கொள்ள இயலாத மனோபாவத்தைத் தவிர்த்து சமூகம் ஜாகிரின் படைப்பு மனத்தைக் கருதவேண்டும் என்றே தோன்றுகிறது. குற்றங்களைக் கண்டிக்கும் உரிமை ஒரு மகனுக்கு உண்டு என்பதைக் கட்டாயம் ஏற்க வேண்டும். இதைத்தான் ஜாகீர் சிறுகதைகள் உணர்த்துகின்றன.
காதலின் நுட்பமும் நேயமும் உணரப்படாமை, மனித மதிப்பீடுகள் அலட்சியப்படுத்தப்படுதல், மனம் சிதைத்தல், பசியின் தாகம், நட்பின் அழுத்தம், உறவின் மேன்மை, வாழ்வதற்காக அலைக்கழிக்கபடும் வாழ்க்கை, சடங்குகளின் பெயரால் சாதிகளின் பேதத்தால் மிருகமெனப் பாயும் மேலாதிக்கங்கள், அதற்கான போராடுதல்கள், அவற்றின் தோல்வியும் அவமானங்களும், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் நிகழும் மன வெடிப்புகள் போன்றவை இவரது கதைகளின் கருக்களங்களாக நுரைத்துக் கிடக்கின்றன. சக்கிலி மத்தை, (மந்தைய எங்களுக்குன்னு ஒதுக்கிக் குடுக்கற வரைக்கும் நாங்க யாரும் எடுப்பு கக்கூஸ் அள்றதுக்கு வர மாட்டோம்), மழை - மகனைப் புரிந்துகொள்ளாத தந்தை (....அங்கேயே சென்ட்ரல் தண்டவாளத்திலேயோ கூவத்திலோ விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளலாம். உன் தீதார்கூட எங்களுக்குத் தேவையில்லை..... நல்லவர்களுக்கொல்லாம் சீக்கிரமாய் மௌத் வந்துவிடுகிறது. வேணும் ஸலாம். நாயன் துணை), மனத்தை உருக்கும் வெம்மை (....மனதுக்குள் சுடர்விட்ட வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை அவன் தன் பிஞ்சு வாயால் ஊதி ஊதி அணைக் கிறான்.

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனுக்கு இந்த சிறைச்சாலையின் நெடிய சுவர்களுக்குள்ளிருந்து நான் கூறும் வாழ்த்துகள் கேட்கவா போகிறது), சுவடுகள் வாழ்வின் அவலத்தை மிக நெருப்போடு உணர்த்தி வலிக்கச் செய்கிறது (....நெடுஞ்சாலைகளும் எல்லாவிதமான சீதோஷ்ணங்களும், யாசகக் குரல்களும், புறக்கணிப்பும் அத்தாவுக்கு ரத்தத்தில் கலந்தவை.) அறைச்சுவர்கள் சிரிக்கின்றன, (....அவர்களுக்கு உடமையான பெட்டிகளிலிருந்து மேலும் பல ஜாதிப் பாம்புகள் எட்டிப் பார்க்கின்றன....சற்றுமுன் நிகழ்ந்த வாதங்கள் மறந்து கண்களுக்கு முன்னால் பானம் நிறைந்த குவளை தோன்றவும் குளிர்ந்துபோனான்), அடையாளம் - பசியின் மகத்துவத்தை, மேன்மையை அடையாளப்படுத்துவது (....பள்ளி வாசல் வீதியில் அவள் கிழக்கும் மேற்குமாய் அலைந்ததைக் கண்டு ராவுத்தப் பசங்கள் சிரியாய்ச் சிரிப்பார்கள்...... நம்மளப் போல ஏழைக்கி பட்டினி கெடக்குற நாளெல்லாம் நோம்புதா) இவையெல்லாம் தொகுப்பின் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய கதைகள். வாழ்வை ஒருமுறைக்கு நூறு முறையாகப் பரிசீலித்து வாழ வேண்டிய தேவையை உணர்த்துபவை.

தேர்ந்த எழுத்தாளுமையை ஒவ்வொரு கதையும் வெளிக்காட்டுகிறது. தடையற்ற பிரவாகம் சொற்களினூடாக பாம்பு செல்வதுபோல அமைந்திருப்பது படிப்பதற்கான ஆர்வத்தை குறைக்காது காக்கிறது. என் வாழ்க்கையும் அதன் மீது கொட்டப்பட்ட சமூகத்தின் ஆதிக்கக் குப்பையும் அதனைப் பற்றவைத்து நெருப்புக் காட்டிய சாதியப் பிரிவும் தவிர வேறு வேண்டியதில்லை என்பதான ஜாகிரின் எழுத்து அதன் மூலம் ஒரு பொதுமையான சமூக அவலத்தை, அசிங்கத்தை உரித்துக் காட்டுவது இக்கதைகளின் சாகா வெற்றியாகக் கருதிக்கொள்ளலாம். கதைகளின் மொழிநடை தேர்ந்த நடையாக உள்ளது. அவற்றிலும் எளிமையும் இயல்பும் அதேசமயம் செழுமையான அழுத்தமும் கொண்டு மைந்துள்ளது. சிலவற்றைச் சான்று காட்டலாம்.

நான் இங்கு கொட்டும் பனியிலும், மழையிலும் வம்பாடு பட்டு தொகை தொகையாக அனுப்பினால் தின்று தெறித்து ஊரைச் சுற்றுவது உன் வழக்கமாகிவிட்டது. மானம், ரோஷம் என்பது மருந்துக்குக்கூட இல்லாத மழுங்கைதான் நீ.

....தணிக்கவியலாத வெம்மை... அதன் இறுக்கமான பிடி மலைப் பாம்பின் நெரிப்பென எலும்புகளை முறிக்கிறது.

யாசகக் குரல். அதுவும் அக்காவின் சோகம் ததும்பிய யாசகக் குரல் எத்தனை துன்பமானது. ஒரு நாளேனும் அத்தா இதை உணர்ந்ததில்லை. புவ்வாவின் ஆல்பம் குட்டை மர பீரோவுக்குள் இருக்கிறது. ஆல்பத்தில் கணக்கற்ற கன்னிகள் நீந்துகிறார்கள். அது பெருமூச்சுகளின் சமுத்திரம் என மாறுகிறது... விதவிதமான பெண்களின் நீண்டகால கனாக்கள் ஆழத்தின் ஆழத்துள் பாறைப் பாசியாய் படர்ந்து கிடக்கிறது. அபிலாஷைகளின் இழைகளால் நெருக்கி நெய்யப்பட்டது அவர்களின் ரூபங்கள்.

வாழ்வின் உண்மைகளுக்குள் நீந்திக்கொண்டிருக்கிற படைப்பாளனின் உணர்வுபூர்வமான இத்தொகுப்பும் படைப்பாளனும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இத்தொகுப்பை வாசித்துவிட்டு எதுவும் பேசலாம். இடமிருக்கிறது. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஏதாவதொரு சிறுகதையில் வாழ்வதற்கான சாத்தியங்களை இத்தொகுப்பு கொண்டிருப்பதை இத்தருணத்தில் சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


Thursday, April 5, 2012

இருதயச் சுவர்களில் எழுதிச் சென்ற கலைஞன்



கீரனூர் ஜாகிர்ராஜா

புத்தகச் சந்தைகள் இம்மண்ணில் காலூன்றி வலுப்பெற்ற பிறகு புதிய புத்தகங்களின் வரவு கணிசமாகப் பெருகியுள்ளது. கலை இலக்கியம் மட்டும்தான் என்றில்லை; விதம்விதமான தலைப்புகளுடன் வகை பல மாதிரியான நூல்கள் அச்சாகிக் குவிந்த வண்ணமுள்ளன. வாங்குகிற எல்லோருமே வாசிக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இயலவில்லையாயினும், புத்தகங்கள் நாலா திசைகளிலும் சிதறிப் பரவலாகியுள்ளதை மட்டும் அனுமானிக்க முடிகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் பதிப்புத்துறை வியத்தகு வளர்ச்சி கண்டுள்ளதும், வாழும் ஆளுமைகளின் ஆக்கங்கள் மட்டுமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் விட்டுச் சென்ற பதிவுகளெல்லாம் அச்சாகி நினைவுகளை நெஞ்சகத்தில் மீட்டிப் பார்க்கும்படியான நெகிழ்வான சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளதும் முக்கியமானது. அவ்வகையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர் வெ. ஆறுச்சாமியின் முயற்சியில் அவ்வியக்க வெளியீடாக ‘சுவரெழுத்துப் புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா - சிந்தனைப் பொறிகள்’ நூல் வடிவம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் நீண்ட அரசியல் வரலாற்றில் சுவரெழுத்தை ஒரு பிரச்சார உத்தியாகப் பயன்படுத்திக் கொண்டதில் பெரும்பங்கு பொதுவுடமை இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்குமானது. மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினரின் பத்திரிகை வாசிப்புகளைத் தாண்டிய வெகுமக்கள் கவன ஈர்ப்பு சுவரெழுத்துகளுக்கு உண்டு.

சுவரெழுத்தைக் கலையாக மாற்றுவது ஒருவகையில் நம் குழந்தைகள் தான். குழந்தைகளுள்ள ஒவ்வொரு வீட்டுச் சுவர்களும் கண்டிப்பாக பென்சில் கிறுக்கல் களைக் கண்டிருக்க வேண்டும். இவையே குழந்தைமையின் ஆதி மனப்பதிவுகள்.

எங்கள் வீட்டுப் புழக்கடைச் சுவரில் விறகுக்கரி கொண்டு நானெழுதிய வாசகங்களும் வரைந்து கிறுக்கிய சித்திரங்களும்தான் என் எழுத்து வாழ்க்கைக் கான தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும்.
கோடையின் வெறிச்சோடிய தெருச்சுவரொன்றில் ‘பச்சை ரத்தம் குடிக்கும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா’ என்கிற குருவிநீலம் கரைத்தெழுதப்பட்ட வாசகங்கள் தீடீரெனப் பதிந்திருக்க அதை திகைத்துப் படித்த கணத்தை இன்னும் மறக்க முடியவில்லை.


இன்றைக்கு சுவரெழுத்து வழக்கொழிந்து வருகிறது. பெரிய ஜவுளி நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே சுவர்களை ஆக்ரமித்திருக்கின்றன. நவீன ஃப்ளெக்ஸ் கலாச்சாரம் வந்து எல்லாத்தெரு முனைகளிலும் பவிசு காட்டி நிற்கிறது. நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல் நேரத்திலும் கூட சின்னங்கள் வரையப்படாத சுவர்களே அதிகம்.

1980 களின் மத்தியில் கோவையில் சுற்றித்திரிந்த காலக்கட்டத்தில் வெங்கிட்டாபுரம் நண்பர்கள் ரவி, கந்தசாமி ஆகியோருடன் ஒரு நிகழ்வில் சுவரெழுத்து சுப்பையாவை சந்தித்துள்ளேன். அந்த நேரத்தில் சுப்பையாவின் திறன்களைத் தாண்டி அவருடைய ஆக எளிமையான தோற்றத்தின் மீதுதான் என் கவனம் குவிந்திருந்தது. பல வருஷங்களுக்குப் பின் சுப்பையாவின் எண்ணங்கள் நூலாகி அதற்கொரு அபிப்பிராயத்தைப் புத்தகம் பேசுது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வேனென கனவிலும் நினைத்ததில்லை.

சாலை அமைக்கப் பயன்படும் தார் எடுத்துக் காய்ச்சி சூடு ஆறிய பின் அதில் மண்ணெண்ணெய் ஊற்றி கையை விட்டுக் கலக்கி சுருட்டி வைத்த மெல்லிய துணியால் தொட்டுத் தொட்டு சுவரில் எழுதும் முறை சுப்பையாவுடையது. தமிழகமெங்கும் இப்படித்தான் பெரியாரின் கருத்துகளை சுப்பையா பதிவு செய்திருக்கிறார். ஆரம்பக் கல்வியைக் கூட முறையாகப் பெற்றிராத இவர் பெரியாரிசத்தை தரவாகக் கற்று ஊர் ஊராய் சுற்றிச் செய்திருக்கும் பணிகளை நினைக்க மலைப்பாய் இருக்கிறது. இதற்கென இவர் நன்கொடை ஏதும் பெற்றதில்லை. பழகிய தோழர்களிடம் அவர் கேட்டுப் பெற்றது பழைய டைரிகளை மட்டுமே.

சுப்பையாவின் சிந்தனைப் பொறிகளை வாசிக்கையில் சூடான மிளகாய் பஜ்ஜியை காரத்துவையலில் தோய்த்துச் சாப்பிட்ட மாதிரி உறைப்பாயிருக்கிறது. குப்பைத் தொட்டியைக் காட்டி‘இதில் எழுதுங்கள் அண்ணே’ என்றால் சுப்பையா உடனே “புராணத்தை இதிலே போடு” என்றெழுதுவாராம். பெரியார் வித்து.

நூலில் சுமார் 600 பக்கங்கள் கட்டெறும்பு ஊர்ந்து செல்வது போன்ற அவருடைய கையெழுத்தில் அத்தனையும் பகுத்தறிவுத் தெறிப்புகள். இந்துப் புராணங்களை ‘ஒரு கை’ பார்க்கும் சுப்பையா, கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் விட்டு வைக்க வில்லை.

‘‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன்.......’’ என்ற மு. கருணாநிதியின் புகழ்பெற்ற பராசக்தி படவசனத்தை மெச்சிப் பேசாத திராவிட இயக்கத்தினர் இருக்க முடியாது. ஆனால் கறாரான கொள்கைப் பிடிப்புள்ள சுப்பையா “கோயில் கூடாது என்பதற்காக அல்ல என்றால் கடவுள் இருப்பதாக நம்புகிறாயா? இது பெரிய அயோக்கியத்தனம்” என்று விமர்சனம் செய்வாராம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் தி.மு.கவினரின் நழுவல்களை சுப்பையா போன்ற பிடிப்புள்ள நாத்திகர்களால் ஜீரணிக்க முடியாதுதான்.

சுப்பையாவுடன் பழகிய பலரும் இந்நூலில் அவருடனான தங்களின் அனுபவங்களை விளம்புகின்றனர். அவை பல தகவல்களை நமக்குத் தருகின்றன.

ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர், தோழர் ஈ.வெ.ராமசாமி, பெரியார் ஈ.வெ.ராமசாமி, தந்தை பெரியார், அய்யா போன்ற பல விதமான விளிப்புகளில் பெரியாருக்கே விருப்பமானது ‘தோழர் ஈ.வெ. ராமசாமி’ என்பதுதான். “தோழர் என்றே விளியுங்கள்” இது பெரியார் எழுதிய குடி அரசு தலையங்கம்.

சொற்பொழிவாற்ற வரும்போது பெரியார் தனக்குச் சேரும் பெருங்கூட்டத்தைப் பார்த்து வியந்து போய் “நேற்று சுப்பையா வந்தாரா” என்று கேட்பாராம். பெரியார் பேசவுள்ள ஊர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகச் சென்று தம்பட்டமடித்தவர் சுப்பையா.

இப்படிப்பட்ட செயல்வீரர் தன் அந்திம காலத்தில் மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் அனாதைப் பிணமாகக் கிடந்தார் என்பதும், திராவிடர் கழகத் தலைமை இவர் போன்ற பெரியார் பெருந்தொண்டரின் புகைப்படத்தைக்கூட வைத்திருக்கவில்லை என்கிற தகவலும் நம்மைக் கலங்கடிக்கிறது.

எனது வடக்கேமுறி அலிமா நாவலில் அதன் நாயகி கழிவறைகளில் எழுதிச் செல்வதும் அதே நாவலில் வரும் கரிக்கோடன் என்னும் சுவரெழுத்துக் கலைஞன் குறித்த புனைவும் சுப்பையாவுடன் தொடர்புடையதாக இருப்பது குறித்து இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஈடுபாடுமிக்க சுவரெழுத்துப் பிரச்சாரகர்கள், இயக்க மேடைகளில் உரத்த குரலெடுத்து நிகழ்வைத் தொடங்கி வைக்கும் பாடகர்கள், கூச்சமில்லாமல் தெருப்புழுதியில் புரண்டு நடிக்கும் கலைஞர்கள் இவ்வாறான அடித்தள உறுப்பினர்களால் மட்டுமே ஒரு இயக்கத்தின் அஸ்திவாரம் உறுதியாகக் கட்டப்படுகிறது.

இன்றைக்கு சுப்பையாவிற்கு தருவதற்கென பழைய டைரிகள் நம்மிடம் நிறைய இருக்கின்றன. சுப்பையாதான் இல்லை. அவருடைய வடிவில் இனிவரப்போகும் சுவரெழுத்துக் கலைஞர்களுக்காக அந்தப் பழைய டைரிகளை நாம் பொத்திப் பாதுகாத்து வைப்போம்.